வழக்கறிஞர்களே.. மக்கள் கவனிக்கின்றனர்!

By கே.சந்துரு

ஒழுங்கீனமான வழக்கறிஞர்களின் உரிமத்தைப் பறிப்பதற்கு புதிய விதி வழிவகுக்கிறது.

நூறு வருடங்களுக்கு முன் இந்திய வழக்கறிஞர்கள் இந்திய நீதிமன்றங்களில் தொழில்செய்ய அனுமதி மறுக்கப்பட்ட வரலாறு உண்டு. அவர்களையும் உயர் நீதிமன்றத்தில் பணியாற்ற அனுமதித்த தலைமை நீதிபதிக்கு எதிராக ஆங்கில பாரிஸ்டர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியதும் நடந்தது. ஆனால் அதையெல்லாம் மீறி இந்திய வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் தங்களது வெற்றிக்கொடியை நிலைநாட்டியபோது சோகம் ஒன்று காத்திருந்தது.

1921-ல் கருப்பு அங்கியையும் கழுத்துப்பட்டியையும் தூக்கியெறிந்துவிட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் சேர அறைகூவல் விடுத்திருந்தார் காந்தி. அதையொட்டி தொழிலில் திறன் படைத்த பலர் நாட்டின் விடுதலைக்கு தங்களை அர்ப்பணித்தனர். அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்தவர்களோ முந்தைய தலைமுறையின் இடத்தை எட்டி, கெட்டியாகப் பிடித்துக்கொண்டனர். அவர்களைப் பொறுத்தவரை தொழில் முன்னே; தேசம் பின்னே என்பதே கொள்கையாக இருந்தது. இதே காலகட்டத்தில்தான் வழக்கறிஞர் தொழிலை ஒழுங்குபடுத்த முதல் முறையாக 1925-ம் வருட ‘இந்திய பார் கவுன்சில் சட்டம்’ கொண்டுவரப்பட்டது.

விதிமீறல்கள்

வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை உயர் நீதிமன்றத்திடம் அளித்தது இச்சட்டம். விளைவாக, தேச பக்த வழக்கறிஞர்கள் அவ்வப்போது ஆங்கில நீதிபதிகளின் ‘உரிமத்தை ரத்துசெய்துவிடுவோம்’ மிரட்டலை எதிர்கொண்டனர். 1961 வருட வழக்கறிஞர்கள் சட்டம் முதன்முறையாக அகில இந்தியரீதியில் வழக்கறிஞர்கள் தொழிலை ஒருமுகப்படுத்தவும், பார் கவுன்சில்களுக்கு சுயேட்சையான அதிகாரம் வழங்கவும் முயற்சித்தது. ஆயினும் உயர் நீதிமன்றங்களுக்குள் நடக்கும் ஒழுங்கீனங்களை முறைப்படுத்தவும், நீதிமன்றச் செயல்பாடுகளைச் சிறப்பிக்கவும் பிரிவு 34-ன் கீழ் உயர் நீதிமன்றங்களே விதிமுறைகளை வகுத்துக்கொள்வதற்கு அச்சட்டம் வழிவகுத்தது. ஆனாலும், பல உயர் நீதிமன்றங்கள் இதற்கான தெளிவான சட்ட விதிகளை வகுத்துக்கொள்ளவில்லை. நீதிமன்றங்களில் முறைகேடாகச் செயல்படும் வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கும் போக்குதான் இருந்தது.

அகில இந்திய பார் கவுன்சில் வழக்கறிஞர் சட்ட விதிகள், ‘நீதிமன்றத்தின் முன் வழக்கறிஞர்களுக்கு உள்ள கடமை’ என்ன என்பதைத் தெளிவாகவே வரையறுக்கின்றன. நீதிபதிகளைக் கௌரவமாக நடத்துவதும், அவர்களிடம் முறைகேடான வழிகளில் தம் செல்வாக்கை நிலைநாட்ட முயலக் கூடாது என்பதும் தீர்க்கமாகவே கூறப்பட்டிருக்கிறது. எனினும், இந்த விதிகளின்படியெல்லாம், இவற்றை மீறிய வழக்கறிஞர் எவர் மீது இதுவரை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது கிடையாது.

தாமதமான புதிய விதிகள்

2004-ல் சென்னை உயர்நீதிமன்றம் அப்பிரிவின் கீழ் விதிகளை வகுத்திருந்தாலும் வழக்கறிஞர்களின் எதிர்ப்பால் அவற்றை 25 நாட்களில் திரும்பப் பெற்றது. அச்சமயத்தில் அந்த விதிகளைக் கண்டித்து நான் ‘ப்ரண்ட்லைன்’ இதழில் கட்டுரை எழுதியிருந்தேன். தலைமை நீதிபதியிடமும் அவ்விதிகளை திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தினேன். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்படும் வழக்கறிஞர்களின் சன்னத் (அ) உரிமம் பறிக்கப்பட்டு அவர் தொழில் நடத்த தடைவிதிக்க வழக்கறிஞர் சட்டம் பிரிவு 34-ன்கீழ் சென்னை உயர்நீதி மன்றம் உருவாக்கிய விதிகளில் வழி உண்டு.

வி.சி.மிஸ்ரா என்ற அன்றைய பார் கவுன்சில் தலைவர் அலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதிக்கு எதிரே ஒழுங்கீனமாக நடந்துகொண்டது தொடர்பாக உச்ச நீதிமன்றமே சுயமாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்தது; அவர் தண்டிக்கப்பட்டார். எனினும், அவருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து போடப்பட்ட சீராய்வு மனுவில், ஒழுங்கு நடவடிக்கை அதிகாரம் பார் கவுன்சில்களுக்கு மட்டுமே உண்டு என்று கூறி தீர்ப்பு மாற்றப்பட்டது.

டெல்லியில் நந்தா என்பவர் வெளிநாட்டு காரை வேகமாக ஓட்டி ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்தோர் பற்றிய வழக்கில் ஆர்.கே.ஆனந்த் என்ற மூத்த வழக்கறிஞர் ஆஜரானார். அவர் சாட்சிகளை பணங்கொடுத்து மாற்ற முற்படுகையில் ‘தெஹெல்கா’ என்ற ஊடகம் மறைமுகமாக அதைப் பதிவுசெய்து, அம்பலமாக்கியது. இதையொட்டி தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதி மன்றமும், உச்சநீதி மன்றமும் விசாரித்து தண்டனை வழங்கி அவரது வழக்கறிஞர் உரிமம் பறிக்கப்பட்டது. பின்னர் தொடுக்கப்பட்ட சீராய்வு மனுவில் அவரது தண்டனை குறைக்கப்பட்டு ரூ. 14 லட்சம் அபராதமும், ஒரு வருடம் ஏழைகளுக்கு சட்ட உதவி வழக்குகளில் மட்டும் ஆஜராகும்படியும் உத்தரவிடப்பட்டது.

2009-ல் வழங்கப்பட்ட அத்தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் எல்லா உயர்நீதி மன்றங்களுக்கும் ஒரு உத்திரவிட்டது. வழக்கறிஞர் சட்டம் 34-வது பிரிவின்படி நீதிமன்றங்களுக்குள் தவறிழைக்கும் வழக்கறிஞர்களைத் தண்டிக்கும் வகையில் இரு மாதங்களுக்குள் தக்க விதிகளை வகுக்க உயர் நீதிமன்றங்களுக்கு உத்திரவிடப்பட்டது. ஆனால் பிரிவு 34-ன் கீழ் முறையான விதிகள் வகுக்கப்படாததால் நீதிமன்றங்கள் பல இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்திக்க நேர்ந்தது. எனவே அப்பிரிவின் கீழ் விதிகளை வகுக்க வேண்டியதை நான் இங்கு தொடர்ந்து வலியுறுத்திவந்தேன். தலைமை நீதிபதிகள் கோகலே, அகர்வால், இக்பால் என்று பலருக்கும் கடிதம் எழுதினேன். எனினும், இப்போதுதான் தலைமை நீதிபதி கௌல் முயற்சியில் புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

இன்றைய நிலை வேறு

ஒரு வழக்கறிஞர், “நீதிபதிக்குக் கொடுக்க வேண்டும்” என்று கட்சிக்காரரிடம் பணம் வாங்குவது, நீதிமன்ற ஆவணங்களை முறைகேடாக திருத்துவது, நீதிபதியை எல்லோருக்கும் முன்னால் நீதிமன்றத்தில் வசவு வார்த்தைகளில் கடிந்துகொள்வது, நீதிபதிகளின் மீது நிரூபிக்க முடியாத அநியாயமான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது, நீதிமன்ற வளாகத்திற்குள் ஊர்வலமாகச் செல்வது (அல்லது) நீதிபதியை கேரோ செய்வது (அ) நீதிமன்ற அறையில் கோரிக்கை தட்டிகளைப் பிடித்துக்கொண்டு நிற்பது (அ) நீதிமன்ற வளாகத்தில் மதுபோதையில் இருப்பது போன்ற ஒழுங்கீனங்களுக்கு நீதிமன்றங்களே நடவடிக்கை எடுத்து அந்த ஒழுங்கீனமான வழக்கறிஞர்களின் உரிமத்தைப் பறிப்பதற்கு இந்தப் புதிய விதி வழிவகுக்கிறது. இத்தகைய ஒழுங்கீனங்களைச் செய்வதற்கு எந்த வழக்கறிஞருக்கும் உரிமை கிடையாது என்பது சொல்லித் தெரிய வேண்டாம். ஆனால், வழக்கறிஞர்களோ இவற்றுக்குத் தம் கண்டன முழக்கங்களைத் தெரிவித்துள்ளனர்.

இங்கு மட்டும் அல்ல; ஏனைய நீதிமன்றங்கள் பலவற்றிலும் இது போன்ற விதிகள் இயற்றப்பட்டுள்ளன. உதாரணமாக, பம்பாய் உயர்நீதிமன்றம் இயற்றியுள்ள விதியின்படி வழக்கறிஞர்கள் நடத்தும் நீதிமன்ற புறக்கணிப்பு தடை செய்யப்பட்டுள்ளது. அங்கெல்லாம் யாரும் இப்படிப்பட்ட விதிக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதாகத் தெரியவில்லை.

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் இதை “பிரிட்டிஷ் காலத்திய கருப்புச் சட்டங்களைவிட மோசமானது” என்று கூறியுள்ளது. ஆனால் பிரிட்டிஷ் நிலைமை எப்படியிருந்தது என்ற அறியாமையின் வெளிப்பாடே இந்த அறிக்கை. அன்றைக்கு வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முழு அதிகாரமும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கையில் இருந்தது. அதை அவர்கள் தேசப் பற்று மிகுந்த வழக்கறிஞர்களை ஒடுக்குவதற்கே பயன்படுத்தினர். இன்றைய நிலைமை அப்படியா?

காலத்தின் கட்டாயமே

நீதிமன்றத்திற்குள் ஊர்வலமும், முழக்கங்களும், வழக்காடுபவர்கள் தாக்கப்படுவதும், நீதிபதிகளின் சாதியைக் கூறி வழக்கு மாற்றம் கேட்பதும் இன்னும் எத்தனையோ பட்டியலிட முடியாத அசிங்கங்கள் அரங்கேறுகின்றன. சென்னை நீதிமன்றத்தில், ஒரு அரசியல் தலைவர் மீது முட்டை வீசப்பட்டதும், அவர் முகத்தில் தாக்கப்பட்டதும் நினைவிருக்கலாம். அதற்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி போடப்பட்ட உத்தரவு ஏழு வருடங்களாக இன்னும் வழக்குக் கோப்புகளில்தான் உறங்குகிறது.

இந்திய நீதிமன்றங்கள் சவாலை எதிர்கொள்ள நாட்டின் மக்கள்தொகைப் பெருக்கத்திற்கேற்ப 40,000 நீதிபதிகளை நியமிக்க அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார் நம்முடைய தலைமை நீதிபதி. உண்மையில் இந்தியா முழுவதுமுள்ள மூன்று லட்சம் வழக்கறிஞர்களைச் சமாளிக்க போதுமான நீதிபதிகள் இல்லை என்பதே நாம் எதிர்கொள்ளும் சவால். கிராமப் பகுதிகளில் தன்னந்தனியாக நீதிமன்றத்தில் பணியாற்றும் இளம் பெண் நீதிபதிகள் முன்வைக்கும் குறைகளைத் தீர்ப்பதற்கே எவ்விதச் செயல்திட்டமும் இல்லாத இச்சூழலில், இப்படியான விதிமுறைகள் காலத்தின் கட்டாயமாகவே தோன்றுகிறது. நியாயமாக வழக்கு பேசும் வழக்கறிஞர்கள் இதுபற்றியெல்லாம் கவலையே கொள்ள வேண்டியது இல்லை. அதை விடுத்து, வேறு வழி செல்வது என்று முடிவெடுப்போரை நீதிதேவி மட்டும் அல்ல; மக்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

- கே.சந்துரு, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்