காலத்தின் வாசனை: கைமாற்று வெண்பா

By தஞ்சாவூர் கவிராயர்

கைமாற்றுக் கேட்பதும் கொடுப்பதும் அந்தக் காலத்தில் சகஜமாக இருந்தது. கைமாற்று என்பது அன்றாடத் தேவைகளுக்கான அவசரப் பணமுடைகளைத் தீர்த்துவைக்கும் ஒரு குட்டிப் பணப் பரிமாற்றம்.. அவ்வளவே! இந்த விஷயத்தில் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது.

கைமாற்று வாங்கும் ‘கலை’

கைமாற்றுத் தொகை மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும். சிலர் சொன்னபடியே அதனைத் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். சிலர் இழுத்தடிப்பார்கள். ஏற்கெனவே வாங்கியதைத் திருப்பிக் கொடுக்காமல் இருக்கிறோமே என்ற சங்கோஜம் சிறிதுமின்றி, மறுபடி மறுபடியும் கேட்கிறவர்களும் உண்டு.

மனமிரங்கி இவர்களுக்கும் உதவிய மனிதர்கள் ‘குடும்பக் கஷ்டம் அவர்களை அப்படிக் கேட்க வைக்கிறது. பாவம், இவர்கள் என்ன செய்வார்கள்?’ என்று தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொள்வார்கள்.

கைமாற்று வாங்குவதைக் கலையாகப் பயின்றவர்களும் உண்டு. இன்னாரிடம், இந்தச் சமயத்தில், இத்தனை மணிக்குப் போனால் கைமாற்று நிச்சயம் வாங்கிவிடலாம் என்று குறிபார்த்து அம்பு எய்யும் கில்லாடிகள் இவர்கள். நமக்குக் கைவிரிக்கும் நண்பர்கள், நைச்சியமாகப் பேசும் இத்தகைய நபர்களிடம் கைமாற்றுக் ‘கொடுத்து’ ஏமாந்திருக்கிறார்கள்.

அப்பாவின் ‘கைமாற்று’ உபாயம்!

கைமாற்று கேட்பதற்கு அப்பா கடைப்பிடித்த உபாயம் ஆச்சரியமானது.

வெண்பா!

அப்பா உள்ளூர்ப் பள்ளிக்கூடத்தில் தமிழாசிரியர். நான் ஆரம்பப் பள்ளி மாணவன்.

தபால் கார்டு அளவுக்குக் கத்தரித்த தாள்கற்றை அப்பாவின் மேஜை இழுப்பறையில் எப்போதும் தயாராக இருக்கும். அதில் ஒரு தாளை உருவி, முத்து முத்தான கையெழுத்தில் ஒரு வெண்பா எழுதி, என் கையில் கொடுப்பார் அப்பா. தன் சக ஆசிரியர் வீட்டில் கொண்டுபோய்க் கொடுக்குமாறு சொல்வார்.

வெண்பா வரிகள் ஒன்றிரண்டுகூட இப்போது ஞாபகத்தில் இருக்கின்றன.

‘தைமாதச் சம்பளத்தில் தவறாது தந்திடுவேன்

கைமாற்று பத்துரூபாய் தா!’ என்பதுபோல் அவை முடியும்.

நான் அதை வாங்கிக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடுவேன். என் கையில் இருக்கிற வெண்பாச் சீட்டை வாங்கிப் படிக்கிற முகங்களை ஆவலுடன் பார்ப்பேன்.

சிலர் சீட்டைப் பார்த்து லேசாகப் புன்முறுவல் செய்வார்கள். சில பேர் அப்படியே நின்றுவிடுவார்கள். வேறு சிலரோ கண்களைத் துடைத்துக்கொண்டு என் முதுகைத் தடவிக் கொடுப்பார்கள்.

அப்பாவை நினைத்துப் பெருமையாக இருக்கும்.

கையில் தனியாகச் சில்லரை கொடுத்து ‘‘காப்பி சாப்பிடு தம்பி’’ என்பார்கள் சிலர். நான் வாங்க மாட்டேன். அவர்கள் கொடுக்கிற பணத்தைக் கொண்டுவந்து அப்படியே அப்பாவிடம் கொடுப்பேன்.

மாசத்தின் இரண்டாவது வாரத்திலேயே அந்தக் கஷ்ட தினங்கள் ஆரம்பமாகிவிடும். முக்கியமாக, அம்மாவை டாக்டரிடம் அழைத்துப் போவது…

அப்பா வெண்பா எழுத உட்கார்ந்துவிட்டால், ரொம்பப் பணமுடை வந்துவிட்டது என்று அர்த்தம்.

சாமிக்கண்ணு சார்தான் அடிக்கடி வெண்பாக்களுக்குப் பணம் கொடுப்பார். நான் கொண்டுபோய்த் தருகிற வெண்பாவை ஆறஅமரப் படிப்பார். படித்துவிட்டு ‘‘அடடா!’’ என்பார்.

‘‘அம்மாவுக்கு இப்போ எப்படி இருக்கு?’’ என்று பரிவோடு கேட்பார். பிறகு, பணம் கொடுப்பார்.

ஒருநாள் அப்பாவிடம் கேட்டேன்.

‘‘அப்படி என்னதான் எழுதறீங்க அந்தச் சீட்டுல?”

‘‘வெண்பாடா!’’

‘‘சரி, அதுக்கு ஏன் பணம்?’’

‘‘கைமாத்துடா!’’

பத்து ரூபாய்க்கு மேல் அப்பா கைமாற்றுக் கேட்க மாட்டார்.

பத்து ரூபாய் வந்துவிட்டால் வீட்டில் காபியில் சர்க்கரை தாராளமாய்க் கரையும். உப்புமா வாசனை மூக்கைத் துளைக்கும். யாரோ சன்னமாகப் பாடுவதுகூடக் கேட்கும்.

வெண்பாவும் வெற்றிச்செல்வி டீச்சரும்

வெண்பா விஷயமாக வெற்றிச்செல்வி டீச்சர் வீட்டில் ஒரு சம்பவம்.

நான் நீட்டிய வெண்பாவை வாங்கிக்கூடப் பார்க்காமல், ‘‘அதோ… ரேடியோ பெட்டி பக்கம் வைத்துவிட்டுப் போ!’’ என்றார். ஆனால், பத்து ரூபாய் கொடுத்தார். ‘வெண்பாவைப் படித்துக்கூடப் பார்க்காமல் ஏன் பணம் கொடுக்கணும். நாங்க என்ன பிச்சைக்காரர்களா?’

மனசே இல்லாமல் வாங்கி வந்து அப்பாவிடம் கொடுத்தேன். அப்பாவிடம் நடந்ததைச் சொன்னேன்.

‘‘இனிமே அந்த டீச்சருக்கு வெண்பா எல்லாம் எழுதாதீங்க!’’

‘‘சரிடா!’’ என்றார் சிரித்துக்கொண்டே.

அடுத்த தடவை வெற்றிச்செல்வி டீச்சர் வீட்டுக்கு கையில் ‘வெண்பா’ இல்லாமல் போனேன்.

பத்து ரூபாய் கொடுத்துவிட்டு ‘‘வெண்பா எங்கே?’’ என்று கேட்டார். பிறகு, உள்ளே என்னைக் கூப்பிட்டார்.

அங்கே பூஜை அறையில் சரஸ்வதி படத்தின் கீழே ஒரு சிறிய பிரம்புப் பெட்டி. அதில் நிறைய துண்டுத் தாள்கள். அவை எல்லாமே அப்பா எழுதிய கைமாற்று வெண்பாக்கள்.

‘‘புலவர்… அதான் உங்கப்பா எழுதியதை மொதல்ல சரஸ்வதி படிக்கணும். உங்க வீட்டு கஷ்டம்லாம் தீரணும். அப்புறம்தான் நான் ஆறஅமரப் படிப்பேன்!’’ என்றார் டீச்சர்.

எனக்கு நெஞ்சுக்குள் என்னவோ முட்டியது.

அவர் கொடுத்த பத்து ரூபாயை அப்பாவிடம் கொடுத்துவிட்டுச் சொன்னேன்:

‘‘இனிமே அந்த வெற்றிச்செல்வி டீச்சருக்கு மட்டும் வெண்பா எழுதுங்கப்பா!’’

அப்பா புன்னகைத்தார்.

- தஞ்சாவூர்க் கவிராயர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்