திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வறட்சி பகுதிகளை வளப்படுத்த தொடங்கப்பட்ட வெள்ளநீர் கால்வாய் திட்டம் அரைகுறையாக நிற்கிறது. தாமிரபரணி ஆற்றிலிருந்து ஆண்டுதோறும் மழை காலங்களில் சுமார் 50 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர் கடலில் சென்று கலக்கிறது. அவ்வாறு கலக்கும் தண்ணீரை திருநெல்வேலியின் வறட்சிப் பகுதிகளான ராதாபுரம், திசையன்விளை, நாங்குநேரி மற்றும் தூத்துக்குடியின் சாத்தான்குளம் வட்டார பகுதிகளுக்கு திருப்பிவிட்டால் பல ஆயிரம் ஏக்கர் நிலம் செழிக்கும்.
இணைப்புத் திட்டம்
அதன்படி தாமிரபரணி ஆறு - கருமேனி ஆறு - நம்பியாறு ஆகியவற்றை இணைத்து திசையன்விளை அருகே எம்.எல். தேரியில் மிகப்பெரிய குளம் அமைக்கும் திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மொத்தம் ரூ.369 கோடியில் தயாரிக்கப்பட்டு, முதல்கட்டமாக ரூ.65 கோடியை ஒதுக்கி அப்போதைய முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். தொடர்ந்து 2010-ல் ரூ.41 கோடியும், 2011-ல் ரூ.107 கோடியும் ஒதுக்கப்பட்டது.
திட்டத்தில் முதல்கட்டமாக கன்னடியன் கால்வாய் முதல் திடியூர் வரை 20.3 கி.மீ. தூரம், 2-ம் கட்டமாக திடியூர் முதல் மூலக்கரைப்பட்டி வரை 18.6 கி.மீ. தூரம் கால்வாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதில் மேலச்செவல் கிராமத்தில் ஒரு பாலம், ஒரு ரயில்வே பாலம், நான்கு வழிச்சாலையில் பாலம், இணைப்பு கால்வாயில் இரு பாலங்கள் கட்ட வேண்டியுள்ளது.
இந்நிலையில் 2011-12-ம் ஆண்டுக்குப்பின் 2 கட்டங்களில் எஞ்சியுள்ள பாலங்களின் பணியையும், மூலக்கரைப்பட்டி முதல் காரியாண்டி வரையுள்ள 12.7 கி.மீ. தூரமுள்ள 3-ம் கட்ட பணிகளுக்கும், காரியாண்டி முதல் எம்.எல்.தேரி வரையிலான 21.4 கி.மீ. தூரமுள்ள 4-ம் கட்ட பணிகளும் இதுவரை தொடங்கப்படவில்லை. தமிழக அரசு கடந்த 2012-13-ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில், “ரூ.39 கோடி மதிப்பீட்டிலான தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத் திட்டம் துரித செயலாக்கத்தில் உள்ளது. இத் திட்டத்துக்காக 2012-13-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.
அதேபோல 2013-14-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும், “தாமிரபரணியாறு - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம், கட்டளை கதவணையுடன் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் ஆகியவற்றின் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாநில அரசின் இந்த திட்டங்களுக்கு 2013-14-ம் ஆண்டின் வரவு செலவு திட்டத்தில் ரூ.156.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
என்ன சொல்கிறது அரசு?
இது தொடர்பாக ராதாபுரம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மு. அப்பாவு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களை கேட்டிருந்தார். இதற்கு கடந்த 28.11.13-ம் தேதி திருநெல்வேலி மாவட்ட நீர்வள ஆதார அமைப்பு கண்காணிப்பு பொறியாளர் ஆ.மலைச்சாமி அளித்த பதிலில், “இந்தத் திட்டம் மத்திய அரசின் விரைவுப்படுத்தப்பட்ட பாசன பயன் திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு எதிர்பார்ப்பில் முதல் மற்றும் 2-ம் கட்ட பணிகளுக்கு மாநில அரசு நிதி ஒதுக்கி, பணிகள் செயல்படுத்தப்பட்டன. மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பட்டவுடன் 3 மற்றும் 4-ம் கட்ட பணிகளை தொடங்கலாம் என்று அரசு கருத்து கூறியுள்ளதால் பணிகளை செயல்படுத்துவதில் தாமதமாகிறது” என்று குறிப்பிட்டிருந்தது.
50,000 ஏக்கர் வளம் பெறும்
இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் நாங்குநேரி, ராதாபுரம், சாத்தான்குளம் வட்டாரங்களில் 50 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதுடன், 50 கிராமங்களில் உள்ள 5,220 கிணறுகளிலும் தண்ணீர் பெருகும். இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் மு.அப்பாவு வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விரைவில் வெள்ளநீர் கால்வாய் திட்டம் நிறைவேறும். வறண்ட பகுதிகளில் பசுமை பூக்கும் என்கிற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள் விவசாயிகள்.
(தவழ்வாள் தாமிரபரணி)
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago