பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு: படியளக்கும் அணைகள் பாதுகாக்கப்படுமா?

By அ.அருள்தாசன்

பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள், கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடி யன், அரியநாயகிபுரம், பழவூர், சுத்த மல்லி, மருதூர், வைகுண்டம் ஆகிய 8 நீர்த்தேக்கங்கள், அவற்றின் கீழ் மொத்தம் 280 கி.மீ. நீளமுள்ள 11 கால்வாய்கள், 187 குளங்கள் ஆகியவற்றுக்கு நீர் தரும் அட்சய பாத்திரமாய் பிரவாகமெடுத்து ஓடு கிறது தாய் நதியான தாமிரபரணி.

பாபநாசம் அணை

தாமிரபரணி பாசனத்தில் தலை யானது பாபநாசம் அணைக்கட்டு. 143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட இந்த அணையின் கொள்ளளவு 5,500 மில்லியன் கனஅடி. பாபநாசம் மலை யில் ஆங்கிலேயர் காலத்தில் 1942-ல் இந்த அணை கட்டப்பட்டது. இந்த அணை கட்டப்படும் முன்பு பாணதீர்த்த அருவி, கவுதலையாறு, பாம்பாறு, மயிலாறு போன்ற ஆறுகளில் இருந்து வந்த தண்ணீர் ஒன்றிணைந்து தாமிரபரணி யாக ஓடிக்கொண்டிருந்தது. அணை கட்டப்பட்டு பின்பு மேற்கண்ட ஆறுகளின் தண்ணீர் அணையில் சேகர மானது.

பாபநாசம் அணை மேலணை, கீழணை என்று இரு பிரிவாக கட்டப் பட்டுள்ளது. இரு மலைகளுக்கு இடையே கட்டப்பட்டுள்ளது மேலணை. இதில் 120 அடி வரை தண்ணீரைத் தேக்கலாம். 1944-ம் ஆண்டிலிருந்து மேலணையிலிருந்தும், கீழணை யிலிருந்தும் 4 யூனிட்கள் மூலம் மொத்தம் 28 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப் படுகிறது. பாபநாசம் அணையிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட் டங்களில் 86,107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மணிமுத்தாறு அணை

திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய அணைகளுள் ஒன்று மணி முத்தாறு. மேற்குத் தொடர்ச்சி மலை யின் களக்காடு பகுதியில் செங்கல்தேரி அருகே பச்சையாற்றின் பிறப்பிடத்திலிருந்து தனியாக பிரிந்து மணிமுத்தாறு அருவியாக மணிமுத்தாறு அணைக்கட்டில் வந்து விழுகிறது. இந்த ஆறு கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பாசமுத்திரம் அருகே தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதன் பிறகுதான் தாமிரபரணி அகண்ட ஆறாக பெருகி ஓடுகிறது. மணி முத்தாற்றின் இன்னொரு கிளை கோதை ஆறாக கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆற்றுடன் ஒப்பிடும்போது மணிமுத்தாற் றின் தண்ணீர் அளவு மிகவும் குறைவு. மழைக் காலங்களில் இது வெள்ள நீர் வெளியேற்று ஆறாகவே இருந்து வந்தது.

எனவே, இந்த வெள்ள நீர் தாமிர பரணியில் கலந்து வீணாக கடலில் கலப்பதை தடுக்க முன்னாள் முதல் வர் காமராஜரால் கொண்டு வரப்பட்ட திட்டமே சிங்கம்பட்டி அருகே 1958-ம் ஆண்டு அமைக்கப்பட்ட மணிமுத்தாறு அணை. இது 118 அடி உச்ச நீர் மட்டத்துடன் 5,511 மில்லியன் கனஅடி கொள்ளளவுடையதாகும். அணையின் மொத்த நீளம் 3 கி.மீ.

இதன் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் தெற்கு வீரவநல்லூர், கரிசல்பட்டி மற்றும் பச்சையாறு பாசனம் பெறாத நாங்குநேரி தாலுகாவின் வடக்குப் பகுதிகள், திசையன்விளை ஆகிய பகுதிகளில் சுமார் 65,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தவிர மேற்கண்ட பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமும் இந்த அணைதான். மணி முத்தாறு அணைக்கட்டு மற்றும் அருவி ஆகியவை சிறந்த சுற்றுலா தலமும் கூட.

சேர்வலாறு அணை

சேர்வலாறு அணை 1986-ம் ஆண்டு மின்வாரியத்தால் மின் உற்பத்திக்காக அமைக்கப்பட்டது. கொள்ளளவு 1225 மில்லியன் கன அடி. 156 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட இந்த அணையின் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் நீரை மீண்டும் பாபநாசம் கீழ் அணையில் தேக்கி, அதன் மூலம் பாசனத்துக்கு வகை செய்யப்பட்டுள் ளது. 20 மெகாவாட் மின் உற்பத்திக்கான கட்டமைப்புகள் இங்குள்ளன.

தூர்வாருதலே தலையாய பணி

தாமிரபரணி மிகப் பழமையான பாசன கட்டமைப்பைக் கொண்டது. கால் வாய்கள் அனைத்தும் தூர்ந்தும், கொள் ளளவு குறைந்தும் காணப்படுகிறது. பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு நீர்த்தேக்கங்களுக்குள் பல அடி உயரத் துக்கு சகதி நிரம்பியிருக்கிறது. 1992-ல் வந்த வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாறைகள், பெரும் மரங்கள் எல்லாம் அப்படியே அணைக்குள் கிடக்கின்றன. இதுவரை இந்த அணை தூர்வாரப்படவே இல்லை.

கால்வாய்களும் தூர்ந்திருப்பதால் தண்ணீர் கடத்தும் திறனும் குறைந் திருக்கிறது. கரைகள் சிதிலமடைந்தி ருப்பதால் நீர்க்கசிவு மூலம் ஏராள மான தண்ணீர் வீணாகிறது. தவிர, அணைகளில் நீர்மட்டத்துக்கு மேல் வளரும் கொடிப்பாசி என்னும் தாவரங் களாலும், முட்புதர்களாலும் தண்ணீர் கொள்ளளவு குறைவு ஏற்பட்டுள்ளது. நீரோட்டத்தில் தடையும், கரைகளில் சேதங்களும் கணிசமாகவே ஏற்பட்டிருக் கின்றன.

இவை தவிர, மக்கள் குப்பைகளை யும், கட்டிட இடிபாடுகளையும் கால்வாய் களில் கொட்டுவதால் நீரோட்டம் மேலும் தடைபடுகிறது. குடியிருப்பு பகுதி களில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுகளும் கால்வாய்களில் திறந்து விடப்படுகின்றன. இவை தவிர, தாமிர பரணியின் தண்ணீரால் பலன் பெறும் ஏராளமான பாசனக் குளங்களும் மேடுதட்டி, தூர்ந்து போயிருக்கின்றன.

எனவே அணைகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களை, குளங்களை தூர்வார வேண்டும்; ஷட்டர்களை பழுது நீக்கி பாதுகாக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

(தவழ்வாள் தாமிரபரணி)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்