மதுவிலக்குக் கொள்கை... பாஜகவின் இரட்டை வேடம்!

By டி.எல்.சஞ்சீவி குமார்

கடந்த மக்களவைத் தேர்தலின்போது நரேந்திர மோடி மீது கட்டமைக்கப்பட்ட பிம்பங்களில் ஒன்று, அவர் மதுவிலக்கின் தூதர் என்பது! குஜராத்தில் மதுவிலக்கு அமலில் இருக்கக் காரணமே மோடிதான் என்கிற அளவில் தமிழக பாஜக தலைவர்கள் அள்ளிவிட்டார்கள். காந்தி பிறந்த மண்ணான குஜராத்தில் காலங்காலமாக மதுவிலக்கு இருக்கிறது. ஆனால் மதுவிலக்கு விவகாரத்தில் உண்மையில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்பது இப்போது தெரியவந்திருக்கிறது. ‘நெடுஞ்சாலைக் கடைகளை மூடியதால் எங்களுக்கு ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. மீண்டும் நெடுஞ்சாலைகளில் மதுக் கடைகளைத் திறக்க உத்தரவிட வேண்டும். இதை அவசர மனுவாக ஏற்று விசாரணை நடத்த வேண்டும்’என்று பன்னாட்டு நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்கள் சார்பில் நேற்று முன் தினம் காலை உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால், இதனை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

உடனே, அன்றைய தினம் மதியமே பிரதமர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. நெடுஞ்சாலைகளில் மதுக் கடைகளைத் திறக்கப் புதிய சட்டம் இயற்ற முடியுமா என்று ஆலோசிக்கிறார்கள். யார் கொடுக்கின்ற அழுத்தங்கள் இவை? சுமார் 20 நாட்களாக விவசாயிகள் அரை நிர்வாணமாகப் போராடுகிறார்கள். வெளிநாட்டு நாளிதழ்கள்கூட எழுதுகின்றன. ஆனால், பாஜக அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. உண்மையில் யாருக்கான அரசு இது?

இன்னொரு பக்கம், பாஜக ஆளும் மாநிலங்க ளான உத்தர பிரதேசம், கோவா, ராஜஸ்தான், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் சத்தம் இல்லாமல் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்கள். இதன் மூலம் மூடப்பட்ட கடைகளைத் திறப்பது அவர்களின் நோக்கம்.

இரட்டை வேடம் போடும் பாஜக ஆட்சியாளர் களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் அல்ல தமிழக ஆட்சியாளர்கள். இங்கும் மாநில நெடுஞ் சாலைகளை மாவட்டச் சாலைகளாக மாற்றுவது குறித்து ஆலோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

சரி, அப்படிச் செய்துவிட முடியுமா? “உச்ச நீதிமன்றத் தீர்ப்பைச் செல்லாது செய்யும் வகையில் எந்த ஒரு சட்டமும் இயற்ற முடியாது. இதனைச் சமச்சீர் கல்விக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிசெய்துள்ளது. பல்வேறு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. பொதுவாக, ஒரு சட்டம் இயற்ற வேண்டும் எனில் அதற்கான காரணம் வேண்டும். அது பொதுநலன், தேச நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். மாறாக, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் உள்நோக்கம் கொண்டதாக இருக்கக் கூடாது. தற்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், பாஜக ஆளும் மாநிலங்களில் போடப்பட்டிருக்கும் அரசாணைகளுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் இப்படி ஒரு ஆணை பிறப்பித்தாலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். அதில் மிக எளிதாக அரசாணையை ரத்து செய்துவிடலாம்” என்கிறார் வழக்கறிஞர் பாலு.

சாதாரணமாகக் கிடைத்துவிடவில்லை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. கடந்த 2012-ல் வழக்கறிஞர் பாலு தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி என்.பால் வசந்த குமார் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது. இதில் பதில் மனு தாக்கல் செய்த டாஸ்மாக் நிர்வாகம், “தமிழ்நாடு சில்லறை மது விற்பனை விதிகள் 2003-ன் படி மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றுதான் ஒரு இடத்தில் மதுக் கடையைத் திறக்கிறோம். எனவே, மதுக் கடைகள் வைக்கப்பட்டதில் விதிமீறல்கள் நடக்கவில்லை. அந்த மதுக் கடைகள் அரசு புறம்போக்கு நிலங்களில் வைக்கப்படவில்லை. பட்டா நிலங்களில்தான் வைக்கப்பட்டிருக்கின்றன” என்று வாதிட்டது.

தமிழக காவல் துறை இயக்குநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “2002 முதல் 2012 ஜூன் 30 வரை மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தொடர்பாக 9,97,138 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ரூ. 54 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் மீது முறையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்” என்று கூறப்பட்டது. தமிழக அரசின் அதிகாரிகள் பல நாட்கள் வழக்கை இழுத்தடித்தார்கள்.

இறுதியாக 2013 பிப்ரவரி 25-ல் நீதிபதி என்.பால் வசந்தகுமார் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தார். “மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் அதிகளவு இருக்கும் மதுக் கடைகளால் அப்பாவி மக்கள் சாலை விபத்துகளில் பலியாகிவருகின்றனர். எனவே, வரும் மார்ச் 31-க்குள் தமிழக நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக் கடைகள் அனைத்தையும் அகற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டார். நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக் கடைகளை அகற்றிச் சொல்லி வந்த முதல் உயர் நீதிமன்ற உத்தரவு இது! ஆனால், நடந்தது என்ன?

தொடரும்...

- டி.எல்.சஞ்சீவிகுமார்

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

23 mins ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

6 days ago

மேலும்