அழகுக்கு மறுபெயர் பணமா...

கடந்த வாரத்தில் ஓர் இ-மெயில், மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டியில் உங்களுக்குப் பிடித்தவரை அடுத்த சுற்றுக்கு உந்தித் தள்ள நீங்களும் வாக்களிக்கலாம்… வாங்க… என்று கூறி அழைப்பு விடுத்தது.

இந்தூரைச் சேர்ந்த மனாஸி என்ற அழகி இந்தியா சார்பில் மிஸ் யூனிவர்ஸில் போட்டியிடுகிறார் என்ற சமீபத்தில் படித்த செய்தியும் நினைவுக்குவர, கூடவே தேசப்பற்றும் திடீரென பெருக்கெடுத்தது.

பிரபஞ்சப் பேரழகியை தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெற்றதால், கடந்த ஒருவாரமாக அல்லோகலப்பட்டது மாஸ்கோ. 86 நாடுகளில் இருந்து வந்து குவிந்த அழகிகளின் அணிவகுப்பால் களைகட்டியது போட்டி நடைபெற்ற க்ரோகஸ் சிட்டி ஹால். பிரபஞ்சப் பேரழகியைத் தேர்வு செய்து அறிவிப்பது என்றால் சும்மாவா.

பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டவரை அடுத்த ஓராண்டுக்கு கையிலேயே பிடிக்க முடியாது. நாடுநாடாக சுற்றுலா செல்வதுதான் முக்கிய வேலை. அதற்காகவே ஓராண்டுக்கு கணிசமான சம்பளம். எண்ண முடியாத அளவுக்குப் பரிசுப் பொருள்கள் குவியும். தலையில் பூசும் ஹேர் கலரில் இருந்து, காலில் போடும் செருப்பு வரையிலும் ஸ்பான்சர்ஷிப் செய்யும் பிரபல நிறுவனங்களே அளித்துவிடும்.

பிட்னஸ், மெடிக்கல், நியூட்ரிஷன் என அனைத்துக்கும் அத்துறை வல்லுநர்களின் சிறப்பு கவனிப்பு உண்டு. விஐபிக்களின் அறிமுகம், விருந்து, கேளிக்கை என்று சந்தோஷத்துக்கு சிறிதும் பஞ்சமில்லை. வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால், சினிமாவில் புகுந்து ஒரு ரவுண்ட் வரலாம். சில தொண்டு நிறுவனங்களுக்காக சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்பது மட்டும் ஒரு கூடுதல் பணி.

மொத்தத்தில் உலக அழகி பிரபஞ்சப் பேரழகி ஆனவரின் வீட்டின் கூரையைப் பிய்த்துக் கொண்டு மட்டும் பணம் கொட்டாது. தரைத்தளத்தையும் பிளந்து கொண்டு பணம் ஊற்றெடுக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. தகுதி, திறமையில்லாமலா இத்தனையையும் அடையமுடியும்? நிச்சயமாக இல்லை.

அழகு இருக்கும் அதே நேரத்தில் திறமையும் வேண்டும் என்கிறார்கள் போட்டி ஏற்பாட்டாளர்கள். சர்வதேச அளவில் பெண்களின் பெருமையை முன்னெடுத்துச் செல்லும் ரோல் மாடல்களை உருவாக்குவதுதான் மிஸ் யூனிவர்ஸ் போட்டியின் முதன்மை நோக்கம் என்பது அவர்கள் அளிக்கும் எளிய விளக்கம். ஒளிபரப்பு உரிமை, விளம்பரதாரர்கள், டிக்கெட் கட்டணம் என பல வழிகளில் பணத்தை அள்ளுகின்றனர் போட்டியை ஜாயின்ட் வென்சர் போட்டு நடத்தும் அமெரிக்க தொழிலதிபர் டோனால்ட் டிரம்ப்பும் என்பிசி யுனிவர்சல் நிறுவனமும்.

62 ஆண்டுகால மிஸ் யூனிவர்ஸ் வரலாற்றில் பால் வண்ண மங்கையரும், கோதுமை நிற பெண்களுமே அதிகஅளவில் பட்டம் வென்றுள்ளனர் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். மேடையில் சுய அறிமுகம் செய்து கொள்ளும்போதே பர்சனாலிட்டிக்கு மார்க் போடத் தொடங்கி விடுகிறார்கள் நடுவர்கள். இதுதான் முதல்சுற்று. இதில் பல்வேறு வகை உடைகளில் வந்து அழகிகள் ஒய்யார நடைபோட்டு மார்க்கை அள்ளு… அள்ளு என்று அள்ளுகிறார்கள். எனினும் நடுவர்களின் மனம் கவர்ந்த டாப் 15 பேருக்கு மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல கதவு திறக்கிறது. இறுதியாக நேரடி விவாதம் நடத்தி புத்திக் கூர்மையையும் பரிசீலித்து பட்டத்துக்கான அழகி தேர்வு செய்யப்படுகிறார். முதல் சுற்றில் தேசிய பராம்பரிய உடைக்கு என்று ஒரு சுற்று உண்டு.

நிகாராகுவா என்ற நாட்டைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா… அந்நாட்டு அழகி நஸ்டாஸ்ஜா போலிவா தேசிய பாரம்பரிய உடையில் முதலிடம் பெற்றுள்ளார். மிஸ் வேர்ல்ட், மிஸ் எர்த், மிஸ் இண்டர்நேஷனல் உள்ளிட்ட அழகிப் போட்டிகளில் பங்கேற்க உடல்தகுதி என்னவென்பது அனைவரும் அறிந்துவைத்திருக்கும் பொது அறிவுப் பொக்கிஷம் என்பதால் அதனை இங்கே விவரிக்கத் தேவையில்லை.

பெண்ணுடலைக் வணிகப்பொருள் ஆக்குகிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் வர்த்தக நோக்கம் இப்போட்டியின் பின்னால் மறைந்திருந்து இயக்குகிறது என்று ஆயிரம் குற்றச்சாட்டுகளும், பதினோராயிரம் விமர்சனங்களும் எழுந்தாலும், இப்போட்டியை நேரடியாக ஒளிபரப்பும் சேனல்களின் எண்ணிக்கையும், பார்வையாளர்களின் கூட்டமும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துதான் வருகிறது.

பல ஆண்டுகளாக சீரும் சிறப்புமாக நடைபெற்றுவரும் இதுபோன்ற அழகிப் போட்டிகளுக்கு, பழமைவாதிகள், அடிப்படைவாதிகள், பிற்போக்காளர்கள் என்று வர்ணிக்கப்படுபவர்களால் சிறு பிரச்னைகள் ஏற்படுவது வழக்கம்.

கடந்த செப்டம்பர் மாதம் இந்தோனேசியா வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மிஸ் வோர்ல்ட் போட்டிக்கு எதிராக அங்குள்ள முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின. பெண்களின் எதிர்ப்புக்குரல் அதிகம் ஒலித்தது. அதன் எதிரொலியாக பிகினி உடை போட்டியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டது.

எதிர்ப்புகள் பெரும்பாலும் இதுபோன்ற போட்டிகளுக்கு கூடுதல் கவனஈர்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. மிஸ் வோர்ல்ட் போட்டியில் பிகினியை விட்டுக் கொடுத்ததை ஈடுசெய்ய மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் மில்லியன் டாலர் ஸ்விம்ஸுட் (நீச்சல் உடை) அறிமுகப்படுத்திவிட்டனர்.

வைரம், மரகதம், மாணிக்க கற்கள் பதிக்கப்பட்ட இந்த மில்லியன் டாலர் ஸ்விம்ஸுட்டை பட்டம் வெல்லும் அழகிக்காக பிரத்யேகமாக வடிவமைத்துள்ளனர். இதுதான் இந்த ஆண்டு பிரபஞ்ச அழகிப் போட்டியின் ஹைலைட். "மிஸ்ஸோசோலஜி" எனப்படும் அழகியல் அறிவியல் படிப்பை முடிக்காததால் இதற்குமேல் எதுவும் விமர்சிக்க முடியாது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE