போராட்டங்கள் வழியாகத்தான் மக்களை அரசியல்மயப்படுத்த முடியும்!- திருமாவளவன் சிறப்புப் பேட்டி

By சமஸ்

தமிழக அரசியல் களம் தேர்தல் வெப்பத்தில் தகிக்கும் சூழலில், திருமாவளவன் ஓடிக்கொண்டிருக்கிறார். தேர்தலை அதன் உட்பொதித்த அர்த்தங்களோடு பார்க்கும் நாம், ஊடகங்களின் வழமையான பரபரப்புக் கேள்விகளினூடே எந்தத் தலைவரையும் சந்திக்கவில்லை. உண்மையான அரசியல் பேச விழைகிறோம். இது கிட்டத்தட்ட ஓடிக்கொண்டே எடுத்த நேர்காணல். ஆறு வெவ்வேறு நாட்களில் மணிக் கணக்கில் நீண்ட நேர்காணல். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு காத்திரமான தலித் அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கும் திருமாவளவன் எல்லாக் கேள்விகளையும் நிதானமாக எதிர்கொண்டார். கூடுமானவரை உண்மைக்கு முகம் கொடுத்தார். எதிர்த்தரப்பு நியாயங்களுக்கும் மதிப்பளித்தார். தவறுகளை யோசிப்பவராகவும் மறுபரிசீலனை செய்பவராகவும் தெரிந்தார். சமகால அரசியல் தலைவர்கள் மத்தியில் இவையெல்லாம் அரிதாகிவருவதைச் சொல்ல வேண்டியதில்லை. ஆரம்ப காலக் கதைகளிலிருந்து நாங்கள் பேசினோம்.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் உருவாக்கத்துக்குப் பிந்தைய இந்தக் கால் நூற்றாண்டில், என்ன மாற்றங்களை உருவாக்கியிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

விசிக உருவான பிறகு, தமிழக அரசியல் களத்தில் தலித்துகள் ஒரு சக்தியாகத் திரளத் தொடங்கியிருக்கிறார்கள். இதற்கு முன்பு அரசியலுக்கும் தமக்கும் தொடர்பில்லை, அதிகாரத்துக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று வேடிக்கை பார்க்கக் கூடியவர்களாக அவர்கள் இருந்தார்கள். குடிசைகளைக் கொளுத்துகிறவர்கள், பெண்களை மானபங்கப் படுத்துகிறவர்கள், கோயிலில் நுழையாதே, குளத்தினில் இறங்காதே, செருப்பு அணியாதே, சைக்கிளில் போகாதே என்று கொடுமைப் படுத்தியவர்களையெல்லாம் சகித்துக் கொண்டிருந்த நிலை மாறி, தமக்கென்று ஒரு அமைப்பு, தமக் கென்று ஒரு கொள்கை, தமக்கென்று ஒரு களம் என்ற நிலையை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறார்கள். அடக்கு முறைக்கு எதிரான பயணம் இப்போது அதிகாரத்தை நோக்கி நகர்கிறது.

இந்திய அரசியல் வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தில் காங்கிரஸ் அளவுக்குப் பங்களித்த கட்சி ஏதும் இல்லை. காங்கிரஸ் இன்றைக்குத் தமிழகத்தில் வலிமையாக இருந்திருந்தால், ஒரு தலித் முதல்வர் வந்திருப்பார் என்று நீங்களேகூடச் சமீபத்தில் கூறியிருந்தீர்கள். தமிழகத்தில் யாரும் கேள்விப்படாத, மகாராஷ்டிரத்தை அடித்தளமாகக் கொண்ட ஒரு தலித் இயக்கம் உங்களை ஈர்த்தபோது, காங்கிரஸ் ஏன் உங்கள் பார்வையில் படவில்லை?

நான் சிறுபிள்ளையாக இருந்த காலத்தில் தலித்துகள் வசிக்கிற பகுதியில், காங்கிரஸ் கொடியும் காமராஜர் படமும்தான் பெரும்பாலும் இருக்கும். தலித் அல்லாதவர்களின் தெருக்களில் திமுக கொடி பறக்கும். நானே காங்கிரஸுக்கு ஓட்டுக் கேட்டு கோஷம் போட்டுச் சென்றிருக்கிறேன். ஆக, காங்கிரஸ் என்பது தலித் மக்களுக்கு ஒரு பாதுகாப்பு அரண் என்று நம்பக்கூடிய அளவுக்கு ஒரு தோற்றம் இருந்தது. புரட்சியாளர் அம்பேத்கரைப் படிக்கத் தொடங்கிய பிறகு எல்லாம் மாறியது.

காந்தியின் காலத்தில் தொடங்கி, காங்கிரஸ் நடத்திய ஆலயப் பிரவேசப் போராட்டங்கள், ‘அரிஜன்’ பத்திரிகை, அரிஜன சேவா சங்கம், சுதந்திரத்துக்குப் பிந்தைய காங்கிரஸின் செயல்பாடுகள் எதையும் நான் குறையாகக் கூறவில்லை. ஆனால் காந்தி, காங்கிரஸ், இந்து மதம் மூன்றும் தலித்துகளின் விடுதலைக்கு அடிகோலாது என்பது புரியத் தொடங்கியது. ஒப்பீட்டளவில் காங்கிரஸ் ஏனைய கட்சிகளைவிடவும் தலித்துகளுக்கு நிறையச் செய்திருக்கிறது என்றாலும், வாக்கு வங்கி அரசியலை அடிப்படையாகக்கொண்ட சீர்திருத்தங்களாகவே அவையெல்லாம் எனக்குப்பட்டன. சாதி ஒழிப்பையும் இந்துத்துவ எதிர்ப்பையும் முக்கிய இலக்காகக் கொண்ட இயக்கமே தலித்துகளின் விடுதலைக்கு வழிவகுக்க முடியும் என்று நினைத்தேன்.

கம்யூனிஸ்ட்டுகள் கவனம் ஈர்க்கவில்லையா?

ஆரம்பத்திலிருந்தே கம்யூனிசக் கொள்கையை நான் உளமாற நேசித்தேன். சொல்லப்போனால், ‘கம்யூனிசம்தான் பௌத்தம், பௌத்தம்தான் கம்யூனிசம்’ என்று நம்பக் கூடிய அளவுக்கு. நிறைய கம்யூனிசத் தோழர்களோடு பழகியிருக்கிறேன். ஆனால், அந்தக் கட்சியில் சேர வேண்டும் என்கிற உணர்வு எப்போதும் எழுந்ததில்லை. எனக்குத் தெரிந்து, எங்கள் ஊர்ப் பக்கம் அன்றைக்கெல்லாம் எந்தத் தலித் குடியிருப்புப் பகுதியிலும் நான் கம்யூனிஸ்ட் கொடிகளைப் பார்த்ததில்லை. சின்ன வயதிலேயே இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் கொண்ட அக்கறையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின்பால் கொண்ட ஈர்ப்பும்கூட இதற்கு ஒரு காரணம் என்று சொல்லலாம். தனித் தமிழ் இயக்கம், தமிழீழ விடுதலை இயக்கம், தமிழ்த் தேசிய இயக்கம் இப்படித்தான் என் ஆரம்ப கால அரசியல் நகர்ந்தது. ஒருபுறம் விடுதலைப் புலிகளின் தாக்கங்கள், இன்னொரு புறம் தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் இவை இரண்டும் எனக்குள் ஒரு வேதிமாற்றத்தை உருவாக்கின. தலித் மக்களுக்கு இழைக்கப்படக் கூடிய சாதியக் கொடுமையிலிருந்து அவர்களை மீட்க இந்த அரசியல் இயக்கங்கள் எதுவும் பயன்படாது என்று நான் கருதினேன். சொல்லப்போனால், 1980 முதல் 1995 வரையிலான காலகட்டத்தில் நான் தேர்தல் அரசியல் மீது நம்பிக்கை இல்லாதவனாக இருந்தேன்.

அம்பேத்கரை எந்த வயதில் படிக்க ஆரம்பித்தீர்கள்?

எட்டாம் வகுப்பு படிக்கும்போது. என் அப்பாதான் அம்பேத்கரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்பா எட்டாம் வகுப்பு வரை படித்தவர். வாசிப்பு அதிகம்.விவசாயக் கூலி.ஒரு வரலாற்று ஆசிரியர் மாதிரி எனக்கு வரலாற்றைச் சொல்லிக் கொடுத்தவர். நான் நன்றாகப் படிக்க வேண்டும்என்பதற்காக அப்பா அடிக்கடி அம்பேத்கரைப் பற்றிச் சொல்வார். ‘நம்மை மாதிரி அவரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர், நிறையப் படித்தவர். அவரது படிப்பை எழுதினால் இவ்வளவு நீளத்துக்கு வரும்’என்று தன் இரண்டு கைகளையும் விரித்துக் காட்டுவார் அப்பா. பின்னாளில் சென்னைக்கு வந்த பிறகு, ‘நாட்டுக்கு உழைத்த நல்லவர் அம்பேத்கர்’புத்தகம் கிடைத்தது. சின்ன புத்தகம். அதுதான் அம்பேத்கரைப் பற்றி நான் படித்த முதல் புத்தகம். அம்பேத்கரைப் பற்றிப் படிக்கப் படிக்க எனக்குள் ஒரு பெரும் உந்துதல் உருவானது.

வறுமையான சூழலில் பிறந்து படிப்பவர்கள் எல்லோரும் இயல்பாகத் தன் வேலை, தன் வாழ்க்கை என்று நகரத்தான் பார்ப்பார்கள். நீங்கள் எப்படி அரசியலை நோக்கி நகர்ந்தீர்கள்?

சின்ன வயதிலேயே எங்கள் மக்கள் அனுபவித்த கொடுமைகள் கடுமையான பாதிப்புகளை மனதில் உருவாக்கிவிட்டன. அரசியலுக்காகத் திட்டமிட்டு என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவில்லை என்றாலும், காலம் அதை நோக்கித்தான் என்னைத் தள்ளியது.

கொஞ்சம் விரிவாகப் பேசலாமா? நீங்கள் அரசுப் பணியில் கணிசமான காலம் இருந்தீர்கள். ஆனால், திருமணம் செய்துகொள்ளவில்லை. காதல்கூட எட்டிப் பார்க்கவில்லையா?

1982-ல் நான் பட்டப் படிப்பை முடித்தபோது என் வயது 20. எங்கள் ஊரில் பதினெட்டைத் தாண்டிவிட்டாலே கல்யாணப் பேச்சு வந்துவிடும். என் அம்மா பெண் பார்க்கிறேன் என்று வந்து நின்றார். நான் ‘இந்தப் படிப்புக்கெல்லாம் வேலை கிடைக்காதம்மா; சட்டம் படிக்கப்போறேன். வேலை கிடைக்காட்டிலும் வக்கீல் வேலை பார்த்தாவது பொழைச்சுக்கலாம்’என்றேன். அப்பா என் பக்கம் நின்றார். மேலே படிக்கப்போனபோது, விடுதலைப் புலிகள் இயக்கம்சார் மாணவர்கள் அமைப்புடன் தொடர்பு ஏற்பட்டது. 1983-க்குப் பிந்தைய காலகட்டம் கொந்தளிப்பானது இல்லையா? ‘விடுதலைப்புலி’என்ற கையெழுத்துப் பத்திரிகை நடத்தினேன். கண்ணதாசன் பேரவை சார்பில் 1984 மார்ச்சில் ஈழ விடுதலை மாநாடு நடத்தினேன். இப்படிப் போக ஆரம்பித்துவிட்டது.

அந்தக் காலகட்டத்தில் நான் ரொம்ப கூச்ச சுபாவி. ஆண் நண்பர்களே குறைவு. பெண்களுடனான உறவு, காதலையெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாதவனாகத்தான் இருந்தேன். வெகுவிரைவில் அரசுப் பணி கிடைத்தது. தடய அறிவியல் துறையில் வேலை. மதுரைக்குப் போனேன். அதன் பிறகு என் வாழ்க்கையே மாறிவிட்டது. மலைச்சாமி அண்ணனின் அறிமுகம் கிடைத்தது. ‘தலித் பேந்தர்ஸ்’ இயக்கம் அறிமுகமானது. சில மாதங்களுக்குள் அந்தப் பகுதியில் நடந்த கொடூரமான சம்பவங்கள் எனக்குள் பெரிய மாற்றங்களை உருவாக்கிவிட்டன. மேலூர் அருகேயுள்ள சென்னகரம்பட்டியில் 1992-ல் நடந்த இரட்டைப் படுகொலை, 1997-ல் மேலவளவில் நடந்த எழுவர் படுகொலை போன்ற சம்பவங்கள் கடுமையான அதிர்வை உருவாக்கின. அதுவரை ஈழப் போராட்டம், அது தொடர்பான தோழர்களுடனான தொடர்பு என்றிருந்த நான், தலித் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பது மிக முக்கியமான பணி என்ற மனநிலைக்கு வந்தேன். அரிவாள் வெட்டுப்பட்டு, ரத்தம் சொட்டச் சொட்ட நள்ளிரவு 2 மணிக்கு ஓடி வருவார்கள். குடிசையைக் கொளுத்திவிட்டார்கள் என்று ஓடிவந்து அழுவார்கள். ஓடுவேன். இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்றால், அர்ப்பணிப்பு இல்லாவிட்டால் முடியாது என்று புரிந்தது. எப்படியாவதுஒரு இயக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்று தோன்றியது. இரவெல்லாம் கிராமம் கிராமமாகப் போய் கூட்டம் போட்டுப் பேசுவோம். பாதிக்கப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு காவல் நிலையம் போவது, மாவட்ட ஆட்சியரைப் போய்ப் பார்ப்பது என்று ஒரே அலைச்சல். ஓய்விருக்காது.

எங்காவது ஓரிடத்தில் தலித்துகளுக்கு எதிராகத் தாக்குதல் நடந்தது என்றால், உடனே ஒரு சுவரொட்டியைத் தயார் செய்வோம். அந்தச் சுவரொட்டியில் எங்கள் அரசியலைப் பேசுவோம். நானே சுவரொட்டி எழுதுவேன். துண்டறிக்கை தயாரிப்பேன். ரயில் நிலையம், பஸ் நிறுத்தங்கள், கடைவீதி என்று தெருத் தெருவாக அலைந்து, நானே அவற்றை ஒட்டுவேன். பல நேரங்களில் பசைக் கையை அலுவலகம் போய்க் கழுவியிருக்கிறேன். இரவு நேரங்களில் சுவர்களில் விளம்பரம் எழுதுவேன். மதுரையில் சுவர்களுக்கு வெள்ளையடித்து பெரிது பெரிதாக அம்பேத்கர் பெயரை முதலில் எழுதியது நாங்கள்தான். எவ்வளவோ நாள் அப்படி எழுதிவிட்டு தூக்கக் கலக்கத்தில் அந்தச் சுவரோரங்களிலேயே படுத்துத் தூங்கியிருக்கிறேன். ‘தலித் பேந்தர்ஸ்’ அமைப்பு சித்தாந்தரீதியாக நிறைய முரண்பாடாகத் தெரிந்தபோது, தமிழ்ச் சூழலுக்கேற்ற ‘விடுதலைச் சிறுத்தைகள்’அமைப்பைத் தொடங்கினோம்.

அப்போதெல்லாம் அரசியல் வாழ்க்கை ஒருகட்டத்தில் தலைமறைவு வாழ்க்கையை உருவாக்கிவிடும் என்றே நினைத்திருந்தேன். வெவ்வேறு அரசியல் தொடர்புகள் காரணமாக உளவுத் துறையினர் என்னைப் பின்தொடர்ந்துகொண்டே இருப்பார்கள். திருமணம் என்கிற ஒரு விஷயத்தைக் கற்பனையே செய்ய முடியாத காலம்.1999-ல் தேர்தல் அரசியலுக்கு வந்தோம்.அரசு வேலையை விட்டேன். நாளெல்லாம் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் என்று ஊர் ஊராகப் பயணப்பட வேலைச் சுமைமேலும் பல மடங்கானது.பின்னாளில் அதற்கான காலம் கடந்துவிட்டது. அம்மா மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நான் போக்குக் காட்டிக்கொண்டே இருக்கிறேன்.

தலித் சமூக விடுதலை, போராட்டங்களால் மட்டுமே சாத்தியமாகிவிடும் என்று நினைக்கிறீர்களா?

போராட்டம் என்பது மக்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு யுக்தி. அதுவே தீர்வு காணும் வழியல்ல. மக்களை ஒரு அரசியல் சக்தியாக்குவதற்காக அணி திரட்டுகிறோம். எந்த அடிப்படையில் அவர்களிடம் நாளை உனக்கு விடுதலை கிடைக்கும் என்று சொல்வது? எது விடுதலை, எப்படி விடுதலை என்று புரியவைப்பது? தலித்துகள் இரட்டைப் போராட்டத்தை இயல்பாகவே எதிர்கொள்கிறார்கள். ஒன்று.. உணவு, உடை, உறைவிடம் தேடி.. வறுமையை எதிர்கொள்ளும் போராட்டம். மற்றொன்று.. சாதிய அடக்குமுறையை எதிர்கொள்ளும் போராட்டம். ஒரு ஆர்ப்பாட்டத்திலோ, பேரணியிலோ, பொதுக்கூட்டத்திலோ ஒரு எளியவன் பங்கேற்கிறான் என்றால், அவனுக்கு ஒரு செய்தி கிடைக்கிறது. ‘நீ தனியாள் அல்ல; இவ்வளவு பெரிய சக்தி; உன்னால் ஒடுக்குமுறையை எதிர்க்க முடியும்’ என்பதே அந்தச் செய்தி. ஏதோ ஒரு கிராமத்தில் தனியாளாக ஒடுக்குமுறைக்கு அஞ்சி அஞ்சி வாழ்பவன் லட்சம்பேர் திரளக்கூடிய இடத்தில் நாமெல்லாம் ஒரே அமைப்பு, ஒரேகட்சி என்று நினைக்கும்போது அவனுக்குள் ஏற்படும் தன்னம்பிக்கையே அரசியல்ரீதியான தலைநிமிர்வைக் கொடுக்கும். அமைப்பையும் அரசியலையும் பயன்படுத்தி பிரச்சினையை எதிர்கொள்ளலாம் என்ற துணிவைக் கொடுக்கும்.

அரசிடம் சாதாரணமாக ‘எங்களுக்குப் பஞ்சமி நிலங்களை மீட்டுக் கொடுங்கள், வேலைவாய்ப்பு கொடுங்கள், கடனுதவி கொடுங்கள்’ என்று கோரிக்கை வைப்பதையே எடுத்துக் கொள்ளுங்கள். பலருக்குப் பஞ்சமி நிலம் என்றாலே என்ன வென்று தெரியாது. ஒரு போராட்டத்தில் அவனை ஈடுபடுத்தும் போது, எதற்காக இங்கே வந்துள்ளோம் என்ற கேள்வி எழும்.பஞ்சமி நிலம் என்றால் என்னவென்று தெரியவரும். நிலவரலாறு, அரசியல் அமைப்பு, அரசு இயங்கும் முறை, அரசை யாரெல்லாம் நடத்துவது எல்லாம் தெரியவரும். மக்களை அரசியல்படுத்துவது, போராட்ட வழிதான். போராட்டம் என்பது விடுதலைக்கான தீர்வு அல்ல.. தீர்வை நோக்கிய வழி.

இதுவரை வேறெந்த தலித் தலைவர்களுக்கும் இல்லாத அரசியல் செல்வாக்கு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், விசிக இன்றைக்கும் பறையர் சமூகத்தின் பிரதிநிதியாகத்தான் இருக்கிறது. தேவேந்திரர்களோ, அருந்ததியர்களோ உங்களை முழுமையாக ஏற்கவில்லை. அருந்ததியர்கள் உங்களை மேலாதிக்க சாதியாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். தமிழகத்தில் பட்டியலினத்தில் மட்டும் 76 சாதிகள் இருக்கின்றன. அவர்களை ஏன் ஒருங்கிணைக்க முடியவில்லை? சாதிய அடக்குமுறையைத் தலித்துகளாலும் மீற முடியாத சூழல் இருக்கிறதே ஏன்?

(தொடர்ந்து பேசுகிறார் திருமாவளவன்)

தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்