வ.உ.சி: கப்பலோட்டிய இந்தியர்

By ரெங்கையா முருகன்

இறப்புக்குப் பிறகும் வ.உ.சி. புறக்கணிக்கப்பட்டது பெரும் துயரத்தின் வரலாறு.

தமிழகத்தில் அரசியல் மேடை சொற்பொழிவைத் தொடங்கிவைத்தவர் ஜி. சுப்பிரமணிய ஐயர். அதை ஒரு கலையாக வளர்த்து, பாமர மக்களை அரசியல் விழிப்புணர்வு கொள்ளச் செய்து விடுதலை இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியவர் வ.உ. சிதம்பரம் பிள்ளை. பல்வேறு வகுப்புகளைச் சார்ந்த தமிழர்களை ‘விடுதலை’ என்ற ஒரே புள்ளியில் இணைத்து, சிந்திக்கத் தூண்டியவர் வ.உ.சி. ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற கோஷத்தின் பிதாவாகத் திகழ்ந்தவரும் அவர்தான். ‘‘நாம் எல்லோரும் பலமாக மூச்சுவிட்டால் போதுமே! அம்மூச்சுக் காற்றில் பறந்துபோகாதா வெள்ளையர் ஆதிக்கம்?” என்று கர்ஜனை செய்தார்.

அவரது மேடைப் பேச்சுகளால் அனைத்துத் தரப்பு மக்களும் வெள்ளையர்களுக்கு எதிராகப் போராடும் மனத் துணிவைப் பெற்றனர். வண்ணார் சமூகத்தினர் ஆங்கிலேய அதிகாரிகளின் துணிகளை வெளுக்க மறுத்தனர். நாவிதர்களோ சவரம் செய்ய மறுத்தனர். தூத்துக்குடியில் வசித்துவந்த வெள்ளையர்கள், இரவு நேரங்களில் ஊருக்குள் தங்குவதற்கு அஞ்சி, படகுகளில் சென்று ஏழு மைல் தூரத்தில் நடுக் கடலில் உள்ள முயல் தீவில் போய் உறங்கிவிட்டு அதி காலையில்தான் திரும்பிவருவார்கள். அந்த அளவுக்குப் பொதுமக்களுக்கு எழுச்சியூட்டினார் வ.உ.சி.

வெள்ளையர்களை ‘மூழ்கடித்த’ கப்பல்!

வெள்ளையர்களை விரட்டுவதென்றால் நம்மவர் களுக்குக் கடல் ஆதிக்கம் வேண்டும் என்று நினைத்தார் வ.உ.சி. இத்திட்டத்தின் விளைவுதான் ‘சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி’.

இத்திட்டத்துக்காக நிதி தந்து உதவுமாறு ‘இந்தியா’ பத்திரிகையில் தலையங்கம் எழுதினார் பாரதி. இந்தக் கப்பல் கம்பெனிக்கு ரூ. 2 லட்சம் தேவை என்று பாரதி குறிப்பிட்டிருந்தாலும், வந்துசேர்ந்த நிதி

ரூ. 200-தான்! சேலத்தில் விஜயராகவாச்சாரியார் நிதி திரட்டினார். தான் சேமித்து வைத்திருந்த ரூ. 1,000-ஐக் கொடுத்து உதவினார் ராஜாஜி. பல முயற்சிகளுக்குப் பின்னர், ‘எஸ். எஸ். காலியா’, ‘எஸ்.எஸ். லாவோ’ எனும் இரண்டு சுதேசிக் கப்பல்கள் தூத்துக்குடி துறைமுகத்தில் மிதக்கத் தொடங்கின.

அச்சமயத்தில், “நான் ஆரம்பித்த இக்கம்பெனி, வியாபாரக் கம்பெனி மட்டுமல்ல. மூட்டை முடிச்சுகளுடன் வெள்ளையர்களை இந்நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கே இக்கப்பல்” என்று வ.உ.சி. பேசினார். சுப்ரமணிய சிவா இடைமறித்து, “மூட்டை முடிச்சுகளுடன் போவானேன்; மூட்டை முடிச்சுகளை இங்கேயே போட்டுவிட்டுப் போகட்டும். இந்த நாட்டில் சுரண்டிச் சேர்த்த மூட்டைகள்தானே!” என்று கர்ஜித்தார். சுதேசிக் கப்பலின் வருகையால் அதிர்ந்துபோன ஆங்கிலேய அரசு, சுதேசிக் கப்பலுக்கு எதிராகப் பல சதிகளில் ஈடுபட்டது. ‘பிரிட்டிஷ் இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன்’ கம்பெனி பயணக் கட்டணத்தைக்கூடக் குறைத்தது. ஆனாலும், தேசப்பற்று மிக்க மக்கள் இந்தச் சதியைப் புறக்கணித்துவிட்டு, வ.உ.சி-யின் சுதேசிக் கப்பல்களை ஆதரித்தனர். வெள்ளையர் கப்பல் நிறுவனத்துக்கு மாதம் ரூ. 40,000 வரை நஷ்டம் ஏற்படச் செய்தார் வ.உ.சி. சுதேசிக் கப்பல் மக்களை அரசியல்படுத்தியதுடன் ஆங்கில அரசுக்கு எதிரான போராட்ட உணர்வையும் அதிகரிக்கச் செய்தது.

பற்றியெரிந்த திருநெல்வேலி

தமிழகத்தில் புரட்சி மனப்பான்மையை ஊட்டிய வங்கச் சிங்கம் விபின் சந்திரபாலரின் விடுதலையை 1908 மார்ச் மாதம் 9-ல் வ.உ.சி-யும் சுப்ரமணிய சிவாவும் பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்திக் கொண்டாடினார்கள். இதனால் வ.உ.சி., சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோரைச் சிறையில் அடைத்தது வெள்ளையர் அரசு. இதை எதிர்த்து திருநெல்வேலி, தூத்துக்குடியில் பெரும் கலகம் ஏற்பட்டது. வெள்ளையர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டது. கலவரத்தை ஒடுக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கைதுசெய்யப்பட்ட வ.உ.சி., பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். 1908-ல் பாளையங்கோட்டை சிறையில் பாரதியார் வந்து வ.உ.சி-யைச் சந்தித்தார். கலெக்டர் விஞ்ச் துரைக்கும் வ.உ.சி-க்கும் இடையே நடந்த காரசாரமான வாக்குவாதத்தைக் கவிதை வடிவில் ‘இந்தியா’ வார இதழில் பாரதி வெளியிட்டார்.

முடக்கிப்போட்ட சிறை

ஏ.எஃப். பின்ஹே என்ற நீதிபதி வ.உ.சி-க்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிதம்பரனார் மனைவி மீனாட்சி அம்மாள், நெல்லையப்பர் மற்றும் நண்பர்கள் மேல் முறையீடுசெய்து தண்டனையைக் குறைக்க முற்பட்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தண்டனை 6 ஆண்டாகக் குறைக்கப்பட்டது. இதற்கு மேல் தண்டனையைக் குறைக்க மேல்முறையீடு செய்ய வழி இல்லாதபோது சிதம்பரனார், ‘‘வக்கீலாய் நின்று வழிப்பறியே செய்கின்ற திக்கிலார்’’ என்ற வெண்பா பாடலை நெல்லையப்பருக்கு எழுதி அனுப்பினார். சிறைத் தண்டனையைப் பயன்படுத்தி, சுதேசிக் கப்பல் கம்பெனியைப் பிரிட்டிஷ் அரசாங்கம் திட்டமிட்டுச் சீரழிக்கத் தொடங்கியது. வ.உ.சி. சிறை வாழ்வில் பட்ட துன்பங்கள் பற்றிய தகவல்களை ‘துன்பம் சகியான்’ என்ற புனைபெயரில் பாரதியின் ‘இந்தியா’ பத்திரிகைக்கு முதன்முதலாக அனுப்பிவைத்தார் நெல்லையப்பர்.

விடுதலைக்குப் பின்னரும் துயரம்

1912-ல் வ.உ.சி. விடுதலை அடைந்து வந்தபோது, அவரை வரவேற்கத் தேசபக்தர்கள் திரண்டு வரவில்லை. சுப்ரமணிய சிவாவும் சுரேந்திரநாத் ஆர்யாவும்தான் வந்திருந்தனர். காலச் சுழற்சி வ.உ.சி-யின் வாழ்வில் மோசமான வறுமையையும் சோகத்தையும் மட்டுமே தந்தது. திலகர் சகாப்தத்துக்குப் பிறகு, தோன்றிய காந்திய சகாப்த மாறுதல்கள் வ.உ.சி-க்கு உவப்பளிக்க வில்லை. சிறுவயல் என்ற கிராமத்தில் ப. ஜீவா நடத்திய ஆசிரமத்தைப் பார்வையிடச் சென்றார் வ.உ.சி. அங்குள்ள ராட்டைகளைப் பார்த்துவிட்டு, ‘‘இங்குள்ள இளைஞர்கள் நூல் நூற்கிறார்களா?’’ என்று ஜீவாவைக் கேட்டார். அவர் “ஆம்!” என்று சொன்னவுடன், ‘‘முட்டாள்

தனமான நிறுவனம்! வாளேந்த வேண்டிய கைகளால் ராட்டை சுற்றச் சொல்கிறாயே’’ என்று கோபப்பட்டார்.

சிறைத் தண்டனை அனுபவித்ததால் வழக்கறிஞர் பணியைத் தொடர இயலாமல் போய்விட்டது. குடும் பத்தைக் காப்பாற்ற மளிகைக்கடை நடத்தினார். மண்ணெண்ணெய் விற்றார். வெள்ளையர்களை எதிர்த்துக் கப்பல் கம்பெனியை நடத்திய வ.உ.சி-க்கு வியாபாரம் செய்யத் தெரியவில்லை.

இப்படியான இக்கட்டான சூழலில் வ.உ.சி-க்கு வழக்கறிஞர் உரிமையை மீட்டுத் தந்தவர் வெள்ளையர் நீதிபதி வாலஸ். நன்றிக் கடனாகத் தனது மகனுக்கு ‘வாலேசுவரன்’ என்று பெயரிட்டார் வ.உ.சி.

தமிழ்ப் பணி

பல துயரங்களுக்கிடையே வ.உ.சி-யை மனதளவில் ஆசுவாசப்படுத்தியது தமிழ்ப் பணிதான். மதுரை பிரமானந்த சுவாமிகள் மடத்தில், சோமசுந்தர சுவாமி களிடத்தில் வ.உ.சி. ‘கைவல்ய நவநீதம்’ பயின்றார். ‘சிவஞான போத’த்துக்கு வேதாந்த அடிப்படையில் உரை எழுதினார். சைவதீட்சை பெறாத வ.உ.சி. மெய்கண்டார் அருளிய ‘சிவஞான போத’த்தின் உரையை சைவ சமயத்தினர் மறுத்தனர். வ.உ.சி-யின் அன்புக்குப் பாத்திரமான சகஜானந்தர் வ.உ.சி-யின் நூல்களுக்குச் சிறப்புப் பாயிரம் எழுதியுள்ளார். ஜேம்ஸ் ஆலனின் ‘மனம் போல் வாழ்வு’, ‘அகமே புறம்’, ‘வலிமைக்கு மார்க்கம்’ போன்ற நூல்களை வ.உ.சி. மொழிபெயர்த்துள்ளார். திருக்குறள் - மணக்குடவர் உரையை அவர் பதிப்பித்தார். திருக்குறள் நீதிக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்ட மெய்யறம், சுயசரிதைப் படைப்பிலக்கியமும் படைத்துள்ளார்.

வ.உ.சி-யின் நீண்ட வாழ்வில், அரசியல்ரீதியாகப் புறக்கணிப்புக்கு உட்பட்டவராகத்தான் காணப்படுகிறார். வ.உ.சி-க்குச் சிலை அமைக்க ம.பொ.சி. முற்பட்டபோது, காங்கிரஸ் தன் கட்சி நிதியிலிருந்து பணம் கொடுக்க மறுத்தது. பல்வேறு போராட்டங்களுக்கு இடையேதான் வ.உ.சி-யின் சிலைவைப்பு விழா நடந்தேறியது. இறப்புக்குப் பின்னரும் துயர வரலாறு நீண்டாலும் மக்கள் மனதில் கப்பலோட்டிய தமிழராக மட்டுமல்லாமல் கப்பலோட்டிய இந்தியராகவும் கம்பீரமாக நிலைத்திருக்கிறார் வ.உ.சி.!

- ரெங்கையா முருகன், ‘அனுபவங்களின் நிழல் பாதை’ என்ற நூலின் ஆசிரியர். தொடர்புக்கு: murugan_kani@yahoo.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்