மரண தண்டனை: சில கேள்விகள்

By பிரவீன் சுவாமி

தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதற்கும் அவனுக்கும் இடையே 50 மணி நேரம்தான் இருந்தது; மரிலின் கிரீன் என்ற இளம் பெண்ணையும் அவள் மணக்கவிருந்த ஜெர்ரி ஹிலார்டையும் 1982-ல் ஒரு கோடைக்காலத்தில் 'சுட்டுக்கொன்றதாக' அவன்மீது வழக்கு. கொலைக் குற்றம்சாட்டப்பட்ட அந்தோனி போர்ட்டர், போதை மருந்து கடத்தி விற்பவன்தான், அடியாள்தான் – ஆனால், அவன் கொலைகாரனில்லை.

நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் படிப்பின் ஒரு பகுதியாக, டேவிஸ் என்பவர் வழக்கை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, அந்த வழக்கை மீண்டும் துப்புத்துலக்கத் தொடங்கினார்கள். அப்போது முன்குறிப்பிட்ட கொலை சம்பவத்தில் உண்மையில் ஈடுபட்டவனிடமிருந்து, ஒப்புதல் வாக்குமூலத்தை வீடியோவில் பதிவுசெய்தார்கள். இந்தக் கொலை வழக்கை விசாரித்த போலீஸார், அல்ஸ்ட்ராய் சைமன் என்ற அந்தக் கொலைகாரனிடம் இதுகுறித்து விசாரிக்கவேயில்லை. ஆனால், இந்தக் கொலை சம்பவங்களுக்குப் பிறகு, இதில் தான் சம்பந்தப்படவில்லை என்று தெரிவிப்பதற்காகக் காவல் நிலையத்துக்குச் சென்ற அந்தோனி போர்ட்டர்மீது கொலை வழக்கு ஜோடிக்கப்பட்டது.

“இந்தக் கொலை வழக்கில் நான் நிரபராதி என்பதை நிரூபிக்க பன்னிரண்டரை ஆண்டுகளும் ஒரு திரைப்படமும் தேவையாகவிருந்தது என்பது இந்த அறையில் இருந்த ஒவ்வொருவருக்கும் அடிவயிற்றில் கிலியை ஏற்படுத்தியிருக்க வேண்டும்” என்று இரைந்தார், வேறொரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அந்தோனி ரண்டால். அவர் செய்யாத கொலைக்காகக் குற்றம்சாட்டப்பட்டு, விசாரிக்கப்பட்டு, மரண தண்டனையும் விதிக்கப்பட்டு, அந்த நாளை அச்சத்தோடு எதிர்நோக்கியிருந்தார். “சரியாக ஆராயாமல் நீதிவழங்கப்படும் முறைகுறித்து உங்களுக்கு அச்சம் ஏற்படவில்லையென்றால், அதுகுறித்து நான் அச்சப்பட வேண்டியிருக்கும்” என்றும் அவர் அரற்றினார்.

ஒரு பெண் மற்றும் 14 ஆண்களுக்கு விதித்திருந்த மரண தண்டனைக்குப் பிறகு, அவர்கள் தாக்கல்செய்த கருணை மனுக்களைப் பரிசீலிக்க அரசு நீண்ட காலம் எடுத்துக்கொண்டபடியால், அவர்களுடைய மரண தண்டனைகளை ஆயுள் தண்டனைகளாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கியது. மரண தண்டனை விதிப்பது, பிறகு கருணை மனுக்களைப் பரிசீலிப்பது தொடர்பாக அது புதிய வழிகாட்டு நெறிகளை அறிவித்தது. மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விஷயத்தில் மனிதாபிமானத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் அது கூறியது.

தீர்ப்பு அதற்குமேல் இந்த விவகாரத்தை ஆராயவில்லை. மரண தண்டனையால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்தும் அப்படி மரண தண்டனை விதித்தாலும்கூட கடுமையான குற்றங்களின் எண்ணிக்கை குறைவதில்லை என்பதையும் இந்தியர்கள் புரிந்துகொள்வதற்கான நேரம் இது.

மரண தண்டனைக்கு ஆதரவான குரல்களின் உச்சம்

2012 டிசம்பரில் மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தெரியவந்ததிலிருந்து, மரண தண்டனைக்கு ஆதரவான குரல்கள் ஓங்கி ஒலித்துவருகின்றன. அரசியல்வாதிகள், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள், அந்த குற்றச்செயலுக்கு எதிராக வீதிகளில் திரண்டு போராடியவர்கள் அனைவரும் அந்த வழக்கில் மரண தண்டனை அறிவிக்கப்பட்டபோது, கரவொலி செய்தும் ஓங்கிக் குரல் எழுப்பியும் அதை வரவேற்றனர். மக்களுடைய உணர்ச்சிமயமான அந்த எழுச்சிகளைப் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது.

தன்னுடைய மனைவி யாருடனோ தகாத உறவு வைத்திருக்கிறாள் என்ற சந்தேகம் ஏற்பட்டதாலேயே, தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேரையும் வெட்டிச் சாய்த்தார் குருமீத் சிங்.

மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட மகன்லால் பரேலா, கோடாலி எடுத்துத் தன்னுடைய 5 மகள்களையும் வெட்டிக் கொலை செய்தவர். மகன்களை மட்டும் அவர் ஒன்றும் செய்யவில்லை.

சோனியா சௌத்ரியும் அவருடைய கணவர் சஞ்சீவ் சௌத்ரியும் ஆறு பேரைக் கொன்றவர்கள் - நான்கு வயது, இரண்டு வயது, பிறந்து 45 நாள்களே ஆன சிசு ஆகிய குழந்தைகளும் அதில் அடக்கம்.

நீதித் துறையின் குழப்பம்

மரண தண்டனை விதிப்பதற்குரிய வழக்குகள் அல்லது குற்றங்கள் எவை என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக இதுவரை வரையறுத்ததில்லை. ஒடிசாவில் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸையும் அவருடைய இரண்டு சிறு குழந்தைகளையும் எரித்துக் கொன்ற ரவீந்திர பாலுக்கு ஆயுள் தண்டனைதான் வழங்கப்பட்டது. மதமாற்ற நடவடிக்கைகளில் ஸ்டெயின்ஸ் ஈடுபட்டதால், நடந்த கொலை என்று அதற்குக் காரணம் கூறப்பட்டது.

மரண தண்டனை விதிப்பதில் நிலையான வரைமுறையை உச்ச நீதிமன்றம் கடைப்பிடித்ததே இல்லை என்று ஓய்வுபெற்ற நீதிபதி அஜீத் ஷா உள்ளிட்டவர்கள் வாதிட் டுள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளில், முன்னுதாரணம் எது என்பதைப் புரிந்துகொள்வதிலும் தவறுகள் இருந்துள்ளன.

நீதித் துறையின் இந்தக் குழப்பம், மிகப் பெரிய சமூகப் பிரச்சினையைத் திரையிட்டு மூடிமறைத்துவிட்டது – அதாவது, மரண தண்டனைகுறித்து தேசிய அளவில் பொது விவாதம் நடைபெறவேயில்லை என்பதுதான் அது.

சமூக அறிவியலால் இந்த விவாதத்துக்குத் தீர்வு காண முடியாது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மரண தண்டனையால் கொலைக் குற்றங்கள் குறை கின்றனவா அதிகரிக்கின்றனவா, அல்லது எந்த விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லையா என்று கணிக்கவே முடிவதில்லை என்று அமெரிக்காவின் ‘தேசிய அறிவியல் அகாடமி’ சில ஆய்வுகளை மேற்கொண்டு, கருத்துத் தெரிவித்துள்ளது.

இதற்குச் சமூக அறிவியல் ஆய்வில் காணப்படும் குறைபாடுகளே காரணம். மரண தண்டனைகள் விதிக்கப்பட்ட பிறகு, அவர்களுடைய குணநலன்களில் ஏற்படும் மாற்றங்களை ஆராய, ஒரே விதமான இருவேறு குற்ற சமூகக் குழுக்களை அருகிலிருந்து கவனித்துவர வேண்டும்.

ஆனால், நாம் ஆராய்ந்தவரையில் ஒன்று நிச்சயம், மரண தண்டனைக்கும் வன்முறை சார்ந்த குற்றச் செயல்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. அதாவது, தண்டனை கடுமையாக இருப்பதால், அவ்வகைக் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என்று காட்ட எதுவுமில்லை.

அமெரிக்காவிலும் கனடாவிலும் உள்ள வெவ்வேறு மாகாணங்களில் குற்றச் செயல்களையும் அவற்றுக்குத் தரப்படும் வெவ்வேறுவித தண்டனைகளையும் கணக்கிலெடுத்து ஒப்பிட்டு நோக்கினால், தண்டனைகள் எப்படியாக இருந்தாலும், குற்றச் செயல்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன என்பது புலனாகிறது.

இதிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது - மரண தண்டனைகள், கொலைக் குற்றவாளிகளை எந்த விதத்திலும் அச்சுறுத்துவதில்லை.

பயங்கரவாதத்தால் பாதிக்கப்படும் நாடுகளில், மரண தண்டனைகள் அவசியம் விதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணங்களிலிருந்தும் நாம் விடுபட வேண்டும். நாஜி போர்க் கைதி அடால்ஃப் ஐச்மேன் என்பவரை 1962-ல் தூக்கில் போட்டதற்குப் பிறகு, இஸ்ரேல் அரசு யாரையும் மரண தண்டனைக்கு உள்ளாக்கியதில்லை. 1948-ல் தேசத் துரோக வழக்கில் மெய்ர் தோபியான்ஸ்கி என்ற ராணுவ வீரரை மரண தண்டனைக்கு உள்ளாக்கியது இஸ்ரேல். ஓராண்டு கழித்து அவர் நிரபராதி என்று தெரியவந்தது!

ஒவ்வொரு சமூகமும் மரண தண்டனைகள் விஷயத்தில் வெவ்வேறு விதமான வழிகளைக் கையாள்கின்றன. ரஷ்யாவில் மரண தண்டனைகளுக்குத் தடை இருக்கிறது. ஜப்பானும் அந்த வழியில் பயணப்பட்டுக்கொண்டிருக்கிறது. உலகின் 140 நாடுகள் மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று கூறிவரும் அதே வேளையில், 58 நாடுகள் மரண தண்டனை வேண்டும் என்று வைத்திருக்கின்றன. சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பெரிய நாடுகளில் மரண தண்டனை இன்னமும் சட்டப் புத்தகங்களில் இடம் பெற்றிருக்கின்றன. அதனாலேயே மரண தண்டனை நியாயமானது என்று கூறிவிட முடியாது.

இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம், மரண தண்டனை வேண்டுமா வேண்டாமா என்ற கொள்கை முடிவு எடுப்பதில் தங்கள் செல்வாக்கைச் செலுத்திவிடக் கூடாது என்கிறது அறிவியல் அகாடமி.

அறம் சார்ந்த கேள்விகள்

1939 முதல் அமெரிக்காவில் 143 கைதிகள் தூக்கு மேடையிலிருந்து விடு விக்கப்பட்டுள்ளனர் - அவர்களுடைய வழக்கில் அவர்கள் நிரபராதிகள் என்பதை நிரூபிப்பதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்ததால். அதே சமயம், தவறான சாட்சிகள், விசாரணைகள் அடிப்படையில் 10 அப்பாவிகள் மரணமும் அடைந்துள்ளனர்.

எனவே, இந்த விவாதம் சமூக அறிவியல் கருதுகோள்கள் தொடர்பானவை அல்ல. மரபியல் விஞ்ஞானம் வளரவளர, தூக்குக் கயிற்றிலிருந்து தப்பிய கைதிகளின் எண்ணிக்கையும் வளர்ந்துகொண்டே வருகிறது. குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டப்பட்டவர்கள் அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை என்பதையே கூடுதல் ஆதாரங்கள் நிரூபிக்கின்றன. இந்தியாவைவிட, குற்றவியல் வழக்கு நடைமுறைகள் அங்கு பலமாக இருப்பதால் இது சாத்தியமாகிறது.

சில வழக்குகளில் குற்றவாளி யார், அவர் செய்த குற்றம் என்ன என்பது சந்தேகமறத் தெரிந்துவிட்டதாகவே தோன்றும். உதாரணத்துக்கு, மும்பையில் நுழைந்து கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக்கொன்ற பாகிஸ் தானிய பயங்கரவாதி கஸாப் மற்றும் டெல்லி மருத்துவ மாணவியைப் பாலியல் பலாத்காரம் செய்தவர்கள்.

இருந்தாலும், நமக்குத் தெரியும் எந்த சாட்சியமுமே குற்றங்குறை இல்லாதது என்று கூறிவிட முடியாது. கண்ணால் கண்ட சாட்சியத்தின் பேரிலேயே பல வழக்குகளில் தீர்ப்புகள் கூறப்படுகின்றன – ஆனால், கண்ணால் பார்ப்பதும் பொய் என்று நம்முடைய உள்மனங்களுக்குத் தெரியும். நம்முடைய மூளை நம்மைத் தொடர்ந்து ஏமாற்றும் என்று தடயவியல் துறை உளவியல் நிபுணர்கள் தொடர்ந்து எச்சரிக்கிறார்கள்.

வயது, நிறம், குற்றம் நிகழ்ந்த இடத்தில் நிலவிய வெளிச்சம் உள்பட பல விஷயங்கள் தவறான புரிதலுக்கும் சாட்சியத்துக்கும் வழி வகுத்துவிடும் என்று தடயவியல் துறை நிபுணர்கள் கேரி வெல்ஸ், எலிசபெத் ஆல்சன் தெரிவிக்கின்றனர். ‘இரட்டைக் குருடு சோதனை’ என்பது, கண்ணால் பார்த்த சாட்சியங்களின் ஆய்வுகளில் பயன் படுத்தப்படுவதே இல்லை என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஒவ்வொரு விதமான நீதி வழங்கலும் ஒரு தவறைச் சரி செய்வதற்காகவே என்பதை உணர வேண்டும்.

குற்றவாளியைக் கொல்லக் கூடாது என்று சொல்வதிலும் தார்மிகரீதியாகத் தவறு இல்லாமல் இல்லை. தூக்கில் போடப்படுகிறவரின் மனித உரிமையை நினைத்துப் பரிந்துபேசும் அதே வேளையில், கொலைகாரர்களை விடுதலை செய்து சமூகத்தில் நடமாட விடுவதால் அப்பாவி களுக்கு ஏற்படக்கூடிய துயரங்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில், 18 வயதை எட்டாதவன் என்ற காரணத்தால், சிறார் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு, சிறைத் தண்டனை முடிந்து டெல்லி நகரில் நடமாடவிருக்கும் அவனை - எதிர்காலத்தில் பின்னிரவில் தன்னுடைய மகள் சந்திக்க நேர்வதை - எந்த ஆணும் அல்லது பெண்ணும் நிச்சயம் விரும்பவே மாட்டார்.

குற்றத்துக்கு ஏற்ப தண்டனையும் கடுமையாக இருக்க வேண்டும் என்று பலர் கோருகின்றனர். தண்டனை எது என்பதைத் தன்னிச்சையாக முடிவு செய்யக் கூடாது என்று கூறப்படுவதைப் பலர் விரும்பவில்லை. சூனியக்காரர்களை உயிரோடு புதைக்க வேண்டும் என்று சில சமூகங்களில் வலியுறுத்துகிறார்கள். அவர்களை அவர்களுடைய தவறுகளிலிருந்து திருத்தப் பார்க்க வேண்டும் என்று வேறு சில சமூகத்தவர் கருதுகின்றனர். மரண தண்டனைக்கு ஆதரவாகப் பேசுவோர் கூறும் விளைவுகளை ஆயுள் தண்டனைகள் மூலமும் ஏற்படுத்த முடியும்.

திருடுகிறவர்களைச் சிறையில் அடைக்க வேண்டும் என்பதை விடுத்து, கைகளை வெட்ட வேண்டும் என்று ஏன் கோருகிறோம்? கொலை செய்தவர்களைத் தூக்கில் போடுவதைவிட உயிரோடு கொளுத்திவிட வேண்டும் என்று ஏன் கேட்கிறோம்? குற்றம்செய்த ஒருவருக்கு அதிக அளவுக்கு உடல் துன்பத்தைக் கொடுக்க வேண்டும் என்று ஏன் துடிக்கிறோம்? பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்ற துடிப்பில் அப்பாவிகளும் தண்டிக்கப்படும் அபாயத்தை நாம் எந்த அளவுக்கு ஏற்கத் தயாராக இருக்கிறோம்?

தத்துவவாதிகளும் மரண தண்டனையும்

பல நூற்றாண்டுகளாகத் தத்துவவாதிகள் இதே கேள்வி களைக் கேட்டுவந்துள்ளனர். தண்டனை என்பதுகுறித்தே அவர்கள் கேள்வி கேட்டனர். குற்றம்செய்தவன் விளைவை அனுபவித்தே தீர வேண்டும் என்று ஒரு சாரார் கூறுகின்றனர். மற்றொரு சாராரோ, தண்டனை என்பது சட்டத்துக்கு அனைவரும் கட்டுப்பட்டவர்கள் என்பதைக் காட்டுவதால், அதை வரவேற்க வேண்டும். அதற்கு மேல் எதுவுமில்லை என்கின்றனர்.

தாமஸ் அக்வினாஸ் என்ற சிந்தனையாளர் கூறுகிறார்: ஒரு மனிதன் சமூகத்துக்கு ஆபத்தானவனாக இருக்கிறான், பாவத்தைச் செய்கிறான் என்றால் சமூகத்தின் நன்மையைக் கருதி அவனைக் கொன்றுவிட வேண்டும்.

அக்வினாஸ் காலத்திலேயே வாழ்ந்த மோஷே பென் மைமோன் அந்தக் கருத்திலிருந்து வேறுபடுகிறார்: குற்றம் முழுமையாக, சந்தேகமற நிரூபிக்கப்படாமல் தண்டனை வழங்கப்பட்டால், அங்கே நீதி வழங்கப்படவில்லை, நீதி வழங்கப்பட்டதைப் போன்ற மாயத் தோற்றம்தான் ஏற்பட்டது என்பதை நீதிபதியும் அறிவார், நாமும் அறிவோம் என்கிறார்.

ஒவ்வொரு நீதிபதியும், ஒவ்வொரு சமூகமும் பென் மைமோன் குறிப்பிடும் நிலையைத் தங்கள் வாழ்நாளில் சந்திக்க நேர்கிறது. மிக முக்கியமான கட்டத்தில் சரியான முடிவைத் தேர்வுசெய்வதில், வருத்தப்படும் அளவுக்கு நாம் மெத்தனமாக இருக்கிறோம் - அந்த அலட்சியம்தான் நம்மையெல்லாம் (மனிதரிலிருந்து) தாழ்த்திவிடுகிறது.

தி இந்து (ஆங்கிலம்), தமிழில்: சாரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்