நம் கல்வி... நம் உரிமை!- தேவை உயர் கல்வியில் கவனம்!

By பத்ரி சேஷாத்ரி

புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து, மத்திய அரசு சில உள்ளீடுகளைத் தொகுத்து ஓர் ஆவணத்தை வெளியிட்டிருக்கிறது. அதற்குக் கடுமையான எதிர்வினைகள் வந்துள்ளன. பல ஆண்டுகளாக புதிதாக கல்விக் கொள்கை ஏதும் வரையறுக்கப்படாமல் இருந்துவந்துள்ளது. மாநில அரசுகளும் இதுகுறித்துப் பெரிதாகக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால், மத்தியில் உள்ள அரசைப் பிடிக்காதவர்கள், காய்தல் உவத்தல் இன்றி இந்த ஆவணத்தை அணுகாமல், ஒரேயடியாகக் குற்றம்சாட்டுதலில் இறங்கிவிட்டனர்.

இந்த அறிக்கை வளவளவென்று இருக்கிறது என்ற குற்றச்சாட்டை நானும் வைக்கிறேன். நறுக்கென்று இரண்டு, மூன்று பக்கங்களுக்குள்ளாக என்ன செய்யப்போகிறோம், ஏன் செய்யப்போகிறோம் என்றுதான் அரசு ஓர் அறிக்கையை முன்வைத்திருக்க வேண்டும். செய்யவில்லை. அடுத்து, நிறையத் தேவையற்ற முழக்கங்கள் அறிக்கை முழுவதிலும் காணப்படுகின்றன. வேதங்கள், காந்தி, அரவிந்தர், விவேகானந்தர் ஆகியோரைக் குறிப்பிடுவதிலும் அவர்கள் சொல்வதை மேற்கோள் காட்டுவதிலும் உள்ள கவனத்தை, அறிக்கையின் சாரத்தில் வைத்திருக்க வேண்டும்.

தெளிவான பதில் இல்லை

இந்த அறிக்கையில் முக்கிய விஷயங்களாக நான் சிலவற்றைக் கருதுகிறேன். ‘அனைவருக்கும் கல்வி’ உரிமைச் சட்டம், ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் 25% இடங்களைப் பொருளாதாரத்திலும் சமூகத்திலும் பின்தங்கியவர்களுக்காக ஒதுக்கீடு செய்தது. மத, மொழி சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று தடையானை பெற்றன. இந்தத் தீர்ப்பை எதிர்கொள்ளும் வகையில் சில சட்டத் திருத்தங்களை அரசு மேற்கொள்ளும் என்று அறிக்கை கூறுகிறது. இதனை சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் கடுமையாக எதிர்க்கப்போகின்றன.

முக்கியமாக, இந்த இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என்று சட்டம் சொன்னாலும், இன்றுவரை இது சரியாகச் செயல்படுத்தப்படவில்லை. இதற்கான நிதியை மத்திய அரசு ஒதுக்குமா, மாநில அரசு ஒதுக்குமா, எத்தனை நாட்களுக்குள் நிதி கல்விக்கூடங்களுக்குத் தரப்படும் போன்ற கேள்விகளுக்கு இன்றுவரை தெளிவு இல்லை. இதுவரையில் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு நிறையத் தொகை நிலுவையில் உள்ளது. இதுபோன்ற அநீதியான சட்டங்கள் சரிசெய்யப்பட வேண்டும்.

அரசு அமைப்பில் அப்ரைசல் உண்டா?

10-ம் வகுப்பு அளவில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்கள் இரு நிலைகள் கொண்டவையாக இருக்கும் என்ற முன்னெடுப்பு மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால், இதுதான் கடுமையாக எதிர்க்கப்படுகிறது. ஏற்கெனவே பிற நாடுகளில் இருக்கும் முறைதான் இது. பிளஸ் டு அளவில் கணிதத்தையும் அறிவியலையும் எடுத்துப் படிக்க விரும்புபவர்கள் மட்டும் உயர்நிலைப் பாடங்களை எடுத்துப் படித்தால் போதுமானது. பிற மாணவர்கள் எளிய நிலையில் இப்பாடங்களை எடுத்துக்கொண்டு, மொழியிலும் சமூக அறிவியலிலும் அதிக கவனத்தைச் செலுத்தலாம் அல்லது விளையாட்டில் கவனம் செலுத்தலாம். களத்தில் பணியாற்றும் ஆசிரியர்களைக் கேட்டால் தெரியும் இதன் முக்கியத்துவம். அதேபோல ஆங்கிலப் பாடத்தையும் எளிதாக்குவது மிக முக்கியமான முன்னெடுப்பு. இன்னும் சொல்லப்போனால், ஆங்கிலப் பாடமே இல்லாமல் 10, 12 வகுப்புகளை எழுதித் தேர்வாகும் நிலையும் வர வேண்டும். இன்று மத்திய மனிதவள அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய திறந்தநிலைப் பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்புத் தேர்வில் இது சாத்தியம்.

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆசிரியர்களின் திறனைச் சோதித்து, அதன் அடிப்படையில்தான் பணி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை அளிக்கப்படும் என்ற கருத்து ஆசிரியர் சமூகத்தால் கடுமையாக எதிர்க்கப்படும். தனியார் நிறுவனங்களில் அப்ரைசல் என்று சொல்லப்படும் முறை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. ஆனால், அரசு அமைப்புகளில் இது கிடையாது. பள்ளிகளின் கல்வி இலக்குக்கும் முன்னேற்றத்துக்கும் தலைமை ஆசிரியர்கள் பொறுப்பேற்குமாறு செய்யப்படும் என்கிறது அறிக்கை. இதைச் செயல்படுத்துவதும் கடினம். ஆசிரியர்களையும் தலைமை ஆசிரியர்களையும் கண்காணிக்க ஒரு பெரும் அமைப்பு தேவைப்படும்.

விவாதங்கள் இல்லை

உண்மையில், இந்த முதல்கட்ட அறிக்கை எனக்கு ஏமாற்றத்தையே தருகிறது. முக்கியமான சில கேள்விகள் குறித்துச் சிந்தனை செல்லவே இல்லை. முதலாவதாக, மத்திய அரசின் பங்கு என்ன, மாநில அரசுகளின் பங்கு என்ன என்பது தெளிவாக்கப்படவில்லை. பள்ளிக் கல்வியைப் பொருத்தமட்டில் தனியாரின் பங்கு என்னவாக இருக்க வேண்டும் என்பதும் தெளிவாக்கப்படவில்லை. பெருகிவரும் கல்வித் தேவையை அரசுகளால் மட்டுமே பூர்த்திசெய்துவிட முடியுமா, தனியாருடன் கைகோத்து அரசு எவ்வாறு செயல்படலாம் என்பதுகுறித்த சிந்தனை இல்லை.

அதேபோல உயர் கல்வியில் தனியாரின் பங்கு என்ன, தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குவது அவசியமா, இல்லையா? வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிக்கலாமா, கூடாதா என்பது குறித்த விவாதங்கள் இல்லை.

கல்விக்காக ஜிடிபியில் 3.5% செலவழிக்கிறோமா, 6% செலவழிக்கிறோமா என்ற கேள்விக்குள் செல்கிறோமே ஒழிய, அனைவருக்கும் தரமான கல்வியைத் தர எத்தனை செலவழிக்க வேண்டும், செலவழிக்கும் தொகைக்கு ஏற்ப மக்களுக்குச் சிறப்பான கல்வி கிடைக்கிறதா என்பதுகுறித்த விவாதம் இல்லை.

தேவைகள் வேறுவேறு

பள்ளிக் கல்வியைப் பொருத்தமட்டில் வேண்டிய அளவு கல்விக்கூடங்கள் பெரும்பாலான மாநிலங்களில் உள்ளன. அவற்றின் தரம் பற்றிக் கேள்விகள் இருக்கலாம். ஆனால், உயர் கல்வியில் நாம் பெரிதாகப் பின்தங்கியிருக்கிறோம் என்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உயர் கல்வி படிக்கச் செல்வோர் விகிதம் மிக அதிகமாக இருக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. ஆனால், இங்குமே இது 45% என்பதாகத்தான் இருக்கிறது. பொறியியல் கல்லூரிகளில் சேருவோர் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், இன்று கலை, அறிவியல் கல்லூரிகள் போதிய எண்ணிக்கையில் இல்லை. அரசு மட்டுமே முதலீடு செய்து வேண்டிய எண்ணிக்கையில் கல்லூரிகளை உருவாக்க முடியாது. இவ்வகைக் கல்லூரிகளில் கட்டணம் அதிகமாக வசூலிக்க முடியாது. அப்படியென்றால், எம்மாதிரியான முயற்சிகள் மூலம் கலை, அறிவியல் கல்லூரிகளை அதிகப்படுத்துவது என்பது குறித்த சிந்தனை இல்லை. தற்போது மூடும் நிலையில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளை கலை, அறிவியல் பட்டங்களையும் தருமாறு மாற்ற முடியுமா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

பள்ளிக்கூட அளவில் கல்வியின் தரத்தை முன்னேற்றும் வேலையை மாநிலங்களிடம் முழுவதுமாக விட்டுவிட வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு தரத்தில் இருக்கிறது. ஒவ்வொருவரின் தேவையும் வேறுவேறு. உயர் கல்வியைப் பொருத்தமட்டில் மத்திய அரசு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சில கல்விக்கூடங்களை நடத்துவதுடன், பொதுவான சில கொள்கைகளை உருவாக்குவதில் ஈடுபட்டால் மட்டும் போதும்.

அதைவிடுத்து, கல்வியை முழுவதுமாகத் தன் தோளில் தூக்கிச் சுமப்பதுபோல மத்திய அரசு நடந்துகொண்டால், அதற்குக் கெட்ட பெயர் மட்டுமே மிஞ்சும். மாநில அரசுகள், பழியை மத்திய அரசின்மீது போட்டுவிட்டு நகர்ந்துவிடும். இடதுசாரி அறிவுஜீவிகள் இந்த அரசு தவறு செய்வதற்காகவே காத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு இந்த அரசும் நிறைய இடம்கொடுக்கிறது.

கட்டுரையாளர் பதிப்பாளர், எழுத்தாளர்.

- தொடர்புக்கு: badri@nhm.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்