வனங்கள், ஏரிகள், ஆறுகள், வன உயிர்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 51- ஏ வகுத்துள்ள 10 ஷரத்துகளில் ஒன்று. ஆனால், அந்த சட்டத்தை அரசுகளே மதிக்கவில்லை. தமிழகத்தில் 1970-களின் தொடக்கத்தில் முதன்முதலாக ஏரிகளின் மீது கையை வைத்தது அரசாங்கம்தான்.
குடிசை மாற்று வாரியத்துக்காக, பேருந்து நிலையத்துக்காக, அரசு அலுவலக கட்டிடங்களுக்காக... என ஏராளமான ஏரிகளை அழித்தது. அந்தக் காலகட்டத்தில் அதைத் தவறென்று சுட்டிக் காட்ட சுற்றுச்சூழல் குறித்த விழிப் புணர்வு யாருக்கும் இல்லை.
கடந்த 2 ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில் எத்தனையோ போர்கள், வன்முறைகள், கொடூரங்கள் நடந்திருக் கின்றன. வாதாபி எரிந்தது. மதுரை எரிந்தது. உறையூர் எரிந்தது. சமணர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். சமணக் கோயில்கள் இடிக்கப்பட்டன. இந்து ஆலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டன. ஆங்கிலேயர்களின் தேவாலயங்களை போர்ச்சுக்கீசியர் அழித்தனர். போர்ச்சுக்கீ சியர்களின் தேவாலயங்களை ஆங்கி லேயர்கள் அழித்தனர்.
ஆனால், பெரியளவில் யாரும் நீர் நிலைகளின் மீது கையை வைக்கவில்லை. ஆனால், வரலாற்றில் யாரும் செய்யாத பாவத்தை நாம் செய்துவிட்டோம். நீங்காத கறையை அள்ளி அப்பிக்கொண்டோம். ‘தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்பார்கள். ‘விதை நெல்லை விற்றவனின் இரவு விடி யாது’ என்பார்கள். நாம் தாயை பழித்து விட்டோம். விதை நெல்லை அழித்து விட்டோம். நம் பாவத்தை கழுவ எத்தனை ஏரிகளின் தண்ணீரைக் கொட்டி னாலும் போதாது.
நாம் செய்த பாவத்துக்கு கடலூர் மக்கள் அனுபவிக்கிறார்கள். 2011-ம் ஆண்டு வெள்ளத்தில் 21 பேர் இறந்தார்கள். இப்போது 32 பேர் பலியாகிவிட்டார்கள். சொல்லப் போனால் படுகொலைகள்தான் அவை. கடந்த காலங்களில் கடலூரில் ஏற்பட்ட வெள்ள சேதங்கள், உயிர்ப் பலிகள் அத்தனைக்கும் காரணம், தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் செய்யப்பட்ட ஆக்கிரமிப்புகள்தான். புவியியல் அமைப்பின்படி கடலூர் ஒரு வடிநிலம். மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் தண்ணீரின் கணிசமான அளவு அந்த வடிநிலம் வழியாகதான் கடலை அடைகிறது.
மலைகளில் இருந்து கற்பனைக் கெட்டாத வேகத்தில் சமவெளியை நோக்கி வரும் காட்டாற்றின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காக நமது முன் னோர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரங்களில் குற்றாலம், ஸ்ரீவில்லிப்புத்தூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் நூற்றுக்கணக்கான சங்கிலித் தொடர் குளங்களையும் ஏரிகளையும் அமைத் தார்கள்.
அவை காட்டாற்றின் சீற்றத்தை தணித்தன. முதல் வேகத்தடை இது. பின்பு தமிழகம் முழுவதும் இருந்த சங்கிலித் தொடர்கள் ஏரிகள், குளங்கள் எல்லாம் அடுத்தடுத்த வெள்ளத் தடுப்புச் சாதனங்களாக (Flood moderator) செயல் பட்டன. இப்படியாக மலையடிவாரம் தொடங்கி வடிநிலம் வரையில் ஏரிகள், குளங்களை நிரப்பிய தண்ணீர், கடலூரில் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் நல்லப் பிள்ளையாக கடலைச் சென்று அடைந்தது.
ஆனால், நாம் அடிவாரம் தொடங்கி வடிநிலப் பகுதி வரை ஏராளமான ஏரிகளை, குளங் களை அழித்துவிட்டோம். தனது இருப் பிடங்களை எல்லாம் இழந்த வெள்ளத் துக்கு வேறுவழியில்லை, அது வேக மாக கடலூரை நோக்கிச் சீறிப் பாய் கிறது. நொந்து சாகிறார்கள் அந்த மக்கள்.
கடலூரில் இறந்தவர்கள் அனைவரும் ஏழைகள், வீடற்றவர்கள், நிலையான வாழ்வாதாரம் இல்லாதவர்கள். குழந்தைகள்கூட வெள்ளத்துக்கு இரையாகி விட்டதுதான் கொடுமை. அசந்து உறங் கிக்கொண்டிருந்த அந்தக் பிஞ்சுகளை வெள்ளம் அடித்துச் சென்றபோது அவர்கள் எப்படி கதறியிருப்பார்கள். யார் மீது தவறு?
அந்தக் குழந்தைகளின் குடும்பம் வசித்த இடம் பெரியக்காட்டுப்பாளையம் நீர் வழி புறம்போக்கு. உளுந்தூர் பேட்டை, சேந்தநாடு, திருவெண்ணை நல்லூர், கள்ளக்குறிச்சி, கல்வராயன் மலை ஆகியப் பகுதிகளின் வனங் களில் பெய்யும் மொத்த மழை நீரூம் சில்லோடை உள்ளிட்ட காட்டு ஓடைகளாக அந்த நீர் வழி புறம்போக்கு வழியாகதான் பண்ருட்டியில் இருக்கும் கெடிலம் ஆற்றுக்கு செல்லும். ஆயிர மாயிரம் ஆண்டுகளாக தண்ணீர் பயணித்த மரபு வழித்தடம் அது. ஆனால், அந்த வழித்தடம் முழுக்க ஆக்கிர மிக்கப்பட்டிருந்தது. அரசு என்ன செய்திருக்க வேண்டும்? அந்தக் குடும்பத் துக்கு உரிய தங்குமிடம் கொடுத்திருக்க வேண்டும். நீர் வழி புறம்போக்கின் ஆக்கிரமிப்புகளை அகற்றியிருக்க வேண்டும். எத்தனை முறைதான் இயற் கையிடம் பாடம் கற்பது?
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெரியளவில் சாலை வசதிகள் இல்லை. அப்போது கடலூர் துறைமுகத்துக்கு சரக்குகள் அனைத்தும் நீர்வழிப் பாதைகளில் படகுகள் மூலமாகதான் எடுத்துச் செல்லப்பட்டன. சேலத்தில் வெட்டியெடுக்கப்பட்ட இரும்புத் தாது, படகுகள் மூலம் கடலூர் துறைமுகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டது வரலாறு. அந்தப் பெரும் படகுகள் பயணம் செய்த நீர் வழிப் பாதைகள் எல்லாம் இப்போது அழிந்துவிட்டன.
கடலூர் துறைமுகம் முதுநகர் அருகே இரு முகத்துவாரங்கள் இருக் கின்றன. ஒன்று, உப்பனாற்று முகத்து வாரம். மற்றொன்று, கெடிலம் ஆற்று முகத்துவாரம். கடலூர் மாவட்டத்தில் இருக்கும் 108 கடலோர கிராமங்களுக்கும் இந்த இரு முகத்துவாரங்கள்தான் வெள்ளப் போக்கியாக விளங்குகின்றன. ஆண்டுக்கு ஒருமுறையாவது அவற்றை தூர் வார வேண்டும். ஆனால், இன்று அந்த முகத்துவாரங்கள் தூர்வாரப்பட்டு ஆறு ஆண்டுகளாகின்றன. மக்கள் கோரிக்கை வைத்து ஓய்ந்து விட்டார்கள்.
தூர் வாரப்படாத அந்த முகத்துவாரங்களில் தண்ணீர் கடலுக்குள் நுழைய வழியில்லாமல் சென்ற வேகத்தில் மீண்டும் திரும்பி ஊருக்குள் புகுந்துவிட்டது. இவை எல்லாம்தான் கடலூர் அழிவுக்குக் காரணம்.
இன்று தூர் வார துப்பில்லாமல் அலட்சியமாக இருக்கிறோம். ஆனால், நம் முன்னோர்கள் எப்படி எல்லாம் உயிரை தியாகம் செய்து ஏரிகளை பராமரித்தார்கள் தெரியுமா? தெரிந்தால், இனிமேல் யாரையும் ‘மடையர்கள்’என்று திட்ட மாட்டீர்கள்!
நெய்வேலி காமராஜர் நகர் சாலையில் ஆறுபோல் ஓடும் மழைநீர்.
(நீர் அடிக்கும்)
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago