பாலசரஸ்வதி நூற்றாண்டு: வாழ்வையே வேள்வியாக்கிய கலைஞர்

By அரவிந்தன்

இந்திய அரசின் பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள். சென்னை மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருது, அமெரிக்காவின் வெஸ்லியன் பல்கலைக்கழகம், உலக இசை மையம் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவங்களில் உறைவிட ஆசிரியர் பணி. உலகின் மிகச் சிறந்த நடனக் கலைஞர்களுள் ஒருவர் என்று உலகம் முழுவதும் கலைஞர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டவர். சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவி சங்கர், நோபெல் பரிசு பெற்ற ரவீந்திரநாத தாகூர், கதக் நடன மேதை ஷம்பு மகராஜ், மேற்கத்திய நடன நிபுணர்கள் மார்த்தா கிரஹாம், சார்லஸ் ரீய்ன்ஹார்ட், இந்துஸ்தானி இசைக் கலைஞர் அலி அக்பர் கான் போன்ற ஆளுமைகள் அவரது கலை மேதைமையை வியந்திருக்கிறார்கள். சத்யஜித் ரே அவரைப் பற்றி ஆவணப் படமொன்றை எடுத்திருக்கிறார்.

1919ஆம் அண்டு மே மாதம் 13ஆம் தேதி ஜெயம்மாளுக்கும் கோவிந்தராஜுலுவுக்கும் பிறந்த தஞ்சாவூர் பாலசரஸ்வதியின் வாழ்வும் பங்களிப்பும் இருபதாம் நூற்றாண்டின் தமிழக இந்தியக் கலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. பரதநாட்டியம் என்னும் கலை இன்று உயிர்ப்புடன் இருப்பதற்கும் மதிப்புக்குரிய கலையாக அது தழைத்திருப்பதற்கும் முக்கியப் பங்காற்றிய இக்கலைஞர் இந்தச் சாதனையை நிகழ்த்துவதற்காகப் பட்ட வேதனைகளும் மேற்கொண்ட போராட்டங்களும் அதிகம்.

மரபுவழிப்பட்ட கலையாக இசையையும் நடனத்தையும் பேணிவந்த தேவதாசி சமூகத்தில் பாலசரஸ்வதி பிறந்தபோது இந்தியாவில் நவீனத்துவத்தின் காற்று வீசத் தொடங்கியிருந்தது. கலையைத் தங்கள் குலதனமாகப் பெற்றுவந்த இந்தத் தொழில்முறைக் குடும்பத்தினரில் பெரும்பாலானவர்கள், நடனம், இசை ஆகியவற்றுக்குத் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர்கள். இந்தச் சமூகத்தினர் கலைகளின் கருவூலமாகத் திகழ்ந்தாலும் இதன் மறுபக்கமாக அந்தச் சமூகத்தில் உள்ள பெண்கள் பாலியல் ரீதியாகவும் இதர வழிகளிலும் சுரண்டப்பட்டார்கள். தேவதாசி முறைக்கு எதிரான இயக்கம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தீவிரமடைந்தது. தேவதாசிச் சமூகத்தின் பெண்கள் கோயிலுக்கு அர்ப்பணம் செய்யப்படுவது முதலான பழக்க வழக்கங்களும் வாழ்க்கைமுறையும் 1947-ல் தடைசெய்யப்பட்டன. சமூக இழிவுகளுக்கும் கலை மரபுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் புறந்தள்ளப்பட்டு எல்லாவற்றையும் தூக்கி எறியும் மனநிலை பொதுவெளியில் உருவாக்கப்பட்டது.

புயலுக்கு நடுவே புதிய உதயம்

தன்னைச் சுற்றி அடிக்கும் மாபெரும் புயலைப் பற்றிய உணர்வு ஏதுமின்றி பாலசரஸ்வதி 7-ம் வயதில் காஞ்சிபுரத்தில் ஒரு சிறிய கோயிலில் அரங்கேற்றம் செய்தார். அதன் பிறகு வெவ்வேறு இடங்களில் சில கச்சேரிகள் வழங்கினார். 15 வயதில் சென்னை மியூசிக் அகாடமியின் ஏற்பாட்டில் நடந்த கச்சேரியைப் பார்த்த புகழ்பெற்ற விமர்சகர் கே. சந்திரசேகரன் பாலாவை வெகுவாகப் பாராட்டி எழுதினார். கலையைப் பற்றி அறிந்தவர்கள் அனைவருக்கும் ஒரு மாபெரும் கலைஞரின் உதயம் தெளிவாகத் தெரிந்துவிட்டது. மரபுவழிப்பட்ட கலைக் குடும்பத்தில் பிறந்தவரும் வீணை தனம்மாள் என்னும் இசை மேதையின் பேத்தியுமான இந்தச் சிறுமி நடனக் கலையின் எழுச்சியின் வடிவமாகப் பார்க்கப்பட்டாள்.

பின்னாளில் உலகப் புகழ் பெற்ற சிதார் இசைக் கலைஞர் பண்டிட் ரவி சங்கரின் சகோதரர் உதய் சங்கர் 1933-ல் சென்னைக்கு வந்திருந்தார். பாலசரஸ்வதியின் நடனத்தை “அற்புதம்” என அவர் வர்ணித்தார். பாலாவை (அவருக்கு நெருக்கமானவர்களும் பெருவாரியான ரசிகர்களும் அவரை அன்போடு அப்படித்தான் அழைத்தார்கள்) வட இந்தியாவுக்கு அழைத்துச்சென்று நடனமாடுவதற்கு ஏற்பாடு செய்தார். அங்குதான் அவர் அக்பர் அலி கான், ஷம்பு மகராஜ் முதலான மகத்தான இசைக் கலைஞர்களைச் சந்தித்தார். வங்கம் உள்ளிட்ட பிற மொழிப் பாடல்களுக்கு நடனமாடினார். பாலசரஸ்வதி சென்ற இடமெல்லாம் அவரது மகத்தான கலைத் திறமைக்கு அங்கீகாரமும் பாராட்டும் பெற்றன.

தமிழகத்திலும் பாலாவின் புகழ் பரவ ஆரம்பித்தது. மரபுசார் கலைஞர்களின் நடனம் கண்டனத்துக்குள்ளானபோதிலும் பாலாவின் நடனம் தனி மதிப்பைப் பெற்றது. மரபுசார் கலைஞர்களின் நடனம் ஆபாசமானது என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால், பாலாவின் நடனம் மரபுசார் நடனத்தின் மகத்துவத்தை மக்களுக்கு எடுத்துச் சொன்னது. ஆபாசம் என்னும் குற்றச்சாட்டின் சிறு நிழல்கூட விழாதவண்னம் நடனத்தை அவர் கையாண்டார். மரபுவழிப்பட்ட நடனத்துக்கு எதிராகப் பேசிவந்த கல்கி ஆர். கிருஷ்ணமூர்த்தி, ரசிகமணி டி.கே.ஷண்முக முதலியார் போன்றோரும் பாலாவின் நடனத்தைப் பார்த்துத் தங்கள் கருத்தை மாற்றிக்கொண்டு நடனத்திற்கு ஆதரவளிக்கத் தொடங்கினார்கள்.

1947-ல் தேவதாசி ஒழிப்புச் சட்டம் இயற்றப்பட்டது. மரபுசார் நடனப் பயிற்சியும் கோயிலில் ஆடுவதும் தடைசெய்யப்பட்டன. நடனக் கலையை நவீனப்படுத்தவும் மரபுவழிப்பட்ட குடும்பங்களிலிருந்து அதை மீட்கவுமான முயற்சிகளும் தீவிரமாக நடந்தன. குடும்பங்களில் வழிவழியாகக் கற்றுக்கொள்ளும் முறை, கலையை அணுகும் விதம், கலையைப் பேணுவதிலும் அதில் உன்னதத்தைக் காண்பதிலும் தொழில்முறைக் குடும்பங்களுக்கே உரிய தீவிரமான ஈடுபாடும் பயிற்சிகளும் ஆகிய அனைத்தும் மறையத் தொடங்கின. சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் தேவதாசிச் சமூகத்தினரின் பிரச்சினைகளைக் களைவதற்கான முயற்சிகள் அதிகம் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக, அந்தச் சமூகம் முழுவதும் வெறுப்பு, புறக்கணிப்பு, ஒதுக்கப்படுதல் ஆகியவற்றுக்கு ஆளானது. தேவதாசிக் குடும்பங்கள் பல தங்களது அடையாளங்களை மறைத்துக்கொண்டு புதிய வாழ்வைத் தேடின. இத்தகைய சூழலில் பாலா தொடர்ந்து நடனமாடியதும் அவர் நடனமாடிய விதமும் மரபுவழிப்பட்ட பரதநாட்டியத்தின் பெருமையை உணர்த்தும் ஒரே சாதனமாக விளங்கின.

சோதனையும் திருப்புமுனையும்

தமிழகத்திலும் இந்திய அளவிலும் பாராட்டுகளும் அங்கீகாரமும் பெற்றாலும் 1940-கள் பாலாவுக்குச் சோதனையான காலகட்டமாக அமைந்தது. நடனத்துக்கு எதிரான பிரச்சாரங்களால் நடனமாடுவதற்கான வாய்ப்புகள் குறைந்தன. அவருடைய குருவும் நட்டுவனாருமான கந்தப்பப் பிள்ளை அல்மோராவில் உதய் சங்கர் தொடங்கிய கலைப் பள்ளியில் கற்பிப்பதற்காகப் போய்விட்டார். பல்வேறு காரணங்களால் பாலாவின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடல் பருமன் பெரும் தொந்தரவாக மாறியது. இத்தனையையும் மீறி பாலா தன் கலையை அசாத்தியமான பக்தி சிரத்தையுடன் பேணிவந்தார்.

1950களில் அவர் வாழ்வில் திருப்புமுனை ஏற்பட்டது. பாலசரஸ்வதியின் விடா முயற்சி, தீவிரமான ஈடுபாடு ஆகியவை காரணமாக முக்கியமான பல ஆளுமைகளின் கவனம் அவர்மீது விழுந்தது. அவரது கச்சேரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. சென்னை மியூசிக் அகாடமியில் ‘பாலசரஸ்வதி மியூசிக் அண்ட் டான்ஸ் ஸ்கூல்’ என்னும் பள்ளி தொடங்கப்பட்டது. அதில் பாலசரஸ்வதி நடனமும் இசையும் கற்பித்தார்.

கடல் தாண்டிப் பரவிய புகழ்

சென்னையில் பாலாவின் கச்சேரியைக் கண்ட அயல்நாட்டுக் கலைஞர்களின் மூலம் டோக்கியோவில் நடைபெற்ற கிழக்கு - மேற்கு சந்திப்பு நிகழ்ச்சியில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பு பாலாவுக்குக் கிடைத்தது. டோக்கியோவில் முதல் நாள் நிகழ்ச்சி முடிந்ததும் மேடையில் திரை விழுந்ததும் பார்வையாளர்கள் அனைவரும் ஒருசேர எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினார்கள். டோக்கியோ கச்சேரி பாலசரஸ்வதிக்குத் திருப்புமுனையாக அமைந்தது. சர்வதேச அளவில் முதல் தரமான கலைஞர்களால் அவர் அங்கீகரிக்கப்பட்டார். அதன் பிறகு, ஐரோப்பா, அமெரிக்கா எனப் பல இடங்களுக்கும் பயணம் செய்து நடனம் ஆடினார். அமெரிக்காவில் பெரும் அங்கீகாரம் பெற்றார். ஆண்டுதோறும் அங்கே பல மாதங்கள் உறைவிட ஆசிரியராகத் தங்கியிருந்து பாடம் எடுத்தார். தமிழகத்தில் இழிவுபடுத்தப்பட்ட ஒரு கலைக்கு இந்திய அரங்கிலும் உலக அரங்கிலும் மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்று அதற்குப் புத்துயிர் தந்தார் பாலா.

அதன் எதிரொலி தமிழகத்திலும் இந்தியாவிலும் அழுத்தமாகக் கேட்டது. விருதுகளும் பெருமைகளும் தேடி வந்தன. கலைமாமணி, பத்ம பூஷண், பத்ம விபூஷண், சங்கீத கலாநிதி என அவரது பெருமையின் மகுடத்தில் ரத்தினங்கள் சேர்ந்தவண்ணம் இருந்தன. உலகம் முழுவதும் அவரது மாணவர்கள் பெருகினார்கள். உலகின் மிகச் சிறந்த நிகழ்த்துக் கலைஞர்கள் அவரது மேதைமையை அங்கீகரித்தார்கள். நடனத்தின் வாழும் வடிவமாகவே அவர் பார்க்கப்பட்டார்.

மேடையில் நிகழ்த்திய மாயம்

கிட்டத்தட்ட ஒற்றை ஆளாகப் போராடி பரதநாட்டியத்துக்கான இடத்தையும் மரியாதையையும் நிலைநிறுத்தியது பாலசரஸ்வதிக்கு எப்படிச் சாத்தியமாயிற்று? அவரது அசாத்தியமான கலை ஆளுமை ஒரு காரணம். அபிநயம், பாவனைக் கலை, முத்திரைகள் ஆகியவற்றில் ஒப்பற்ற திறன் படைத்திருந்த பாலா மேடையில் மாயங்களை நிகழ்த்தியதாக அவரது நடனத்தைப் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். பெரிதாக மேடை அலங்காரங்களோ அரங்கப் பொருள்களோ இல்லாமலேயே பாலாவால் மேடையில் பல அற்புதங்களை நிகழ்த்த முடிந்தது. அவர் அந்தப் பக்கம் திரும்பிக் கிருஷ்ணனை அழைத்தபோது கிருஷ்ணன்தான் வந்துவிட்டானோ என்று பார்வையாளர்களுக்கு பிரமை ஏற்படும் அளவுக்கு அவரது பாவனைக் கலை இருந்தது. பாடிக்கொண்டே நடனமாடும் அவரது குட்ம்பத்தின் பாரம்பரியத் திறமை முழுமையாக அவருக்கு வசப்பட்டிருந்தது. அவரால் மேடையில் மாயத் தோற்றங்களை உருவாக்க முடிந்தது. அமெரிக்காவில் பிறந்த இசைக் கலைஞரும் பாலாவின் மருமகனுமான டக்லஸ் எம்.நைட் ஜூனியர் எழுதியுள்ள பாலசரஸ்வதியின் வாழ்க்கை வரலாற்றில் (பாலசரஸ்வதி: அவரது கலையும் வாழ்வும்) பல ஆளுமைகள் பாலாவின் நடனம் தரும் அற்புத அனுபவம் குறித்த தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

தனது கலையின் மீதும் கலையைப் பேணி வளர்க்கும் தன் மரபின் மீதும் பாலாவுக்கு இருந்த ஆழ்ந்த பற்றும் அசைக்க முடியாத உறுதியும் அவரது சாதனைகளுக்கு இன்னொரு காரணம். நடனத்துக்கான பாடல் தொகுப்புகள் பெரும்பாலும் புராண இதிகாசப் பாத்திரங்கள், நிகழ்வுகள் தொடர்பானவை. பாலசரஸ்வதி அவற்றை வெறும் பாடல்களாக, புனைவுகளாகப் பார்க்கவில்லை. புராணக் கதாபாத்திரங்களுடன் தான் வாழ்வதாகவே உணர்வதாக அவர் கூறியிருக்கிறார். கடவுளர்களுடன் அத்தனை நெருக்கமாக அவர் உணர்ந்ததாலேயே மேடையில் அவர்களைக் ‘கொண்டுவர’ அவரால் முடிந்தது. இறைமையுடன் உறவடுவதற்கான சாதனமாகவே கலையை அவர் பார்த்தார்.

சிலரால் முகச் சுளிப்புடன் பார்க்கப்பட்ட சிருங்காரம் என்பதையும் மானுடக் காதலின் தளத்தில் அல்லாமல் தெய்வீகக் காதலாகச் சித்தரித்து அலாதியான அனுபவத்தைச் சாத்தியமாக்கியவர் அவர். புறச் சூழல்களால் தடுமாறாத அளவுக்குக் கலை குறித்த அவரது புரிந்துணர்வு முழுமையானதாகவும் கலையின் மீதான ஈடுபாடு ஆழமாகவும் இருந்தன.

கலையை அதன் முழுமையில் தரிசித்து வெளிப்படுத்த அவரால் முடிந்தது. இசையையும் நடனத்தையும் ஒன்றாகவே காணும் மரபில் வந்த அவர், இசையின் காட்சி வடிவமாகவே நடனத்தைக் காண்பதாகக் குறிப்பிட்டார். மரபிலிருந்து தான் பெற்றுக்கொண்ட கலையைச் செழுமைப்படுத்தி, அதற்கான மரியாதையை ஏற்படுத்திக்கொடுத்து அதை அடுத்த தலைமுறைக்குக் கொடுத்துவிட்டுச் சென்றார். தன் இளமைக் காலத்தில் சமூகத்தால் இழிவுபடுத்தப்பட்ட தன் கலை, தன் வாழ்நாளிலேயே மதிப்புக்குரிய இடத்தில் வீற்றிருப்பதைப் பார்த்த நிறைவை அடைந்தவர் பாலசரஸ்வதி.

இன்று தமிழகத்தின் பெருமைக்குரிய சில அம்சங்களில் ஒன்றாகச் செவ்வியல் நடனமும் இருக்கிறது என்றால் அதற்கான முக்கியக் காரணங்களில் முதன்மையானவர் பாலசரஸ்வதி. மேதைகளுக்கே உரிய தன்னம்பிக்கையுடனும் உன்னதத்தை எய்திய கலைத் திறனுடனும் தன் சாதனைகளை அவர் நிகழ்த்தினார். புறக்கணிப்பை ஒரு கலையாகவே பயின்ற தமிழ்ச் சமூகத்தில் உரிய முறையில் அவர் நினைவுகூரப்படாமல் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. இருபதாம் நூற்றாண்டின் சிறந்த தமிழ் ஆளுமைகளில் ஒருவராக இடம்பெற வேண்டியவரின் பெயர் அவரது நூற்றாண்டிலேனும் அதற்குரிய இடத்தைப் பெற்றால் அது அந்த மாபெரும் ஆளுமைக்குச் செலுத்தும் நன்றிக் கடனாக அமையும்.



பாலசரஸ்வதியின் குரல்: “நடனமும் இறைநிலையின் வெளிப்பாடுதான்”

உணர்ச்சிகளின் வீச்சில் சிருங்காரம் மேலான இடத்தில் இருக்கிறது. மனிதனுக்கும் கடவுளுக்குமிடையிலான ஆன்மிக இணைப்பை இதைக் காட்டிலும் சிறப்பாகப் பிரதிபலிக்கும் உணர்ச்சி வேறொன்றும் இல்லை. பக்திப் பாடல்கள் அவசியம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், கலாபூர்வமான வெளிப்பாட்டுக்கும், புதிய அம்சங்களும் நுட்பங்களும் நிரம்பிய எண்ணற்ற மனநிலைகளின் சித்தரிப்பாக நடனம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதற்குமான வாய்ப்பைத் தரும் மிக முக்கியமான உணர்ச்சி சிருங்காரம்தான். சிருங்கார உணர்ச்சியை வெளிப்படுத்தும் வரிகளுக்குப் பதிலாகப் பக்திப் பாடல்களைப் பயன்படுத்துவதன் மூலம் பரதநாட்டியத்தைத் ‘தூய்மை’ப்படுத்தச் சிலர் முயற்சிசெய்கிறார்கள். பரதநாட்டியத்தில் புதிதாகத் தூய்மைப்படுத்த வேண்டிய அம்சம் என்று எதுவும் கிடையாது என்று அவர்களுக்கு நான் மரியாதையுடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது தற்போது உள்ள நிலையிலேயே தெய்வீகமானதுதான். அதன் பிறவி இயல்பே அதுதான். பரத நாட்டியத்தில் நாம் அனுபவிக்கும் சிருங்காரம் பாலுறவு சார்ந்தது அல்ல. முழுமையான அர்ப்பணிப்புடன் தங்களைக் கலைக்கு ஒப்புக்கொடுத்தவர்களைப் பொறுத்தவரை இசையைப் போலவே நடனமும் இறைநிலையின் வெளிப்பாடுதான். வெறும் உடல் ரீதியான பரவசமாக அது இருக்க முடியாது… நடனத்தின் ஆன்மிக அம்சம் பாலுணர்வை விலக்குவதன் மூலம் அல்ல, பாலுணர்வுபோலத் தோன்றும் அம்சத்தை மேலான தளத்துக்கு எடுத்துச்செல்வதன் மூலம் எய்தப்படுகிறது.

முழுமை பெற்ற கலை

பத்ம பூஷண், பத்ம விபூஷண் ஆகிய உயரிய விருதுகளைப் பெற்ற பாலசரஸ்வதிக்கு மியூஸிக் அகாடமியின் சங்கீத கலாநிதி பட்டத்தையும் பெற்றார். 1971-ல் வழங்கப்பட்ட இந்த விருதுக்கான பாராட்டுப் பத்திரத்திலிருந்து சில பகுதிகள்:

"தாங்கள் தேர்ந்துகொண்ட கலை வடிவத்துடன் தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதே அரிதான கலைஞர்களின் ஒரே கவலையாக இருக்கும். கலையின் பால் ஏற்படும் இந்த அர்ப்பண உணர்வு பக்குவமாகிக் கனிந்து, முழு முற்றான பக்திபூர்வமான சமர்ப்பணமாக, ஆத்ம சமர்ப்பணமாகப் பரிணமிக்கிறது. கலையிடம் தன்னை ஆத்ம சமர்ப்பணம் செய்துகொண்ட கலைஞர் அந்தக் கலையின் கைக் கருவியாக, கைப்பாவையாக மாறிவிடுகிறார். இதன் மூலம் கலை தனது அழகின் முடிவற்ற வகைமைகளைப் பலப்பல விதங்களில் வெளிப்படுத்திக்கொள்கிறது. இதன் உச்ச நிலையில் கலை, கலையாக இல்லாமல் பெரும் ஆசீர்வாதமாக மாறுகிறது. பரத நாட்டியத்தில் ஆசீர்வதிக்கப்பட்ட இந்த நிலையை எய்திய அலாதியான ஒரே கலைஞர் பாலசரஸ்வதி.”



(மேற்கோள்கள் டக்லஸின் நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன)



வளமான மரபின் சிறப்பான பிரதிநிதி!’

டக்லஸ் எம். நைட் ஜூனியர் நேர்காணல்

Balasaraswathi: Her Life & Art என்னும் நூலை எழுதிய டக்லஸ் எம்.நைட் ஜூனியர் பாலசரஸ்வதியிடமும் அவருடைய தம்பி டி. ரங்கநாதனிடமும் தென்னிந்திய இசையையும் நடனத்தையும் கற்றவர். பாலசரஸ்வதியின் பெண் லட்சுமியைத் திருமணம் செய்துகொண்டவர். பாலசரஸ்வதி கலையுலகிற்குச் செலுத்திய மகத்தான பங்களிப்பை விரிவாகவும் ஆதாரபூர்வமாகவும் படைப்பூக்கத்துடனும் பதிவுசெய்ததன் மூலம் தமிழ்ச் சமுதாயத்துக்குப் பெரும் கொடையை அளித்திருக்கிறார். க்ரியா பதிப்பகத்தின் வாயிலாகத் தன்னுடைய நூல் தமிழில் வெளிவருவது குறித்த உற்சாகத்துடன் இருந்தவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…

பாலசரஸ்வதியின் வாழ்க்கையை எழுத வேண்டுமென்று ஏன் தோன்றியது?

பாலாம்மாவை மிகவும் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அவரிடம் கற்றிருக்கிறேன். அவருடைய நிகழ்ச்சியில் மிருதங்கம் வாசித்திருக்கிறேன். அவரது ஆளுமையின் வலிமையையும் அவருடைய கலையின் மேன்மையையும் உணர்ந்திருக்கிறேன். அதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன்.

பாலாவின் வாழ்வின் திருப்புமுனை என எதைக் கருதுகிறீர்கள்?

நெதர்லாந்தைச் சேர்ந்த இனமரபு இசைபியலாளரான (Ethnomusicologist) பெரில் டி ஸோய்ட், இந்தியச் சுற்றுப்பயணம் வந்திருந்தபோது பாலாவின் கச்சேரியைப் பார்த்து பிரமித்தார். அவரது முயற்சியின் பேரிலேயே பாலாவுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று ஆடுவதற்கும் கற்பிப்பதற்கும் வாய்ப்புகள் கிடைத்தன. 1947இல் பாலா திருவேற்காடு அம்மன் கோயிலுக்குப் போய்விட்டு வந்தார். அதுவும் தன் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியது என்று அவரே சொல்லியிருக்கிறார்.

பாலாவின் ஆளுமையில் உங்களை அதிகம் கவர்ந்தது எது?

அவரது கம்பீரம். மேடையிலும் வகுப்பறையிலும் அவர் ஒரு மகராணி போன்றவர். பார்ப்பவர்களைத் தன்பால் ஈர்த்துவிடும் ஆளுமை. தனிப்பட்ட முறையில் மிகுந்த பணிவும் எளிமையும் கொண்டவர். மற்றவர்கள் அவரிடம் அளவுக்கதிகமாகச் சலுகை எடுத்துக்கொள்ளுமளவுக்கு மிகவும் அன்பாக நடந்துகொள்ளுவார்.

அவர் விட்டுச் சென்ற தடம் என எதைச் சொல்வீர்கள்?

இந்திய மரபின் உள்ளார்ந்த ஆற்றலை அதன் கலைகளில் உணரலாம். அத்தகைய கலையை அதன் உன்னத வடிவில் பயின்று வெளிப்படுத்தியவர் பாலா. வளமான மரபின் சிறப்பான பிரதிநிதியாக விளங்கிய அவர் அதன் சத்தான பகுதிகளை உலகம் முழுவதிலும் பலருக்குக் கற்பித்துச் சென்றிருக்கிறார். மரபுவழிப்பட்ட நடனத்தின் நுட்பங்கள் இன்னமும் உயிர்ப்புடன் இருக்க அவர் முக்கியக் காரணம்.

படங்கள்: நன்றி ‘மேக்னம் ஸ்டுடியோ’, கலிஃபோர்னியா

அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்