மந்த்சவுர் விவசாயிகளின் கதை

By ஷிவ் விஸ்வநாதன்

மத்திய பிரதேசத்தின் மந்த்சவுரில் விவசாயிகளின் கிளர்ச்சி பற்றிய செய்திகளை மிகுந்த வருத்தத்தோடு படித்தேன். விவசாயிகளின் கடன் சுமை, அவர்களுடைய போராட்டம், பிறகு போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு போன்ற செய்திகளின் தன்மைகூட என்னை அதிகம் பாதிக்கவில்லை; ஆளுங்கட்சிக்காரர்கள் இந்தப் பிரச்சினையை நோக்கும் விதம்தான் அதிக வருத்தத்தை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் நீண்ட காலமாக வறட்சி நிலவுகிறது, உதவுங்கள் என்று விவசாயிகள் வேண்டுகோள் விடுத்தபோது எப்படிக் கண்ணையும் காதையும் மூடிக்கொண்டார்களோ அதே விதத்தில்தான் மத்திய பிரதேச விவசாயிகளின் கோரிக்கைகளையும் காதில் வாங்காமல் இருந்தனர். இந்தப் போராட்டத்தையே வண்ணமயமான காட்சி போலவும், விவசாயிகளைக் கோமாளிகளாகவும், மோசடிப் பேர்வழிகளாகவும் ஆட்சியாளர்கள் கருதினார்கள்.

மகாராஷ்டிரம், தமிழ்நாடு, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாயிகளின் பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் போராட்டங்களையும் ஊடகங்கள் ஒன்றுவிடாமல் தெரிவித்தன. அரசின் எதிர்வினை, இதைப் பற்றியே ஞானமே அதற்கு இல்லை என்பதையும், அலட்சியமே அதிகம் என்பதையும் பறைசாற்றியது. இன்றைய அரசின் மீது சமூக விஞ்ஞானிகள் நம்பிக்கை இழந்துவிட்டனர். இதையொட்டி அறிஞர்களிடையே சில பகடிகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. கலைக்கப்பட்ட திட்டக் குழுவில் உறுப்பினராக இருந்த பொருளியல் அறிஞர் ஒருவர் தன்னுடைய மாணவர்களிடையே கேலியாக ஒரு கேள்வி கேட்டார். “காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் என்ன வித்தியாசம்?”.

பதில்: “காங்கிரஸுக்குப் பொருளாதாரம் தெரியும், விவசாயம் தெரியாது; பாஜகவுக்கு இரண்டுமே தெரியாது”.

“பொருளாதார அறிஞர் ஜான் மேனார்டு கீன்ஸ் கூறும் தத்துவம் இந்தியாவுக்கு ஏன் பொருந்தாது?” என்பது அடுத்த கேள்வி.

பதில்: “நீண்ட காலத்தில் (பல ஆண்டுகளில்) நாம் அனைவரும் இறந்துவிடுவோம் என்றார்; (இந்திய) விவசாயிகளின் பட்டினியையும் தற்கொலைகளையும் பார்க்கும்போது குறுகிய காலத்தில்கூட நாம் இறந்துவிடுவோம்”.

பாதுகாப்புப் பல்லவி

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இருவரும் மந்த்சவுர் கிளர்ச்சி குறித்துத் தெரிவித்த கருத்தைக் கவனித்தால், இதை அவர்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக மட்டுமே பார்ப்பது விளங்கும். இதை விவசாயத் துறை பிரச்சினையாக அவர்கள் பார்க்கவேயில்லை. அரசுக்கு எதிரான எந்தக் கிளர்ச்சியையும் பாஜக, சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையாகவே பார்க்கிறது; உள்நாட்டுப் பாதுகாப்புக்கு ஆபத்து, ஊடுருவல்காரர்கள் பின்னணியில் இருக்கின்றனர் என்கிறது. விவசாயிகள் கொல்லப்பட்ட பகுதிக்கு காங்கிரஸ்காரர்களும் தன்னார்வத் தொண்டர்களும் செல்வதைத் தடுக்கிறது. பன்னிரண்டுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர் என்ற தகவல்கள் வரும்போது அதற்கும் விவசாயத் துறைப் பிரச்சினைக்கும் தொடர்பே இல்லை என்பதைப் போல அரசு அணுகுகிறது. விவாதமே இல்லாமல், எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை ஒடுக்க முற்படுவது ஜனநாயக இழைகளை அறுத்துவிடுகிறது. எந்தப் பிரச்சினையின் சமூகவியலையும் புரிந்துகொள்ள பாஜகவால் முடியவில்லை. எனவே மக்களுடைய குறைகள் கேட்கப்படாமலேயே இருக்கின்றன.

விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, வன்முறைக்கு எதிராக உண்ணாவிரதம் என்று முதல்வர் சவுகான் அபத்தமாக்கிவிட்டார். கிளர்ச்சியைத் தூண்டுவோருக்கு எதிராக உண்ணாவிரதம் என்று அறிவித்துவிட்டு வெகு சீக்கிரத்திலேயே எலுமிச்சம்பழச் சாற்றைக் குடித்து முடித்துக்கொண்டார். அவர் அறிவித்த திட்டங்கள் விவசாயிகளுக்குச் சமாதானமாக இல்லை. சாகுபடிச் செலவுடன் 50% லாபத்தையும் சேர்த்துக் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று எம்.எஸ். சுவாமிநாதன் குழு அறிவித்த பரிந்துரை ஏற்கப்பட வேண்டும் என்ற முக்கியமான கோரிக்கை ஏற்கப்படவில்லை. விவசாயிகளின் சங்கங்கள் கூடி இதை அரசின் நாடகம் என்று கண்டித்தன. முதலமைச்சரின் அபத்தத்துடன் நாம் அவசியம் கவனிக்க வேண்டியது பிரதமர் மோடியின் மவுனம்.

நான்கு ஆபத்தான முடிவுகள்

மந்த்சவுரைச் சுற்றியுள்ள கிராம சமுதாயங்களை ஆராயும்போது நான்கு ஆபத்தான முடிவுகள் கண்ணில் படுகின்றன. முதலாவது, பயிருக்கு அரசு தரும் கொள்முதல் விலை. விவசாயிகள் செய்த செலவுகளைக் கூடத் திரும்பப் பெற முடியாத அளவுக்கு அது குறைவாக இருக்கிறது.

இரண்டாவது, கொள்முதல் விலைக்கும் மேல் கொடுமையான அம்சமாக அமைந்தது அரசு அறிவித்த பண மதிப்பு நீக்கம். அரசிடம் பெற்ற காசோலைகளைப் பணமாக மாற்ற முடியாமல் விவசாயிகள் ஒரு மாதத்துக்கும் மேல் திண்டாடியுள்ளனர்.

மூன்றாவதாக, பல பயிர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என்று அரசு தடை விதித்திருக்கிறது.

நான்காவதாக, பெரும்பாலான விவசாயிகளின் நில அளவு ஒரு ஏக்கர், அரை ஏக்கருக்கும் குறைவு. எனவே அரை வயிற்றுக் கஞ்சிக்கே அவர்கள் பாடுபட வேண்டியிருக்கிறது. விவசாயச் செலவு அதிலும், பணப் பயிர்களுக்கான செலவு ஒவ்வொரு சாகுபடிக்கும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. ஜனநாயகத்தில் இதற்குத் தீர்வு இருந்தாக வேண்டும். விவசாயிகளின் துயரங்களுக்கு வேராக இருக்கும் பிரச்சினைகளைக் களையாமல், வலி மறப்பு நடவடிக்கைகளால் பயனில்லை. அரசின் விவசாயக் கொள்கை, விவசாயத்துறையின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாக இல்லை. எனவே, அமோக விளைச்சல் வரப்போகிறது என்றால் மிகப் பெரிய பேரழிவு காத்திருக்கிறது என்றாகிவிட்டது. இப்படியே போனால் விவசாயத்தைத் தொடர முடியுமா, இனியும் இது வாழ்வாதாரமாக இருக்குமா என்ற கேள்விகள் பிறக்கின்றன.

விவசாயம் என்பதைக் கொள்முதல் விலை, பாசனத்துக்கான தண்ணீர், மண்மேம்பாடு, பயிர்வாரி முறை, உணவு பதப்படுத்தல் என்று பல்வேறு அம்சங்களுடன் தொடர்புபடுத்தித்தான் ஆராய வேண்டும். விவசாயம் என்பது பிரச்சினைகள் நிறைந்தது, நெருக்கடிகளுக்கு ஆளாவது என்று பார்க்காமல் ஏராளமானோருக்கு வாழ்வாதாரமாக இருக்கிறது என்ற கண்ணோட்டத்தில் அணுக வேண்டும். விவசாயத்தைப் பசுப் பாதுகாப்புக்கான பொருளாதாரக் கருவியாக மட்டும் பார்க்கக் கூடாது. இனிமேலாவது விவசாயம் தொடர்பான பொது விவாதத்தை அரசு தொடங்க வேண்டும்.

தேசிய விதை விழா

ஜூன் மாதத் தொடக்கத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த ‘தேசிய விதைத் திருவிழா’ என்ற வேளாண்மைத் திருவிழாவில் சவுகானும் ராஜ்நாத் சிங்கும் கலந்துகொண்டிருந்திருக்க வேண்டும். அது அறிவியல் மேளா. அரிசியில் மட்டும் 40,000 ரகங்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றன. விவசாயம் தொடர்பான கொள்கைகளை வகுக்கும்போது அது குறித்து நன்கு அனுபவம் பெற்ற மக்கள் குழுக்களைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர்களுடனும் அரசு ஆலோசனை கலக்க வேண்டும். அவர்கள் விவசாயத்துக்குச் செய்யும் செலவு, அதிலிருந்து கிடைக்கும் லாபம் என்பதையும் தாண்டி பிற அம்சங்களையும் கவனத்தில் கொண்டு ஆலோசனைகளை வழங்குவார்கள். மரபணு மாற்றப்பட்ட புதிய விதைகளை அறிமுகப்படுத்தத் துடிக்கும் மத்திய அரசுக்கு அவர்கள் அதில் உள்ள ஆபத்துகளைத் தெளிவாக விளக்குவார்கள். அடுத்தபடியாக விவசாயிகளுக்கு உதவக்கூடிய முகமை அமைப்புகளை ஏற்படுத்துவது குறித்தும் தெளிவு பிறக்கும். விவசாயம் என்பதைப் பகுதி பகுதியாகப் பார்க்காமல் ஒட்டுமொத்தமாகப் பார்க்கப் பழக வேண்டும். மந்த்சவுரில் நடந்த கிளர்ச்சி இந்த எண்ணத்துக்கு வித்திட்டால், விவசாயிகள் பட்ட இன்னல்களுக்கும் ஒரு அர்த்தம் ஏற்படும்.

-ஷிவ் விஸ்வநாதன், பேராசிரியர், ஜிண்டால் உலகளாவிய சட்டக் கல்லூரியின் இயக்குநர். சுருக்கமாகத் தமிழில்: சாரி,

© ‘தி இந்து’ (ஆங்கிலம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்