சுவிட்சர்லாந்து நாட்டின் பெர்ன் நகரில் கடந்த வாரம் நடந்த ஒரு மாநாட்டில் பங்குகொள்ளச் சென்றிருந்தேன். அத்துடன் நான் எழுத வேண்டிய செய்திக் கட்டுரைக்கான கருப்பொருளைத் தேர்வுசெய்யவும் சிந்தித்துக்கொண்டிருந்தேன். தன்னிடமிருந்து விஷ வாயுக் கட்டமைப்புகளைச் சர்வதேச ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும் என்று சிரியா அரசிடம் ரஷ்யா கூறியது குறித்த செய்திகள் வரத் தொடங்கின. மணிக்கொரு முறை அந்த விவகாரத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுவந்தன. எனவே, நானும் எனது கட்டுரையைத் திருத்திக்கொண்டே இருக்க நேர்ந்தது. ஒரு கட்டத்தில் இதென்ன இந்தக் கட்டுரையை முடிக்கவே முடியாது போலிருக்கிறதே என்ற சலிப்பு ஏற்பட்டு அந்நகரின் ஆரி நதிக்கரையோரம் காலார நடக்கத் தொடங்கினேன். வழியில் சிறு கடையைக் கண்டு சாப்பிட ஏதாவது வாங்கலாம் என்று கடைக்குள் சென்றேன். வாங்கிவிட்டு கடைக்காரருக்குப் பணம் தர சட்டைப் பையில் ஸ்விஸ் பிராங்குகளைத் தேடிக்கொண்டே நிமிர்ந்து பார்த்த எனக்குக் காசாளரின் தலைமுடி முழுக்க இளஞ்சிவப்பாக இருந்தது சற்றே அதிர்ச்சியாக இருந்தது. எனக்குச் சில்லறையைத் தர எண்ணிக்கொண்டே அந்தப் பக்கமாக ஜன்னலுக்கு அருகே நடந்து சென்ற இளம் பெண்ணைப் பார்த்து காற்றிலேயே முத்தத்தைப் பறக்க விட்டார். அவருக்கு அருகிலிருந்த நானும் புறச் சூழலும் ஒரு பொருட்டே இல்லை என்பது புரிந்தது. சுவிட்சர்லாந்து நாட்டிலேயே பிறந்திருக்கக் கூடாதா, அதுவும் இளஞ்சிவப்பு நிறத் தலையோடு என்று அப்போது ஏக்கமாகக்கூட இருந்தது.
என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது என்றாலும், சிரியா அதிபர் பஷார் அல் அஸாதுக்கு எதிராக ராணுவத்தை ஏவலாமா வேண்டாமா என்ற கவலை அவருக்கு இல்லை என்பது புரிந்தது. அது அவருடைய தவறல்ல, அவருடையது சின்ன நாடு. சிரியாவைப் பற்றிக் கவலைப்படுவதற்குக் காரணம் நீ ஒரு அமெரிக்கன் அல்லது அமெரிக்க அதிபர் என்று என் மனது சொல்லிற்று. உலகிலேயே மிகவும் பலம் வாய்ந்த நாடாக இருப்பதால் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் சாமானியர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை, ஆசீர்வதிக்கப்பட்ட அமெரிக்காவுக்கு இருக்கிறது. பராக் ஒபாமாவுக்கு ஒரு காலத்தில் முடி கருப்பாக இருந்தது. இப்போது லேசாக நரைத்துவிட்டது - ஆனால் இளஞ்சிவப்பாக இல்லை. மத்தியக் கிழக்கு நாடுகளைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதாலும் இப்படியாகிறது. ஒன்று கருப்பு முடி வெள்ளையாகிறது அல்லது முடியே கொட்டிவிடுகிறது. இளஞ்சிவப்பாக மாறவே வாய்ப்பில்லை.
ஐரோப்பா படுத்த படுக்கையாக இருக்கிறது, சீனா தன்னுடைய கடமையைச் செய்யாமல் எங்கோ இருக்கிறது, அரபு நாடுகள் ஒடுங்கிக்கொண்டிருக்கின்றன என்ற நிலையில், அமெரிக்க அதிபர் இந்த விவகாரத்தில் தொடர்ந்து தலையிடுவதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உதவி தேவைப்படுகிறது. காரணம், பிற இடங்களிலிருந்து - குறிப்பாக அமெரிக்க மக்களிடமிருந்தும் அவருக்குக் குறைந்த அளவே உதவி கிடைக்கும் என்கிற நிலை. சிரியா விவகாரத்தை பராக் ஒபாமா சரியாகக் கையாளவில்லை என்றே எல்லோரும் குறை சொல்கிறார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் முக்கியமானவர்கள் புதினும் அமெரிக்க மக்களும்தான். இருவருமே சிரியா மீது அமெரிக்கா படை எடுப்பதை விரும்பவில்லை. இந்த முடிவு நீண்ட காலத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பதில் சந்தேகம் வேண்டாம். இதிலிருந்து தெரிவது என்ன?
சிரியா மீது குண்டுகளை வீச அனுமதிக்க வேண்டாம் என்று அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு மக்கள் தெரிவித்துவிட்டார்கள். அமெரிக்காவில் இந்த விவகாரத்தில் மக்களிடையே பிளவு ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பிளவு வலதுசாரி -இடதுசாரி என்ற அடிப்படையில் ஏற்படவில்லை. வசதி படைத்தவர்கள், சமுதாயத்தின் கீழ் நிலையில் இருக்கிறவர்கள் என்ற அடிப்படையில் ஏற்பட்டிருக்கிறது. சிரியாவில் தலையிட்டே தீர வேண்டும் என்று மேல் தட்டைச் சேர்ந்த அமெரிக்கர்கள் வலியுறுத்துகிறார்கள், விவாதிக்கிறார்கள். இதுவரை சிரியாவில் நடந்த உள்நாட்டுப் போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்தபோதெல்லாம் சும்மா பார்த்துக்கொண்டிருந்துவிட்டு ரசாயனக் குண்டுகளுக்கு 1,400 பேர் இறந்த பிறகு மட்டும் ஏன் குதித்தெழுந்து தலையிட வேண்டும் என்று சாதாரண அமெரிக்கர்கள் கேட்கிறார்கள். இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு சிவப்புக் கோடு போட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏற்கெனவே ரத்தக்களரியாக இருக்கிறதே இன்னும் எதற்கு சிவப்புக் கோடு, அதுவும் ரத்தச் சேற்றில் அடையாளம் தெரியாமல் போவதற்கு என்று மக்கள் கேட்கின்றனர்.
அரபு - முஸ்லிம் நாடுகளின் உள் விவகாரத்தில் நாம் தலையிட்ட 3 சந்தர்ப்பங்களிலும் நமக்குத் தோல்விதான் ஏற்பட்டது என்றே அமெரிக்கர்கள் கருதுகிறார்கள். ஆப்கானிஸ்தானில் எடுத்துக்கொண்ட முயற்சி வெற்றி பெறாமல் தோல்வி நிச்சயமாகிவிட்டது. இராக்கில் அடைந்த சிறு வெற்றிக்கு நாம் கொடுத்த விலை அதிகம். லிபியாவில் கொடுங்கோலனாக இருந்த ஒருவரை அகற்றிவிட்டு பழங்குடிகளின் தலைக்கட்டுகளாகப் பல கொடுங்கோலர்களிடம் நாட்டை விட்டுவிட்டோம்.
சம உரிமைகளுக்காகப் போராடும் மக்களின் குரலுக்கு ஆதரவாகக் களம் இறங்கலாம், தன்னுடைய இனம் அல்லது மதத்துக்காகப் போராடும் குழுக்களாகக் களம் இறங்குவது நன்மையைத் தராது என்பதே பலரின் கருத்து. இதனால்தான் சிரியாவில் நாம் தலையிட வேண்டும் என்ற ஜான் மெக்கெய்னின் குரலுக்கு, "கூடாது" என்ற பதில் குரல் ஓங்கி ஒலித்தது. ஒபாமாவுமே படையெடுப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்க முடியாமல் இருவித எண்ணங்களாலும் அலைக்கழிக்கப்படுகிறார். இதனால்தான், மக்களும் ஆதரவு தரத் தயங்குகின்றனர். "நாடாளுமன்றத்தின் அனுமதி பெற்று நடவடிக்கை எடுப்பேன்" என்று ஒரு முறையும், "நாடாளுமன்ற உறுப்பினர்களை அவைக்கு அழைத்து அலைக்கழிக்காமல் நானே முடிவெடுத்துச் செயல்படுத்துவேன்" என்று இன்னொரு முறையும் பேசினார் ஒபாமா. "ஊசி குத்துவதைப்போல இருக்காது இந்தத் தாக்குதல்" என்று ஒரு முறை எச்சரித்தவர், "நீங்களே நம்ப முடியாத அளவுக்கு இது சாதாரணத் தாக்குதலாக மட்டுமே இருக்கும்" என்றும் குறிப்பிட்டார்.
"என்ன விளையாடுகிறீர்களா" என்றே எல்லோரும் கோபமாகக் கேட்கிறார்கள். மத்திய தரக் குடும்பங்களின் வருமானம் உயராமல் தேங்கிய நிலையிலேயே இருக்கிறது, வெவ்வேறு பிரிவினருக்கு இடையே வருமானத்தில் உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது, வேலையில்லாத் திண்டாட்டம் எல்லாத் துறைகளிலும் எல்லாப் பகுதிகளிலும் நிலவுகிறது, உடலுழைப்புத் தொழிலாளர்களும் படிப்பாளிகளும் வேலையில்லாமல் திண்டாடிவருகிறார்கள். இந்த நிலையில் "சிரியா மீது போர் தொடுப்பதுதான் நாடாளுமன்றத்தின் முன் உள்ள அவசரக் கடமையா?" என்று கோபமும் எகத்தாளமும் பொங்கக் கேட்கிறார்கள். "இந்தச் சிவப்புக் கோட்டைத்தான் நீங்கள் போட விரும்புகிறீர்களா; சிரியா விவகாரத்தைச் சிறிது காலம் கழித்துக் கவனிக்க முடியாதா?" என்கின்றனர்.
நல்ல வேளையாக ரஷ்ய அதிபர் புதின் தலையிட்டு, தன்னிடமுள்ள ரசாயன ஆயுதக் கட்டமைப்புகளைச் சர்வதேச ஆய்வுக்கு ஒப்படைக்க சிரியாவைச் சம்மதிக்க வைத்தார். இல்லாவிட்டால், அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமலேயே சிரியா மீது ராணுவத் தாக்குதலுக்கு ஒபாமா உத்தரவிட்டிருக்க நேர்ந்திருக்கும் அல்லது எதுவுமே செய்ய முடியாமல் மௌனசாமியாகக் காத்திருக்க நேர்ந்திருக்கும்.
புதின் ஏன் ஒபாமாவைக் காப்பாற்றினார்? ஒபாமாவைக் காப்பாற்றியது தன்னுடைய வாடிக்கையாளரான சிரிய அதிபர் அஸாதைக் காப்பாற்ற அவர் எடுத்த நடவடிக்கையே இப்போதைக்கு ஒபாமாவையும் காப்பாற்றிவிட்டது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். புதின் தன்னைப் பெரிய தலைவராக, உலகத் தலைவராகக் காட்டிக்கொள்ள விரும்பினார். அவருடைய உள்ளக்கிடக்கை இந்தச் செயல் மூலம் நிறைவேறிவிட்டது. புதின் இப்போது பெரிய மனிதராகிவிட்டார், உலக அளவில் முக்கியத்துவம் பெற்றுவிட்டார். அமெரிக்கர்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டனர், புதின் பீடத்தில் ஏற்றப்பட்டுவிட்டார். சிரியாவில் இப்போது நடந்துவரும் உள்நாட்டுப் போரை நிறுத்தவும் ஈரான் அணுகுண்டு தயாரிப்பில் ஈடுபடாமல் தடுக்கவும்கூட அவரது பங்களிப்பை நாம் நாடலாமா?
ஒபாமாவுடன் நான் இதில் உடன்படுகிறேன். நாம் இப்போது இந்த நிலைக்கு எப்படி வந்தோம் என்பது முக்கியமில்லை, ஓரளவு பரவாயில்லை என்கிற நிலைக்கு வந்திருக்கிறோம். எனவே, இதை இப்படியே அழுத்தமாகத் தொடருவோம். புதின் நம்மோடு எந்த அளவுக்கு வருவார் என்று பார்ப்போம். எனக்கென்னவோ சந்தேகம்தான் என்றாலும் முயற்சித்துப் பார்ப்போம். மத்தியக் கிழக்கு நாடுகளின் விவகாரத்தில் தலையிடுவதால் அடுத்த 3 ஆண்டுகளில் அவருடைய முடி நரைக்காது. ஆனால் வழுக்கையாகிவிடும்.
(c) தி நியுயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago