ஒரு சின்ன சம்பவம் கலவரமாக உருமாறும்போது என்னவாகும்?
மக்களாகிய நாம் உடைமைகளை இழப்போம்; உறவுகளை இழப்போம்; உயிரை இழப்போம்... அரசியல்வாதிகளுக்கோ லாபம், லாபம், லாபம்.
உத்தரப் பிரதேசத்தின், முஸாஃபர் நகரிலும் நடந்தது இதுதான். ஆகஸ்ட் 27 அன்று கவால் கிராமத்தைச் சேர்ந்த ஜாட் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை முஸ்லிம் இளைஞர் ஒருவர் கேலிசெய்ததாகச் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து மூன்று கொலைகள் நடந்தன. முதல் கொலை... அந்த முஸ்லிம் இளைஞர். அடுத்த இரு கொலைகள்... அவரைக் கொன்ற இரு இளைஞர்கள் - பெண்ணுக்கு வேண்டப்பட்டவர்கள்.
அதிகபட்சம் இரு குடும்பங்களுக்கான அல்லது இரு ஊர்களுக்கான சண்டையாக மட்டும் மாறியிருக்கக் கூடிய ஒரு சம்பவம். உத்தரப் பிரதேசம் மட்டும் அல்ல; நாடு முழுவதும் அதிர்வுகளை உருவாக்கியிருக்கிறது; 48 பேர் உயிர் இழந்திருக்கின்றனர்; 1,000 பேர் காயம் அடைந்திருக்கின்றனர்; 40,000 பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள்... அரசியல்!
மதத்தின் மீது அரசியலாட்டம்
தன் கைகளில் 55 துறைகளை வைத்துக்கொண்டு, நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்திருக்கும் முதல்வர் அகிலேஷ் யாதவ், கொலைகள் நடந்த இரவே மாவட்ட ஆட்சியர் சுரேந்திர சிங், காவல் துறைக் கண்காணிப்பாளர் மஞ்சில் சிங் இருவரையும் தூக்கியடித்தார்; இருவரும் ஜாட்டுகள் என்பதால். அரசின் தவறான ஆட்டமும் சமிக்ஞையும் அங்கே ஆரம்பமானது. அடுத்தடுத்து உருவான வதந்திகள், இரு தரப்பும் கூடிப் பேசிய கூட்டங்கள், அரசியல்வாதிகள் போட்ட தூபங்கள் எல்லாவற்றையும் அரசு வேடிக்கை பார்த்தது.
ஆகஸ்ட் 30 வெள்ளிக்கிழமை தொழுகை முஸ்லிம்கள் கூட்டம் நடத்த வாய்ப்பானது. பதிலுக்கு மறுநாள் முதல் மகா பஞ்சாயத்தை ஜாட்டுகள் கூட்டினர். இரு கூட்டங்களுமே அச்சமும் வெறுப்பும் கவிந்தவை. முஸ்லிம்கள் கூட்டிய கூட்டங்களில் ஆளும் சமாஜவாதி கட்சியின் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-கள் பங்கேற்றனர்; ஜாட்டுகள் கூட்டிய கூட்டங்களில் பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்றனர். இரு தரப்பினரின் அச்சத்தையும் வெறுப்பையும் அரசியல்வாதிகள் வெறியாக உருமாற்றினர். செப். 7-ம் தேதி ஜாட்டுகள் மீண்டும் மகா பஞ்சாயத்தைக் கூட்டியபோது ஒரு லட்சம் பேர் திரண்டனர். எல்லோர் கைகளிலும் அரிவாள், ஈட்டி, துப்பாக்கி. கலவரம் வெடித்தது. அடுத்த 36 மணி நேரத்துக்குள் 38 பேர் செத்திருந்தனர். ஆயிரக் கணக்கான மக்கள் அகதிகளாக மாறியிருந்தனர். வழக்கம்போல, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள்.
முதல் மூன்று கொலைகள் நடந்ததுமே, 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது மாவட்ட நிர்வாகம். பின்னர், எப்படி இவ்வளவும் நடந்தன?
அரசாங்கம் கலவரத்தை எப்படி அரசியலாக்கியது என்பதற்கு - தனியார் தொலைக்காட்சி வெளிக்கொண்டுவந்த - அதிகாரிகளிடம் “கண்டுகொள்ளாதீர்கள்” என்று உத்தரவிட்ட மூத்த அமைச்சர் ஆஸம் கானின் உரையாடல் ஓர் உதாரணம். யாரையும் யாராலும் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. அரசாங்கத்தால், யார்மீதும் துணிச்சலாக நடவடிக்கை எடுக்கவும் முடியவில்லை. கடைசியில், ராணுவம் அழைக்கப்பட்டு எல்லாம் முடிந்தபோது, கடந்த 20 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்துக்குப் பெரும் இழப்பை உருவாக்கிய அடையாளமாக மாறியிருந்தது முஸாஃபர் நகர். ஆட்டத்தைத் தொடங்கியது சமாஜவாதி கட்சி; முடித்தது பா.ஜ.க.
நஷ்டமில்லா போட்டி வியாபாரம்
வரும் தேர்தலை பா.ஜ.க. எப்படிக் கையாளும்? கண் முன் உள்ள உதாரணம்... முஸாஃபர் நகர்.
டிசம்பர் 6, 1992-க்குப் பிறகு உத்தரப் பிரதேசத்தில் பெரிய வகுப்புக் கலவரம் ஏதும் இல்லை. அதுவும் கடந்த 8 ஆண்டுகளில், நாடு முழுவதும் நடந்துள்ள வகுப்புக் கலவரங்களில் 965 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 18,000 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் தேசிய சராசரியையொட்டியே உத்தரப் பிரதேசத்தில் வகுப்புக் கலவரங்கள் நடந்துள்ளன. கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம்... இந்தச் சம்பவங்களில் சரிபாதி மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், குஜராத், கேரளம் ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டும் நடந்துள்ளன. கேரளம் நீங்கலாக ஏனைய மூன்றும் பா.ஜ.க. பலமாக உள்ள மாநிலங்கள்.
பரிசோதனைக் களம்
முஸாஃபர் நகர் கலவரம் ஒரு விபத்து அல்ல; அது ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான். பிரதமர் பதவிக்கான நுழைவுத் தேர்வாக அமைந்த குஜராத் தேர்தலில், மோடி வென்றதிலிருந்தே உத்தரப் பிரதேசத்தில் எல்லாக் காய்களும் திட்டமிட்டவாறே நகர்த்தப்படுகின்றன.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த அலகாபாத் கும்ப மேளாவை நாடு முழுவதும் உள்ள இந்து அமைப்புகளை ஒருங்கிணைக்கும் களமாகப் பயன்படுத்தியது விஸ்வ இந்து பரிஷத். மோடியைப் பிரதமர் வேட்பாளராக முன்மொழியும் அறிவிப்பை அசோக் சிங்கால் வெளியிடுவார் எனும் தகவல்கள் அலகாபாத்தில் தொடர்ந்து கசிய விடப்பட்டன. தொடர்ச்சியாக, கோவா மாநாட்டில் பா.ஜ.க-வின் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக அறிவிக்கப்பட்டார் மோடி. முதல் இலக்கு... உத்தரப் பிரதேசம். பா.ஜ.க. அங்கே கோமா நிலையில் இருந்தது. கட்சியை அங்கே தூக்கி நிறுத்தாவிட்டால், மோடியின் பிரதமர் கனவு பணால். தன்னுடைய வலதுகரமான அமித் ஷாவை உத்தரப் பிரதேசப் பொறுப்பாளர் ஆக்கினார். அயோத்தி சென்ற அமித் ஷா, “ராமர் கோயில் விரைவில் கட்டப்படும்” என்றபோதே கட்சியின் வியூகம் தெளிவாகிவிட்டது. அடுத்த மாதமே அயோத்தியை நோக்கிப் பேரணிக்கு அழைப்பு விடுத்தது விஸ்வ இந்து பரிஷத்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்.எஸ்.எஸ். 40 கிளைகளை அமைக்கும் பணியில் இருக்கிறது. இடையிலேயே “உலகின் உயரமான சிலை சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத்தில் அமைக்கப்படும்; முழுக்க இரும்பில் அமைக்கப்படும் இந்தச் சிலைக்கு வீடுகள்தோறும் 250 கிராம் இரும்பு பெறுவோம்” என்று அறிவித்தார் மோடி. அன்றைக்கு ராமர்; இன்றைக்கு படேல். அன்றைக்குக் கோயில்; இன்றைக்குச் சிலை. அன்றைக்குச் செங்கல்; இன்றைக்கு இரும்பு. அன்றைக்கு இந்து தேசியம்; இன்றைக்கு ‘இந்திய தேசியம்!’
அந்த முகம் எந்த முகம்?
1998 பொதுத் தேர்தலில், பா.ஜ.க. இரு முகங்களை முன்னிறுத்தியது. மிதமான முகம் வாஜ்பாய்; தீவிரமான முகம் அத்வானி. 2014 தேர்தலில் அது முன்னிறுத்தப்போகும் முகங்கள் எவை என்பதை முஸாஃபர் நகர் சொல்லிவிட்டது.
கலவரத்துக்குப் பின் உத்தரப் பிரதேசத்துக்கு மோடி வருவார் என்ற எதிர்பார்ப்பு மோடியின் ஆதரவாளர்களால் உருவாக்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் வருகைக்குப் பின் அந்த எதிர்பார்ப்பு மேலும் அதிகமானது. மோடி வரவில்லை; குறைந்தபட்சம் இந்தக் கலவரத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூட அவர் பேசவில்லை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago