நான் சிவாஜி கட்சி

By மானா பாஸ்கரன்

என் சிலேட்டுப் பருவத்தில் ஓர் உறவினரைப் போலவே சினிமா வழியாக எனக்குப் பரிச்சயமானார் சிவாஜி கணேசன். தஞ்சாவூர் ஜில்லாவில் முடிகொண்டான் என்கிற எங்கள் கிராமத்திலிருந்து ஐந்து மைல்கல் தொலைவில் நன்னிலம் என்கிற ஊரைத் தொட்டுக்கொண்டு இருந்தது மணவாளம்பேட்டை. அங்கு இருந்த லட்சுமி டாக்கீஸில்தான் நான் முதன்முதலாக சிவாஜியை பாபுவாகப் பார்த்தேன்.

“டேய்… இன்னிக்கு உன்னை சினிமா கொட்டாய்க்கு அழைச்சுட்டுப் போறேன்’’ என்று காலையிலேயே அப்பா சொல்லிவிட்டார். மனசு குதி யாட்டம் போட ஆரம்பித்துவிட்டது. புத்தகங்களுக்கு லீவு கொடுத்து விட்டு, அப்பாவின் டைனமோ (லைட்) வைத்த சைக்கிளை எண்ணெயெல் லாம் போட்டு நறுவிசாகத் துடைத்து வைத்தேன். சைக்கிளில் லைட் இல்லாமல், அதிலும் டபுள்ஸ் போனால் போலீஸ் பிடிக்கிற சமயம் அது.

‘பீஹாரில் வெள்ளம்’

சாயங்காலம் அப்பா சைக்கிள் மிதிக்க, கேரியரில் நான் ரெண்டு பக்கமும் காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்துகொண்டேன். முடிகொண்டான் ஆற்றைக் கடந்து சைக்கிள் செல்கிறபோதே… ‘விநாயகனே… வினை தீர்ப்பவனே’ என்கிற சீர்காழி கோவிந்தராஜன் பாடும் பாடலின் முதல் வரி சினிமா கொட்டாயிலிருந்து மெல்ல மிதந்து வர ஆரம்பித்திருந்தது. ‘குணாநிதியே குருவே சரணம்… குறைகள் களைய இதுவே தருணம்…’ என்கிற பல்லவிக்குப் பாடல் தாவியிருந்தபோது, இரண்டு பெஞ்சு டிக்கெட் வாங்கியிருந்தார் அப்பா.

அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு கனவுக்குள் நுழைவதைப் போல நான் உள்ளே போனேன். அப்போதெல்லாம் சினிமா அரங்கங்களில் எடுத்தவுடன் படம் போட மாட்டார்கள். சோப்பு, துணி போன்ற சில விளம்பரங்களைத் தொடர்ந்து, ‘வார் ரீல்’ என்கிற செய்திப் படங்கள் போடுவார்கள். அந்தச் செய்திப் படத்தில் ஒருவர் கரகர குரலில் ‘பீஹாரில் வெள்ளம்…’ என்று பேசியது நினைவில் நீந்துகிறது. இடையிடையே ‘சிகரெட் புகைக்காதீர்கள்’, ‘உங்கள் கால்களை முன் சீட்டில் போடாதீர்கள்’ என்று சிலைடுகள் போடுவார்கள். ‘எப்படா… படம் போடுவானுங்க…’ என்று மனசை அலுக்க வைத்து அப்புறம்தான் படம் போடுவார்கள்.

படம் போட்டாச்சு

படம் ஆரம்பமானது. எடுத்தவுடன் வெள்ளைத் திரையை அடைத்துக் கொண்டு ‘பாபு’ என்று படத்தின் பெயர் விரிந்து, அடுத்து ‘கலைக்குரிசில்’ சிவாஜிகணேசன் என்று கதாநாயகனின் பெயர் போடும்போதுகூட, இந்தப் பெயர் எதிர்வரும் காலங்களில் நம் அகவெளியில் உன்னத தரிசனங்களை நிகழ்த்தப்போகிறது என்பது தெரிந்திருக்கவில்லை.

திரையில் நான் பார்த்த முதல் சிவாஜி படம் அது. அந்த நடிப்பில் இருந்த வசீகரம் என்னை உள்வாங்கிக்கொண்டது. படத்தில் கை ரிக்‌ஷாவை இளமைத் துடிப்புடன் இழுத்துக்கொண்டு ஓடுபவராக, இளமையின் வசீகரம் உதிர்ந்து முதுமையின் கரங்களில் தன்னை ஒப்படைத்தவராக, நொடித்துப்போன ஒரு குடும்பத்துக்குத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட விசுவாசத்தின் பிரதிநிதியாக சிவாஜி தோன்றியிருப்பார். மயிற்பீலியின் ஒற்றை இழையைப் புத்தகத்துக்குள் வைத்துவிட்டு, அது குட்டி போடும் என்று நம்பிக்கொண்டிருந்த அந்த பால பருவத்தில், என் மனவயலில் நடவு செய்யப்பட்ட ‘பாபு’-வின் அத்தனை காட்சிகளும் அற்புதமான சம்பா சாகுபடி!

அரசியல், கொள்கை, மேடை எதுவுமே அறியாத அந்த வயதில், எங்கள் கிராமத்துத் தெருக்களில் நாங்கள் அறிந்திருந்தது இரண்டே இரண்டு கட்சிதான். ஒன்று, சிவாஜி கட்சி. இன்னொன்று எம்.ஜி.ஆர் கட்சி. காமராஜர் மீது சிவாஜி பற்றுக்கொண்டிருந்ததால் காங்கிரஸை சிவாஜி கட்சி என்றும், அண்ணா மீது எம்.ஜி.ஆர் பற்றுக்கொண்டிருந்ததால் தி.மு.க-வை எம்.ஜி.ஆர் கட்சி என்றும்தான் எங்கள் கிராமத்தினர் அப்போது சொல்லிவந்தனர். ஆனால், இந்த குல்மாஸ் எல்லாம் புரியாத நான் ‘பாபு’ படம் பார்த்துவிட்டுத் திரும்பியிருந்த அந்த ராத்திரியே, ‘ராவோடு ராவாக’ எவருக்குமே தெரியாமல் சிவாஜி கட்சியில் சேர்ந்துவிட்டேன்.

அதன் பிறகு, பல சிவாஜி படங்கள். ஒவ்வொன்றும் எனக்குள் உலகில் இதுவரை இல்லாத வண்ணத்தில்கூட வாணவேடிக்கை நிகழ்த்தின. பின்னாட்களில் தமிழ் அழகியலின் பக்கம் என் கவனம் குவிவதற்கு சிவாஜி கணேசனின் வசன உச்சரிப்புகளும் காரணமாயிருந்தன.

ராஜராஜ சோழன் நடித்த படம்

சிவாஜியைப் பற்றிப் பெருமையாகப் பேசுபவர்களையும், மிகை நடிப்பின் உச்சம் என்று உச்சுக் கொட்டுபவர்களின் பேச்சையும் நான் உற்றுக் கவனித்தே வருகிறேன். ஏனெனில், எந்த ஒரு கலைஞனும் எல்லா மனிதர்களுக்கும் பிடித்தமானவராக இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லையே. ஆனாலும், நமக்குப் பிடித்தமானவரைப் பிறர் போற்றும்போது சின்ன சந்தோஷ ராட்டினம் சுழலத்தான் செய்கிறது. அப்படித்தான், ‘ராஜராஜ சோழன் சிவாஜி கணேசனாக நடித்த ராஜராஜ சோழன்’ படம் பார்த்தேன் என்று சுஜாதா எழுதியபோதும், பாலச் சந்திரன் சுள்ளிக்காடு ‘சிதம்பர ரகசியம்’புத்தகத்தில் சிவாஜியைப் பற்றி எழுதியிருந்தபோதும் அவர்களுக்குத் தெரியாமல் அவர்களையும் நான் பால்யத்தில் இருந்த ‘சிவாஜி கட்சி’-யில் உறுப்பினராக்கியது மனசு.

இதோ எந்தன் தெய்வம்…

‘பாபு’ படத்தில் டி.எம்.எஸ். குரல் செதுக்கிய ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…’ என்கிற பாடல் என் மனதில் கோந்து போட்டு ஒட்டிக்கொண்டுவிட்டது. அந்தப் பாட்டின் எல்லா வரிகளும் எனக்கு மனப்பாடமாயிருந்தன.

8-ம் வகுப்பு படிக்கும்போது நடந்த பாட்டுப் போட்டியில் ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…’ பாடலைப் பாடித்தான் பரிசு வாங்கியிருந்தேன். என் நண்பன் மணிவண்ணன் அப்போது சொன்னான்: “டேய்… நீ நல்லா பாடுனதுனால பரிசு குடுக்கலை. எதிர்த்தாப்புல உட்கார்ந்திருந்த பெரிய சாரை (தலைமையாசிரியர்) கையைக் காட்டி, ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே’ன்னு பாடுனதுனால அவர் உனக்குப் பரிசு குடுத்துட்டாரு’’ என்றான்.

அந்த மணிவண்ணனைக் கடைசிவரை ‘சிவாஜி கட்சி’யில் நான் சேர்க்கவே இல்லை!

- மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்