மதுக் கடைகள் முக்கியமா, மனித உயிர்கள் முக்கியமா?

By டி.எல்.சஞ்சீவி குமார்

“சுற்றுலாத் துறை வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. அதை ஏன் கொல்ல வேண்டும்? நெடுஞ்சாலைகளில் மதுக் கடைகளை மூடும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும்” என்று கவலை தெரிவித்திருக்கிறார், நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த். உலகிலேயே விபத்துகள் அதிகம் நடக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா. இங்கு நான்கு நிமிடங்களுக்கு ஒரு விபத்து நடக்கிறது. நெடுஞ்சாலைகளில் வேகமாக வாகனம் ஓட்டுவதால் நடக்கும் 47.9 % விபத்துகளில் 44.2 % பேர் மரணம் அடைகின்றனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் 4.2% விபத்துகளில் 6.4% பேர் மரணம் அடைகின்றனர். இப்போது சொல்லுங்கள்.. மதுக் கடைகள் முக்கியமா.. மனித உயிர்கள் முக்கியமா?

நெடுஞ்சாலை மதுக் கடைகளை மூடச் சொல்லி முதன்முதலில் உத்தரவிட்ட நீதிபதி பால் வசந்தகுமார், கிட்டத்தட்ட இதே கேள்வியைத்தான் தமிழக அரசை நோக்கிக் கேட்டார். அவர் தனது உத்தரவில் 2013 மார்ச் 31-க்குள் நெடுஞ்சாலை மதுக் கடைகளை மூடச் சொல்லி உத்தரவிட்டதைத் தமிழக அரசு எதிர்பார்க்கவில்லை. இதற்கிடையே மார்ச் 11-ல் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் கடைகளை மூடச்சொல்லி, தனது வழக்கமான சுற்றறிக்கையை அனுப்பியது தேசிய நெடுஞ்சாலைத் துறை. மதுக் கடைகளை மூட இரு நாட்களே அவகாசம் இருந்த நிலையில், மார்ச் 28-ல் மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது தமிழக அரசு. அதில் மதுக் கடைகளை மூடுவதற்கு ஆறு மாதம் அவகாசம் வேண்டும் என்று கேட்டது.

தமிழக அரசின் இந்த நிலைப்பாடு நீதிமன்றத்தைக் கடும் கோபம் கொள்ளச் செய்தது. “நாளுக்கு நாள் விபத்துகள் பெருகிவருகின்றன. மரணங்கள் அதிகரித்துவருகின்றன. இந்தச் சூழலில் ஆறு மாதம் அவகாசம் கொடுங்கள். சாராயம் விற்றுக்கொள்கிறேன் என்று ஒரு அரசாங்கம் கேட்பது நியாயம் கிடையாது. அரசாங்கத்தின் வேலை இதுதானா?” என்று கடுமையாகக் கேட்ட நீதிபதி பால் வசந்த குமார், “இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 47-ன் படி ஒரு அரசு மதுவை விற்பனை செய்யக் கூடாது. தவிர, தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் கடைகளை அகற்ற வேண்டும் என்று மத்திய அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இதை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்த நீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் இருக்கும் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளது. மோட்டார் வாகனச் சட்டப்படி மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது குற்றம். இதைக் கட்டுப்படுத்த வேண்டிய கடமையும் மாநில அரசுக்கு இருக்கிறது” என்று தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டார்.

தொடர்ந்து 2013 ஏப்ரல் 23 அன்று தமிழக அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதில் தமிழக அரசு புதிய நிலைப்பாடு ஒன்றை எடுத்தது. நெடுஞ்சாலைகளில் மதுக் கடைகளை மூடுவதற்கு அச்சாரமாக இருந்த மத்திய அரசின் சுற்றறிக்கையில் தேசிய நெடுஞ்சாலைக் கடைகளை மட்டுமே மூட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இன்றைக்கு மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளும் மூடப்பட்டிருக்கின்றன. காரணம், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் வழக்கறிஞர் பாலு. முதன்முதலில் இந்த வழக்குக்கான மனுவைத் தயாரித்தபோது ராமதாஸ், “தேசிய நெடுஞ்சாலைகளைவிட மாநில நெடுஞ்சாலைகளில்தான் அதிகமான மதுக் கடைகள் இருக்கின்றன. மாநில நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகளாலும் அதிகளவு உயிர்ச் சேதம் ஏற்படுகிறது. எனவே, மனுவில் மாநில நெடுஞ்சாலைகளையும் சேர்த்து தடை செய்யக் குறிப்பிட வேண்டும்’ என்று பாலுவிடம் அறிவுறுத்தினார். அதன்படியே மனு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

இதைத்தான் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் கையில் எடுத்தது தமிழக அரசு. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், “மத்திய அரசின் சுற்றறிக்கையில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக் கடைகளை மட்டுமே அகற்ற உத்தரவிடப்பட்டிருக்கிறது.

ஆனால், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் கடைகளையும் சேர்த்து அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த வழக்குக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பொருந்தாது. அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்” என்று கேட்டது. இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எஸ்.ஏ.பாப்டே 2013 மே 7-ல் ஒரு தீர்ப்பு அளித்தனர்.

அதில் “தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் அனைத்துக் கடைகளும் வரும் சுதந்திர தினமான 2013 ஆகஸ்ட் 15-க்குள் மூடப்பட வேண்டும். அதன் பின்பு, மாநில நெடுஞ்சாலைக் கடைகளை மூடுவது குறித்துப் பரிசீலிக்கலாம். இதில் மாநில நெடுஞ்சாலைத் துறையின் கருத்தையும் கேட்டுப் பதிவுசெய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டது. இது தமிழகத்துக்கு மட்டுமல்ல, நாடு முழுமைக்குமே பொருந்தும். அதன்படி நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக் கடைகள் அகற்றப்பட்டன. தமிழகத்தில் மட்டும் 504 மதுக் கடைகள் அகற்றப்பட்டன.

எப்படித் தெரியுமா?

தொடரும்...

- டி.எல்.சஞ்சீவிகுமார்

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்