தேர்தலும் ஜனநாயகமும் மக்கள் போராடிப் பெற்ற ஆயுதங்கள். ஆயுதங்களின் பயன் அவற்றின் உரிமையில் மட்டுமல்ல; சரியான பயன்பாடே பயனை முழுமைபெறச் செய்கிறது. குடவோலை முறை போன்றவை நவீனத் தேர்தலின் முன்னோடியாகச் சொல்லப்படுகின்றன. ஆனால், அவை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறைகளல்ல: மக்களுக்குள் தேர்ந்தெடுக்கப்படும் முறை மட்டுமே.
ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு. ஒவ்வொரு வாக்கும் சமமானவை என்ற வடிவம் மிக இளமையானது. இப்போதைய 18 வயது, சில ஆண்டுகளுக்கு முன்பு 21 வயதாக இருந்தது. பெண்களுக்கு வாக்குரிமை இல்லாத காலம் இருந்தது. ஆண்களுக்குள்ளும் வரி கட்டுவோருக்கு மட்டுமே வாக்குரிமை இருந்த காலமும் இருந்தது. வாக்குரிமை என்ற ஒன்றே இல்லாத காலமும் இருந்தது. இன்றைய தேர்தல் முறைக்கு வந்தடைய முற்போக்கு சக்திகள் நீண்ட, நெடிய போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது.
கடக்க வேண்டிய தொலைவுகள்
இன்றைய தேர்தல் முறையும்கூட முழுமையிலிருந்து தூர நிற்கிறது. சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளும் அவரவர் சக்திக்கேற்ற வகையில் தேர்ந்தெடுக்கப்படும் நிலை இல்லை. சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பிரிவுகளான பெண்கள், தலித் மக்கள், பழங்குடியினர், மதச்சிறுபான்மையினர் ஆகியோரில் இன்று வரையிலும் சட்டத்தின் நிர்ப்பந்தத்தினால் தலித் மக்களுக்கும் பழங்குடியினருக்கும் மக்கள்தொகைக்கேற்ப உறுப்பினர் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்கள், பாதிக்குப் பக்கத்தில்கூட இல்லை. பாதியில் ஐந்தில் ஒரு பகுதிகூட இல்லை. இதுதான் நமது ஜனநாயக வளர்ச்சியின் தற்போதைய நிலை. மதச் சிறுபான்மையினரைப் பொறுத்தமட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமான முனகல்களுக்கு மேல் வேறெதுவும் இல்லை. இவையெல்லாம் நம் ஜனநாயகம் முழுமைபெறக் கடக்க வேண்டிய தொலைவுகளைக் குறிப்பன.
விகிதாச்சார முறை வேண்டும்
தற்போதைய தேர்தல் முறை உண்மையைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் இல்லை. உதாரணமாக, இந்தியா முழுவதிலுமோ ஒரு மாநிலம் முழுவதிலுமோ இரண்டு தொகுதிகள் இருப்பதாகக்கொள்வோம். இரண்டிலும் தலா இரண்டு லட்சம் வாக்குகள் இருப்பதாகவும், இரண்டு கட்சிகள் மட்டுமே போட்டியிடுவதாகவும், ஒரு தொகுதியில் ஒரு கட்சியைச் சேர்ந்தவர், 1,25,000 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெறுவதாகவும், மற்றொன்றில் 90 ஆயிரம் பெற்றுத் தோற்பதாகவும் கொள்வோம். இப்போதைய முறையில் இரு கட்சிகளும் தலா ஒரு தொகுதியை வென்று சம நிலையில் இருப்பார்கள். உண்மையில், மொத்தமாகப் பார்த்தால், ஒரு கட்சி 2,15,000 வாக்குகளும், மற்றொரு கட்சி 1,85,000 வாக்குகளும் பெற்றிருக்கும். இது எப்படி சமநிலையாகும். இந்தியா முழுவதும் பரவலாக 10% வாக்குகள் வைத்திருக்கும் கட்சி, ஒரு இடத்திலும் வெற்றி பெறாமல் போகலாம். ஆனால், ஒரு மாநிலத்தில் சில தொகுதிகளில் 40% வாக்குகள் பெற்ற கட்சி சில இடங்களைப் பெற்றுவிட முடியும். மொத்த வாக்குகளில் இரண்டொரு சதவீத வாக்குகள்கூட இதைச் சாத்தியமாக்கிவிட முடியும். இது எப்படிப் பிரதிநிதித்துவமாகும். எனவே, விகிதாச்சார முறை மட்டுமே கட்சிகளின் பலத்தைச் சரியாகப் பிரதிபலிப்பதாக அமையும். விகிதாச்சார முறை தனிநபர் பணபலப் பிரயோகத்துக்கு முடிவுகட்டும். சாதகமான இத்தனை அம்சங்கள் இருந்தும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையை இடதுசாரிக் கட்சிகள் தவிர, யாரும் வலியுறுத்துவதில்லை. எனவே, நமது தேர்தல் முறை முழுமையடைவதைக் கட்சிகள் விரும்புவதில்லை என்பதே தற்போதைய நிலை.
தற்போதைய பிரச்சினைகள்
தற்போதைய தேர்தலில் முக்கியமான பிரச்சினைகள் என்ன? விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல், சில்லறை வணிகத்தில் அன்னியர் நுழைய அனுமதி, அயலுறவுக் கொள்கை, விவசாயம் சார் பிரச்சினை மற்றும் மருத்துவ வசதிப் பிரச்சினைகள், குடியிருப்பு, குடிநீர், சுற்றுச்சூழல், தீண்டாமை, பெண்கள்மீதான வன்முறை, மத நல்லிணக்கம் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் பிரச்சினைகள் அல்ல என்றுகூட ஒரு கட்சி சொல்லலாம். ஆனால், இவற்றுக்கான காரணகாரியங்களையும் தீர்வுகளையும் மக்கள் முன்வைக்கட்டும்.
மக்கள் தங்களுக்குச் சரியென்று படுவதைத் தீர்மானிக்கட்டும். அது தவறாக இருப்பினும் மக்கள் சரிசெய்துகொள்வார்கள். சரிசெய்யும் முறையை ஜனநாயகம் சாத்தியமாக்கும்.
தனிநபர்களை முன்வைப்பது
அரசியல்வாதிகள் மோசம், ஊழல் பேர்வழிகள், படிக்காதவர்கள், ஏய்ப்பதற்கே பிறந்தவர்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டது. அதிகாரி, டாக்டர் பட்டம் பெற்றவர், வெளிநாட்டில் படித்தவர், உலக வங்கியில் பணியாற்றியவர் என்றெல்லாம் மன்மோகன் சிங் முன்மொழியப்பட்டார். வரலாறு காணாத ஊழல் நடந்த காலம் இதுதான். சாதனை அளவு தானிய உற்பத்தி இருந்தபோதும் கோதுமையும் அரிசியும் முறையே உலகிலேயே இரண்டாவது, மூன்றாவது இடத்தில் அதிக விலை விற்பதும் இந்தியாவில்தான். 2,50,000 விவசாயிகள் தற்கொலைசெய்துகொண்ட காலமும் இதுதான்.
தனிநபர்கள்மீது நம்பிக்கைகொள்ள வைப்பது கடந்த காலத்திலும் நடந்திருக்கிறது. மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசியமயம், எண்ணெய் நிறுவனங்கள் தேசியமயம், வங்கதேச விடுதலை இதையெல்லாம் முன்வைத்து இந்திரா காந்தி இரும்பு மனுஷியாக முன்னிறுத்தப்பட்டார். பின் அவசரநிலை என்ற இருண்ட காலத்துக்குள் இந்தியா தள்ளப்பட்டது. ராஜீவ் காந்தி 21-ம் நூற்றாண்டுக்கு அழைத்துச்செல்வார் என்று முன்னிறுத்தப்பட்டார். வாஜ்பாய் ஒளிரும் இந்தியாவைப் படைத்ததாக முன்னிறுத்தப்பட்டார். தனிமனிதர்கள் இப்படி முன்னிறுத்தப்பட்டுப் பலமுறை வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் இந்திய மக்கள் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள்.
இப்போதும்கூட காங்கிரஸின் கொள்கை களுக்கு மாற்றுக் கொள்கை என்று நரேந்திர மோடியோ, காங்கிரஸின் இந்தந்த கொள்கை களில் மாற்றம் செய்திருக்கிறோம் என்று ராகுல் காந்தியோ கொள்கை அடிப்படையில் முன்னிறுத்தப்படவில்லை. இதுதான் தொடரும் என்றால், வெல்வது யார் என்பதில் ஒருவர் மாறுபடலாம். தோற்பது மக்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியும். மக்கள் தோற் காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை ஜனநாயக சக்திகளுக்கு உண்டு.
- க. கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர், சி.பி.ஐ (எம்) தொடர்புக்கு: kanagaraj@tncpim.org
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago