மனிதரால் அழிந்த தொல்லுயிரினங்கள்

By கே.என்.ராமசந்திரன்

'பனியுகம்' என்கிற 10 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலகட்டத்தில் பெரிய ஆகிருதியைக் கொண்ட கம்பளி யானைகள் (Wooly Mammoths), கஸ்தூரி மாடுகள் (Musk Ox) போன்ற பெரிய விலங்குகள் முற்றாய் அழிந்துபோனதற்கு வானிலை மாற்றங்களே காரணம் என்று கருதப்பட்டுவந்தது. மரபியல், தொல்பொருளியல், வானிலையியல் தகவல்களைத் தொகுத்துப் பார்க்கிறபோது மனிதர்களும் அதற்குப் பெருமளவு காரணம் என்று தெரியவருகிறது.

மனிதர்களின் சற்றே மேலான மூளைத்திறன், பல்லாயிரக் கணக்கான சிற்றினங்கள் முற்றாய் அழிந்துபோனதற்கு மூலகாரணமாய் இருந்திருக்கிறது. பூமியின் உலகளாவிய வெப்பநிலை உயர்ந்துகொண்டே போவது மீதமுள்ள எல்லா உயிரினங்களையும் கூடிய விரைவில் அழித்துவிடக்கூடும் என்பதற்கான சான்றுகள் அனுதினமும் கண்டறியப்பட்டுவருகின்றன. கம்பளிக் காண்டாமிருகங்கள், கம்பளி யானைகள், காட்டுக் குதிரை, ரெயின்டீர் (கலைமான்), பைசன் (காட்டு எருமை), கஸ்தூரி மாடு போன்றவை அத்தகைய அரிய விலங்குகளில் சில. அவை பனிப் பிரதேசங்களில் வசிப்பதற்கேற்ற உடலமைப்பு கொண்டவை. அவற்றின் வாழிடங்களின் வெப்பநிலை அதிகரித்ததால் அவை பலவீனமடைந்து, மனிதர்களின் ஆயுதங்களுக்கு இரையாக மாறின.

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெத் ஷாப்பிரோ குழுவினர் செய்துள்ள ஆய்வுகள், மேற்சொன்ன விலங்கினங்கள் இரண்டு பில்லியன் முதல் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையான ‘பிளிஸ்டோசீன்’ என்ற யுகத்தில் வாழ்ந்ததாகக் காட்டுகின்றன. அந்தக் காலகட்டத்தில் குளிர்மிக்க பனிமலைக் காலங்களும், நீண்ட மிதவெப்பக் காலங்களும் மாறிமாறிப் பல்லாண்டுகள் இடைவெளியில் நிலவின. 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கடைசிப் பனியுகம் உச்சத்தை எட்டிய பின், வெப்பநிலை உயரத் தொடங்கியது. அப்போது மேற்சொன்ன உயிரினங்கள் அழியத் தொடங்கின.

மனிதன் ஒரு சாபம்

அவற்றில் கலைமான், காட்டெருமை, கஸ்தூரி மாடு ஆகியவை மட்டுமே தப்பிப் பிழைத்தன. ஆனாலும் அவற்றின் வாழிடப்பரப்பு வெகுவாகச் சுருங்கிப்போனது. ஷாப்பிரோ குழுவினர் அந்த எஞ்சிய விலங்குகளின் மரபணுக்களை ஆய்வுசெய்தனர். அந்த விலங்கினங்கள் எப்போது - எப்படி அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்கி உச்சத்தை எட்டின, எப்போது - எப்படி அவற்றின் எண்ணிக்கை சுருங்கியது, அத்தகைய பெருக்கத்துக்கும் சுருக்கத்துக்குமான சுற்றுச்சூழல் காரணிகள் யாவை ஆகிய கேள்விகளுக்கு விடைகாண முயற்சிசெய்கின்றனர்.

காலநிலையும் சுற்றுச்சூழலும் மாற்றமடைந்தபோது அவற்றின் மேய்ச்சல் நிலப்பரப்பு வெகுவாகச் சுருங்கியது, அவற்றின் எண்ணிக்கை குறைந்ததற்கு ஒரு காரணமாயிருக்கக்கூடும். அவற்றின் எலும்புகள், மனிதர்கள் வாழ்ந்த குகைகளில் கிடைக்கின்றன. மனிதர்கள் அந்த விலங்குகளை வேட்டையாடி அவற்றின் இறைச்சியை உண்டதும், அவற்றின் எலும்புகளை ஈட்டி முனைகளாகவும் அம்பு முனைகளாகவும் பயன்படுத்தியதும் புலனாகிறது. அவற்றின் தோல்களை ஆடையாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த விலங்குகள் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த பிரதேசங்களில் மனிதர்கள் பிரவேசிக்கத் தொடங்கியதுமே அவற்றுக்கு அழிவுக்காலம் ஆரம்பித்துவிட்டது. அது 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. “மனிதன் ஒரு சாபம்! அவன் புல் தரையில் நடக்கத் தொடங்கினால், அவன் கால்பட்ட இடங்களிலெல்லாம் புல் அழிந்து ஒற்றையடிப் பாதை தோன்றிவிடுகிறது” என்று ஷாப்பிரோ சொல்கிறார்.

மேற்கண்ட ஆறு சிற்றினங்களின் விலங்குத் தொகைகள் சுமார் 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தன. அதன் பிறகு, அவற்றில் சில முற்றாய் அழிந்துபோயின. அவை தமக்கேற்ற வாழிடங்களுக்கு இடம்பெயர்வதைத் தடுத்து, அவற்றை அழிவுப் பாதையில் செலுத்தியது மனிதனே! அவற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்கிய அதே காலகட்டத்தில் மனிதர்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கின. எல்லாவிதமான காலநிலைகளையும் எதிர்கொண்டு வாழும் உத்திகளை மனிதர்கள் பெற்றிருந்தார்கள். சீல், வால்ரஸ் போன்று தனிவகையான உடலமைப்பு கொண்ட விலங்குகள் மட்டுமே வாழக்கூடிய துருவப் பிரதேசங்களிலும் மனிதர்கள் குடியேறினர். வெப்பமண்டலப் பிரதேசங்களிலும், பாலைவனங்களிலும் உள்ள வெப்பத்தையும் துருவப் பகுதிகளில் உள்ள கடுங்குளிரையும் தாங்கி வாழும் உத்திகளை மனிதர்கள் உருவாக்கிக்கொண்டனர்.

தட்பவெப்ப விளையாட்டு

குளிர்ப் பிரதேசங்களுக்கு ஏற்ற உடலமைப்புடன் பரிணமித்திருந்த குதிரை போன்ற பல விலங்குகளை மனிதன் பழக்கி, அவை வெப்பப் பகுதிகளுக்கேற்பத் தகவமைத்துக்கொள்ளும்படி செய்தான். தான் குடிபுகுந்த பகுதிகளின் சுற்றுச்சூழலையும், தன்மையையும், நில அமைப்பையும் மாற்றியமைக்கும் வகையில் விவசாயம், நீர்ப்பாசனம், குடியிருப்புகள் போன்றவற்றை உருவாக்கிக்கொண்டான். தனது உணவுக்கும், பணிகளுக்கும் உதவும் ஆடு மாடுகளைக் கட்டுப்பாடான அளவில் இனப் பெருக்கம் செய்ய அனுமதித்தான்.

கடந்த காலங்களில் பலமுறை உலகளாவிய வளி மண்டல வெப்பநிலை வீழ்ந்தது. அப்போதெல்லாம் பல சிற்றினங்களைச் சேர்ந்த விலங்குகள் கிட்டத்தட்ட முற்றாயழியும் நிலைக்குச் சரிந்தன. பின்னர், காலநிலை வெப்பநிலைகள் முன்பிருந்த நிலையை எட்டின. அதன் பின் உயிரிகளின் தொகை மீண்டெழுந்து வளர்ந்தது. ஆனால், கடந்த குளிர்யுகம் முடிந்து வெப்பநிலை உயர்ந்தபோது இந்தப் போக்கு மாறியது. மயிரடர்ந்த உடல் கொண்ட காண்டாமிருகங்கள், கம்பளி யானைகள், காட்டுக் குதிரைகள் போன்றவை முற்றாயழிந்தன. கலைமான், காட்டெருமை, கஸ்தூரி மாடு போன்றவை மயிரிழையில் தப்பிப் பிழைத்தன. கலைமான்கள் வட துருவங்களுக்குச் சென்று குடியேறின. அங்கு அவற்றை வேட்டையாடும் இதர விலங்குகளோ, அரிதாய் கிடைக்கிற தீவனப் பயிர்களுக்குப் போட்டியிடும் பிராணிகளோ இல்லை.

பனியுகத்தின்போது ஆசியாவில் பரவியிருந்த காட்டெருமை மந்தைகள் இன்று முற்றாயழிந்துவிட்டன. இன்று அவை வட அமெரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றன. அவற்றின் தூரத்துச் சொந்தங்கள் என்று கருதப்படக்கூடிய சில விலங்குகள் மட்டுமே ஐரோப்பாவில் இன்றும் வாழ்கின்றன. குளிருக்குத் தம்மைத் தகவமைத்துக் கொண்ட கஸ்தூரி மாடுகள், வட அமெரிக்காவின் துருவப் பிரதேசங்களிலும் கிரீன்லாந்திலும் மட்டுமே தப்பிப் பிழைத்துள்ளன. நார்வே, ஸ்வீடன், சைபீரியா ஆகிய நாடுகளில் அவற்றை வளர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எஸ்கிமோக்கள் அவற்றை வேட்டையாடிக் கொன்று தின்றாலும், அவை முற்றாயழிந்துவிடாமலும் பாதுகாத்துவருகிறார்கள். நவீனரக சாலைப் போக்குவரத்துச் சாதனங்கள் தங்களுடைய பிரதேசத்தில் நுழைந்துவிடாமல் தடுத்துவிடுகின்றனர். தமது முன்னோர்கள் செய்த தவற்றைத் தாமும் செய்யாமல் கஸ்தூரி மாடுகள் இடைஞ்சலின்றி வாழ வழிவகை செய்துதருகிறார்கள். தங்களுடைய புரதத் தேவைக்கு இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிகளை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

ஷாபிரோ குழுவினரின் ஆய்வு முடிவுகள், உலகின் பிற பகுதிகளில் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ள உயிரினங்களை மீட்டெடுப்பதற்குப் பேருதவி புரியக்கூடும். தற்காலத்தில் வளிமண்டல மாற்றங்களும் வாழிட அழிப்புகளும் பல உயிரினங்கள் முற்றாயழிய வழிவகுத்துவருகிற நிலையில், அவர்களுடைய ஆய்வுகள் அதைத் தடுத்து நிறுத்த வழிகாட்டுகின்றன. அவற்றின் அழிவுக்கு மனிதர்கள் அளித்த பங்களிப்புகளைப் பட்டியலிட்டு முன்னெச்சரிக்கை செய்கின்றன.

அழிவுக்குக் காரணம்

தூந்திரப் புல்வெளிகளில் திரிந்த கம்பளி யானைகளும் வேறு பல பாலூட்டிகளும் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரே சமயத்தில் திடீரென முற்றாயழிந்துபோக என்ன காரணம் என்பதை விளக்குவதில், விஞ்ஞானிகள் பல கட்சிகளாகப் பிரிந்து நிற்கிறார்கள். ஸ்வீடனிலும் மற்ற நாடுகளிலும் உள்ள விஞ்ஞானிகள் நவீன டிஎன்ஏ ஆய்வு உத்திகளைப் பயன்படுத்தினர். புரதச் சத்து மிகுந்த புதர்கள் அழிந்து, சத்துக்குறைவான புல் வகைகள் மண்டிப் பெருகியதால் புரதப் பற்றாக்குறை காரணமாகவே புராதன விலங்கினங்கள் அழிந்திருக்கக்கூடும் என்று கண்டறிந்திருக்கிறார்கள்.18 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பெரும்பகுதி பனியால் மூடப்பட்டிருந்தபோதிலும், பல பெரும் பரப்புகளில் ஸ்டெப்பிப் புல்வெளிகளும் இருந்தன. குளிரும் வறட்சியும் நிலவிய தூந்திரப் பகுதிகளில் ஏராளமான கம்பளி யானைகளும், மயிரடர்ந்த காண்டாமிருகங்களும், ஸ்டெப்பி காட்டெருமைகளும், குதிரைகளும், கஸ்தூரி மாடுகளும் திரிந்தன. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அவ்விடங்களிலிருந்து அவை மறந்துபோயின. அதற்குப் பருவநிலை மாற்றங்கள், உணவுப் பற்றாக்குறை, நோய்கள், வேட்டையாடி மனிதர்கள் என்று பல காரணங்கள் கூறப்படுகின்றன.

- கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்