சிலப்பதிகாரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இளங்கோவடிகளால் இயற்றப்பட்டது. இன்றுவரை தமிழர்களின் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்பட்டுவருகிறது. இன்றும்கூட அதில் கூறப்பட்டுள்ள ஊர்கள், நதிகள் எங்குள்ளன என்பதுபற்றி ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன. சில வருடங்களுக்கு முன்னால் அமெரிக்க இளைஞர் ஒருவர் கோவலனும் கண்ணகியும் பூம்புகாரிலிருந்து பிழைப்புத் தேடி மதுரைக்குச் சென்ற வழியை அடையாளம் கண்டு, அதே வழியில் தானும் பயணித்து எழுதிய அனுபவக் கட்டுரை ஒன்று வெளியானது.
இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டையொட்டி சிலப்பதிகாரக் கதைநாயகி கண்ணகிக்கு மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது. தலைவிரி கோலத்துடன் கையில் சிலம்பேந்தி ‘சான்றோரும் உண்டுகொல்’ என்று மதுரை வீதிகளில் ஆவேசத்துடன் கேட்பதுபோல் நிறுவப்பட்ட அந்தச் சிலை திடீரென்று அகற்றப்பட்டது. மக்கள் எதிர்ப்புக்குப் பின் அந்தச் சிலை மீண்டும் அங்கே நிறுவப்பட்டது. எந்தக் காரணத்துக்காக அந்தச் சிலை அகற்றப்பட்டது என்று இன்றுவரை எவருக்கும் தெரிவிக்கப்படவில்லை.
இலக்கியங்கள் மிஞ்சாது
20-ம் நூற்றாண்டில் வைக்கப்பட்ட அந்தச் சிலையையொட்டி எழுந்த பிரச்சினைகள் போதாதென்று, இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தையே பள்ளிப் பாடப் புத்தகங்களில் இருந்து அகற்ற வேண்டும் என்ற குரல்களும் எழுப்பப்பட்டுவருகின்றன. சிலப்பதிகாரத்தின் மதுரைக்காண்ட-கொலைக்களக் காதையில் ‘காற்சிலம்பைக் களவாடிய பொற்கொல்லன்’ என்றொரு வரியுண்டு. பொற்கொல்லர் சாதியினரை அவமானப்படுத்துவதாக அந்தச் சமூகத்தைச் சேர்ந்த அமைப்புகள், அந்தக் காவியத்தைப் பாடப் புத்தகத்தில் இருந்து நீக்கக் கோருகின்றனர்.
சிலப்பதிகாரத்தில், கோவலனிடம் இருந்த சிலம்பு திருடப்பட்டது என்று அவனுக்கு மரண தண்டனை அளித்த பாண்டிய மன்னனிடம் கண்ணகி முறையிட்ட பின், தனது தவறை உணர்ந்து மன்னன் உயிரைவிட்டதாகவும் ஆனால், பொற்கொல்லர்கள் பழிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கதையையொட்டிய கூற்றாக அதைப் புரிந்துகொள்ளாமல், சமூகத்தையே பழிப்பதாகக் கருதி பள்ளிப் பாடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது சரியல்ல. குறிப்பிட்ட தொழிலைச் செய்யக்கூடியவர்களையே தனி சாதியாகக் கருதுவதனால் வரக்கூடிய ஆபத்தையே இந்தச் சம்பவம் விளக்குகிறது. இப்படி ஒவ்வொரு சமூகத்தினரும் தங்களது சமூகத்தைக் குறிப்பிட்ட இலக்கியம் தவறாகச் சித்தரிக்கிறது என்று போர்க்கொடி தூக்கினால், பின்னர், தமிழில் பழைய இலக்கியம் ஏதும் மிஞ்சாது.
பாடப் புத்தகங்களில் உள்ள தவறான கருத்துகளை அல்லது நச்சுச் சிந்தனைகளை நீக்க நிபுணர் குழுக்களை அரசுகள் அமைப்பதில்லை. அதன் விளைவு, ஒவ்வொரு சிறு குழுவினரும் குறிப்பிட்ட பாடங்களோ அல்லது கருத்துச்சித்திரங்களோ தங்களது சமூகத்தை அவமதிக்கிறது என்று கூறிப் போராட்டங்களில் ஈடுபடுவதும் பின்னர் ஓட்டு வங்கி அரசியல் நடத்துவதற்காகக் கட்சிகள் ஆதரவுக் குரல் கொடுப்பதும், அதையொட்டி பாடப் புத்தகங்களைப் பரிந்துரைத்த கல்விக் குழு, புத்தகங்களைத் திரும்பப் பெறுவதும் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது.
கேலிச்சித்திரம்
சி.பி.எஸ்.இ. வெளியிட்ட பாடப் புத்தகம் ஒன்றில், அரசியல் நிர்ணய சபை என்ற ஆமையின் மீது டாக்டர் அம்பேத்கர் உட்கார்ந்திருப்பதுபோலவும் ஆமையைப் பண்டித நேரு சவுக்கால் அடித்துச் சீக்கிரம் போகச்சொல்வதுபோலவும் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் சங்கரின் கேலிச்சித்திரம் வெளியிடப்பட்டிருந்தது. அம்பேத்கரின் புகழை மங்கச் செய்வதாகக்கூறி ஒரு குழுவினர் போராட்டம் நடத்தவே, அந்தக் கேலிச்சித்திரம் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தை எழுதப் பணிக்கப்பட்ட தலைமைச் சிற்பியான டாக்டர் அம்பேத்கர் ஒருவரால் மட்டுமே அந்தச் சட்டத்தை எழுதியிருக்க முடியாது. இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் தாய்ச் சட்டத்தை வரிவரியாக அரசியல் நிர்ணய சபை விவாதித்து, பின்னர் ஓட்டெடுப்பின் மூலம்தான் இறுதி வடிவம் பெற்றது என்பது யாவரும் அறிந்ததே. பல மொழி, பல சமயங்கள் உள்ள இந்தியா போன்ற ஒரு பரந்த நாட்டுக்கான அரசமைப்புச் சட்டம் மந்திரத்தில் விளைந்திருக்க முடியாது.
1947-ல் சுதந்திரம் அடைந்த பிறகு, புதிய குடியரசுக்கான அரசமைப்புச் சட்டம் உருவாக்குவதில் மக்களுக்கு ஏற்பட்ட சோர்வினைப் பண்டித நேரு பிரதிபலிப்பதாகவே கேலிச்சித்திரத்தின் கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டும். பாடப் புத்தகங்களை அச்சடித்த வரிவடிவமாக மனப்பாடம் செய்யாமல், கேலிச்சித்திரங்கள் மூலம் மாணவர்களுடைய சிந்தனையைத் தூண்டினால், பாடங்களை நடத்தும் ஆசிரியர்கள் உண்மையான வரலாற்றை எடுத்துக்கூறி, மாணவர்களிடம் நல்ல கருத்தைப் பதிவுசெய்ய முடியும்.
வரவேற்பும் அலைக்கழிப்பும்
சி.பி.எஸ்.இ. தயாரித்த சமூகவியல் பாடத்தில், இந்தியாவின் பலதரப்பட்ட மக்களைப் பற்றி கூறும் வகையிலிருந்த நாடார் இனத்து மக்களைப் பற்றிய பாடக் குறிப்பு அந்த மக்களை அவமதிக்கிறது என்று நாடார் அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. அதற்கு ஆதரவாகப் பல அரசியல் கட்சித் தலைவர்களும் ஆதரவு அறிக்கைகளை வெளியிட்டனர். பணிந்து/பயந்துபோன கல்வி அதிகாரிகள், அந்தப் பாடத்தைப் புத்தகத்திலிருந்து நீக்கிவிட்டனர். அந்தப் பாடக் குறிப்பை எழுதிய கல்வி நிபுணர், அந்தக் குறிப்பைத் தயார்செய்ய அமெரிக்க அறிஞர் ஹார்டு கிரேவ் ஜூனியர் எழுதிய புத்தகத்திலிருந்து ஆதாரமாகத் திரட்டியதாகச் சமாதானம் கூறினார். அந்தப் புத்தகம் முதன்முறையாக எப்படி ஒரு ஒடுக்கப்பட்ட, பொருளாதார சமூகமாக இருந்த நாடார் சமுதாயம் தனது கடுமையான முயற்சிகளால் ஒரு வலிமை வாய்ந்த சமூகமாக மாறிய அதன் அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சிகளை வெளிப்படுத்தியது. அந்தப் புத்தகம் வெளியானபோது, அந்தச் சமூகத்தின் பெருமக்கள் பலர் அதை வாங்கித் தங்களது வரவேற்பறையில் பெருமையாக வைத்திருந்தனர். ஆனால், அப்படிப்பட்ட கருத்துகளைக் கூறிய பாடக் குறிப்பை மட்டும் நீக்கக் கோரிப் போராடியதும் அந்தச் சமூகத்தின் இரு நூற்றாண்டுக்கான சரித்திர வரலாற்றை மாணவர்களிடம் புரியவைப்பதில் தவறென்ன என்றும் புரியவில்லை.
அதே வரிசையில் சென்னைப் பல்கலைக்கழகம்
கல்விக்கான ஏடுகளைத் தணிக்கைக்கு உட்படுத்தி, இருட்டடிப்பு செய்வது பள்ளிக்கூடங்களில் மட்டுமின்றி, பல்கலைக்கழகங்களிலும் அதிகரித்துள்ளது. கவிஞர் இன்குலாப் எழுதிய கவிதைகளுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சில வருடங்களுக்கு முன்னால் தடை விதித்தது. அதன் தாய்ப் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழமும் அந்த வரிசையில் சேர்ந்துள்ளது வேதனைக்கு உரியது. புதுமைப்பித்தனின் சிறுகதைகள் இரண்டு தற்போது பலியிடப்பட்டுள்ளன.
புதுமைப்பித்தனின் ஆளுமையும் ஆக்கங்களும்பற்றி எழுதிய சுந்தர ராமசாமி இவ்வாறு கூறுகிறார் :-
“புதுமைப்பித்தனின் மொத்தப் படைப்பு களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அவரைப் பற்றி ஒரு முழுமையான விமர் சனத்தை உருவாக்கியவர் க.நா. சுப்ரமண்யம். கதை சொல்லும் மேன்மையும் சொந்தக் கற்பனை ஆட்சியும் புதுமைப்பித்தனுக்குக் கைவந்திருப்பது போல, தமிழில் இந்த நூற்றாண்டில் வேறு ஒருவருக்கும் இருந்ததில்லை என்பது சந்தேகத்துக்கு இட மில்லாமல் நிரூபிக்கப்பட்டுவிட்ட விஷயம்’’ என்கிறார்.
புதுமைப்பித்தனின் ‘துன்பக்கேணி’ என்ற சிறுகதையைப் பாடமாக வைத்தால், “இந்தக் கதைகள் எதிர்விளைவைத்தான் ஏற்படுத்தும். ஒற்றுமையாக இருக்க வேண்டிய
வகுப்பறைச் சூழலை இது சீர்குலைக்கும்” என்று யாழன் ஆதியும், “குற்றமுள்ள கதைகளை ஆதிக்கச் சிந்தனைதான் இலக்கியமாகப் பார்க்கும்” என்று சத்தியச்சந்திரனும் எழுதியுள்ளனர். பாடப் புத்தகத்திலிருந்து அந்தக் கதையை அகற்றக்கோரி இரண்டாமவர் போட்ட வழக்கு முடியும் முன்னரே சென்னைப் பல்கலைக்கழகம் புதுமைப்பித்தனின் இரு கதைகளைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவிட்டது. இதைக் கண்டித்துப் பல தமிழறிஞர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தலித் சிந்தனையாளர் ரவிக்குமார் விடுத்த எதிர்ப்புக் குரல் வரவேற்கத்தக்கது.
இலக்கியங்கள் உருவாக்கப்பட்ட காலம், சூழ்நிலை, இலக்கியவாதியின் கருத்துச் சுதந்திரத்தைக் கருதாமல் விடுக்கப்படும் எதிர்வினைகள் ஆரோக்கியமானதல்ல.
ஒருவேளை… புத்தகங்கள் சொல்லும் கருத்து தவறானதாகவே இருந்தாலும்கூட, அந்தக் கருத்துகளை எதிர்க் கருத்துகளின் மூலம்தான் வெல்ல முடியுமெயொழிய நீதிமன்ற உத்தரவுகளாலும், சிறு குழுக்களின் அதிகார ஆணைகளாலும் முறியடிக்க முடியாது. வெண்டி டோனிகரின்
புத்தகத்தை ‘பெங்குயின்' பதிப்பகம் திரும்பப் பெற்றாலும், அந்தப் புத்தகம் இன்று வலைத்தளங்களின் மூலம் உலகெங்கிலும் லட்சக் கணக்கான வாசகர்களைச் சென்றடைந்துள்ளது என்னும் செய்தி யாவருக்கும் எச்சரிக்கையாக இருக்கட்டும். ‘நூறு பூக்கள் மலரட்டும், ஆயிரம் கருத்துகள் மோதட்டும்’ என்பதே நமது லட்சியமாகட்டும்.
- சந்துரு,ஓய்வு பெற்ற நீதிபதி, சமூக விமர்சகர்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago