மெக்ஸிகோ நாட்டின் மசாட்லான் ஒரு கடலோரச் சிற்றூர். சுகவாசஸ்தலம். கடல் உணவுகளுக்கும் அலைச்சறுக்கு விளையாட்டுக்கும் பேர் போன ஊர். சுற்றுலாப் பயணிகள் தேடி வரும் மசாட்லானில் சில நாட்களுக்கு முன் திடீரென நூற்றுக் கணக்கில் ஆயுதப் படைகள் குவிகின்றன. கண்டோமினம் கோபுரம் அவர்கள் கட்டுப்பாட்டில் வருகிறது. உள்ளூர்க்காரர்களும் சுற்றுலாப் பயணிகளும்கூட இப்படித்தான், நம்மைப் போலவே விழிக்கின்றனர், ‘இங்கே என்னப்பா இவர்களுக்கு வேலை’ என்று. ஆயுதப் படைகளோ அல்வா சாப்பிடப்போகும் உற்சாகத்தில் இருக்கின்றனர். சும்மாவா, ஜோகின் குஸ்மான் லோராவுக்கு வலை விரிப்பது என்பது எவ்வளவு பெரிய வேட்டை?
யார் இந்த ஜோகின் குஸ்மான் லோரா?
உலகத்துக்கு ஜோகின் குஸ்மான் லோரா என்று சொல்வதை விடவும் இன்னொரு பெயர் சொன்னால் விளங்கும்: எல் சாப்போ. அப்படியென்றால், குள்ளன் என்று அர்த்தம். எல் சாப்போ குள்ளர்தான். ஆனால், பொல்லாதவர்.
மெக்ஸிகோவின் சினாலாவோ மாநிலத்தில் சியா மட்ரே என்ற மலையடிவாரச் சிற்றூரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். எட்டாவது வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டார். மெக்ஸிகோவில் 1980-களில் பிரபலமாக இருந்த போதைப்பொருள் வியாபாரி மிகுல் ஏஞ்சல் பெலிக்ஸ் கலார்டோதான், எல் சாப்போவின் குரு. ஆரம்பத்தில் அடியாளாகத்தான் சேர்ந்தார். சீக்கிரமே, கொகெய்ன் வியாபாரத்தில் கைதேர்ந்த ஆளாகிவிட்டார். அப்போது அமெரிக்காவில் கொகெய்னுக்கு நல்ல கிராக்கி. கொலம்பியா முதல் அரிசோனா வரை ஏராளமானவர்களுடன் அறிமுகமாகி, போதைப்பொருள் வியாபாரத்தைச் செம்மையாக நடத்தினார் எல் சாப்போ. 1989-ல் கலார்டோவை மெக்ஸிகோ போலீஸார் கைது செய்தபோது, எல் சாப்போ தனிக்காட்டு ராஜாவானார். அப்புறம் கோடிகள்… கோடிகள்… கோடிகள்தான்.
போதை சாம்ராஜ்ஜியம்
1993-ல் அமெரிக்காவில் அவர் மீது அன்னியச் செலாவணி மோசடி வழக்கிலும் பண இரட்டிப்பு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு, மெக்ஸிகோவில் கைதுசெய்யப்பட்ட அவர், போதைப் பொருள் கடத்தல் குற்றத்துக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்த நிலையிலும், தொழிலைக் கைவிட முடியவில்லை. தன்னுடைய சகோதரர் மூலம் போதைப்பொருள் கடத்தலைத் தொடர்ந்தார். 2001 ஜனவரி மாதத்தில், சிறைக்கு வந்த லாண்டரி வண்டியில் எவரும் அறியாமல் ஏறித் தப்பிவிட்டார். அப்போது தப்பியவரை அதற்குப் பிறகு மெக்ஸிகோ போலீஸாராலும் அமெரிக்க போலீஸாராலும் என்ன பாடுபட்டும் பிடிக்க முடியவில்லை.
தொடர்ந்து, தன்னுடைய தொழிலைத் தென் அமெரிக்கக் கண்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டுசெல்ல, கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் எல் சாப்போவுக்குக் கிளைகளும் முகவர்களும் உருவாகினர். பணம் ஒரு அளவுக்கு மேல் குவியத் தொடங்கியபோது, எல் சாப்போ தன்னை ஒரு ராபின் ஹூட்டாகக் காட்டிக்கொள்ளும் முயற்சியில் இறங்கினார். ஏழைகளுக்குப் பணத்தை வாரியிறைத்தார். தன்னை யாரும் காட்டிக்கொடுக்க முடியாதபடி செல்வாக்கை வளர்த்துக்கொண்டார். அதையும் மீறி யாரும் காட்டிக்கொடுப்பார்கள் என்று சந்தேகம் எழுந்தாலோ, அவரை எதிர்த்தாலோ போட்டுத் தள்ளினார்.
இது என்னவாயிற்று என்றால், அவரைப் பற்றி நாட்டில் ஏராளமாகக் கதைகள் உலா வரக் காரணமாயிற்று. கிராமப்புறங் களில் அவரைப் பாராட்டி தெம்மாங்குப் பாடல்களை இயற்றினர். கலை நிகழ்ச்சிகளில் அவருடைய வீரத்தையும் கொடைத் தன்மையையும் புகழ்ந்தனர். அவர் மெக்ஸிகோவிலேயே இல்லை, கௌதமாலாவில் இருக்கிறார், அர்ஜென்டினாவில் இருக்கிறார், பொலிவியா போய்விட்டார் என்றெல்லாம் ஒவ்வொரு நாளும் பேசினார்கள். முக்கியமாக, யாராலுமே பிடிக்க முடியாத சூராதி சூரன் என்று மக்கள் நம்பினார்கள்.
இலவுகாத்த அமெரிக்கா
இப்படி கொகெய்னும் கொகெய்ன் நிமித்தமுமாக ஓடிக்கொண்டிருந்த எல் சாப்போ வாழ்க்கையில் காதல் வந்தது. அந்தக் காதல் மனைவி கர்ப்பமானபோது பிரசவத்துக்காக அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தார் எல் சாப்போ. இந்தச் செய்தி தெரிந்து முதல் நாளிலிருந்தே மருத்துவமனையைச் சுற்றிலும் மாறுவேடங்களில் சூழ்ந்தனர் அமெரிக்கப் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார். எப்படியும் எல் சாப்போ வருவார், மடக்கிப்போடலாம் என்று. எல் சாப்போ மனைவிக்குப் பிரசவமாகி இரட்டைக் குழந்தைகளும் பிறந்தன. மாறுவேடம் போலீஸாருக்கு மட்டும்தான் போடத் தெரியுமா, என்ன? எல் சாப்போ வந்ததும் யாருக்கும் தெரியவில்லை; போனதும் தெரியவில்லை.
மாளிகைச் சுரங்கம்
அமெரிக்கக் குறி தீவிரமாக ஆனபோது, ஆயுதப் படைகள் தன்னை நெருங்க முடியாதபடி மிகப் பெரிய மாளிகையைக் கட்டுக்காவலுடன் கட்டிக்கொண்டார் எல் சாப்போ. அடுத்தடுத்து, ஒரே மாதிரி கட்டப்பட்ட ஏழு மாளிகைகள். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குச் செல்ல உள்ளே சுரங்கப் பாதை. வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் யாவும் குண்டுதுளைக்காத வண்ணம் வடிவமைக்கப்பட்டவை. ஆயுதப் படைகள் நெருங்கிவிட்டது தெரிந்தால், சுரங்கங்களின் வழி அந்த மாளிகையின் உள்ளிருந்தே நான்கு திசைகளிலும் எங்கு வேண்டுமானாலும் தப்பலாம், அப்படி ஓர் வடிவமைப்பு அந்தக் கட்டிடத்தில். எப்போதும் தன்னைச் சுற்றி 300 ஆயுதக் காவலர்கள். இதற்கிடையே எல் சாப்போ போதைக் கும்பலின் அட்டகாசம் பொறுக்க முடியாத அமெரிக்கா, எல் சாப்போவைப் பற்றித் துப்புக் கொடுத்தால் 50 லட்சம் டாலர்கள் பரிசு அறிவித்திருந்தது. ஆனாலும், துப்புக் கொடுக்க ஆளில்லை.
களம் இறங்கினார் நீடோ
இப்படிப்பட்ட சூழலில்தான், மெக்ஸிகோ அதிபர் நாற்காலியில் அமர்ந்த என்ரிக் பினா நீடோ, போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை ஒழிப்பதில் களம் இறங்கினார். அமெரிக்காவுக்கே சவாலான காரியத்தை மெக்ஸிகோ போலீஸாரைவிட்டு, முடிக்கச் சொன்னார் நீடோ. வேண்டாம் என்று மறுத்தார் நீடோ. கடந்த வாரம் குலியாகேன் என்ற இடத்தில் திடீர் சோதனை நடத்திய மெக்ஸிகோ போலீஸார், சிலரைக் கைது செய்து ரகசிய சுரங்கப் பாதைகளையும் அவற்றைத் திறப்பதற்கான ரகசிய ஏற்பாடுகளையும் கண்டுபிடித்தனர். இதையடுத்தே, எல் சாப்போவின் கைது சாத்தியமாகி இருக்கிறது. எல் சாப்போ கைதுசெய்யப்பட்டபோது மட்டும், வீட்டிலிருந்து 97 பெரிய துப்பாக்கிகள், 36 கைத்துப்பாக்கிகள், ராக்கெட் குண்டுகளை வெடிப்பதற்கான இரண்டு லாஞ்சர்கள், 43 வாகனங்கள் - பெரும்பாலும் கவச வாகனங்களைக் கைபற்றியிருக்கிறார்கள் என்றால், தன் பாதுகாப்பில் எவ்வளவு கவனம் காட்டியிருக்கிறார் எல் சாப்போ என்று சொல்லத் தேவையில்லை. அவ்வளவு ஏன், “இது மிகப் பெரிய சாதனை” என்று வாய்விட்டுப் பாராட்டுகிறார் முன்னாள் அதிபர் பெலிப் கால்டரான். ஆனால், மெக்ஸிகோ மக்களோ எல் சாப்போ கைதை வரவேற்கவில்லை. “இதுநாள் வரை வேறு யாரும் தலை தூக்கவிடாமல் எல் சாப்போ பார்த்துக்கொண்டார். இனி நூற்றுக் கணக்கான கும்பல்கள், போதைப் பொருள் கடத்தலில் தங்களுக்குள் போட்டியை ஏற்படுத்திக்கொண்டு ரத்தக் களியாட்டம் போடப்போகின்றன” என்று கூறுகிறார்கள்.
என்ன நடக்கும் அடுத்து?
எல் சாப்போ கைதுக்குப் பின், சின்னச் சின்ன கும்பல்கள் எல்லாம் களத்தில் கால்வைக்கும் என்று சொல்லப்படுவது உண்மைதான். என்றாலும், எல் சாப்போவுக்கே இதுதான் நிலைமை என்றால், நம் நிலைமை என்னவாகும் என்ற கேள்வியையும் பீதியையும் எல் சாப்போ கைது உருவாக்கியிருக்கிறது. இந்த பீதி மெக்ஸிகோவின் எதிர்காலத்துக்கு ரொம்ப நல்லது. அதேபோல, போதைப் பொருள் கடத்தல் உலகைப் பொறுத்தவரை எல் சாப்போ கைது ஒரு பெரும் வேட்டை. எல் சாப்போவிடமிருந்து கிடைக்கும் தகவல்கள் போதைப் பொருள் கடத்தல் உலகை அழித்தொழிக்கப் பெரிய அளவில் உதவும். ஆகையால், அடுத்தடுத்து, எல் சாப்போவுக்கு அடுத்த நிலையில் உள்ள பெரிய சுறாக்கள் நிறைய சிக்கலாம். அவற்றின் கதைகளைப் படிக்க நாம் ஆர்வத்தோடு காத்திருக்கும் சூழலில், மெக்ஸிகோ போலீஸாருக்குத் தலையாய வேலை ஒன்று இருக்கிறது. அது எல் சாப்போவை இந்த முறையும் தப்பிக்கவிட்டுவிடாமல் பார்த்துக்கொள்வது!
நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
4 days ago