ஒப்புதல் என்னும் தப்பிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் மூவரில் ஒருவரான பேரறிவாளனின் வழக்கு விசாரணையின்போது கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தில், சி.பி.ஐ-யில் காவல் ஆணையரான வி. தியாகராஜனே திருத்தம் செய்ததாக ஒப்புக்கொண்ட செய்தி, அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. ஒப்புதல் வாக்குமூலத்தில் செய்யப்பட்ட திருத்தமே இறுதியாகப் பேரறிவாளனுக்கு மரண தண்டனை வாங்கிக்கொடுத்தது என்பதே உண்மை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஆரம்பம் முதலே முறையாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து கூறப்பட்டு வந்திருக்கிறது. அன்றிருந்த தடா (தீவிரவாத மற்றும் சீர்குலைவுகள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின்படி வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும்; பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்; மாவட்டக் கண்காணிப்பாளர் அந்தஸ்துள்ள ஒருவர் முன்னால் குற்றவாளி கொடுக்கும் வாக்குமூலம் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படும்; தீர்ப்பின் மேல் உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும்.

தடா சட்டத்தை வாபஸ்பெற இந்தியா முழுவதும் கோரிக்கை எழுப்பியதில் 2004ல் அந்தச் சட்டம் ரத்துசெய்யப்பட்டாலும், அந்தச் சட்டத்தின்கீழ் ஏற்கெனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தொடரலாம் என்பதால், இன்னும் பலர் அந்தச் சட்டத்தின்கீழ் விசாரணையில் உள்ளனர் என்பது வேதனைக்குரிய விஷயம்.

பேரறிவாளன் உட்பட 26 பேருக்கு மரண தண்டனை வழங்கிய சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த நீதிபதி கே.டி.தாமஸ் அடங்கிய அமர்வு, 22 பேரின் மரண தண்டனையை ரத்துசெய்து நான்கு பேருக்கு அந்தத் தண்டனையை உறுதி செய்தது. அந்த வழக்கு தீவிரவாதக் குற்றத்தின் கீழ் வராது என்று தீர்ப்பளித்த பிறகும், வழக்கை சாதாரணக் குற்றவியல் நீதிமன்றத்தின் மறுவிசாரணைக்கு அனுப்பவில்லை.

காலனியாதிக்கத்தில் கொண்டுவரப்பட்ட இந்தியச் சான்றியல் சட்டத்தின்கீழ், காவல் துறையினரால் பெறப்படும் வாக்குமூலம் சான்றாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்று கூறப்பட்டிருப்பது காவல்துறை மீது அவர்களே எத்தகைய நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதை உணர்த்தும். குற்றத்தை நிரூபிக்க சித்திரவதைகள் மூலம் ஒப்புதல் வாக்குமூலங்கள் பெற வாய்ப்பு இருப்பதால், அந்த வாக்குமூலங்களுக்குச் சட்டத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடா சட்டத்திலோ மாவட்டப் பொறுப்பிலுள்ள காவல் அதிகாரிகளிடம் கொடுக்கப்படும் வாக்குமூலங்களைக் குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்களாக ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது.

தடா சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட (கர்தார் சிங்-எதிர்- பஞ்சாப் மாநிலம், 1994) வழக்கில் இந்தச் சட்டப்பிரிவு செல்லும் என்று நான்கு நீதிபதிகள் கூறியபோதும் நீதிபதி கே. ராமசாமி அந்தப் பிரிவு செல்லாது என்று சிறுபான்மை தீர்ப்பு வழங்கினார். சாதாரணக் காவலர் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவது முறைகேடாகப் பயன்படுத்தப்படலாம் என்று சட்டம் இருப்பினும் மாவட்ட நிலையில் உள்ள காவல் பணியைச் சேர்ந்தவர்கள் (ஐ.பி.எஸ்.) தவறான செயலில் ஈடுபட மாட்டார்கள் என்று பெரும்பான்மையான நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.

நீதிபதி கே.ராமசாமி மட்டும் தனது தனித் தீர்ப்பில் மாவட்டக் காவல் துறை அந்தஸ்து பெற்ற அதிகாரிகளும் தங்களது மாவட்டத்தில் உள்ள குற்ற வழக்குகளைத் துரிதமாகத் தீர்க்க ஒப்புதல் வாக்குமூலம் முறைகேடாகப் பெற்று தண்டனையை வாங்கித்தரவே விழைவார்கள் என்பதால், இந்தச் சட்டப்பிரிவு தவறாகப் பயன்படுத்தப்படும் என்று அன்றே தீர்க்கதரிசனமாகக் குறிப்பிட்டிருந்தார்.

பேரறிவாளனிடமிருந்து பெற்ற ஒப்புதல் வாக்குமூலத்தைத் தானே திருத்தியதாக 22 ஆண்டுகளுக்குப் பின் விசாரணை அதிகாரி கூறியிருப்பது இக்கூற்றையே நிரூபிக்கிறது. தடா வாபஸ் பெற்றாலும், பின்னால் பொடா சட்டமும் (ப்ரிவென்ஷன் ஆஃப் டெரரிஸ்ட் ஆக்ட்) அதுவும் ரத்தான பிறகு, தற்போது உபா (அன்லாஃபுல் ஆக்டிவிட்டீஸ் ப்ரிவென்ஷன் ஆக்ட்) சட்டமும் அதே போன்ற பிரிவுகளுடன் பவனிவருவது அனைவரையும் அச்சப்பட வைக்கிறது.

நால்வரது மரண தண்டனையையும் ரத்து செய்யக் கோரிய கருணை மனுக்களை அன்றைய ஆளுநர் பாத்திமா பீவி தள்ளுபடி செய்ததை எதிர்த்து பேரறிவாளனும் மற்ற மூன்று மரண தண்டனைக் கைதிகளும் கொடுத்த மனுவை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் அவர்களது மனுவைச் சட்டப்படி பரிசீலனை செய்யுமாறு அன்றைய முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவைக்கு உத்தரவிட்டது. நளினிக்கு மட்டும் மரண தண்டனையை ரத்துசெய்துவிட்டு, மற்றவர்களது மனுக்களைத் தள்ளுபடி செய்ய அமைச்சரவை ஆளுநருக்குப் பரிந்துரைத்ததில் நளினியின் தலை மட்டும் தப்பியது. மற்ற மூவரின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனையில் 19 ஆண்டுகள் கழிந்த பிறகு தள்ளுபடி செய்யப்பட்டன. இதுபற்றி மத்திய அரசின் பரிந்துரையைத் தெரிந்துகொள்ள தகவல் அறியும் சட்டத்தின் கீழ் முயன்ற பேரறிவாளனின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. ‘குடியரசுத் தலைவர் கருணை மனுக்களைப் பைசல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால், மரண தண்டனைக் கைதிகளின் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்ற அதுவும் ஒரு காரணியாகக் கருதப்படலாமா?’ என்று போடப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்டமைப்பு அமர்வின் தீர்ப்புக்குக் காத்திருக்கின்றன.

நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்த நீதிபதி கே.டி.தாமஸ், தான் அந்தத் தீர்ப்பில் கைதிகளுக்கு மரண தண்டனை விதித்தது தவறு என்று கருதுவதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அந்த வழக்கை விசாரித்த விசேஷப் புலனாய்வுக் குழுவின் தலைவர் டி.ஆர். கார்த்திகேயனும் அந்தக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை என்பது அதிகபட்சத் தண்டனை என்று வேறொரு பேட்டியில் கூறியுள்ளார். தற்போது ஒப்புதல் வாக்குமூலம் பதிவுசெய்த சி.பி.ஐ. அதிகாரி தியாகராஜன், குற்றஉணர்வின் உந்துதலால் பேரறிவாளனின் வாக்குமூலத்தைத் திருத்தியது தவறு என்று தற்போது பகிரங்கப் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொல்வார்கள். இத்தனை கேலிக்கூத்துக்குப் பிறகுமாவது மூன்று கைதிகளுக்கும் மத்திய அரசு கருணை அளித்து மரணக் கொட்டடியிலிருந்து அவர்களை விடுவிக்க முன்வருமா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்