60 வருடங்களுக்கு முன்பு பர்மாவில் கைவிட்டுப்போன லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மீட்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது, நகரத்தார் என்று சொல்லப்படும் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகம்.
“கெட்டாலும் செட்டி… கிழிந்தாலும் நெய்(யும்) புடவை” என்பார்கள். என்னதான் வறிய நிலைக்குப் போனாலும், தங்களது கௌரவத்தை விட்டுக்கொடுக்காதவர்கள் செட்டிமார்கள். அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்பட மாட்டார்கள். அதேபோல், தங்களது சொத்துக்களையும் மற்றவர்களுக்கு விட்டுத்தர மாட்டார்கள். சரி, இவர்களுக்கும் பர்மா சொத்துக்களுக்கும் என்ன சம்பந்தம்?
விளைநிலமும் ரப்பர் தோட்டமும்
காவிரிப்பூம்பட்டினத்தில் உப்பு வணிகம் செய்து கொண்டிருந்த செட்டியார்கள், பழைய ராமநாதபுரம் ஜில்லாவுக்கு இடம்பெயர்ந்த பிறகு, தொழிலையும் மாற்றிக்கொண்டார்கள். மலேசியா, சிங்கப்பூர், பர்மா உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று, ‘கொண்டு விற்றல்’ என்று சொல்லப்படும் ‘லேவாதேவி’ (வட்டித் தொழில்) தொழிலைச் செய்ய ஆரம்பித்தார்கள். மலேசியாவுக்குப் போனவர்கள், வட்டி வருமானத்தை ரப்பர் தோட்டங்களாக்கினார்கள். பர்மாவுக்குப் போனவர்கள், வருமானத்தை விளைநிலங்களாக மாற்றினார்கள்.
19-ம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே செட்டியார்கள் பர்மாவுக்குப் போய்விட்டார்கள். கிழக்கு பர்மாவில் உள்ள மோல்மேன் என்ற இடத்தில்தான் இவர்கள் முதன்முதலில் குடியேறினார்கள். ஆண்டு முழுவதும் ஓடிக்கொண்டிருக்கும் ‘கோல்டன் வாட்டர்’ என்று சொல்லப்படும் ஐராவதி நதியின் வளமையும் லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களும் இருந்தும் அவற்றைப் பயன்படுத்தத் தெரியாமல் முடங்கிக்கிடந்தார்கள் பர்மிய மக்கள். வறுமையும் சோம்பலுமே இதற்குக் காரணம்.
பசுமை தேசம்
செட்டியார்கள் அங்கு சென்ற பிறகு, பர்மியர்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுத்து நிலங்களை உழுது பயிரிட வழிகாட்டினார்கள். தொடக்கத்தில் அடமானம் ஏதும் இல்லாமல் பணம் கொடுத்துப் பழகியவர்கள், காலமாற்றத்தில் நிலங்களை அடமானம் வைத்துக்கொண்டு பணம் கொடுத்தார்கள். தரிசாகக் கிடந்த பர்மிய பூமி முப்போகம் விளையும் பசுமை தேசமாக மாறியது. அன்பு, கருணை, பரிவைத் தவிர எதுவும் தெரியாத பர்மியப் பெண்களைச் செட்டிமார்களில் பலர் திருமணம் முடித்து அங்கே குடும்பமானார்கள்.
காலப்போக்கில், வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், பர்மாவின் விளைநிலங்களில் 70 சதவீதத்துக்கும் மேல் செட்டியார்கள் உள்ளிட்ட தமிழர்களின் கைக்கு மாறியது. 1923-ம் ஆண்டிலேயே பர்மாவில் 150 ஊர்களில் 1,250 வட்டிக் கடைகளில் சுமார் 70 கோடி ரூபாய்க்கு மேல் செட்டியார்களின் பணம் சுழன்றது. சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதில் அக்கறை கொண்ட செட்டியார்கள், பர்மாவிலும் 59 ஊர்களில் 62 முருகன் கோயில்களைக் கட்டினார்கள். இவற்றில் ஆற்றை முருகன் கோயில் உள்ளிட்டவை இன்னமும் செட்டிமார்களின் ஆன்மிகச் சிறப்பைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. இந்தக் கோயில்களுக்கும் கோடிக்கணக்கான ரூபாய்க்குச் சொத்துக்கள் உண்டு.
தொழிலுக்குப் பாதிப்பு
ஒருகட்டத்தில், இந்தியர்களின் வளர்ச்சி அந்த நாட்டு தேசியவாதிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. வட்டிக்குப் பணம் கொடுத்து பர்மியர்களின் சொத்துக்களை அபகரிப்பதாகப் போராட்டத்தில் குதித்த அவர்கள், இந்தியர்கள்மீது தாக்குதல்களையும் நடத்தினார்கள். இது செட்டிமார்களின் லேவாதேவி தொழிலுக்குப் பெரும் பாதிப்பை உண்டாக்கியது.
இந்த நிலையில், இரண்டாம் உலகப்போரின் உச்சத்தில் பர்மாமீது குண்டுகளை வீசியது ஜப்பான். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, செட்டிமார்கள் தங்களது சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டும், சிலர் பவர் ஏஜெண்ட்களை நியமித்துவிட்டும் படிப்படியாகத் தாயகம் திரும்பினார்கள். பர்மாவை ஜப்பான் பிடித்துவிட்டதால், பர்மாவுக்கு வெளியில் சிம்லாவில் தலைமையகம் வைத்துக்கொண்டு ‘நாடுகடந்த’ அரசாங்கம் நடத்தியது பிரிட்டன்.
இரண்டாவது பேரிடி!
அந்த நேரத்தில், பாதிக்கப்பட்ட இந்தியர்கள், குறிப்பாக செட்டிமார்கள், பறிபோன தங்களது சொத்துக்களுக்கு இழப்பீடு கேட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு, ‘நாட்டைவிட்டு ஜப்பானியர்களை வெளியேற்றிய பின், உங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படும்’என்று கடிதம் கொடுத்தது பிரிட்டிஷ் நிர்வாகம். ஆனால், நடந்ததோ வேறு. ஜப்பான் வெளியேறியதும் மீண்டும் பிரிட்டிஷ் ஆதிக்கம் வந்து, பர்மாவுக்குச் சுதந்திரம் கொடுக்கப்பட்டது. ஜனநாயக அரசாங்கம் வந்ததுமே 1952-ல் பர்மாவின் விளைநிலங்கள் அனைத்தையும் அரசுடைமை ஆக்கிவிட்டார்கள். இது செட்டிமார்களுக்கு இரண்டாவது பேரிடி.
பர்மா அதிபராக ஊனு இருந்தபோது, இளையாத்தங்குடியைச் சேர்ந்த வெள்ளையன் செட்டியார் அங்கு எம்.பி-யாக இருந்தார். ஊனுவுக்கு வெள்ளையன் செட்டியார் நெருக்கம். இதை வைத்து, சொத்துக்களை இழந்த செட்டிமார்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பாக இருவரும் ஓர் ஒப்பந்தத்தைப் பேசி வைத்திருந்தார்கள். அது தீர்மானமாக நாடாளுமன்றத்தில் வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக செட்டியாரை, இந்து மாமன்றம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுவோர் சுட்டுக் கொன்றுவிட்டார்கள்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, செட்டிமார்கள் தங்களது உரிமை பற்றிப் பேசவே பயந்தார்கள். ஆனாலும், அரசுடைமையாக்கப்பட்ட நிலங்களுக்கு அதன் வரி மதிப்பைப் போல் 12 மடங்கு தொகையை இழப்பீடாகத் தர பர்மா அரசு ஒப்புக்கொண்டது. இதன்படி முதல் தவணையாக சுமார் 100 பேருக்குத் தலா 2,000 ரூபாய் இழப்பீடும் வழங்கப்பட்டது. ஆனால், மறுபடியும் பர்மாவில் குழப்பம் ஏற்பட்டு, ராணுவத்தின் கைகளில் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது. ராணுவ அரசாங்கமோ, ‘இப்போதைக்கு நிதி இல்லை’ என்று சொல்லி, செட்டிமார்களின் இழப்பீடு கோரிக்கையை நிராகரித்தது.
மேலும், துவண்டுபோன செட்டிமார்களும் அவர்களது வாரிசுகளும் தங்களது கையை விட்டுப் போன பர்மியச் சொத்துக்களுக்கு என்றைக்காவது இழப்பீடு வந்துசேரும் என்ற நம்பிக்கையில், ஆவணங்களை அடைகாத்து வைத்துக் கொண்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவம் இருக்கிறார்கள். பர்மாவில் செட்டிமார்கள் விட்டுவந்த சொத்துக்களின் மதிப்பு சுமார் லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள். இவர்கள் வைத்திருந்த விளைநிலங்கள் மட்டுமே 2 லட்சத்து 28 ஆயிரத்து 425 ஏக்கர். இதில் செட்டி நாட்டரசர் அண்ணாமலைச் செட்டியார் குடும்பத்துக்குச் சொந்தமான நிலம் மட்டும் ஒரு லட்சம் ஏக்கரைத் தாண்டுமாம்.
நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது
“பர்மா முதலீட்டாளர்கள் குழுவை 2011ல் உருவாக்கினோம். கடந்த ஆண்டே எங்கள் பிரச்சினை குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, கோரிக்கை பரிசீலிக்கப்படுவதாக பர்மிய அரசிடமிருந்து தகவல் வந்தது. ஆனால், வேலை ஏதும் நடக்கவில்லை. பர்மாவிலிருந்து இப்போது வந்துகொண்டிருக்கும் நேர்மறை யான தகவல்கள் புது நம்பிக்கையையும் தெம்பையும் கொடுத்திருக்கின்றன’’ என்கிறார் பர்மா முதலீட்டாளர் குழுவின் தலைவர் பேரா.ஆறு. அழகப்பன் செட்டியார்.
“பர்மா சொத்துக்களுக்கு இழப்பீடு பெறுவது சம்பந்தமாக இதுவரை 10 ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியிருக்கிறோம். இழந்த சொத்துக்களை மீட்க வேண்டும் என்பது செட்டியார்களின் நோக்கமாக இருக்கிறது. ஆனால், சொத்துக்களை மீட்கப்போவதாகச் சொல்லிக்கொண்டு போனால், யாரையும் பர்மாவுக்குள் நுழைய விட மாட்டார்கள். அதற்காகத்தான் முதலீட்டாளர்கள் குழு என்று மாற்றினோம்” என்கிறார் மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்.
“நாங்கள் பேச ஆரம்பித்த பிறகு, இதுவரை நான்கு குழுக்களாகச் செட்டியார்கள் பர்மாவுக்குச் சென்று வந்திருக்கிறார்கள். அவர்கள் தரும் தகவல்படி, பர்மாவில் விளைநிலங்களைத் தவிர, மற்ற சொத்துகளை மீட்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. நகர்ப்புறங்களில் செட்டியார்களுக்குச் சொந்தமான இடங்களில் வீடுகளைக் கட்டியிருப்பவர்கள், செட்டியார்களுக்காகவும் ஒரு வீட்டைக் கட்டி பூட்டி வைத்திருக்கிறார்கள். பர்மா இன்றைக்கும் ஏழை நாடாகத்தான் இருக்கிறது. ஆனால், அவர்கள் தொழில் தொடங்க வரும் வெளிநாட்டினரை வரவேற்கிறார்கள்.
“தோட்டத் தொழில்கள், மருத்துவம், கல்வி, வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்ய வெளிநாட்டினருக்கு அவர்கள் வாய்ப்பளிக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், மூத்த செட்டிமார்கள் மீண்டும் பர்மாவுக்குப் போகப் பயப்படுகிறார்கள். இளவட்டங்கள் தயாராக இருக்கிறார்கள். எனவே, பர்மாவில் யாருடைய சொத்துக்களை எல்லாம் மீட்க முடிகிறதோ அதையெல்லாம் முடிந்தவர்கள் மீட்பது, அதற்கான இழப்பீட்டுத் தொகையை உரியவர்களுக்கு இங்கே கொடுத்து விடுவது என்று பேசுகிறோம். இப்படி ஓரளவு சொத்துக்களைக் திரும்பப் பெற்ற பிறகுதான், அடுத்த கட்டத்துக்குப் போக வேண்டும். இந்தப் பிரச்சினையை முடிக்கக் குறைந்தது, இரண்டு ஆண்டுகளாவது ஆகும்’’ என்கிறார் சுதர்சன நாச்சியப்பன்.
குறிப்பு: மியான்மர் என்று மாற்றப்பட்டிருந்தாலும் இன்னும் பலர் பர்மா என்றே அழைக்கிறார்கள்.
தொடர்புக்கு: shanmugasundaram.kl@kslmedia.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago