தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டங்களில் காவிரி நீர்ப் பகிர்வுச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று தவறாமல் ஒரு கோரிக்கை இடம்பெற்றுவிடுகிறது. டெல்டா மாவட்டங்கள் பாசனத் தேவைகளுக்கு காவிரி நீரையே நம்பியிருக்கின்றன. எனவே, அது தவிர்க்க முடியாத கோரிக்கை. தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர்ப் பகிர்வில் சிக்கல்கள் உருவெடுத்திருக்கின்றன. கோதாவரி, கிருஷ்ணா, நர்மதா ஆகிய நதிகளின் நீரைப் பகிர்ந்துகொள்வதில் கரையோர மாநிலங்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. கர்நாடகத்தில் உருவாகி தமிழகத்தில் பாய்கின்ற காவிரி மட்டும் அச்சிக்கலில் விதிவிலக்காக இருந்துவிட முடியாது.
நதிகளின் தோற்றமும் பயணமும் சங்கமிப்பும் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டவை. அரசியல்ரீதியான எல்லைகள் வகுக்கப்பட்டதெல்லாம் மிகவும் சமீப காலத்தில்தான். ஆனாலும், இயற்கையைக் கட்டுப்படுத்திக் கைக்குள் அடக்கிவைக்கக் கரையோர மாநிலங்கள் ஆசைப்படுகின்றன. அது இயற்கைக்கு எதிரானது என்று சூழலியலாளர்கள் தொடர்ந்து எச்சரித்துவருகிறார்கள்.
கடைமடைக்கே முன்னுரிமை
நதிக் கரைகளில் வாழும் சகலரும் சமமாகக் கருதப்பட வேண்டும். நதி நீரின் மீதான உரிமை அது உருவாகும் இடத்திலிருந்து அல்லாமல், கடலில் கலக்கும் இடத்திலிருந்தே கணக்கிடப்பட வேண்டும். நீரைத் தேக்கி வைப்பதில் கடைமடைக்கே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் நதியின் வழித்தடத்தில் உள்ள இயற்கைச் சூழலை நீண்ட காலத்துக்குப் பாதுகாக்க முடியும். அப்படியென்றால், காவிரி நதியைப் பயன்படுத்தும் உரிமையில் டெல்டா மாவட்டங்களுக்கும் காரைக்காலுக்கும்தான் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். அதைப் போலவே மாநிலங்களுக்கு இடையே பின்பற்றப்பட வேண்டிய நீர்ப் பகிர்வு முறையை ஒரே மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு இடையிலும் பின்பற்ற வேண்டும்.
பொய்யா குலக்கொடி பொய்த்த கதை
பாண்டியர்களால் ‘பொய்யாக் குலக்கொடி’ என்று வர்ணிக்கப்பட்ட வைகை பொய்த்து விட்டது. மதுரைக்கு எதிரிகளால் ஒருபோதும் அழிவில்லை, வெள்ளம் மட்டுமே இந்நகரை அழிக்க முடியும் என்ற அச்சம் பாண்டிய மன்னர்களுக்கு இருந்தது. அதனால்தான் மதுரைக்குள் ஓடிவரும் வைகையின் உபரிநீர் வெளியேறுவதற்கு வாய்ப்பாக கிருதுமால் வாய்க்காலை வெட்டி உத்திரகோசமங்கையில் கலக்கச் செய்தார்கள். ஒரு லட்சம் ஏக்கர் நிலப்பரப்புக்குப் பாசன நீரை அளித்த கிருதுமால் வாய்க்கால், இப்போது மதுரை மாநகரின் சாக்கடையாக மாறிவிட்டது.
மானாமதுரை, சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம் ஆகிய பகுதிகள் இருபோக நஞ்சையாக இருந்தவை. வைகையின் இடது பக்கமாய் மதுரையின் வட கிழக்கில் அமைந்த நிலப்பரப்பு முழுவதும் நஞ்சை நிலமாக இருந்தவை. காவலூர் கண்மாய், ரெட்டூர் கண்மாய், பூவந்தி கண்மாய் என்று இளையான்குடி வரைக்கும் கண்மாய்களை வெட்டி பாண்டியர்களும் சேதுபதி மன்னர்களும் பாசன வசதியை மேம்படுத்தியிருந்தார்கள்.
நாரை பறக்காத 48 மடை
ராமநாதபுரத்தில் பாண்டியர்கள் காலத்திலிருந்தே நீர்ப்பாசனத்துக்காகக் கண்மாய்கள் வெட்டப்பட்டன. அதைத் தொடர்ந்து சேதுபதி மன்னர்களின் காலத்திலும் நீர்நிலைப் பராமரிப்பில் பெருங்கவனம் செலுத்தப்பட்டது. நாராயண காவேரி, ரகுநாத காவேரி என்று பல கண்மாய்களை சேதுபதி மன்னர்கள் உருவாக்கி நீராதாரங்களைப் பெருக்கினார்கள்.
ராஜசிங்க மங்கலத்துக்கு சேதுநாட்டின் நெற்களஞ்சியம் என்ற சிறப்புப் பெயர் இருந்தது. ராஜசிங்க மங்கலம் கண்மாய், 10,000 ஏக்கர் பரப்பளவுக்குப் பாசன வசதியை அளித்தது. ராமநாடு பெரிய மங்கலம் கண்மாய் 6,000 ஏக்கருக்குப் பாசன வசதி அளித்தது. மாறநாடு கண்மாய் 4,000 ஏக்கருக்கு. காவலூர் கண்மாய் 4,000 ஏக்கருக்கு. ராமநாதபுரத்தின் எந்தவொரு கண்மாயும் 1,000 ஏக்கருக்குக் குறையாமல் பாசனம் அளித்தவை. இன்றைய நிலையோடு ஒப்பிட்டுப் பார்த்து, கடைமடை யில் இது சாத்தியமா என்று நினைக்கலாம். ஆனால், வைகையாற்றில் வரும் நீர், முதலில் கடைமடையான ராமநாதபுரத்தில் உள்ள கண்மாய்களில் நிரப்பப்பட்ட பிறகே, மேல்மடைகளில் நீர் தேக்கப்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது. அதனால்தான் ‘நாரை பறக்காத நாற்பத்தெட்டு மடை ஆண்ட ராமநாடு’ என்ற சொல்வழக்கு உருவானது. நாரை பறந்து கடக்க முடியாத அளவுக்குக் கண்மாய் பரந்து விரிந்திருந்த காலம் அது.
1900 வரையிலும்கூட வைகையாற்று வெள்ளத்தால் ராமநாதபுரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. 1885-ல் வைகை வெள்ளத்தால் 8 மணி நேரத்தில் ராமநாதபுரம் கண்மாய்கள் அனைத்தும் நிரம்பின. சில கண்மாய்கள் உடைந்து அழிந்தன. அவ்வப்போது, ஒரு சில ஆண்டுகளில் வைகை வறண்டுபோய் பஞ்சம்கூட வந்திருக்கிறது. ஆனால், வைகையில் நீர் வந்தபோதெல்லாம் ராமநாதபுரம் கண்மாய்கள் நிரம்பியிருக்கின்றன.
தஞ்சையும் தஞ்சம் வந்த பகுதி
மேற்குத் திசையில் மின்னல் வந்தால் ராமநாதபுரம் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தார்கள். காரணம், வைகை நீர் ஊர் வந்து சேரும் என்பதுதான். காவிரி பொய்த்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் பஞ்சம் வந்தால், திருவாடானைக்கு வேலை செய்ய ஆட்கள் செல்லும் நிலையும் ஒருகாலத்தில் இருந்திருக்கிறது. திருவாடானை தனது பாதுகாப்புக்காக 25-க்கும் மேற்பட்ட கோட்டைகளைக் கொண்டிருந்தது என்றால், அது எவ்வளவு வளமான நிலப் பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று புரிந்துகொள்ளலாம். அந்த அளவுக்கு அன்றைய ராமநாதபுரம் நீராதாரங்களைக் கொண்டிருந்தது. ஆனால், இன்று ராமநாதபுரத்தின் விவசாயிகள் தங்களது வயல்களை சீமைக் கருவேல மரங்களுக்கு தின்னக் கொடுத்துவிட்டு, மதுரையில் கூலியாட்களாகப் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு கர்நாடக அரசிடம் நாம் கேட்கிற அதே நியாயக் குரலின்படி, வைகையாற்று நீரில் ராமநாதபுரத்துக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், பழனிமலைத் தொடரில் உருவாகி ஆண்டிபட்டி, வருசநாடு வழியாக ஓடிவரும் வைகை நதி, மதுரையைத் தாண்டி வந்து ராமநாதபுரம் மாவட்டத்தில்தான் வங்கக் கடலில் சங்கமித்தது. ராமநாதபுரம் இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட மாவட்டம் அல்ல. வைகையாற்று நீர்ப் பகிர்வில் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்ட மாவட்டம் என்பதே உண்மை வரலாறு. சோத்துப்பாறை, மஞ்சள் ஆறு, மருதாநதி என்று வைகைக்கு நீர் வழங்கும் துணையாறுகள், ஓடைகளில் எல்லாம் தடுப்பணைகள் கட்டப்பட்டுவிட்டன. அதன்விளைவாக, வைகைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது.
மாநிலங்களுக்கு இடையிலான நீர்ப் பகிர்வில் அற நெறிகளை முன்னிறுத்துகின்ற நாம், மாவட்டங்களுக்கு இடையிலும் அதே அறத்தைப் பின்பற்ற வேண்டும். விவசாயிகளின் உரிமைப் போராட்டங்கள் டெல்டா விவசாயிகளை மட்டுமின்றி அதன் அருகில் இருக்கும் மாவட்டங்களின் விவசாயிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா?
- செல்வ புவியரசன்,
தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago