கிராமப்புறங்களில் பெண்கள் ஒருவருக்கொருவர், தலையில் பேன், ஈறுகளைத் தேடிப்பிடித்து நசுக்கிக்கொண்டு மனம்விட்டுப் பேசிக்கொண் டிருப்பார்கள். இந்தப் பழக்கம் ஆயுளை விருத்தி செய்ய உதவும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் அமெரிக்க ஆய்வாளர்கள்.
பபூன் என்கிற வாலில்லாக் குரங்குகளின் செயல் பாடுகளை 17 ஆண்டுகள் ஆராய்ந்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
பபூன் கூட்டத்தில் பிற பெண் குரங்களுக்குப் பேன் பார்க்கும் வழக்கமுள்ள பெண் குரங்குகளுக்குப் பிறக்கிற குட்டிகள், நீண்ட ஆயுளுடன் வளர்ந்து முதிர்ச்சியடைய அதிக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
உறவின் அளவுகோல்
பபூன் கூட்டத்தில் பெண் குரங்குகள் ஒன்றுக்கொன்று பேன் பார்க்கிற கால அளவு, பேன் பார்க்கிற தடவைகள், ஒரு பெண் குரங்கு இன்னொரு பெண் குரங்கைத் தனக்குப் பேன் பார்க்கும்படி அழைக்கிற தடவைகள், ஒரு பெண் குரங்கு தானாகப் போய் இன்னொரு குரங்குக்குப் பேன் பார்க்கிற முறைகள் போன்றவை ஒரு கூட்டத்தின் சமூக உறவாடலுக்கு அளவுகோல்களாகின்றன.
இந்தக் காரணிகள் ஒரு பெண் குரங்கு மற்ற பெண் குரங்குகளுடன் கொண்டுள்ள சுமுகமான நட்புக்கும் அளவுகோல்களாகும். பெண் குரங்குகள் மற்ற பெண் குரங்குகளின் குட்டிகளையும் பாதுகாத்துப் பராமரிக்கும் பண்புள்ளவை. எனவே, பெண்களுக்கிடையிலான சுமுக உணர்வு கூட்டத்தின் ஒட்டுமொத்தமான நன்மைக்கும், சமூகம் நீடித்திருப்பதற்கும் உதவியாயிருக்கிறது. மிக மூத்த பெண் குரங்கும் மிக இளம் தாயான குரங்கும், ஒன்றின் குட்டிகளை மற்றது பராமரித்துப் பாதுகாப்பதும் பாலூட்டுவதும் சகஜமாகக் காணப்பட்டது.
பிற பெண் குரங்குகளுடன் ஒட்டிப் பழகுகிற பெண் குரங்குக்குப் பிறக்கும் குட்டிகளின் சராசரி ஆயுள், அவ்வாறு பழகாமல் ஒதுங்கிப் போகிற பெண் குரங்குக்குப் பிறக்கிற குட்டிகளின் சராசரி ஆயுளை விட ஒன்றரை மடங்கு அதிகமாயிருக்கிறது.
இவ்வகைக் குரங்குகளில் தாய்கள், மகள்கள், சகோதர சகோதரிகள், மாமன் மச்சான்கள், சித்தப்பா, பெரியப்பாக்கள், அத்தைமார்கள் எனப் பலவிதமான உறவினர்கள் உள்ளன(ர்). அவற்றில் தாய்க்கும் வயதுக்கு வந்த மகள்களுக்குமிடையிலான உறவு மிக வலுவானதாயும், அடுத்தபடியாகச் சகோதரிகளுக்கிடையிலான உறவு வலுவானதாயும் அமைகிறது. தாய்க் குரங்கு உயிருடனிருக்கும் வரை அதுதான் வலுவான கூட்டாளியாகவும் உறுதுணையாகவும் மதிக்கப்படும். உறவினர்களுடனும் தாயுடனும் வலுவான பாசப்பிணைப்பைக் கொண்ட பெண் குரங்குகளின் குட்டிகள் அதிக விகிதத்தில் தப்பிப் பிழைத்துப் பெரியவர்களாகும் வாய்ப்பைப் பெறுகின்றன.
சிநேகிதிகள்
அமெரிக்க ஆய்வாளர்கள் அண்மையில் கென்யா நாட்டின் அம்போசெலி ஆற்றின் கரைக்காடுகளில் வசிக்கும் பபூன்களை ஆராய்ந்தபோது ஒரு பெண் குரங்கு, இன்னொரு பெண் குரங்குடன் விசேஷமான நட்பை உருவாக்கிக்கொள்வதையும், ஒரே கூட்டத்தில் இத்தகைய பெண் சிநேகிதிகள் ஜோடி ஜோடியாகச் சுற்றி வருவதையும் கண்டனர். அவை எப்போதும் ஒன்றாக நடமாடுவதும் விளையாடுவதும் இரை தேடுவதும், ஒருவருக்கொருவர் பேன் பார்ப்பதுமாகப் பொழுதைக் கழித்தன. இந்த நட்புறவு நீண்ட காலத்துக்குக் குறைவின்றி நீடிக்கிறது.
இவ்வாறான பரஸ்பரப் பேன் பார்த்தலும் விளையாடுதலும் ஓர் உடல்நலப் பராமரிப்பு உத்தியே என பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வர்கள் கூறுகின்றனர். அத்துடன் வாலில்லாக் குரங்குச் சிற்றினத்தில் (இதில் மனிதனும் அடக்கம்) இதயம் மற்றும் நுரையீரல் நோய்கள், மன இறுக்கத்தின் காரணமாக உண்டாகின்றன. விளையாடுவதும் பேன் பார்ப்பதும் மன இறுக்கத்தைத் தணிக்கின்றன. அவை உடலில் ‘கார்ட்டிசால்’ என்ற உணர்ச்சி ஹார்மோனின் சுரப்பைக் குறைக்கின்றன. இதயக் கோளாறுகள் வந்து அற்பாயுளில் மரணம் ஏற்படாமல் தடுப்பதால் இனவிருத்தி ஏற்பட்டுக் குரங்குகளின் எண்ணிக்கை அதிகமாகிறது.
பபூன்கள் பரிணாமப் படியில் மனிதர்களுக்கு நெருக்கமானவை. எனவே அந்த ஆய்வு முடிவுகள் மனிதர்களுக்கும் பெருமளவு பொருந்தக்கூடியவையே. பபூனின் டி.என்.ஏ. 92% அளவுக்கு மனித டி.என்.ஏ.வை ஒத்திருக்கிறது. 18 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பொதுவான மூதாதை இனத்திலிருந்து மனித இனமும் பபூன் இனமும் பிரிந்து வந்திருக்கின்றன. அதன் காரணமாகவே இந்த இரு இனங்களிலும் பல பொதுவான சமூக நடத்தை அம்சங்கள் தென்படுகின்றன. நம் ‘நெருங்கிய உறவினர்கள்’ காட்டும் நல்வழி நமக்கும் பயன்படும்தானே!
கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 mins ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago