கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற அருணாசலக் கவிராயரின் பாடலையொத்து வங்கிக் கடனாளிகள் கலங்குவதில்லை. கடன் வசூல் வேட்டையில் இருக்கும் வங்கிகளோ “இன்று போய் நாளை வா” என்ற கம்பரின் காவிய வரிகளை கடனாளிகளிடம் கூறுவதில்லை.
வட்டிக்குக் கடன் வாங்கி திருப்பித் தராதவர்களிடம் வசூல் செய்ய முன்னொரு காலத்தில் வங்கிகள் உரிமையியல் நீதிமன்றத்தையே நாடின. இறுதி உத்தரவு பெற்று பின்னர் தொடரப்படும் முதல் மற்றும் இரண்டாம் மேல்முறையீடுகளையும் சந்தித்து, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்படும் மேல்முறையீட்டையும் முறித்து பெற்ற இறுதித் தீர்ப்பாணையில் வழங்கப்பட்ட தொகையை வசூலிக்க நிறைவேற்றுமனு போட்டு, கடனாளிகளின் சொத்துகளைப் பகிரங்க ஏலமிட்டு வரும் பணத்தை எடுத்துக்கொள்ள ஆண்டுகள் பலவாயின.
சிவில் கோர்ட்களில் சிக்கித் தவிப்பதை மாற்ற 1993ல் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வசூலிக்கும் சட்டத்தின்படி கடன் வசூலிக்கும் தீர்ப்பாயங்களும் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களும் உருவாக்கப்பட்டன. இருப்பினும், கடன் வசூலில் முன்னேற்றம் ஏதும் காணப்படவில்லை.
இத்தீர்ப்பாயங்களின் இடைக்கால உத்தரவுகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்து வழக்குகளை தாமதப்படுத்தவே கடனாளிகள் முற்பட்டனர்.
வழக்குகள் நிலுவையில் உள்ளபோதே கடனீட்டு ஆவணச் சொத்துகள் கை மாறுவதையும், விற்கப்படுவதையும் தடுக்கவும் இறுதித் தீர்ப்பாணைக்கு காத்திராமல் சொத்துகளைக் கைப்பற்றி விற்பதன் மூலம் கடன் தொகையை எடுத்துக் கொள்ளவும் 2002ல் கடனீட்டு ஆவணங்கள் மற்றும் நிதி சார்ந்த சொத்துகள் புனரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. வழக்கு தொடராமலேயே ஜாமீனாக கொடுத்த சொத்து விற்பனையைத் தடுத்து, அச்சொத்துகளை பொது ஏலத்தின் மூலம் விற்று கடன் தொகையை பெற உதவியது. வங்கிகள் பல சட்ட கவசங்களைப் பூண்டும், வரவேண்டிய கடன்கள் வாராக்கடன்களாகவே நின்றுவிட்டன.
தனியார் வங்கிகள் கடைப்பிடித்த நெறியற்ற வசூல் முறைகள் கடனாளிகளிடமிருந்து அபயக்குரல்களை எழுப்பின. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் நெறிமுறை தவிர்த்த கடன் வசூல் வேட்டையைக் கைவிடாததால் கட்டப் பஞ்சாயத்துகள் மூலம் கடன்கள் வசூலிக்கப்பட்டன. கமிஷன் முறையில் கடன் தொகையை வசூலிக்க நியமித்த தண்டல் முகவர்களின் (தாதாக்கள்) அடாவடித்தனமும் கடனில் வாங்கிய வாகனங்களை நடுரோட்டில் கைப்பற்றிச் சென்ற நிகழ்வுகளும் தொடர்ந்தன.
இதைப்பற்றி வந்த வழக்குகளில் உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் வங்கிகளின் முறையற்ற நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்தன. 2002ம் வருடத்திய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சொத்துகளின் ஆவணங்களை, தனியார் கம்பெனிகளிடம் வசூல் செய்ய ஒப்படைத்ததில் பல முறைகேடுகள் நடந்தன.
கடனாளிகளும் கடனை திருப்பித் தராமல் பல மோசடி உத்திகளைக் கையாண்டனர். பெரும் கடன் பெற்றும் திருப்பித் தராதோரின் புகைப்படங்களை செய்தித்தாள்களில் வெளியிட வங்கிகள் முன்வந்த செயலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதிக்காதது மட்டுமின்றி மோசடிப் பேர்வழிகளின் திட்டங்களை முறியடிக்க வங்கிகளும் புது உத்திகளைக் கையாள வேண்டியுள்ளதென்றும், தனிப்பட்டோரின் அந்தரங்கம் பாதிக்கப்படுவதாகக் கூறுவது ஏற்கமுடியாது என்றும் தீர்ப்பளித்தது. ஆனால் பம்பாய் மற்றும் கேரள உயர் நீதிமன்றங்கள் வங்கிக் கடனாளிகளின் புகைப்பட வெளியீட்டு அச்சுறுத்தலுக்கு சட்ட அடிப்படை இல்லை என்றும் அவர்களது அந்தரங்கம் புனிதமானதென்றும் தீர்ப்பளித்துள்ளன. கடனாளிகளின் அந்தரங்கங்கள் புனிதமானவையா என்ற முடிவு உச்ச நீதிமன்றத்திடமே உள்ளது
‘கொடாக் கண்டர்களுக்கும், விடாக் கண்டர்களுக்கும் இடையிலான’ போட்டிகள் அதுவரை தொடரும்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago