தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மறைந்து, அரை நூற்றாண்டு ஆகிவிட்டது. காமராஜர், பக்தவத்சலம் போன்ற தலைவர்களுக்குப் பிறகு, இரண்டு தலைமுறைகள் வந்துவிட்டன. ஆனால், மீண்டும் பழைய நிலைக்கு வருவதற்குப் பதில் நாளுக்கு நாள் தேய்ந்துகொண்டுதான் போகிறது. ஏதாவதொரு திராவிடக் கட்சியின் முதுகில் ஏறித்தான் சவாரி செய்ய வேண்டும் எனும் முடிவிலிருந்து என்றைக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் விடுபடும் என்று பார்த்தால், மாநிலத்துக்கு மாநிலம் தமிழ்நாட்டுப் பாணியே தன் தேர்தல் உத்தி என்று அது மாற்றிக்கொண்டிருக்கிறது.
தமிழர்களைப் பாதிக்கும் பிரச்சினைகளில் மக்களோடு இணைந்து உயிரோட்டமான போராட்டங்களை நடத்துவதற்குப் பதிலாக, செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிப்பது, லெட்டர் பேடில் அறிக்கைகளை அள்ளிவிடுவது, பொங்கல், தீபாவளி, புத்தாண்டு (ஆங்கிலம் - தமிழ்), கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பது, மக்களை வெகுவாகப் பாதிக்கும் பாஜக அரசின் முடிவுகளைக்கூட, டெல்லியிலும் பிற மாநிலங்களிலும் காங்கிரஸ்காரர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்துவிட்டு, கடைசியாகத் தமிழ்நாட்டில் எதிர்ப்பது என்றெல்லாம் ‘துடிப்பாகச் செயல்படுகிறது’ தமிழ்நாட்டு காங்கிரஸ்.
யார் பக்கமும் இல்லாத கட்சி
ராஜாஜி, காமராஜ், சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன், மோகன் குமாரமங்கலம், தீரர் சத்தியமூர்த்தி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, ம.பொ. சிவஞானம், க.சந்தானம், கக்கன், பஷீர் அகமது, வ.வே.சு.ஐயர், பக்தவத்சலம், அவினாசிலிங்கம், விஜயராகவாசாரியார், ஜி.கே.மூப்பனார் போன்ற தேசியத் தலைவர்களைத் தந்த கட்சி இன்றைக்கு எந்த நிலையில் இருக்கிறது!
காங்கிரஸ் கட்சியை வலுவாக ஆதரித்துக்கொண்டிருந்த பிராமணர்கள், பிள்ளைமார்கள், செட்டியார்கள், முதலியார்கள், நாயக்கர்கள், கவுண்டர்கள், முக்குலத்தோர், வன்னியர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பட்டியல் இனத்தவர், பழங்குடிகள் என்று ஒருகாலத்தில் எல்லோராலும் கொண்டாடப்பட்ட கட்சி, இன்று ஏன் யார் பக்கமும் இல்லை? திமுக - அதிமுகவின் கொள்கைகள் சரியென்பதாலோ, அவர்கள்தான் நேர்மையானவர்கள் என்றோ, அவர்களால்தான் தமிழ்நாடு வளரும் என்று நம்பியோ தொடர்ந்து வாக்களிக்கிறார்களா?
தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சினைகளில் டெல்லி தலைவர்களுக்குப் பயந்து, என்றைக்கு அடக்கி வாசிக்கும் உத்தியைக் கையில் எடுத்தார்களோ அன்றைக்கே தொடங்கிவிட்டது காங்கிரஸின் சீரழிவு. மக்களிடமிருந்து முற்றிலுமாக விலக முற்பட்டது பேரழிவு. சுதந்திரத்துக்காக கிராமம் கிராமமாக, ஊர் ஊராகச் சென்ற அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் இவ்வளவு வண்டி வாகனாதிகளோடு, தங்குமிட வசதிகளோடு, பணத்தோடுதான் இருந்தார்களா அல்லது கட்சி அலுவலகத்திலேயே உட்கார்ந்துகொண்டு அரசியல் நடத்தினார்களா? ஊர் ஊராகச் சென்று கட்சிக்கு உண்மையான தொண்டர்களைச் சேர்க்கவும் அவர்களுடன் இணைந்து கட்சி அமைப்பை வலுப்படுத்தவும் விடாமல், இப்போதைய நிர்வாகிகளைத் தடுப்பது எது?
பணமதிப்பு நீக்கமும் காமெடி நடவடிக்கையும்!
பணமதிப்பு நீக்கம் தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றத்தில் சுமத்தினார். நிதியமைச்சர் அருண் ஜேட்லியை அறிவார்த்தமான கேள்விகளால் மடக்கினார் ப.சிதம்பரம். இவ்விருவரையும் அழைத்து வந்து, தமிழ்நாட்டின் நகரங்கள் எங்கும் கூட்டம் போடக்கூடாதென்று தமிழக காங்கிரஸ் தலைமையைக் கட்டிப்போட்டவர்கள் யார்? தமிழக காங்கிரஸ் கட்சி சோம்பல் முறித்து, பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் குழு அமைத்து, இதற்காக வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தும்போது, வங்கியிலிருந்து வாரத்துக்கு 24,000 ரூபாய் எடுக்கலாம் என்ற அறிவிப்பு வந்துவிட்டதே! மக்கள் வங்கியில் பணம் எடுக்க முடியாமல், ரூ.2000 நோட்டுக்காக அவதிப்பட்டு, அலைக்கழிந்த நாட்களில் போராடி பிரச்சினையை விளக்கியிருந்தால், மோடி மீதான கோபம் மறுபுறம் காங்கிரஸ் மீதான கனிவாக மாறியிருக்கும். ஆடி கழித்த ஐந்தாவது நாள் கோழி அடித்துக் கும்பிட்டு யாருக்கு லாபம்? அது சரி, உள்ளூர் பிரச்சினைகளையேதான் காங்கிரஸ் கவனிப்பதில்லையே!
மாதத்துக்கு ஒரு நாள், உள்ளரங்குக் கூட்டம் போட்டு கட்சித் தொண்டர்களை எல்லா மாவட்டங்களிலும் சந்தித்துப் பேசினால்தானே தொண்டர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்? காந்தி, நேரு, இந்திரா, ராஜீவ் என்று எல்லாத் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாட்களில் கூட்டம் போட்டால்கூட வருடத்துக்கு எட்டு நாட்கள் வரும். சுதந்திர தினம், சோனியா பிறந்த நாள், ராகுல் பிறந்த நாள், மத்திய அரசின் பட்ஜெட் விளக்கக் கூட்டம், மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூட்டம் என்று கூட்டங்களைப் போட்டாலே மக்களுடனான சந்திப்பைக் குறைந்தபட்சம் மாதத்துக்கு ஒன்று என்று நடத்தலாம். யோசனைக்கா பஞ்சம்? கட்சியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால்தானே!
நிதி ஒரு பிரச்சினையா?
ஒருகாலத்தில் காங்கிரஸ் கட்சியில் துடிப்பாக இருந்த வார்டு உறுப்பினர், நகரசபை உறுப்பினர், தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், ஐ.என்.டி.யு.சி., நிர்வாகிகள், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், சேவா தளத்தினர் என்று ஆயிரக்கணக்கானோரின் குடும்பங்களை அணுகி, கட்சியில் சேர்த்தாலே உண்மையான தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் தேறுவார்களே? அனைத்திந்திய அளவில் அட்-ஹாக் (இடைக்கால) கமிட்டி நிர்வகித்தாலும் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தி, அல்லது கருத்தொற்றுமை அடிப்படையில் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து, வார்டு கமிட்டி முதல் எல்லா இடங்களிலும் நிர்வாகிகளை நியமித்து, கட்சியை அமைப்புரீதியாக வளர்த்தெடுக்கலாமே? இதற்காக நிதி ஒரு பிரச்சினையாக இருக்க முடியாதே? டீக்கடைகளில் நடக்கும் வம்பளப்புகளில்கூட காங்கிரஸுக்குப் பரிந்துபேச ஆள் இல்லாத அநாதைக் கட்சியாகவா தொடர்ந்து வைத்திருப்பது?
பிளவுசக்தியான மற்ற கட்சிகளை விடுத்து, தேசிய - மதச்சார்பற்ற கட்சியான காங்கிரஸை மக்கள் நாட வேண்டும் என்றால், அந்தக் கட்சி மக்களிடம் செல்ல வேண்டும். மாநிலத் தலைமை அதற்காகப் பாடுபட வேண்டும். தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் காங்கிரஸார் நல்ல பயிற்சி எடுக்க வேண்டும். மேடை நிர்வாகம், பொது வெளியில் பேச்சுக் கலை, மக்களுடைய சின்னச் சின்ன பிரச்சினைகளுக்காக அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டுத் தீர்வு காண்பது என்று செயல்பட்டால்தான் காங்கிரஸ் செல்வாக்கு உயரும். காங்கிரஸ் தலைவர்களை தேர்தல் சமயத்தில், தோழமைக் கட்சித் தலைவர்களுடன் மட்டும்தான் மேடையில் பார்க்க முடியும் என்பது எவ்வளவு பெரிய அவமானம்?
இளங்கோவனின் நகைச்சுவை?
காங்கிரஸுக்கு இப்போதுள்ள ஒரு வாய்ப்பு, திராவிடக் கட்சிகள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். பாஜக இப்போதைக்கு இங்கு காலூன்ற முடியாது. மற்ற கட்சிகளைப் பற்றியும் உடனடியாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. கட்சியைப் பழைய நிலைக்கு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். காமராஜர் ஆட்சிக்கால சாதனைகளை மட்டும் பட்டியலிடாமல் அடுத்து தாங்கள் மேற்கொள்ளப்போகும் திட்டங்களையும் தொகுத்துச் சொல்லி, மக்களுடைய ஆதரவைத் தேட வேண்டும். அதற்கு முதலில் கட்சிக்குள் ஒற்றுமையைப் பராமரிக்க வேண்டும். “திருநாவுக்கரசரா.. அவர் யாரென்றே தெரியாது?’’ என்று முந்தைய மாநிலத் தலைவர் சொன்னால், மக்கள் அதை நகைச்சுவை என்று ரசிப்பார்களா? இதனால் திருநாவுக்கரசரை மட்டும் எள்ளி நகையாட மாட்டார்கள், அப்படிப் பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவனையும்தான்.
தமிழ் பேச முடியாத, தமிழ்நாட்டுக் கலாச்சாரத்தையே அதிகம் அறிந்திராத குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் போன்றவர்கள்தான் தமிழக காங்கிரஸுக்கும் டெல்லி மேலிடத்துக்கும் தொடர்பாளர்கள். குஷ்புவும் நக்மாவும்தான் பிரச்சாரகர்கள். கராத்தே தியாகராஜன், குங்ஃபு குப்புசாமி போன்றவர்கள் எல்லாம் கட்சியின் பிரமுகர்கள் என்றால், கட்சியின் மதிப்பும் செல்வாக்கும் உயருமா? நல்லவேளை, தேர்ந்த காந்தியவாதி புரசை ரங்கநாதன் திமுகவுக்குப் போய்விட்டார்!
காங்கிரஸ் தன்னுடைய தலைமை, கொள்கைகள், செயல்பாடு என்று எல்லாவற்றையும் மாற்றியமைக்க வேண்டும். மாப்பிள்ளைத் தோழனாக இருந் தால்கூடப் பரவாயில்லை, மண்டை விளக்கை அல்லவா தலையில் தூக்கிக்கொண்டு அலைகிறீர்கள்? ஐயா, கொஞ்சம் சுயமரியாதையோடு சிந்தித்துத்தான் பாருங்களேன்!
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago