நீதித் துறைக்குள் சுணக்கம் ஏற்பட்டால் அதன் பாதிப்பு மக்கள் மீதுதான் விழும்
ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அங்கமான நீதித் துறையில் நீதிபதிகள் ஒரு பாதியென்றால், வழக்கறிஞர்கள் மறுபாதி. இந்நிலையில், தமிழகத்தில் இந்த இரு தரப்புக்கும் இடையே எழுந்திருக்கும் ஒரு முரண்பாடு, சமீப காலமாகவே நீதித் துறையையே ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது. பொதுமக்களும் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள்.
வழக்கறிஞர்கள் சட்டப் பிரிவு 34-ஐப் பயன்படுத்தி, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள விதிகளுக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராடிவருகின்றனர். இந்த விதிகள், தங்கள் சுதந்திரச் செயல்பாட்டை முடக்கும் விதமாக இருக்கின்றன என்பது வழக்கறிஞர்களின் வாதம். நீதிபதிகள் தரப்போ அதன் தேவையை வலியுறுத்துகிறது.
ஒருதலைப்பட்சம்
சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்களின் நடவடிக்கைகள் குறித்துப் பிறப்பித்த விதிகள் நியாயமானவையா என்று பார்ப்பதற்கு முன்பாக, இந்த விதிகள் கொண்டுவரப்பட்ட விதம் கேள்விக்கு உள்ளாகியிருப்பதைக் கவனிக்க வேண்டும். வழக்கறிஞர்களின் கருத்தறியாமல், ஒத்துழைப் பில்லாமல் அவர்களின் செயல்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டுவரும் விதிகளை சரியா, அப்படி நிறைவேற்ற முடியுமா எனும் கேள்விகள் தவிர்க்கக் கூடியவை அல்ல. இந்த விஷயத்தை விவாதித்து, நடைமுறைச் சாத்தியங்களை அறிந்துகொள்வதால் நீதித் துறையின் மரியாதையும் கண்ணியமும் குன்றிவிடாது.
சென்னை உயர் நீதிமன்றம் கொண்டுவந்திருக்கும் சில விதிகள், நீதிபதிகளுக்கு எதிராகப் புகார் பதி வதையும் உயர்த்திப் பேசுவதையும் (Browbeat) குற்றம் என்கின்றன. நீதிமன்றத்துக்குள் போராடுவது தவறு என்கிறது ஒரு விதி. உண்மையில், வழக்கறிஞர்களின் செயல்பாடுகளை முடக்கும் இந்த விதிகள் ஜனநாயக விரோதமானவை என்றே சொல்ல வேண்டும். ‘ப்ரோபீட்’ என்ற ஆங்கில வார்த்தைக்கு, கையை உயர்த்திப் பேசுவது; புருவத்தை உயர்த்துவது என்ற அர்த்தங் களும் உண்டு. மிரட்டுவது என்றும் கொள்ளலாம். வழக்கறிஞர் தன்னுடைய வழக்கை முன்வைத்து வாதிடுகிறபோது, தன்னுடைய வாதத்துக்கேற்ப உடல் மொழியை வெளிப்படுத்துவது தவிர்க்க முடியாதது. இதை நீதிபதிகளை மிரட்டுவதாகச் சொல்வது சரியாகாது.
நீதிபதிகளுக்கு எதிராக அடிப்படையே இல்லாத, ஆதாரமில்லாத புகாரை ஒரு வழக்கறிஞர் அளிப்பது குற்றம் என்று விதி கூறுகிறது. புகாரை விசாரிப்பதன் மூலம்தான் ஆதாரம் உள்ளதா, இல்லையா என்பதைக் கண்டறிய முடியும். மாறாக, புகார் அளிப்பதே நீதிபதிகளுக்கு எதிரானது என்ற முடிவுக்கு வரலாமா?
பயன்படுத்தப்படாத வழி
உயர் நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதை விசாரிப்பதற்கோ, அது நிரூபிக்கப்பட்டால் தண்டனை அளிப்பதற்கோ இப்போது என்ன வழி உள்ளது? சம்பந்தப்பட்ட நீதிபதி மீது நாடாளுமன்றத்தில் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதுதான் இன்றுள்ள ஒரே வழி. கடந்த 68 ஆண்டுகளில் ஒரு நீதிபதி கூட நாடாளுமன்றத்தால் பதவிநீக்கம் செய்யப்படவில்லை. ஒருசில நீதிபதிகள் மீது விசாரணை வரை வந்து, வேறு வழியாகத்தான் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டதே ஒழிய, ஒரு நீதிபதியைக்கூட இதுவரை நாடாளுமன்றம் பதவி நீக்கம் செய்ததில்லை. அப்படியென்றால், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யாருமே முறைகேட்டில் ஈடுபடவில்லை என்ற முடிவுக்கு வர முடியுமா? முடியாது. நீதிபதிகளைப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாக்கிட தற்போது சட்டம் ஏதுமில்லை.
இந்திய ஜனநாயகத்தின் தூணாக அமைந்திருக்கும் நீதித் துறையை மேம்படுத்த மேற்சொன்ன விதிகள் உதவாது. மாறாக, சமூகப் பொறுப்புடைய அங்கமாக நீதித் துறையை மாற்றுவதே அவசியமானதாகும். நீதித் துறையில் அதிகரிக்கும் ஊழல் முறைகேடுகள் பற்றி அந்த விதிகள் பேசுகின்றன. ஆனால், வழக்கறிஞர்களை நோக்கி அந்தப் பிரச்சினையைத் திருப்புவது என்பது - பிரச்சினையின் ஆழத்தைக் கவனத்தில்கொள்ளாத தன்மையாகும்.
சி.ரவிச்சந்திரன் ஐயர் வழக்கில் நீதிபதிகள் மீது வழக்கறிஞர்கள் ஊழல் குற்றச்சாட்டு குறித்து உயர் நீதிமன்றத்துக்கோ உச்ச நீதிமன்றத்துக்கோ புகார் கொடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் 1995-ல் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு புகார் கொடுப்பதைக் குற்றம் என்று சொல்லவில்லை. ஒரு புகார் உண்மையா, இல்லையா என்று விசாரணைக்குப் பிறகுதான் முடிவுக்கு வர முடியும். பொய்க் குற்றச்சாட்டை ஒருவர் கொண்டுவருகிறார் என்றால், நீதிமன்றம் விசாரித்து அதைத் தள்ளுபடி செய்கிறபோது, புகார் கொடுத்தவர் வழக்குச் செலவை ஏற்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறது. சில நேரங்களில் கண்டனமும் தெரிவிக்கிறது. எனவே, இத்தகைய விசாரணைக்குத் தாங்கள் அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை நீதிபதிகள் ஏற்கத்தான் வேண்டும்.
வழக்கறிஞர் மீதுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிப்பதற்கு முன்னதாகவே வழக்கறிஞர் தொழில் செய்ய அவருக்குத் தற்காலிகமாகத் தடை விதிப்பதும் சரியல்ல. விசாரணை இல்லாமலேயே தண்டனை வழங்கலாம் என உயர் நீதிமன்றமே சொல்வதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. சொல்லப்போனால், வழக்கறிஞர்கள் மீது புகார் வந்தால், அதை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பார் கவுன்சிலுக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்டுள்ளது.
1950-களில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான ஏ,கே.கோபாலனை விசாரணையில்லாமல் தடுப்புக்காவல் சட்டப்படி கைதுசெய்து சிறையில் அடைத்தது தவறு என்று இதே சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நொடிப்பொழுதே வாழ்ந்தாலும் மனித உரிமையோடு வாழ வேண்டும் என்றுதான் ஒவ்வொரு குடிமகனும் விரும்புகிறான். நீதிமன்றங்களில் வாதிடுகிற வழக்கறிஞர்களை விசாரிக்காமல் தண்டிக்கலாமா?
நீதித்துறை ஆணையம்
நீதிபதிகள் நியமனம், இடமாற்றம், ஒழுங்கு நடவடிக்கை ஆகியவை குறித்த அனைத்து அதிகாரமும் உள்ள ஒரு தேசிய நீதித்துறை ஆணை யத்தை அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. இந்த நீதித்துறை ஆணையத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, நாடாளுமன்ற முன்னவர், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளில் ஒருவர் இடம்பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு ஆலோசனையை முன்வைத்துள்ளது. நவீன தாராளமயக் கொள்கைகள் அமலாக்கத்துக்குப் பின் எல்லாத் துறைகளிலும் ஊழல் பெருக்கெடுத்திருக்கிறது. லட்சம் கோடிகளில் பிரம்மாண்டமான ஊழல்களைப் பார்த்துவருகிறோம். இந்தச் சூழலில் நீதித் துறையிலும் ஊழல் நடப்பதை யாரும் மறுக்க முடியாது. நீதிபதிகளில் 40%-க்கும் மேற்பட்டவர்கள் ஊழல் கறை படிந்தவர்கள் என ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஒருவரே குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல், நீதித் துறைக்கு வர்க்கச் சார்பில்லை என்று கருத முடியுமா? இன்றைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வழக்குகளைத் தனி அமர்வு அமைத்து விரைவாக முடிக்கும் நீதிமன்றங்கள் - தொழில் தகராறு வழக்குகளை ஆண்டுக் கணக்கில் இழுத்தடிப்பது நடந்துகொண்டுதானே இருக்கிறது. குற்றம்சாட்டப்பட்டவர் கார் வைத்திருப்பவர், பெரிய மனிதர் என்பதால் வெண்மணிப் படுகொலையிலிருந்து குற்றவாளியை விடுவித்தது சென்னை உயர் நீதிமன்றம் என்பதை மறக்க முடியுமா? இந்தியச் சிறைகளில் உள்ள 2.8 லட்சம் கைதிகளில் 40% பேர் விசாரணைக் கைதிகள் (1.1 லட்சம் பேர்) என்பதையும் அவர்கள் ஜாமீன்கூடப் பெற முடியாத நிலையில் இருப்பதையும் தவிர்த்துவிட்டுப் பார்க்க முடியுமா?
கடந்த பல நாட்களாக தமிழகம் முழுவதும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலிருந்து உயர் நீதிமன்றம் வரையில் வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைப் புறக் கணித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பெரும்பான்மையாக நீதி மன்றங்கள் செயலிழந்து ஸ்தம்பித்துள்ளன. வழக்கறி ஞர்கள் நீதிமன்றங்களுக்குச் சென்று வழக்காடாத காரணத்தினால் வழக்காடிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.
வழக்கறிஞர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட வர்களோ, தண்டனைகளுக்கு அப்பாற்பட்டவர்களோ அல்ல. அதேசமயம், நீதிபதிகளும் வழக்கறிஞர் பிரதிநிதிகளும் பரஸ்பரம் சமதளத்தில் அமர்ந்து விவாதிக்கும்போதுதான் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். எனவே, புதிய விதிகள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். 41 வழக்கறிஞர்களின் இடைநீக்கத்தையும் ரத்துசெய்ய வேண்டும். நீதிமன்றங்கள் ஸ்தம்பித்துள்ளதை மத்திய அரசும் மாநில அரசும் வேடிக்கை பார்க்கக் கூடாது. இரு தரப்போடு கலந்து பேசி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும். நீதித் துறைக்குள் சுணக்கம் ஏற்பட்டால் அதன் பாதிப்பு மக்கள் மீதுதான் விழும் என்பதை மறந்துவிடக் கூடாது!
- ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்.
தொடர்புக்கு: gr@tncpim.org
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago