தமிழகத்துக்குத் தேவை நுழைவுத் தேர்வற்ற சூழலா, தரமான பொதுக் கல்வியா?

By கே.சந்துரு

நாடு முழுவதும் மருத்துவப் படிப்பில் சேர கட்டாய நுழைவுத் தேர்வு (நீட்) கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் எதிர்ப்பு உருவானது. விளைவாக, இந்தத் தேர்விலிருந்து தமிழகத்தை விடுவித்துக்கொள்ளும் வகையில், ஒரு சட்ட முயற்சியையும் எடுத்திருக்கிறது தமிழக அரசு. மேலோட்டமாகப் பார்க்கும்போது, அரசுப் பள்ளி மாணவர்களைக் காப்பதைப் போன்று தோற்றமளிக்கும் இந்நடவடிக்கை, உண்மையில் தமிழகக் கல்வித் துறையின் தோல்வியை மறைக்க முயலும், பொதுச் சமூகத்தை ஏமாற்றும் ஒரு உத்தி என்று சொல்லலாம். தமிழகக் கல்வித் துறையின் உண்மையான கள நிலவரமும் இதுவரையிலான சட்டப் போராட்டங்களும் இதையே சொல்கின்றன.

தமிழகத்தில் 1978-ல் பள்ளிக் கல்வியில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, 10, +2 முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதே நேரத்தில், தமிழ்நாட்டில் ஆங்கிலவழிக் கல்விமுறையில் அமைந்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பெருக்கத்துக்கும் வழிவகுக்கப்பட்டது. மேலும், மத்திய அரசின் முயற்சியில், மத்திய இடைக்கல்வி வாரிய (CBSE) அங்கீகாரம் பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தன. இந்த மூன்று நீரோட்டங்களிலிருந்தும் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடையே மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான போட்டிகளும் அதிகரித்தன.

தனியார் பள்ளிகளின் வருகை அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த உதவவில்லை. மாறாக, கீழே கொண்டுசென்றன. மேலும், மத்தியக் கல்வி முறையின் தரத்துக்கு ஈடுகொடுக்கும் நடவடிக்கைகளும் இங்கு எடுக்கப்படவில்லை. விளைவாக, ஒவ்வொரு முறையும் மேல்நிலைக் கல்வித் தேர்வுகளில் வெற்றிபெறும் மாணவர்களின் எண்ணிக்கைக்கான இலக்கை அரசே நிர்ணயம் செய்தது. அதன் மூலம் அதிக அளவிலான மாணவர்களைத் தேர்வுகளில் வெற்றிபெற்றதாக அறிவிப்பதற்காக மதிப்பெண்களைச் சமன்செய்யும் உத்திகள் கையாளப்பட்டன.

கல்விச் சீரழிவும் போலி மதிப்பெண்களும்

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் +2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 11% கூடியுள்ளது: 2012 - 80.23%; 2013 - 84.44%; 2014 - 87.71%; 2015 - 90.06%; 2016 - 91.79%. கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் கூறிய தகவலின்படி, இன்றைய மாணவர்களுக்கு அவர்களது விடைத்தாள்களில் அளிக்கப்பட்ட மதிப்பெண்களின்படி தேர்ச்சி பெற்றவர்களின் விழுக்காட்டை கணித்தோமானால் அது 52%-ஐத் தாண்டாது என்பதே உண்மை நிலவரம்.

முதல் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது அவசியமில்லை. பதினொன்றாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இல்லை. பல பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்புக்கான பாடங்கள் நடத்தப்படுவதில்லை. பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு நடத்தப்படும் பொதுத்தேர்வில், பதினொன்றாம் வகுப்பு பாடங்களிலிருந்து எவ்விதக் கேள்விகளும் கேட்கப்படுவதில்லை. ஆனால், பன்னிரண்டாம் வகுப்பு இறுதி பொதுத்தேர்வில் அநேகமாக 92% மாணவர்கள் (சுமார் 8.78 லட்சம்) தேறுகிறார்கள். இது எந்த அளவுக்கு நம்பகத்தன்மை வாய்ந்தது?

சென்னைப் பள்ளியொன்றில் 6 மற்றும் 7 வகுப்பு மாணவர்களுக்கு கணிதம், தமிழ், மற்றும் ஆங்கிலப் பாடங்களில் சமீபத்தில் திறனறிச் சோதனைகள் மேற்கொண்டதில், பெரும்பான்மையான மாணவர்களுக்குக் கணிதத்தில் இரண்டு இலக்கங்களுக்கு மேல் கணக்குகள் போட முடியவில்லை. ஆங்கிலத்தில் அகரமுதலியும், தமிழ் மொழிகளில் உயிர் மெய் எழுத்துகள் முழுமையாகவும் அறிந்திருக்கவில்லை என்ற உண்மையை அறிய முடிந்தது. தமிழ்நாட்டிலுள்ள பெரும்பான்மையான பள்ளிகளில் இதுதான் நிலைமை.

மத்திய - மாநில அரசுகளின் கல்வி வாரியங்கள் போட்டி போட்டுக்கொண்டு பள்ளி இறுதித் தேர்வுகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து வருவதுபற்றி 1992-ல் ஒருமுறை நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த ஆண்டு பள்ளி இறுதித்தேர்வில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அதிக மதிப்பெண்களை வழங்கியதாக தமிழ்நாடு புகார் கூறியது. எனவே, அவ்வருட தொழில்கல்வித் தேர்வுகளுக்கான சேர்க்கைகளில் சி.பி.எஸ்.இ. தேர்வு மதிப்பெண்களை எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து, தமிழ்நாட்டிலுள்ள மொத்த இடங்களில் 2% சி.பி.எஸ்.இ தேர்வில் பயிற்சி பெற்றவர்களுக்கும், 98% தமிழ்நாடு மாநில இடைக்கல்வி வாரியம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஒதுக்கப்படும் என்று அரசாணை பிறப்பித்தது. சமனப்படுத்தும் முறைப்படி கடந்த காலங்களில் அளிக்கப்பட்ட மதிப்பெண்களை சி.பி.எஸ்.இ. வெளியிட மறுத்துவிட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களை மட்டும் வைத்து மாணவர் சேர்க்கைப் பட்டியலைத் தயாரிக்குமாறு உத்தரவிட்டதை எதிர்த்து, தமிழகம் உச்ச நீதிமன்றம் சென்று தடை பெற்றது.

தொழில் கல்விக்கான படிப்புகளில் கிராமப்புற மாணவர்கள் (குறிப்பாக, அரசு மற்றும் உள்ளாட்சிப் பள்ளிகளில் பயின்றுவரும் மாணவர்கள்) அதிக எண்ணிக்கையில் சேர முடியவில்லை என்பது தமிழக அரசு அறியாதது அல்ல. ஆனால், பள்ளிகளைத் தரம் உயர்த்துதல், பாடத்திட்டத்தை மேம்படுத்துதல், ஆசிரியர்களை மேம்படுத்துதல் என நேர்வழியில் செல்வதில் அது ஒருபோதும் அக்கறை காட்டவில்லை.

1996-ல் கிராமப்புற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு செய்யும் திட்டத்தை திமுக அரசு அறிவித்தது. அடுத்து 2001-ல் ஆட்சியைப் பிடித்த அதிமுக இந்த ஒதுக்கீட்டை 25% ஆக உயர்த்தியது. உண்மையில், இந்த ஒதுக்கீடுகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவவில்லை. மாறாக, கோழிப் பண்ணைகளைப் போலத் தொடங்கப்பட்ட ‘கல்விப் பண்ணைப் பள்ளிகள்’ பல்வேறு சலுகைகளுக்காக ஊராட்சி எல்லைகளுக்குள் தொடங்கப்பட்டன. அவையே பயன் அடைந்தன. கடைசியில், இதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்குகளை ஏற்றுக்கொண்டு சென்னை உயர் நீதிமன்றம் கிராமப்புற மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டையே ரத்துசெய்துவிட்டது.

நுழைவுத் தேர்வின் வரலாறு

1984-85 முதல் பொது நுழைவுத் தேர்வு மற்றும் +2 தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில்தான் தொழில்கல்விக்கான சேர்க்கை நடைபெற்றன. அப்படிப்பட்ட நுழைவுத் தேர்வுகளில் கணிசமாக வென்றவர்கள் ஆங்கிலப் பயிற்றுமொழி மூலம் பயின்றவர்களே. எனவே, கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய அரசு மற்றும் உள்ளாட்சிப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு தொழில்கல்வி படிப்புகளில் பங்குபெறும் வாய்ப்புகள் குறைந்துவருவதைக் கருத்தில்கொண்டு, 2005-ல் தமிழக அரசு பொது நுழைவுத் தேர்வு மூலம் அனுமதி என்ற முறையையே ரத்துசெய்தது.

சென்னை உயர் நீதிமன்றம் இது செல்லாது என்று அறிவித்தது. 2006-ல் பொது நுழைவுத்தேர்வின் மூலம் மாணவர் சேர்க்கையை அனுமதிப்பது பற்றிய உத்தரவை மீண்டும் தமிழக அரசு ரத்துசெய்தது. விசித்திரமாக தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியத் தேர்வுகள் எழுதிய மாணவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் மற்ற வாரியங்களில் படிப்பவர்கள் தேர்வில் பங்கு பெறுபவர்கள் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இந்த உத்தரவையும் சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்தது.

இதன் பின்னர், தமிழ்நாடு தொழில்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பற்றிய சட்டம் 2006-ல் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் 2007-ல் பெறப்பட்டது. அச்சட்டத்தின்படி, பொது நுழைவுத்தேர்வின் மூலமே மாணவர் சேர்க்கைகள் நடைபெற வேண்டும் என்ற முடிவு கைவிடப்பட்டது. இப்படிக் காலம் முழுவதும் நுழைவுத் தேர்வை மறுப்பதன் வாயிலாகத் தமிழகக் கல்வித் துறையில் நிலவும் ஓட்டைகளை மறைக்க முயன்றதே தவிர, ஓட்டைகளை அடைக்கவோ குறைகளைக் களையவோ நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

மத்திய அரசு பறித்துக்கொண்ட கல்வி உரிமை

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, கல்வி பற்றிய அதிகாரம் மாநிலங்களின் பட்டியலில்தான் குறிப்பிடப் பட்டிருந்தது. ஆனாலும், மத்திய அரசு பள்ளிக் கல்விக்கான வாரியம் ஒன்றைத் தன்னிச்சையாக அமைத்துக்கொண்டது. அதுதான் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ). இந்தியாவின் கல்விமுறைகள் பற்றி ஆராய முற்பட்ட கோத்தாரி கமிஷன் தனது அறிக்கையில், மத்திய அரசு பள்ளிக் கல்வியில் தலையிடுவது அவசியமற்ற செயல் என்று ஆரம்ப காலங்களிலேயே குறிப்பிட்டது இங்கு குறிப்பிட வேண்டியது.

1976-ல் நாடு முழுதும் கொண்டுவரப்பட்ட நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி அரசமைப்புச் சட்டத்தில், பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 42-வது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி அட்டவணை 7-ல் திருத்தங்களைச் செய்து கல்வி பற்றிய சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் மாநிலப் பட்டியலிலிருந்து பறிக்கப்பட்டு பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் கல்வி தொடர்பாகச் சட்டமியற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு மட்டுமின்றி மத்திய அரசுக்கும் உண்டு என்றானது.

நெருக்கடிநிலையின்போது, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்துவிட்டு, தமிழ்நாட்டில் கல்வி பயிற்றுவிக்கும் மொழிபற்றிய கொள்கை முடிவுகளை அன்றைக்கிருந்த ஆளுநரின் ஆலோசகர்கள் எடுத்தனர். தமிழ்நாட்டில் 1976-க்கு முன்பு இரு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் மட்டுமே இருந்தன. மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் தேர்வுகளை சென்னைப் பல்கலைக்கழகம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து நடத்திவந்தது. இதனிடையே, பள்ளிக் கல்வி நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள பல்கலைக்கழக ஆட்சிக் குழு முடிவெடுத்தது.

அதன்படி, அன்றைக்கிருந்த இரண்டு பள்ளிகளையும் மாநில இடைக்கல்வி வாரியத்தின் கீழ் கொண்டுவந்திருக்கலாம். மாறாக, ஆங்கில மொழியைப் பள்ளிக் கல்வியிலேயே பயிற்றுமொழியாக்கும் வண்ணம் அன்றைக்கிருந்த அதிகாரமட்டம் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கான தனியொரு அமைப்பை உருவாக்கும்படி உத்தரவிட்டது. நெருக்கடிநிலைக்குப் பின் ஆட்சியைப் பிடித்த அதிமுகவும், பின்னாளில் திமுகவும் இதை வாய்ப்பாக்கிக்கொண்டு, அதிக அளவில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளைத் துவக்குவதற்கான அனுமதிகளை வழங்கின.

இப்படித்தான் தமிழகத்தின் கல்வி தனியார்வசமானது; ஆங்கிலவழிக் கல்வியின் ஆக்கிரமிப்புக்குள்ளானது. விளைவாக, இன்றைக்கு 42% மாணவர்கள் தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.

கல்வியைக் கை கழுவுதல்

மத்திய அரசு 1980 முதல் கல்வியளிக்கும் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளத் தொடங்கியது. ராஜீவ் காந்தி அரசு 1986-ல் புதிய கல்விக் கொள்கையை உருவாக்கியது. அதன் மூலம், அரசே கல்விச் சுமையை ஏற்க முடியாதென்றும், தனிநபர்களும் பங்கேற்கும் வண்ணம் உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதே அவரது லட்சியமென்றும் கூறப்பட்டது. இது கல்விக் கட்டணக் கொள்ளைக்குக் கூடுதலான ஒரு பாதையை வகுத்தது.

முன்னதாக, 1984-ல் அகில இந்திய தொழில்நுட்பக் குழு (AICTE) உருவாக்கப்பட்டு, பொறியியல் கல்வி முழுமையாக அதன் கீழ் கொண்டுவரப்பட்டது. அடுத்து, மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மாநில அரசுகள் அதிகாரம் வழங்குவதைத் தடுக்கும் வண்ணம், இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம், பல் மருத்துவ கவுன்சில் சட்டம் இவற்றில் எல்லாம் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இது தவிர, மாநில அரசின் அதிகார வரையறைக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களான ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடங்கி செவிலியர் பயிற்சிப் பள்ளிகள் வரை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.

இதன் விளைவாகவே, மாட்டுத்தொழுவம் அமைப்பதற்குக்கூட லாயக்கில்லாத இடங்களில் எல்லாம் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளும், செவிலியர் பயிற்சிப் பள்ளிகளும் காளான்களைப் போல முளைத்தன. இதற்கு மத்திய அரசு சொன்ன நியாயங்களில் ஒன்று, "மாநில அரசுகள் இஷ்டத்துக்கு அனுமதியளித்து சம்பாதிக்கின்றன” என்பது. ஆனால், இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவர் கேதன் தேசாய், ஒரு தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதற்காகக் கைதுசெய்யப்பட்டபோது, கல்விக் கொள்ளையில் மத்திய அரசு - மாநில அரசு என்ற வேறுபாடெல்லாம் இல்லை என்பது அம்பலமானது. அவரது வீட்டிலிருந்து 1.5 கிலோ தங்கம், 80 கிலோ வெள்ளியுடன், பல கோடி ரூபாய்களுக்கான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

தடுக்க முடியாத நீதிமன்றங்கள்

கல்விக் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும் வண்ணம் போடப்பட்ட வழக்கொன்று, 1993-ல் உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கில் வழங்கிய தீர்ப்பில் "உயர் கல்வி தனியார்வசம் செல்வதை 1986-ம் வருடத்திய புதிய கல்விக் கொள்கை அனுமதிக்கிறது” என்று கூறினர் நீதிபதிகள். அதேசமயத்தில், தனியார் தொழில் கல்லூரிகள் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும் வண்ணம், அக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குக் கட்டுப்பாடுகளை விதித்தனர். அதன்படி, தனியார் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 50% தகுதி அடிப்படையிலும் மீதி 50% கட்டண அடிப்படையிலும் என்று நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

தகுதி அடிப்படையிலான இடங்கள் இலவச இடங்கள் என்று கூறப்பட்டாலும் அவற்றுக்கும் கட்டணங்கள் உண்டு என்பதே உண்மை. தமிழக அரசு அமைத்த கட்டணக் குழு மருத்துவப் படிப்புக்குச் சில ஆயிரங்கள் கட்டணம் என்று நிர்ணயித்தபோது, உச்ச நீதிமன்றம் அக்கட்டணத்தை ரத்துசெய்து மருத்துவப் படிப்புக்கான கட்டணங்களை லட்சத்துக்கு மேல் உயர்த்தியது.

அரைக் கிணறு தாண்டாத சமச்சீர்க் கல்வி

இதனிடையே, சமூக நீதிக்குக் குரல் கொடுக்கும் அமைப்புகள் "மெட்ரிகுலேஷன் பள்ளிக்கான தேர்வுமுறையை ரத்துசெய்ய வேண்டும். தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியில் பயிற்றுமொழி தமிழ் மொழியாகத்தான் இருக்க வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தின. ஆரம்பப் பள்ளி வகுப்புகளில் பயிற்றுமொழி தமிழ் மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்று திமுக அரசு கொண்டுவந்த உத்தரவையும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு 2000-ல் ரத்துசெய்துவிட்டது.

தமிழ்நாட்டில் ஐந்து விதமான பள்ளி இறுதித் தேர்வுகள் நடத்தப்பட்டுவருவதையும், அதில் மூன்று விதமான பள்ளிகளுக்கு தமிழக அரசின் கல்வித் துறையே தேர்வுகள் நடத்திவருவதையும், அதனால் ஏற்படும் மதிப்பெண் மற்றும் தேர்ச்சி விழுக்காடு குழப்பங் களை மாற்றியமைத்து, பள்ளிப் பாடத்திட்டத்தை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழக அரசு சமச்சீர் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பாடத் திட்டத்தில் உள்ள வேறுபாடுகள் ஓரளவுக்குக் களையப்பட்டிருப்பினும், பள்ளிக் கல்வியில் பயிற்றுமொழி பிரச்சினை தீரவில்லை.

இத்தகைய பின்னணியில்தான், இந்திய மருத்துவ கவுன்சில் 21.12.2010 அன்று மருத்துவப் பட்டப்படிப்புக்கான ஒழுங்கு விதிமுறைகளை அறிவித்தது. அதன்படி மருத்துவப் பட்டப் படிப்புக்குச் சேர விரும்பும் மாணவர்கள் ‘தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு’(நீட்) எழுத வேண்டும் என்றது. ஆனால், இதை எதிர்த்துப் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளைக் கையில் எடுத்த உச்ச நீதிமன்றம், 18.7.2013 அன்று "மருத்துவ கவுன்சில் அறிவிப்பு செல்லாது” என்று அறிவித்தது. தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று சீராய்வு மனுக்கள் தொடுக்கப்பட்டன. அவற்றை ஏற்ற உச்ச நீதிமன்றம், மறு விசாரணைக்குப் பிறகு, "நீட் தேர்வு ஒழுங்குமுறை விதிகள் சட்டப்படி செல்லும்” என்று அறிவித்தது.

இந்த உத்தரவை அமல்படுத்த 24.5.2016 அன்று ஒரு அவசரச் சட்டம் இயற்றியது மத்திய அரசு. தொடர்ந்து, அவசரச் சட்டத்துக்கு உயிர் கொடுக்கும் வகையில் புதிய சட்ட விதிகளை நாடாளுமன்றம் இயற்றியது. இதன் தொடர்ச்சியாகவே, 2017-18 கல்வியாண்டு முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமிழக அரசின் பொதுச்சேர்க்கை முறைக்குள் வரும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 85% இடங்களான 2,172 இடங்களுக்கும், அரசுப் பொது சேர்க்கைக்குள் வரும் சுயநிதி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டின் மூலம் நிர்ணயிக்கப்படும் 50% இடமான 1,250 இடங்களுக்கும் மட்டும் தனது பள்ளி இறுதித் தேர்வு மதிப்பெண் தகுதி மூலம் இடங்களை அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம். இது தவிர, அகில இந்திய ஒதுக்கீடு செய்யப்பட்ட 15% இடங்களுக்கு அகில இந்தியத் தேர்வில் போட்டியிட வேண்டும்.

எதிர்ப்பு நியாயம்தானா?

இதை எதிர்கொள்ளத்தான் தமிழகத்தில் பலரும் எதிர்க்குரல் எழுப்பினர். விளைவாக, தமிழக அரசு ஒரு சட்டமும் இயற்றியுள்ளது. "சமூகநீதிக்கு இது புறம்பானது. இடஒதுக்கீடுகள் புறந்தள்ளப்படும்; தமிழைப் பயிற்றுமொழியாகப் பயிலும் மாணவர்களை ஆங்கிலம் / இந்தியில் நுழைவுத் தேர்வு எழுதச் சொல்வது அநீதி இழைப்பதாகும். ‘நீட் தேர்வு’ சி.பி.எஸ்.இ. வகுத்துள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் இருக்கப்போவதால், தமிழகப் பள்ளி மாணவர்கள் அத்தேர்வில் மதிப்பெண்கள் பெறுவது கடினம்” என்பவை எதிர்ப்பாளர்கள் சொல்லும் பிரதானமான மூன்று நியாயங்கள்.

இவற்றில் ஒன்றில்கூடச் சாரம் கிடையாது. ஏனென்றால், அந்தந்த மாநிலங்களில் கடைப்பிடிக்கப்படும் இடஒதுக்கீட்டுக்கு எவ்விதத்திலும் ஊறு விளைவிக்காது என்று இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகள் தெளிவுபடுத்துகின்றன. இந்தி, ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, வங்காளம், அசாமி ஆகிய 8 மொழிகளில் இத்தேர்வுகளை நடத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளதால் இரண்டாவது காரணமும் அடிபடுகிறது. மூன்றாவது காரணம் நியாயமானதாக இருக்கலாம்; ஆனால், அதற்கான பரிகாரம் பொதுத் தேர்விலிருந்து தப்பிப்பது அல்ல. நம்முடைய பள்ளிக்கூடங்களையும் கல்விமுறையையும் மேம்படுத்துவதே.

தமிழகத்தில் பள்ளி இறுதித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களில் 50% பேர் கல்லூரியில் முதலாம் ஆண்டுத் தேர்வுகளில் தோல்வியடைகின்றனர். 5 ஆண்டுகளாக இந்தக் கதை நடக்கிறது என்பது எதைக் காட்டுகிறது?

தமிழகத்தில் உயர்கல்வி தோல்வியுற்றதற்குக் காரணம், பள்ளிக் கல்விமுறை நொறுங்கிவிட்டதே என்று கல்வியாளர் பாலாஜி சம்பத் முகநூலில் பதிவிட்டுள்ளதை இங்கே நினைவுகூர வேண்டும். மாணவர்கள் சேர்க்கைக்கு அகில இந்தியரீதியில் நடத்தப்படும் ஒரே தேர்வு என்பதோடு, மாணவர் சேர்க்கை நீட் தேர்வின் அடிப்படையில் இருக்கப்போவதில்லை என்பதையும் இடஒதுக்கீட்டுக்குக் குந்தகம் ஏதும் விளையாது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்!

- கே.சந்துரு, நீதிபதி (ஓய்வு), சென்னை உயர் நீதிமன்றம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்