மண்டேலாவை எது தனித்துவப்படுத்துகிறது?

By சமஸ்

நம் காலத்தின் மிகச் சிறந்த அறம்சார் அரசியல் முன்னோடி என்று நெல்சன் மண்டேலாவைக் குறிப்பிடலாமா? இன்றைய தலைமுறையின் முன் ஒரு சே குவேரா அளவுக்கு, ஃபிடல் அளவுக்கு, ஏன் சாவேஸ் அளவுக்குக்கூடப் புரட்சிப் பிம்பம் இல்லாதவர் மண்டேலா. வரலாறோ மண்டேலாவையே முன்னிறுத்தும்.

எது மண்டேலாவைத் தனித்துவப்படுத்துகிறது? ஆப்பிரிக்கப் பின்னணியில் அவர் நடத்திய போராட்டங்களைவிட, அவர் தொடங்கிய வேகத்திலேயே கைவிட்ட - நடத்தாத ஆயுத யுத்தமே தனித்துவப்படுத்துகிறது.

ரத்தக் கண்டம்

இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலகின் மிகப் பெரிய யுத்த இழப்புகள் யாவும் ஆப்பிரிக்க நாடுகளிலேயே ஏற்பட்டன. காங்கோ உள்நாட்டுப் போர்களில் 54 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். சூடானியப் போர்களில் 25 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ருவாண்டா இனக் கலவரத்தில் வெறும் 100 நாட்களில் 8 லட்சம் பேர் கொல்லப்பட்டனர். ஆப்பிரிக்காவைப் பொறுத்தவரை உள்நாட்டு யுத்தங்களும் இனக் கலவரங்களும் படுகொலைகளும் எப்போதும் சமகால வரலாறு. இன்றைக்கும் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுதக் குழுக்களின் அரசியலை எதிர்கொள்கின்றன.

நாட்டின் ஜனத்தொகையில் ஆகப் பெரும்பான்மையினர் கருப்பின மக்கள்; அவர்களோடு ஒப்பிடும்போது, அடக்குமுறைக்கு உள்ளாக்கிய வெள்ளையர்களோ பத்தில் ஒரு பங்கினர் என்கிற சூழலில், தென்னாப்பிரிக்கா ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தன. மண்டேலா அப்படிச் செய்திருந்தால், தென்னாப்பிரிக்க வரலாறு என்னவாகி இருக்கும்? இன்னமும் ரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கும்.

அப்படி ஒரு சூழலும் உருவானது. சுமார் 16 ஆண்டு காலம் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் அமைதியாக வால்டெர் சிஸூலு, ஆலிவர் டேம்போ வழியில் சென்ற மண்டேலாவை 1960 ஷார்ப்வில் படுகொலை திசைதிருப்பியது. சீன, கியூபப் புரட்சிகள் ஏற்படுத்திய தாக்கம், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஆயுதப் பிரிவாக ‘உம்கோண்டோ வெ சீஸ்வெ’ (தேசத்தின் ஈட்டி) அமைப்பை உருவாக்கியது. ஆயுதப் பயிற்சிக்காகவும் ஆதரவு திரட்டுவதற்காகவும் எத்தியோப்பியா, அல்ஜீரியா, லிபியா எனப் பல நாடுகளுக்கும் சென்றார் மண்டேலா. நாடு திரும்பியபோது அவரையும் முக்கிய சகாக்களையும் தேசத் துரோகம், சதிக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைதுசெய்த அரசு ஆயுள் தண்டனை விதித்தது. மண்டேலா நினைத்திருந்தால், சின்னச் சின்ன தாக்குதல்களில் ஈடுபட்டிருந்த ‘உம்கோண்டோ’வின் செயல்பாடுகளைச் சிறைத் தகர்ப்பில் தொடங்கி, அரசுக்கு எதிரான பெரும் தாக்குதல்கள்வரை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் சென்றிருக்க முடியும். அமைப்பினர் பலர் அந்தத் திட்டத்தில் இருந்தனர். மண்டேலாவோ, “ஆயுதப் போராட்டம் ஒரு கவன ஈர்ப்பு வழிமுறை; நிரந்தரமான ஆயுதப் போராட்டம் பெரும் அழிவுக்கே வழிவகுக்கும்” என்ற முடிவை நோக்கி நகர்ந்திருந்தார். அப்போது தொடங்கி எவ்வளவோ பேர் வெவ்வேறு காலகட்டங்களில் ஆயுதப் போராட்ட வழிக்காக வாதிட்டு மண்டேலாவிடமிருந்து விலகினர். மண்டேலா இறுதிவரை உறுதியாக இருந்தார்.

வன்முறையுடன் உரையாடல்

மண்டேலாவின் 27 ஆண்டு காலச் சிறை வாழ்க்கையில் அவர் ஆற்றிய முக்கியமான பணி, இரு தரப்பினர் இடையே வெறுப்பையும் வன்முறையையும் தவிர்க்க இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்தது. மண்டேலாவின் இந்த அமைதிப் போராட்டம் உலகோடு பேசியது; முக்கியமாக, அது மேற்குலகின் மனசாட்சியை உலுக்கியது. அங்கிருந்து எழுந்த அழுத்தம் தென்னாப்பிரிக்க நிறவெறி அரசை அசைத்தது.

அன்றைய தென்னாப்பிரிக்க அதிபரான எஃப்.டபிள்யு. டி கிளர்க் மண்டேலாவுடன் பேச ஆரம்பித்தபோது, மண்டேலா இவரை நாம் நம்பலாம் என்று தன் தரப்பிடம் சொன்னார். தென்னாப்பிரிக்காவில் இனப்பாகுபாட்டை ஒழித்து 1994-ல், எல்லோரும் வாக்களிக்கும் தேர்தல் நடந்தபோது, மண்டேலா குடியரசுத் தலைவர் ஆனார். எதிர்பார்ப்புகள் எவ்வளவு இருந்ததோ, அதே அளவுக்கு அச்சங்களும் மண்டேலாமீது கவிந்திருந்தன. முக்கியமாக, அவர் பழிதீர்ப்பார் என்ற பயம் இருந்தது. மண்டேலா, முன்பு அதிபராக இருந்த டி கிளர்க்கைத் துணை அதிபராக்கி, வெள்ளையர்களை அரவணைத்தார். இதன் மூலம் ஏனைய இனங்கள் மத்தியிலும் நல்லெண்ணத்தை உருவாக்கினார். ஐந்து ஆண்டுகள் குடியரசுத் தலைவராக இருந்தாலும், ஆட்சியை நடத்தியது டி கிளர்க்கும் மண்டேலாவின் சகாவான தபோ எம்பெகியும்தான். முக்கியமான முடிவுகளைத் தவிர, அன்றாட விஷயங்களில் மண்டேலா தலையிட்டது இல்லை. “எந்த ஒரு ஜனநாயக நாட்டுக்கும் ஒரே தலைவர் நீண்ட காலம் ஆட்சியில் இருப்பது நல்லதல்ல” என்று சொன்னவர், அடுத்த தேர்தலில் போட்டியிடவில்லை. விரைவில் அரசியலிலிருந்தும் விலகினார்.

வெறுப்புக்கு எதிர் சின்னம்

சரி, ஒரு நாட்டின் தலைவராக தென்னாப்பிரிக்காவுக்கு மண்டேலா நல்ல எதிர்காலத்தைத் தர முடிந்ததா?

இன்றைக்கு உலகிலேயே அதிகமாக 11 ஆட்சி மொழிகளைக் கொண்ட நாடாக இருக்கும் தென்னாப்பிரிக்கா, மண்டேலாவின் கனவுப்படி ஒரு வானவில் தேசமாக இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லை. பொருளாதாரரீதியிலான பெரும் ஏற்றத்தாழ்வுகளுடன் ஊழல், வேலையின்மை, வறுமை, குற்றங்கள் எனப் பாதுகாப்பற்ற தேசமாகவும் ஆப்பிரிக்காவுக்குள்ளேயே நடக்கும் அகதிகள் இடப்பெயர்வால் வன்முறையை எதிர்கொள்ளும் தேசமாகவும் உருவெடுத்து நிற்கிறது. ஆனால், எல்லாவற்றையும் மீறி மண்டேலா தான் கண்ட கனவை நனவாக்கியிருக்கிறார். இனப்பாகுபாட்டுக்கும் வெறுப்பு அரசியலுக்கும் வன்முறைப் பாதைக்கும் எதிரான, ஓர் உயிரோட்டமான சின்னமாகத் தன்னுடைய தென்னாப்பிரிக்காவை அவர் நிறுவியிருக்கிறார்!

தொடர்புக்கு: samas@kslmedia.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்