விவசாயிகளின் இடுபொருள் செலவுடன் 50% லாபம் சேர்த்துக் குறைந்தபட்சக் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படும் என்று பிரதமர் பதவிக்கான பா.ஜ.க. வேட்பாளர் நரேந்திர மோடி அறிவித்திருக்கிறார். இதனால், விலைவாசிதான் மேலும் உயரும் என்று சில பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இது உண்மையா என்று ஆராய்வோம். விவசாயத்துக்கு ஆகும் செலவுகளைக் கணக்கிடுவதில் இருவகை உண்டு. விவசாயச் செலவுகள், விலைகளுக்கான கமிஷன் (சி.ஏ.சி.பி.) இதைக் கையாள்கிறது.
இடுபொருள் செலவுகள் எவை?
முதல் வகைச் செலவுகளில் விவசாயிகள் கைப்பணத்தைப் போட்டு வாங்குபவையும் அவர்களுடைய உடல் உழைப்பு போன்றவையும் அடங்கும். இதை ‘ஏ2 பிளஸ் எஃப்.எல்.' என்று அழைக்கிறார்கள். விதை, உரம், ரசாயனப் பூச்சிக்கொல்லிகள், விவசாயத் தொழிலாளர் களுக்குக் கொடுக்கும் கூலி, எரிபொருள், பாசன நீர், இதர செலவுகள் இதில் அடங்கும். விவசாயியும் அவருடைய குடும்பத்தாரும் அளிக்கும் உழைப்புக்கும் இதில் மதிப்பு சேர்க்கப்படுகிறது.
இரண்டாவது வகை சற்று விரிவானது. அதை ‘சி2' என்று அழைக்கிறார்கள். இதில் சொந்த நிலமாக இருந்தால், அதைக் குத்தகைக்கு விட்டால் கிடைக்கும் வாரம், நிரந்தர சொத்துகளுக்குக் கிடைக்கக்கூடிய வட்டி வருவாய் போன்றவையும் சேர்க்கப்படுகின்றன. எனவே, முதல் வகைச் செலவுகளைவிட ‘சி2' செலவுகள் அதிகமாகவே இருக்கும்.
முதல் வகைச் செலவுகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால்கூட, அரசு அறிவித்துள்ள குறைந்தபட்சக் கொள்முதல் விலை, பெரும்பாலான பயிர்களுக்கு அதைவிட 50% அதிகமாகவே இருக்கின்றன. எனவே, மோடி சொல்வதைப் போல 50% லாபம் அதிகம் சேர்ப்பதால் பெரிய வித்தியாசம் ஏற்பட்டுவிடப்போவதில்லை என்கிறார் தானிய வியாபார ஆராய்ச்சியாளர் தேஜிந்தர் நரங்.
பிரச்சினை எப்போது வரும்?
‘சி2' இடுபொருள் செலவுகள்மீது மோடியின் 50% விலையேற்றத்தைச் சுமத்தினால்தான் கொள்முதல் விலையைக் கணிசமாக மேலும் உயர்த்த நேரிடும். கோதுமை, கடுகு, குதிரைமசால் போன்றவற்றுக்கு இப்போது 26% முதல் 28% வரைதான் கூடுதலாகக் கிடைக்கிறது. அது மேலும் உயர்த்தப்படுவதால், அரசுக்குச் செலவு அதிகரிக்கும் என்கிறார் ஒரு நிபுணர். இந்தத் தவறைத்தான் கடந்த 10 ஆண்டுகளாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் செய்துவந்தது என்கிறார் அவர்.
2003-04 முதல் 2013-14 வரையில் கோதுமைக்கான குறைந்தபட்சக் கொள்முதல் விலை மட்டுமே குவிண்டாலுக்கு ரூ.630-லிருந்து ரூ.1,400 ஆக உயர்ந்தது. சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.550 முதல் ரூ.1,310 வரை உயர்ந்தது.
குலாத்தி மறுக்கிறார்
மோடி சொல்வதைப் போலக் கொள்முதல் விலையை உயர்த்துவதால் விலைவாசி உயர வேண்டிய அவசியமில்லை என்கிறார் விவசாயச் செலவுகள், விலைகளுக்கான கமிஷனின் முன்னாள் தலைவர் அசோக் குலாத்தி.
கொள்முதல் விலை உயர்வை மட்டும் சொல்லவில்லை, விவசாயச் சாகுபடிப் பரப்பை அதிகப்படுத்துவேன், பாசன வசதிகளை அதிகரிப்பேன், மழைநீர்ச் சேமிப்பை ஊக்கப்படுத்துவேன் என்றும் மோடி கூறுகிறார். அப்படிச் செய்யும்பட்சத்தில், விவசாயத்துக்கான இடுபொருள் செலவு கணிசமாகக் குறையும் என்பதால், விலையுயர்வு ஏற்படாது என்கிறார் குலாத்தி.
கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை விவசாயத்துடன் இணைக்கப்போவதாக மோடி கூறியிருக் கிறார். அப்படியானால், நிலம் வைத்திருப்பவர்களுக்குக் கூலி கொடுக்க வேண்டிய சுமை குறையும். அரசின் ஜவாஹர் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கிராமங் களில் விவசாய நிலங்களில் மேற்கொள்ளப்படுவதால், விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய தொகையில் கணிசமாக மிச்சம் ஏற்படும். அதே வேளையில், விவசாயிகள் செய்த வேலைக்குக் கூலி பெற்று மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று சுட்டிக்காட்டுகிறார் குலாத்தி.
அதிக விவசாய நிலங்களைச் சாகுபடியின் கீழ் கொண்டுவருவது, பாசன வசதிகளை அதிகரிப்பது, ஜவாஹர் வேலைவாய்ப்பின் கீழ் கிராமப்புறங்களில் விவசாய நிலங்களில் வேலை செய்யுமாறு தொழிலாளர்களை ஈடுபடுத்துவது போன்ற செயல்களால் விளைச்சல் அதிகரிக்குமே தவிர, விலைவாசி உயர்வதற்கு வாய்ப்புகள் அதிகமில்லை என்கிறார் குலாத்தி.
கடந்த நான்கு ஆண்டுகளாக கோதுமைச் சாகுபடியில் 35% நெல் சாகுபடியில் 15% விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறது. விவசாய இடுபொருள் செலவைக் குறைப்பதன் மூலம் விவசாயிகளுக்கு 50% லாபம் கிடைக்கச் செய்யும் மோடியின் திட்டம் சாத்தியமானதுதான் என்று சுட்டிக்காட்டுகிறார் குலாத்தி.
© பிசினஸ் லைன், தமிழில்: சாரி
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
11 mins ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago