‘அப்படியெல்லாம் நடந்துவிடாது’ என்ற பலரது நம்பிக்கையைத் தகர்த்துவிட்டது பிரெக்ஸிட் முடிவு
ஜூன் 10 அன்று நான் லண்டனில் இறங்கியபோது, ஜூன் 23 அன்று நிகழவிருந்த ‘பிரெக்ஸிட்’ முடிவு இப்படியாகும் என்ற சூழல் ஏதும் இல்லை. என் நண்பர்கள் “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிவதெல்லாம் நடக்காத காரியம்” என்றனர். “மக்கள் பிரிய வேண்டுமென வாக்களித்தால்?” என்றேன். “வாக்களிக்க மாட்டார்கள். பிரிய வேண்டுமெனக் கேட்பவர்கள் மிகச் சிறிய ஒரு வலதுசாரிக் குழு. அவர்களுக்கு இங்கே பெரிய ஆதரவெல்லாம் இல்லை. அவர்களைத் தோற்கடித்து வாயை மூடவைப்பதற்காக இந்த வாக்கெடுப்பை நடத்துகிறார்கள்” என்றார்கள் அனைவருமே.
உண்மையில் நடந்தது என்ன? மார்கரெட் தாட்சர் காலத்திலேயே பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்னும் கோரிக்கை வலதுசாரிகளிடமிருந்து வந்துகொண்டிருந்தது. அதைச் சமீபத்தில் ஓர் இயக்கமாக முன்னெடுத்தவர் நைஜல் ஃபராஜ் என்னும் தீவிர வலதுசாரி அரசியல்வாதி. கன்சர்வேட்டிவ் கட்சியிலிருந்து 1992-ல் வெளியேறி, ‘யுனைட்டெட் கிங்டம் இண்டிபெண்டன்ஸ் பார்ட்டி’ என்னும் சிறிய கட்சியை ஆரம்பித்து, அதன் தலைவராக இருக்கும் நைஜல் ஃபராஜ், அந்நியர்கள் பிரிட்டனில் வந்து குடியேறுவதை ஒரு பிரச்சினையாகச் சொல்லிக்கொண்டே இருந்தார்.
பிரெக்ஸிட் எனும் வாக்கெடுப்பு
ஃபராஜ் தொடர்ச்சியாக ஆதரவைப் பெருக்கிக்கொண்டே இருப்பதைக் கண்ட டேவிட் கேமரூன், வலதுசாரிகளின் வாக்கு பிரிந்துவிடும் என அஞ்சினார். ஆகவே, சென்ற தேர்தலில் அவர் வென்றுவந்தால் பிரிட்டன் வெளியேறுவதா வேண்டாமா என மக்களின் கருத்து கோரப்படும் என அறிவித்தார். மக்களிடம் 5% ஆதரவுகூட இல்லாத நைஜல் ஃபராஜை அதன் வழியாகத் தோற்கடித்து, அரசியலைவிட்டே துரத்தலாம் என்று கனவு கண்டார். அதன் விளைவே பிரெக்ஸிட் எனப்படும் கருத்தறியும் வாக்கெடுப்பு.
ஆனால், மெல்ல மெல்ல பிரிட்டன் வெளியேற வேண்டும் என்னும் கோரிக்கை வலுவடையத் தொடங்கியது. நைஜல் ஃபராஜ் தன் வெறுப்புப் பிரச்சாரம் மூலம் அதை வளர்த்தெடுத்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தாலும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் நுழைவதற்கான செங்கன் விசா என்னும் பொது நுழைவு அனுமதியுடன் பிரிட்டனுக்குள் நுழைய வெளிநாட்டவரால் முடியாது. அதற்குத் தனி பிரிட்டிஷ் விசா வேண்டும். ஆகவே, இங்கே அயல்நாட்டு அகதிகள் நேரடியாக வர முடியாது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் உள்ள நாடுகள் நேரடியாக வந்து குடியேற முடியும். அதைப் பயன்படுத்திக்கொண்டு போலந்து, ருமேனியாவிலிருந்து கூட்டம் கூட்டமாக பிரிட்டனில் குடியேறிக்கொண்டிருக்கிறார்கள்.
கிழக்கு ஐரோப்பியர்களின் மொழி ஆங்கிலத்துக்கு அணுக்கமானது என்பதால் ஆறு மாதங்களில் ஆங்கிலம் பேசத் தொடங்கிவிடுவார்கள். வாழ்க்கை முறையும் பிரிட்டனுக்கு அணுக்கமானது. ஆகவே, இவர்கள் இங்குள்ள நடுத்தர வேலைகளைக் கவர்ந்துகொள்கிறார்கள். போலந்திலும் ருமேனியாவிலும் பொருளாதார வீழ்ச்சி இருப்பதால், இவர்கள் குறைந்த சம்பளத்துக்கு வேலைக்கு வர சித்தமாக உள்ளனர். எனவே, இவர்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன.
பிரிட்டன் குடிகள் அடித்தள வேலைகளை ஆப்பிரிக்க, ஈழ அகதிகள் செய்வதை வரவேற்கிறார்கள். நடுத்தர வேலைகள் இல்லாமலாவதே அவர்களைக் கசப்படைய வைக்கிறது. மேலும், வருபவர்களில் பெரும்பாலானவர்கள் கத்தோலிக்கர்கள். பிரிட்டன் சீர்திருத்தவாத கிறித்தவத்தின் பிறப்பிடம்.
இந்தக் கசப்புடன் பழைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யக் கனவுகளைச் சுமந்து வாழும் வயதான பிரிட்டிஷ்காரர்களின் ஏக்கமும் கலந்துகொண்டது. பிரிட்டன் முதலிய ஐரோப்பிய நாடுகளில் முதியவர்கள் மிக அதிகம். இவர்கள் தேர்தல்களில் முக்கியமான ஒரு தரப்பு.
ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்த கேமரூன் தீவிரமடைய வேண்டியிருந்தது. நண்பர்கள் அனைவரின் வீட்டுக்கும் கேமரூனிடமிருந்து தனிப்பட்ட கடிதங்கள் வந்திருந்தன. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே தொடர்ந்தாக வேண்டும் என்று மன்றாடியிருந்தார். வெளியேறினால் ஏற்படும் பொருளாதார அழிவுகளைப் பட்டியலிட்டிருந்தார். பிரிட்டனின் வணிகச் சமநிலையே குலையும் என்றும், அந்தச் சிக்கல்களை ஏற்கெனவே தடுமாறும் பிரிட்டனின் பொருளாதாரத்தால் தாங்க முடியாது என்றும் வாதாடியிருந்தார். ஆனால், அவரது கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன், பிரிட்டன் பிரிந்து செல்ல வேண்டும் என வாதிடும் தரப்புக்குத் தலைமை வகித்தார். அவர் பேச்சாளர், வரலாற்றாசிரியர். லண்டன் மேயராக இருந்தவர். கேமரூனை விலக்கிவிட்டு தான் பிரதமராக ஆகும் கனவுகொண்டவர்.
தொலைக்காட்சிகளில் அனல் பறந்தன விவாதங்கள். இரு தரப்பும் சமமாக இருந்தால்தான் விவாதம் சூடு பறக்கும். அதுதான் வியாபாரத்துக்கு நல்லது. ஆகவே, பிரிந்து செல்ல வேண்டும் என்று சொன்ன தரப்பைத் தொலைக்காட்சிகள் பெரியதாக ஆக்கின. கேமரூனின் வாதங்களை ‘பூச்சாண்டி காட்டுதல்’ என்று ஒரே வரியில் தள்ளிவிட்டனர். ‘தாய்நாட்டின் கௌரவத்தை மீட்பது’, ‘உழைப்பாளிகளின் வாய்ப்புகளைத் தக்கவைப்பது’ ஆகிய இரண்டு வரிகளையே ஆவேசமாகச் சொல்லிக் கொண்டிருந்தனர்.
பிரிட்டிஷ் எழுத்தாளர் ராய் மாக்ஸமை அவரது வீட்டில் சந்தித்தேன். அவர் ‘இது ஒரு விஷயமே இல்லை. பிரிந்து செல்ல வேண்டும் என்னும் தரப்பு தொலைக்காட்சிகளால் உருவாக்கப்படுவது மட்டுமே” என்றார். “இன்று வரை நடந்த கருத்துக் கணிப்புகளில் சேர்ந்திருக்க வேண்டும் என்னும் தரப்புக்கு 70% ஆதரவு உள்ளது. கருத்துக்கேட்பு முடிவுகளை வைத்துப் பந்தயம் கட்டிச் சூதாடும் கிளப்புகளில் 80% பேர் சேர்ந்திருக்க வேண்டும் என்றே பணம் கட்டியிருக்கிறார்கள். நம்மைவிட அவர்களுக்கே அனைத்தும் தெரியும்” என்றார்.
லண்டனின் மனச்சோர்வு
ஆனால், நான் லண்டனில் இருந்த ஒரு வாரத்தில் மழைமேகம் கூடி இருள்வதுபோல நிலைமை மாற ஆரம்பித்தது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் ஒன்றுடன் ஒன்று இணைந்தன. ஜூன் 12 அன்று அமெரிக்காவில் ஆர்லாண்டாவில் ஓர் இஸ்லாமிய இளைஞர் தன்பாலின உறவாளர் கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தி, 50 பேரைக் கொன்றது வலதுசாரிகளை மேலும் வலுவாக்கியது. மேற்கத்தியக் கலாச்சாரமே தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதாகச் சொல்ல ஆரம்பித்தனர். பிரிட்டிஷ் கால்வாய்க்கு மறுபக்கம் பிரான்ஸில் கலைஸ் என்னும் ஊரில் பல்லாயிரம் சிரியா இஸ்லாமிய அகதிகள் பிரிட்டனுக்குள் நுழைவதற்காக அகதிகள் முகாம்களில் காத்திருப்பது பற்றிய பேச்சுகள் எழுந்தன.
நான் ரோமில் இருந்தபோது செய்தி வந்தது, பிரெக்ஸிட்டில் பிரிட்டன் வெளியேற வேண்டும் என்றே முடிவு எடுக்கப்பட்டது என. கேமரூன் பதவி விலகப்போவதாக அறிவித்தார். நண்பர்கள் சோர்ந்துவிட்டனர். பல நிறுவனங்களின் பங்குச்சந்தை மதிப்பு பாதியாகக் குறைந்தது. அது உருவாக்கும் பொருளாதாரப் பாதிப்பு பலரைத் தொற்றலாம் என்றனர்.
நான் ஜெர்மனி, பெல்ஜியம் வழியாக திரும்ப ஜூன் 29 அன்று லண்டன் வந்தேன். லண்டனில் மொத்தமாகவே ஒரு பெரிய மனச் சோர்வைக் கண்டேன். உண்மையில், இங்குள்ள பலருக்கு இப்படி நிகழும் என்றே நம்ப முடியாமலிருக்கிறது. சென்ற பல ஆண்டுகளாகக் கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்த வேல்ஸ் பகுதி ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியைக் கொண்டே சமாளித்துவந்தது. ஆனால், தேர்தலில் வேல்ஸ் பகுதி பெரும்பான்மையாக வெளியேற வேண்டும் என வாக்களித்திருக்கிறது. அப்படி வாக்களித்ததை அறிந்து வேல்ஸ் மக்களே குழம்பிப்போயிருக்கிறார்கள். இது வெளிப்படையாகத் தெரியாத ஆழத்துக் கசப்புகள் மற்றும் சந்தேகங்களின் வெற்றி.
கட்டாயப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
பொதுவாக, இளைஞர்களும் குடியேற்றப் பின்னணி கொண்டவர்களும் நீடிக்க வேண்டும் என வாக்களித்துள்ளனர். முதியவர்கள், பெண்கள் பெரும்பாலும் வெளியேற வேண்டும் என்றே வாக்களித்தனர். என் இந்திய நண்பர் சிறில் அலெக்ஸ் பிரிட்டன் வெளியேற வேண்டும் என வாக்களித்தார். என்ன காரணம் என்று கேட்டேன். “இன்று தொழில்நுட்பம், மனிதவளம் இரண்டையும் ஐரோப்பிய நாடுகளில் இருந்தே பிரிட்டன் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கட்டாயப்படுத்துகிறது. பிரிந்து சென்றால், இந்தியாவிலிருந்து அவற்றைப் பெற்றுக்கொள்வார்கள். நீண்ட கால அடிப்படையில் இந்தியாவுக்கு அது நல்லது” என்றார்.
இது உலகம் முழுக்க வலதுசாரி அரசியல் மேலெழுந்துவருவதன் அடையாளம். உலகம் ஒன்றாக ஆவதைப் பற்றிய கனவுகள் இல்லாமலாகிவிட்டன. இன்று ஒவ்வொருவரும் தங்கள் நலன்களைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். ஐரோப்பாவில் கிரீஸ், ஐஸ்லாந்து நாடுகள் திவாலானதும் ஸ்பெயின், துருக்கி போன்றவற்றின் பொருளியல் நெருக்கடியும் வளர்ந்த ஐரோப்பிய நாடுகளின் பழைய குடிமக்களை அச்சுறுத்துகின்றன. நாம் அவர்களுக்கு உதவப்போனால் நாமும் திவாலாகிவிடுவோம் என இங்குள்ள வலதுசாரிகள் பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கிறார்கள். அத்துடன், ஐரோப்பாவை இஸ்லாமிய அடிப்படைவாதம் அச்சுறுத்துகிறது. அதற்கு எதிராக ஒன்று திரள வேண்டும், தேசிய அடையாளங்களை வலுவாக்கிக்கொள்ள வேண்டும் என்னும் கோரிக்கைகள் ஆதரவு பெறுகின்றன.
தொலைக்காட்சிகளில், முச்சந்திகளில், இணையத்தில் வாதங்கள் முடிவிலாது சென்றுகொண்டிருக்கின்றன. எல்லாரும் பதற்றமாக இருக்கிறார்கள். தவறுசெய்து விட்டோமோ என்னும் குறுகுறுப்பு பொதுவாகக் காணப்படுகிறது. சரியாகிவிடும், அமெரிக்கா உதவும் என்னும் ஆறுதலும் தெரிகிறது. ஆனால், உடனே இன்னொரு வாக்கெடுப்பு வைத்தால், நீடிக்க வேண்டும் என்னும் தரப்புக்கே பெருவாரியான வாக்குகள் கிடைக்கும் என்று தோன்றுகிறது. ஆனால், இனி ஒன்றும் செய்ய முடியாது. இது ஒரு தொடக்கம். அடுத்து, ஹங்கேரி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறலாம். ஐரோப்பிய ஒன்றியமே சில ஆண்டுகளில் கலைந்துபோகலாம். ஒரு பெரும் மானுடக் கனவு சரியத் தொடங்குகிறது!
- ஜெயமோகன், எழுத்தாளர், தொடர்புக்கு: jeyamohan.novelist@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago