எஸ்.எஸ்.இராஜகோபாலன் பேட்டி
மீண்டும் உள்ளாட்சி நிர்வாகங்களின் கையில் பள்ளிக்கூடங்கள் வருவதெல்லாம் இனி நடக்கும் கதையா?
அரசியல்வாதிகள் மனசு வெச்சா எல்லாம் நடக்கும். ஆனா, இதுக்குப் பின்னாடி சுத்துற பணம் அவங்களை மாற விடும்கிற நம்பிக்கையை என்கிட்டேயே பறிச்சுடுச்சு. ஒரு ஆசிரியர் நியமனத்துக்குப் பின்னாடி பத்து லட்சம் புரளுதுங்கிறாங்க. பணி மாறுதலுக்குப் பின்னாடி ரெண்டு லட்சம் புரளுதுங்கிறாங்க. பிறகெப்படி உள்ளாட்சி நிர்வாகம் கையில பள்ளிக்கூடங்களை ஒப்படைக்க மனசு வரும்?
பண்டைய இந்தியாவின் இணைப்பு மொழி என்பதோடு இன்றைக்கும் நமக்கான பல பொக்கிஷங்களை உள்ளடக்கியிருக்கும் மொழி சம்ஸ்கிருதம். அது இந்தியோ, சமஸ்கிருதமோ பள்ளிக்கூடங்களில் கூடுதலாக விருப்பப் பாடமாக ஒரு மொழியைக் கொண்டுவருவதில் என்ன பிரச்சினை? கட்டாயமாக்கினால்தானே சிக்கல்?
இந்தியால உள்ள பத்து கோடிப் பிள்ளைகளுக்கும் சம்ஸ்கிருதம் சொல்லிக்கொடுக்க மொதல்ல அம்பது லட்சம் சம்ஸ்கிருத ஆசிரியர்கள் இருக்காங்களா? இன்னைக்கு நாடு முழுக்க சம்ஸ்கிருதம் தெரிஞ்சவங்க எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டாது. இங்கே சம்ஸ்கிருதம் பரீட்சை எழுதறவன் பதிலைத் தமிழ்லேயோ ஆங்கிலத்திலேயோ எழுதிக்கிட்டிருக்கான். நான் எந்த மொழிக்கும் விரோதி இல்லை. ஆனா, பள்ளிக்கூடம் மட்டுமே மொழிகளைச் சொல்லிக்கொடுக்குற இடம் இல்லை. இந்தி கத்துக்கணும்னா இந்தி பிரச்சார சபா இருக்குதுல்ல? அப்படியான அமைப்புகளை உண்டாக்கிட்டு போங்க. நீங்க பள்ளிக்கூடத்துலேயே எல்லாத்தையும் கொண்டுவந்து புகுத்தும்போது குழந்தைங்க மிரண்டு போகுது.
நான் படிக்கிற காலத்துல ஆறாவது வகுப்புலதான் ஆங்கிலத்தை அறிமுகப்படுத்தினாங்க. அடுத்த ரெண்டு வருஷத்துக்குள்ள ஆங்கிலத்துல ஒரு கவிதை, கதையைப் படிக்கிற அளவுக்குத் தேறிட்டோம். ஏன்னா தாய்மொழியில இருந்த அடித்தளம். இன்னைக்கு இங்கிலீஷ் இங்கிலீஷ்னு சொல்லி என்னத்த செஞ்சிருக்கோம்? தமிழ்லேயும் சரி, ஆங்கிலத்துலேயும் சரி, பிழையில்லாம ஒரு கடிதம் எழுதக்கூடத் திராணியில்லாத கூட்டத்தை உருவாக்கிக்கிட்டிருக்கோம். பன்னிரெண்டு வருஷம் பள்ளிக்கூடம் சொல்லிக்கொடுக்குற ஆங்கிலத்தைவிட ஒருத்தன் எளிதா ஒரு சில வருஷங்கள்ல இந்தியைச் சீக்கிரம் படிச்சுடுறான், பள்ளிக்கூடத்துக்கு வெளியில அவனா விரும்பிப் போகும்போது. முழு வருஷ பரீட்சை முடிஞ்சதும் புத்தகத்தைச் சுக்குநூறா கிழிச்சு வீசிட்டுப்போற பசங்களை நான் பார்த்திருக்கேன். ஏன் புத்தகத்துக்கு மேல படிச்ச குழந்தைக்கு இவ்வளவு வெறுப்பு வருது? அவனால நம்மள கிழிக்க முடியலை; புத்தகத்தைக் கிழிக்கிறான். பள்ளிக்கூட அளவுல ஒரு அளவுல ஒரு மொழியைக் கொண்டுவர்றதுங்கறதே திணிப்புதான்.
நாம் தொடர்ந்து அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவம், கல்வியை அரசு முழுவதுமாகத் தன் கையில் வைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறோம். ஆனால், உலகமயமாக்கச் சூழலுக்குப் பிந்தைய காலகட்டம் ஒரு உண்மையை அப்பட்டமாகச் சொல்கிறது. நம்முடைய அரசுப் பள்ளிகள் பெருமளவில் வீழ்ந்துகொண்டிருக்கின்றன. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இதில் முக்கியமான பங்கு உண்டு. அரசு போதிய அளவுக்குக் கல்வியில் முதலீடு செய்யவில்லை என்பது ஒருபுறமிருக்க, கல்விக்காக அரசு செலவழிக்கும் கொஞ்ச நஞ்ச பணமும்கூட உருப்படியான பலனைத் தரவில்லை. இதற்கு முக்கியமான காரணம், அரசுப் பள்ளி ஆசிரியர்கள். மாறாக, சுமாரான உள்கட்டமைப்பு, சொற்ப சம்பளத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை வைத்துக்கொண்டு தனியார் பள்ளிகள் அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்படுகின்றன. இந்த நிலையில், பாத்திரத்தின் ஓட்டைகளைப் பொருட்படுத்தாமல், மேலும் மேலும் தண்ணீர் மட்டும் வேண்டும் என்று கேட்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும்?
எந்த அடிப்படையில் அரசுப் பள்ளிகளைத் தரமற்றவைனு சொல்றீங்க? நான் இதை ஏத்துக்கலை. மதிப்பெண் அடிப்படையில தரம் பிரிக்குறதே தவறு. மாணவர் சேர்க்கையிலேயே பாகுபாடுகள் வந்துடுது இல்லையா? பொதுவுல கல்வி மோசமாகி இருக்குன்னா அரசுப் பள்ளி, தனியார் பள்ளி ரெண்டுமே மோசமாகி இருக்கு.
இல்லை. அரசுப் பள்ளிகளின் நிலைமை நிச்சயமாக மோசமாகி இருக்கிறது. நீங்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் பாதுகாக்க முற்படுகிறீர்களோ என்று நினைக்கிறேன்.
இல்லை. ஆசிரியர்களோட குறைகளைத் தொடர்ந்து பேசிக்கிட்டிருக்குறவன் நான்கிறது உங்களுக்கும் தெரியும். நான் தலைமையாசிரியர் உத்யோகத்தில் சேர்ந்த காலத்தில் எச்.எஸ்.எஸ்.லாரன்ஸ் என்று ஒரு அதிகாரி ஆய்வுக்காக வந்தார். ‘மொத்தம் எத்தனை பேர் படிக்கிறாங்க?’னு கேட்டார். ‘815 பேர்’னு சொன்னேன். ‘அப்படின்னா, ஒரு நாள் அலுவலகப் பணி, நாலு நாள் ஆய்வுப் பணி’ன்னு சொல்லி அஞ்சு நாட்கள் கிராமத்தில் தங்கி ஆய்வு செஞ்சார். ஒவ்வொரு ஆசிரியரும் எப்படி பாடம் நடத்துறாருங்கிறதைப் பார்க்க ஒரு முழுப் பிரிவும் வகுப்புல உட்கார்ந்து கவனிப்பார். பையன்களோட நோட்டுப் புத்தகங்களை வாங்கிட்டுப்போய், ராத்திரி முழுக்க விழிச்சுருந்து பார்த்து, ஆசிரியர்கள் செஞ்ச தவறுகளைப் பச்சை மையால் சுழிச்சு, திரும்ப அனுப்பி வைப்பார். இப்படியெல்லாம் அன்னைக்கு ஆய்வு நடக்கும். இன்னைக்கு நெலைமை என்ன? வருஷக் கணக்கில் ஆய்வு நடக்காத / அதிகாரி போய் பிரியாணி சாப்பிட்டுவிட்டு வரக்கூடிய பள்ளிக்கூடங்கள் உண்டு. பள்ளிக்கூடங்களுக்கு முதல்வர்கள் வருவாங்க, திடீர்னு. அமைச்சர்கள் வருவாங்க. இன்னைக்கு யாரோட கண்காணிப்பும் இல்லை. ஆசிரியர் எப்படி இருப்பார்!
இன்னைக்கு அரசுப் பள்ளிகள் தரமில்லைன்னு ஒருத்தர் சொன்னா, முதல்ல மறுக்க வேண்டியவங்க யார்? கல்வி அமைச்சரும் கல்வி இயக்குநரும். ‘என் பள்ளிக்கூடங்கள்லாம் நல்லாதான் இருக்கு’ன்னு அவங்கதான் சொல்லணும். அப்படிச் சொல்ல முடியுமா? முடியாது. ஏன்? மக்கள் கேட்பாங்க. ‘அப்படியா, உங்க பிள்ளைகள் எங்கே படிக்குது?’ன்னு. அரசுப் பள்ளிகளை நிர்வகிக்கிற தலைமைப் பொறுப்புகள்ல இருக்குறவங்களுக்கே அந்த அமைப்பு மேல உள்ள நம்பிக்கை இப்படி வெளிப்படும்போது, நாம கீழே இருக்குறவங்க கிட்டே கொஞ்சம் கருணையோட அணுகலாம்னு நெனைக்கிறேன்.
ஒரு அரசுப் பள்ளி ஆசிரியருக்கு ஆயிரத்தெட்டு வேலைகளைக் கொடுக்குது அரசு. ஒரு பள்ளிக்கூடத்துல அஞ்சு வகுப்பு இருக்குன்னா, குறைஞ்சது அஞ்சு ஆசிரியர்கள் வேணுமா இல்லையா? தனியார் பள்ளிகள் அப்படித்தானே நடக்குது? அரசுப் பள்ளி மட்டும் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளியா எப்படி நடக்க முடியும்? இப்படி நிறையப் பிரச்சினைகள் இருக்கு.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பிரச்சினைகளை மறுப்பதற்கில்லை. ஆனால், அவர்களைக் காட்டிலும் குறைந்த ஊதியத்தில், கூடுதலான இன்னல்களைத் தனியார் பள்ளி ஆசிரியர்கள் சுமக்கிறார்கள். எந்த ஆட்சி மாறினாலும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கங்கள் அரசியல் செல்வாக்குடனேயே இருக்கின்றன. சம்பளம், சலுகைகளில் ஒரு பிரச்சினை என்றால், உடனே போராட்டத்தைக் கையில் எடுக்கும் ஆசிரியர் சங்கங்களும் ஆசிரியர்களும் அரசுப் பள்ளிகளின் இருப்பையே பாதிக்கும் விஷயங்களில் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்? கடைசி ஏழையின் குழந்தையும் தனியார் பள்ளியை நோக்கி நகர்த்திவிட்டால், அரசுப் பள்ளிகள் என்ற அமைப்புதான் எதற்காக? அரசுப் பள்ளிகளைக் காக்கும் அடிப்படைக் கடமை ஆசிரியர்களுக்கு இருக்கிறதுதானே?
ஒரு நாள் பள்ளிக்கூட வளாகத்துல ஒருத்தர் நின்னு சிகரெட் பிடிச்சுக்கிட்டுருந்தார். நான் போய், ‘ஏன்யா.. படிச்ச ஆள் மாதிரி இருக்கிற. அறிவு இல்லையா?’னு கேட்டேன். சிகரெட்டை அவர் கீழே போட்டு மிதிச்சார். அவர் புதுசா வந்திருக்குற கல்வி அதிகாரிங்குறது அதுக்குப் பிறகு தெரிஞ்சுது. ‘வெல்கம் சார். ஆனா, பள்ளிக்கூட வளாகத்துல இந்த சிகரெட் துண்டு கிடக்கக் கூடாது. நான் இதை என் கையால எடுக்க மாட்டேன். மாணவர்களையும் எடுக்க விட மாட்டேன். நீங்கதான் எடுக்கணும்’னேன். அவர் எடுத்துப் போட்டார். இன்னைக்கு இது சாத்தியம் இல்லைங்கிறது தெரியவரும்போது, இன்னைய ஆசிரியர்களை நெனைச்சு வருத்தமாத்தான் இருக்கு. இந்த இழிவுக்கு ஆசிரியர் சங்கங்களும் பொறுப்பேற்கணும். ஒரு தொழிற்சங்கத்துக்கு எப்போ உண்மையான செல்வாக்கு இருக்கும்னா, அது அதுக்குக் கீழே இருக்கவங்க கிட்ட நேர்மையான தொழில் கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும்போதுதான் இருக்கும். இன்னைக்கு ஆசிரியர் சங்கங்களோட தலையாய வேலை, பணி நியமனம், இடமாறுதலுக்காக உழைக்கிறதுன்னு ஆயிட்டு. எந்தச் சங்கம் நல்ல வசூல் தருதோ அதைத்தான் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் விரும்புறாங்க. தன்னைத்தானே விமர்சிக்காத யாரும் உருப்பட முடியாது. சுய மரியாதையை இழக்குறவங்க பொது மதிப்பையும் இழந்துதான் ஆகணும்.
இந்தியா போன்ற ஒரு நாட்டில் கல்வியை அரசாங்கம் மட்டுமே அனைவருக்கும் கொண்டுபோய் சேர்த்துவிட முடியும் என்று நம்புகிறீர்களா? மேலும், நாம் கடந்து வந்திருக்கும் காலங்களில் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆற்றியிருக்கும் பணிகளை நீங்கள் எந்த அளவுக்குக் கருத்தில் எடுத்துக்கொள்கிறீர்கள்? தனியார் என்றாலே மோசம் என்கிற பார்வை சரிதானா?
இல்லை. நான் அப்படிச் சொல்லலை. எனக்கும் தனியார் நிர்வாகத்துல வேலை செஞ்ச அனுபவம் இருக்குங்குறதை நீங்க மறந்துட வேணாம். நான் வேலை செஞ்ச கோவை பி.எஸ்.ஜி. நிறுவனத்தையே எடுத்துக்குவோம். பி.எஸ்.ஜி.ரங்கசாமி நாயுடு, அவருடைய தம்பி பி.எஸ்.ஜி.கங்கா நாயுடு ரெண்டு பேரும் கீழே கிடந்த சமூகங்களைக் கல்வி மூலமா மேல கொண்டுவர்றதையே லட்சியமா எடுத்துக்கிட்டு தொடங்கின நிறுவனம் அது. பள்ளிக்கு ‘நாயுடு மஹா ஜனப் பள்ளி’னு பேர் வைக்கலை. ‘சர்வஜனா பள்ளி’னு பேர் வெச்சாங்க. எவ்வளவு பெரிய சிந்தனை!
கங்கா நாயுடு. காந்தியர். ஹரிஜன சேவையில ரொம்ப ஈடுபாடா இருந்தார். அவர் தோட்டத்துல வேலை கேட்டுப் போறவங்ககிட்டகூட, பிள்ளைளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவெச்சா வேலை தர்றேன்னு சொல்லி வேலை கொடுத்தவர் அவர். பள்ளிக்கூடம் போகாத பிள்ளைகள் எங்கே கண்ணுல பட்டாலும் பள்ளிக்கூடத்துக்குத் தூக்கிக்கிட்டு வந்துடுவார். பள்ளிக்கூடம் முன்னால் ஒரு பெரிய கிணறு இருக்கும். கொடில பத்து பதினைஞ்சு துண்டு தொங்கும். பிள்ளைகளைக் கிணத்துல குளிக்க வெச்சு, உடம்பைத் துவட்டிவிட்டு, அதையே இடுப்பில் கட்டி வகுப்புக்குக் கொண்டாந்து விட்ருவார். ஆசிரியர்கள் கூட்டத்துல சொல்வார், ‘பள்ளிக்கூடத்துக்கு வர்றவனுக்குச் சொல்லிக்கொடுப்பதற்காக நாங்க பள்ளிக்கூடம் தொடங்கலை. பள்ளிக்கூடத்துக்கு வராதவங்களை வர வைக்கிறதுக்காகத்தான் பள்ளிக்கூடம் தொடங்கியிருக்கோம். அதனால, முதல் கவனத்தை அவங்களுக்குக் கொடுங்க’ம்பார்.
பிஎஸ்ஜி கலைக் கல்லூரியை அவர்தான் தொடங்கினார். அப்போ துணைவேந்தரா இருந்த ஏ.எல்.முருகையா, ‘ஆலை முதலாளிகள் ஆலைகளை வேண்டுமானால் சிறப்பா நடத்தலாம். கல்லூரிகள் ஆலைகள் இல்ல. அதனால அனுமதி தர முடியாது’ன்னுட்டார். கங்கா நாயுடுவுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘முதலியார்வாள், நீங்க இப்படிப் பேசுவது நியாயமில்லை. நாங்க படிக்காதவங்க. மத்தவங்களைப் படிக்க வைக்கணும்னு ஆசைப்படுறோம். அதுக்கு நாங்க என்ன செய்யணும்னு நீங்க சொல்லணுமே தவிர, ‘உங்களால முடியாது’ன்னு சொல்றதுக்கு நீங்க அங்கெ இல்லை’ன்னார். சொன்னதோட இல்லை. அடுத்த பத்தே நாள்ல ஒரு மாணவர் விடுதியைக் கட்டினார். அரிசிக் கிடங்கைக் கல்லூரியா மாத்தினார். காந்தியே பாராட்டின சேவை அது.
இப்படிக் கல்வியைச் சேவையா நெனைச்சு உள்ளே வந்து பெரிய மாற்றங்களை உருவாக்கின ஏராளமான நிறுவனங்கள் இருக்காங்க. இது தவிர, தொழில்ரீதியாவே நியாயமான கல்விக் கட்டணத்தோட இன்னைக்கும் சிறப்பா இயங்குற கல்வி நிறுவனங்கள் இருக்கு. நான் இவங்களையெல்லாம் மதிக்கிறேன். ஆனா, ஒரு அரசாங்கம் தன்னோட பொறுப்புகளை முழுக்கத் தனியார் மேல தள்ளிவிட்டுட்டு விலகிக்க முடியாது. இன்னைக்கு மக்களோட ரத்தத்தைத் தனியார் கல்வி நிறுவனங்கள் உறிஞ்சுக்கிட்டுருக்கு. வெளியில மக்கள் நெனைச்சுக்கிட்டு இருக்குற மாதிரி அவங்களோட கை ஏதோ அவங்களோட நிறுவனங்கள்ல படிக்குற மாணவர்கள் மேல மட்டும் இல்லை; அரசோட நடவடிக்கைகள்ல இருக்கு, எல்லோருக்குமான பாடத்திட்டத்துல இருக்கு, நாட்டோட கல்விக் கொள்கைல இருக்கு. இதையெல்லாம் எப்படி அனுமதிக்க முடியும்?
இந்த இடத்தில் கொஞ்சம் விளக்கமாகப் பேச முடியுமா?
ஒரு உதாரணம் சொல்றேன், மெட்ரிக் பள்ளிகளை நடத்துபவர்கள் எவ்வளவு பெரிய ஆதிக்க சக்தியா உருமாறியிருக்காங்க தெரியுமா? நான் பாடத்திட்ட உருவாக்கக் குழுக்கள்ல இருந்திருக்கிறேன்கிறது உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும். என் தலைமையிலான பாடத்திட்டக் குழுவில் ஒருவர் இருந்தார். அரசுப் பள்ளியில அவர் தலைமை ஆசிரியர். இன்னொரு பக்கம் திருச்செந்தூரில் தனியார் பள்ளி நடத்துகிறவர். அவர் வேலை பார்த்த பள்ளிக்கூடத்தில் 35% தேர்ச்சின்னா, அவர் நடத்துற பள்ளியில 100% தேர்ச்சி. கூட்டத்துக்கு வந்த மனுஷன் பொழுதும் செல்பேசியில பேசிக்கிட்டே இருந்தார். ‘ஒண்ணு, நீங்க போன் பேசுங்க. இல்லை, கூட்டத்தைக் கவனிங்க. ரெண்டையும் ஒரே நேரத்தில் செய்யாதீங்க’ன்னேன். என்னைப் பார்த்து நக்கலா சிரிச்சார். மதியம் எங்க எல்லோருக்கும் ஒரு இடத்திலேர்ந்து சாப்பாடு வருது; அவரு கல்வித் துறை இயக்குநர்களோட சாப்பிடப்போறேன்னு சொல்லிட்டுப் போயிட்டார். அப்புறம் ஒரு நாள்கூடக் கூட்டத்துக்கு வரலை. ஆனா, அவரு என்ன நெனைச்சாரோ அதைச் சாதிச்சுக்கிட்டார்.
இன்னொரு முறை என் தலைமையிலான பாடத்திட்டக் குழுவுல ஒரு முக்கியஸ்தரோட மருமகள் உறுப்பினரா வந்து உட்கார்ந்திருந்தார். அவருக்குத் தமிழே தெரியாது. மலையாள வழியில் படித்தவர். கல்வி அதிகாரிகள் எப்படி நட்சத்திர விடுதிகள்ல தங்குறாங்க? ஆடம்பரமான அவங்களோட உணவுச் செலவுக்கு யார் காசு கொடுக்குறாங்க? குடும்பத்தோட அவங்க ஊர் சுத்துறதுக்கு கார் எங்கேயிருந்து வருது? அவங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் தனிப்பட்ட வகையில இந்தக் களவு உறவுக்கான தேவை என்ன? இதெல்லாம் மக்களுக்குத் தெரியுமா?
இன்னைக்கு, ‘பாடநூல்ல கேட்கப்பட்ட கேள்விகளைத்தான் பரீட்சையிலும் கேட்கணும்’னு விதியைக் கொண்டுவந்தவங்க இந்த மாதிரி கல்வி வியாபாரிகள். கணிதப் பாடத்தில் 60% கேள்விகளை மாதிரி வினாக்கள்லேர்ந்து கேட்கணும்னு விதியைக் கொண்டுவந்தது அவங்க. இந்த ரெண்டு விஷயம் மட்டும் மேல்நிலைக் கல்வியை எவ்வளவு மோசமாக்கியிருக்குனு நல்ல ஆசிரியர்கள்கிட்ட கேட்டுப்பாருங்க. பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சிட்டுப்போன பாதிப் பேரு கல்லூரில எடுத்த எடுப்புல தேர்வுல அடி வாங்குறான். ஏன்? இதெல்லாம் மக்களுக்குத் தெரியுமா?
அவங்க காசு சம்பாதிக்குறதுக்கு ஏத்த மாதிரி எல்லாத் தையும் வளைக்குறாங்க. உண்மையில, இன்னைக்குத் தனியார் பள்ளிக்கூடங்கள்ல மட்டும் இல்லை; அரசாங்கப் பள்ளிக்கூடங்கள்ல படிக்கிற மாணவர்களோட தலையெழுத்தையும் தீர்மானிக்கிறது இந்தக் கல்வி வியாபாரிகள்தான்!
இதையெல்லாம் மாத்த ஒரு மாபெரும் இயக்கம் வேணும். அதை உருவாக்கக்கூடிய சக்தி இன்னைக்கு நாட்டுல இல்லை.
கல்வித் துறை முன்னின்று சமூக மாற்றத்தை உருவாக்க முடியாதா?
அப்படித்தான் ரொம்ப நாள் நான் நம்பி ஏமாந்தேன். சி.டி.குரியன்தான் சொன்னார், ‘கல்வி மாற்றம் சமூக மாற்றத்தை உருவாக்காது. சமூக மாற்றம்தான் கல்வி மாற்றத்திற்குத் தூண்டுகோலா அமையும்’ன்னு. அவர் சொன்னது சரி. எந்த நாட்டில், சமூக மாற்றம் ஏற்படாமல் கல்வி மாற்றம் ஏற்பட்டிருக்கு? ‘கற்றவை எல்லாம் மறந்த பின்னால், எது தக்கி நிற்கிறதோ அதுதான் கல்வி’ன்னார் பி.எஃப்.ஸ்கின்னர். அதாவது, வள்ளுவர் அவர்தம் எச்சத்தால் காணப்படும்ன்னு சொன்னாரே அதுதான் கல்வி. நீங்க கணக்கை மறக்கலாம், அறிவியலை மறக்கலாம், படிச்சதன் விளைவா எந்தப் பண்புகள் உங்கள் ரத்தத்தில் ஏறி நிக்குதோ அதுதான் கல்வி. சமூக மாற்றம் நிகழாமல் கல்வி மாற்றம் பற்றி பேசுவது அபத்தம்.
‘டேக்ஸானமி ஆப் லிசனிங்’னு ஒரு புத்தகம். கேட்பதில் எத்தனை விதமான முறைகள் இருக்குங்கிறது சம்பந்தமான புத்தகம் அது. இப்ப நாம ரெண்டு பேரும் பேசிகிட்டு இருக்கோம் இல்லையா? நான் பேசுறதை நீங்க கேட்குறதும், நீங்க பேசுறதை நான் கேட்குறதும் ஒரே நிலைல அமையுறது இல்லை. அப்புறம் நாம ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கும்போது மூணாவதா ஒருத்தர் வந்து அமைதியா கவனிச்சுட்டு இருக்கார்னு வெச்சுக்குங்க. அவருடைய கேட்டலின் நிலை வேற. தவிர, ரெண்டு பேர் பேசிக்கிட்டிருக்கும்போது மூணாவதா ஒருத்தர் வந்து உட்காரும்போது நம் பேச்சின் தொனி மாறும். கோபமாப் பேசினாகூட சத்தத்தை அடக்கிக்குவோம். கவனிச்சுருக்கீங்களா? இப்படிப் பேசுதல், கேட்டலில் மொத்தம் 161 வகை இருக்குன்னு அந்த நூல்ல சொல்லியிருக்காங்க. அதாவது, ஒரு பொது இடத்தில் காது கேட்பது வேறு திறன், இருவர் பேசும்போது காது கேட்பது வேறு திறன், மைக்ரோ போனில் காது கேட்பது வேறு திறன். இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு திறன்கிறாங்க. அப்போ அம்பது பிள்ளைகள் காதுகளுக்கு ஒரு விஷயத்தைக் கொண்டுபோக வேண்டிய ஒரு ஆசிரியர் தன்னை எவ்ளோ தகுதிப்படுத்திக்க வேண்டி இருக்கு? நூத்தி இருபது கோடிப் பேர் காதுகளுக்கு ஒரு விஷயத்தைக் கொண்டுபோக வேண்டிய அரசாங்கம் எவ்ளோ தகுதிப்படுத்திக்க வேண்டி இருக்கு?
ஆசிரியர் உத்யோகம் கிடைச்சு அந்தியூர் பள்ளிக்கூடத்துல வேலைக்குச் சேர்ந்தேன். முதல் நாள் சத்தமா பாடம் நடத்திக்கிட்டிருந்தேன். அங்கே தலைமையாசிரியரா இருந்தவர் சூரிய நாராயண சாஸ்திரி. அவர் சொன்னார், ‘ராஜகோபால், ஷௌட்டிங் இஸ் நாட் டீச்சிங்’னு. அதுதான் ஒரு ஆசிரியரா நான் கத்துக்கிட்ட முதல் பாடம். இன்னைக்கு நம்ம கல்விக்கூடங்கள் மட்டும் இல்லை; அரசியல் கட்சிகள், அரசாங்கம்னு எல்லாருமே சத்தம் போடுறதுதான் செயல்பாடுங்கிற முடிவுக்கு வந்துட்டாங்க. ரொம்ப கஷ்டம்!
- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
21 mins ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago