அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான், சீனா எனப் பல நாடுகளில் நியூட்ரினோ என்னும் அதிசயத் துகள்பற்றி ஆராய்ச்சி நடந்துவருகிறது. இத்துறையில் பின்தங்கிவிடக் கூடாது என்ற அளவில் இந்தியாவிலும் நியூட்ரினோ பற்றி விரிவான ஆராய்ச்சி நடைபெறவிருக்கிறது. இந்த நோக்கில்தான் தேனி மாவட்டத்தில் ரூ. 1,400 கோடி செலவில் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம் நிறுவப்பட்டுவருகிறது. இது 2015-ம் ஆண்டில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உங்களையும் பூமியையும் தாண்டி…
சூரியனிலிருந்து ஒவ்வொரு நொடியும் கோடானு கோடி நியூட்ரினோ துகள்கள் வந்துகொண்டிருக்கின்றன. இவை மிகவும் நுண்ணியவை. எதையும் துளைத்துச் செல்லக்கூடியவை. நீங்கள் சூரியனை நோக்கி உள்ளங்கையை விரித்தால், உங்கள் உள்ளங்கையைப் பல கோடி நியூட்ரினோக்கள் துளைத்துச் செல்லும்.
நியூட்ரினோக்கள் உள்ளங்கை என்ன, பூமியையும் துளைத்துச் செல்பவை. அடுத்தடுத்து 10 பூமியை நிறுத்தினாலும் அத்தனை பூமிகளையும் அவை துளைத்துக்கொண்டு விண்வெளிக்குச் சென்றுவிடும்.
நியூட்ரான் வேறு; நியூட்ரினோ வேறு
பலரும் பள்ளிப் பாடப் புத்தகங்களில் நியூட்ரான் பற்றிப் படித்திருப்பார்கள். நியூட்ரான் வேறு; நியூட்ரினோ வேறு. நியூட்ரான்கள் அணுவுக்குள் இருப்பவை. உடலை நியூட்ரான்கள் தாக்கினால் ஆபத்து. நியூட்ரினோக்கள் ஆபத்து விளைவிக்காதவை.
சூரியனில் ஒவ்வொரு நொடியும் பல கோடி டன் ஹைட் ரஜன் அணுக்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஹீலியம் அணுக்களாக மாறிவருகின்றன. இது அணுச்சேர்க்கை எனப்படுகிறது. இவ்வித அணுச்சேர்க்கையின்போதுதான் நியூட்ரினோக்கள் தோன்றுகின்றன.
ஆபத்தானவையா?
கோடானு கோடி நியூட்ரினோக்கள் 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து பூமிக்கு வந்துசேர்கின்றன. அந்த வகையில் காலம்காலமாக நியூட்ரினோக்கள் பூமியில் வாழும் மக்களையும் அத்துடன் பூமியையும் துளைத்துச் சென்றுகொண்டிருக்கின்றன. ஆகவே, நியூட்ரினோக்களால் மனித குலத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது நிரூபணமான உண்மை.
நியூட்ரினோக்களால் நமக்கு நன்மை உண்டா? அவற்றை நம்மால் ஆக்கபூர்வமான வகையில் பயன்படுத்திக்கொள்ள முடியுமா? நம்மால் இன்னும் நியூட்ரினோக்கள் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடியவில்லை. அந்த நோக்கில்தான் உலகில் பல நாடுகளிலும் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன. நியூட்ரினோபற்றி நாம் நன்கு அறிந்துகொண்ட பின்னர்தான் அவற்றைப் பயன்படுத்திக்கொள்வதுபற்றிச் சிந்திக்க முடியும்.
நியூட்ரினோக்களைக் கண்ணி வைத்துப் பிடிக்க முடியாது. கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் பாய்ந்து செல்லும் நியூட்ரினோக்கள் அவற்றின் பாதையில் உள்ள எதையும் ஊடுருவிச் செல்பவை. ஆனால், அவை சில சமயங்களில் போகிறபோக்கில் வழியில் உள்ளதை உதைத்துத் தள்ளும்; ஒதுக்கித் தள்ளும்; மோதித் தள்ளும். இப்படியான செயல்களின் விளைவுகளை வைத்துத்தான் நியூட்ரினோக்கள்பற்றி அறிய முடியும் என்ற நிலைதான் உள்ளது.
இரவில் சமையலறையில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்கிறது. உள்ளே போய்ப் பார்த்தால், ஜன்னல் திறந்து கிடக்கிறது. பூனை வந்து பாத்திரங்களை உருட்டிச் சென்றிருக்கிறது என்று உணர்கிறோம். நியூட்ரினோக்களின் கதையும் அப்படித்தான்.
நியூட்ரினோக்கள் எதை உதைத்துத் தள்ளிவிட்டுச் சென்றால், அவைபற்றி நன்கு அறிந்துகொள்ள முடியும் என்ற அடிப்படையில் உலகில் நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடங்கள் விதவிதமாக அமைந்துள்ளன.
ஆராய்ச்சிகள்
ஜப்பானில் ஒரு மலைச் சிகரத்துக்கு அடியில் 1,000 மீட்டர் ஆழத்தில் எவர்சில்வரினால் ஆன 40 மீட்டர் அகலமுள்ள கோள வடிவிலான தொட்டியில் மிகவும் சுத்தமான நீர் அடங்கியுள்ளது. நியூட்ரினோக்கள் இந்தத் தொட்டியின் வழியே பாய்ந்து செல்லும்போது, தற்செயலாக எலெக்ட்ரான்கள்மீது அல்லது அணுக் கருக்கள்மீது மோதிச்செல்லலாம். அப்படி மோதினால் மினுக் என்று ஒளி தோன்றும். இந்த மினுக் ஒளிகளைப் பதிவுசெய்ய நாலாபுறங்களிலும் பதிவுக் கருவிகள் உண்டு.
கனடாவில் பாதாள நீர்த் தொட்டியில் அழுக்குப் போக்கும் திரவம் வைக்கப்பட்டது. அண்டார்டிகாவில் ஒரு கன கிலோ மீட்டர் அகலம், நீளம், உயரம் கொண்ட பெரும் பனிக்கட்டிதான் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம்.
தமிழகத்தில், தேனியில்…
தமிழகத்தில் தேனியில் அமையும் ஆராய்ச்சிக்கூடத்தில் காந்தத்தன்மை கொண்ட 50 ஆயிரம் டன் இரும்புத் தகடுகள் பயன்படுத்தப்படும். அடுக்கடுக்காக உள்ள இந்த இரும்புத் தகடுகளை நியூட்ரினோக்கள் ஊடுருவிச் செல்லும்போது ஏற்படும் விளைவுகளைப் பதிவு செய்வதற்கான கருவிகள் இந்த இரும்புத் தகடுகளுக்கு இடையே பொருத்தப்படும்.
ஒரே பாறையாக அமைந்த குன்றின் உச்சியிலிருந்து 1,300 மீட்டர் ஆழத்தில் ஆராய்ச்சிக்கூடம் அமைந்திருக்கும். ஆராய்ச்சிக்கூடத்துக்குச் செல்ல சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளச் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.
நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடங்கள் குன்றின் அடியில் அல்லது பாதாளத்தில் அமைக்கப்படுவதற்குக் காரணம் உள்ளது. நியூட்ரினோக்கள் அல்லாத வேறு துகள்கள் வருவதைத் தடுக்கவே இந்த ஏற்பாடு.
கணக்கு சரிதான்
நியூட்ரினோக்கள் 1960-களிலிருந்து 2002-ம் ஆண்டு வரை விஞ்ஞானிகளைப் படாதபாடு படுத்தியுள்ளன. சூரியனின் மையத்தில் எவ்வளவு நியூட்ரினோக்கள் உற்பத்தியாக வேண்டும் என்பது குறித்து விஞ்ஞானிகள் கணக்குப் போட்டு வைத்திருந்தனர். சூரியனிலிருந்து எவ்வளவு நியூட்ரினோக்கள் பூமிக்கு வந்துசேர்கின்றன என்று ஆராய்ச்சிக் கருவிகள் மூலம் கணக்கிட்டு அறிய விஞ்ஞானிகள் முயன்றபோது கணக்கு உதைத்தது. மூன்றில் ஒரு பங்குதான் வந்துசேர்வதாகக் கருவிகள் காட்டின. மற்ற நியூட்ரினோக்கள் என்னவாகின என்று கேள்வி எழுந்தது. சூரியனில் நடக்கும் அணுச்சேர்க்கை பற்றிய தங்களது கருத்தே தவறானதோ என்றும் விஞ்ஞானிகள் எண்ண முற்பட்டனர்.
மேலும், நவீனக் கருவிகளை வைத்து ஆராய்ந்தபோது, சூரியனிலிருந்து வரும் நியூட்ரினோக்களில் மூன்றில் இரு பங்கு பாதி வழியில் வேறு இரு வகை நியூட்ரினோக் களாக மாறிவிடுகின்றன என்பது தெரியவந்தது. 2002-ம் ஆண்டில்தான் இந்த உண்மை தெரியவந்தது. அவற் றையும் சேர்த்துக் கணக்கிட்டபோது சூரியன் பற்றிய கொள்கை சரியானதே என்பது புலனாகியது.
ஐன்ஸ்டைன் சொன்னது சரிதான்
உலகில் பெரிய ஆராய்ச்சிக்கூடங்களில் நியூட்ரினோக்களை உற்பத்தி செய்ய முடியும். ஜெனீவாவில் உள்ள ஆராய்ச்சிக்கூடம் 2011-ம் ஆண்டில் இவ்விதம் நியூட்ரினோக்களை உண்டாக்கிப் பாதாளம் வழியே இத்தாலியில் உள்ள ஓர் ஆராய்ச்சிக்கூடத்துக்கு அனுப்பிச் சோதனை நடத்தியது. அப்போது நியூட்ரினோக்கள் ஐன்ஸ்டைனின் கொள்கையைப் பொய்யாக்கும் வகையில் ஒளி வேகத்தை மிஞ்சுவது போலத் தோன்றியது. இது சில மாத காலம் பெரும் குழப்பத்தை உண்டாக்கியது. கடைசியில், கருவிகளில்தான் கோளாறு, ஐன்ஸ்டைனின் கொள்கை சரியானதுதான் என்று நிரூபணமாகியது.
இந்தியாவில் நியூட்ரினோ பற்றிய ஆராய்ச்சி நடப்பது இது முதல் தடவை அல்ல.1964-ம் ஆண்டில் கோலார் தங்கச் சுரங்கத்தில் மிக ஆழமான இடத்தில் சிறு அளவில் நியூட்ரினோ ஆராய்ச்சி நடந்தது. விண்வெளியிலிருந்து வரும் காஸ்மிக் கதிர்கள் காற்று மண்டலத்தில் நுழைந்த பின்னர், நியூட்ரினோக்களைத் தோற்றுவிக்கின்றன என்பது முதல் தடவையாக அங்குதான் கண்டுபிடிக்கப்பட்டது.
தேனியில் இப்போது அமையும் நியூட்ரினோ ஆராய்ச்சிக்கூடம் காற்று மண்டல நியூட்ரினோக்களைத்தான் முதலில் ஆராயும். பின்னர், அது சூரியனிலிருந்து வருகின்ற நியூட்ரினோக்களையும் ஆராய ஆரம்பிக்கும். அதற்கு அடுத்த கட்டத்தில் ஜெனிவாவிலிருந்து நிலத்துக்கு அடியில் உள்ள பாறைகள் வழியே அனுப்பப்படுகின்ற நியூட்ரினோக்களையும் ஆராயத் தொடங்கும்.
இவ்விதம் பாதாளம் வழியே நியூட்ரினோக்களை அனுப்பினால் நிலநடுக்கம் உண்டாகும் என்று பீதி கிளப்பப்படுகிறது. இது வெறும் கற்பனை. ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றில் பாதாளம் வழியே நியூட்ரினோக்களை அனுப்புவது எண்ணற்ற தடவை நடந்துள்ளது. அங்கெல்லாம் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.
- என். ராமதுரை, மூத்த பத்திரிகையாளர், அறிவியல் எழுத்தாளர்,
தொடர்புக்கு: nramadurai@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago