கிரிக்கெட் இன்று நம் அன்றாடத்தோடு கலந்துவிட்ட விளையாட்டு. அதைப் பற்றிப் பெயரளவுக்காவது தெரியாதவர்கள் இல்லை. ஆனால், கை கிரிக்கெட் என்னும் விளையாட்டைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இதுவும் இன்று பிரபலமான விளையாட்டுதான். பொதுமக்களுக்குத் தெரியாது, ஊடகங்களுக்கும் அவ்வளவாகத் தெரியாது. குறிப்பிட்ட வட்டத்துக்குள் பரவலாக விளையாடப்படுகிறது கை கிரிக்கெட்.
என்ன விதிகள்?
இதை விளையாடக் குறைந்தபட்சம் இரண்டு பேர் போதும். இரண்டு பேரும் எதிரெதிர்க் குழு. ஒவ்வொரு குழுவிலும் மேலும் ஆட்களைச் சேர்த்துக்கொள்ளலாம். அப்போது இருப்பவரைப் பொறுத்து எண்ணிக்கை கூடும். டாஸ் போட்டு யார் பேட்டிங், யார் பௌலிங் எனத் தீர்மானிப்பதில்லை. ஒற்றைப்படை எண் ஒருவருக்கு, இரட்டைப்படை எண் மற்றவருக்கு என முடிவுசெய்து, இருவரும் ஒரே நேரத்தில் விரல் நீட்ட வேண்டும். இருவரது விரல்களின் எண்ணிக்கையைக் கூட்டி வரும் எண் ஒற்றைப்படையானால், அதற்குரியவர் பேட்டிங், பௌலிங்கைத் தீர்மானிப்பார். இரட்டைப்படையானால் அதற்குரியவர் தீர்மானிப்பார்.
விளையாட்டுக் களம் அவர்கள் இருக்கும் இடம்தான். பந்து, மட்டை எல்லாம் கை விரல்களே. ஒரு கை போதும். கட்டை விரலுக்கு ஆறு ரன் மதிப்பு. மற்றவற்றுக்கு எல்லாம் ஒன்றொன்றுதான். இனி, விளையாட்டைத் தொடங்கலாம். பேட்டிங் செய்பவரும் பௌலிங் போடுபவரும் ஏக காலத்தில் விரல்களை நீட்ட வேண்டும். இருவரும் நீட்டிய விரல்களின் மதிப்பு வெவ்வேறு என்றால், பேட்டிங் செய்பவர் காட்டும் எண் அவரது ரன் கணக்கில் சேரும். இருவரும் ஒரே எண்ணைக் காட்டியிருந்தால், பேட்டிங் செய்பவர் அவுட் என்று அர்த்தம். அடுத்த ஆள் பேட்டிங்குக்கு வர வேண்டும். பேட்டிங் குழுவில் அனைவரும் அவுட் ஆனதும் பௌலிங் குழு பேட் செய்யத் தொடங்கும். இரண்டு பேர் மட்டும் விளையாடினால் அவர்களே ரன்களைக் கூட்டிக்கொள்வர். குழு விளையாட்டு என்றால், ரன் எண்ணிக்கையைக் கூட்டி வைத்திருக்க ஒருவர் இருப்பார். இறுதியில், இரண்டு டீம்களின் ரன் எண்ணிக்கை கூட்டப்பட்டு, வெற்றி முடிவுசெய்யப்படும்.
சில நாள் பயிற்சி எடுத்துக்கொண்டால் போதும். வேகவேகமாக விரல்களை நீட்டலாம். இதை விளையாடும்போது பார்த்தால் அசந்துபோவோம். விரல்களை நீட்டுவதிலும் மடக்குவதிலும் ரன்களைக் கணக்கிடுவதிலும் அத்தனை வேகம். புதிதாகப் பார்ப்பவர்களின் கண்களுக்கு முன் மின்னல்கள் என விரல்கள் நீண்டு மறையும் அதிசயக் காட்சி கிடைக்கும். தொடக்கத்தில் என்ன நடக்கிறது என்றே புரியாது. உன்னிப்பாகக் கவனித்தால், நேரம் போவது தெரியாமல் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டும். யார் பேட்டிங், யார் பௌலிங் எனப் புரிந்து ரன் கணக்கிடும் வித்தையை உணர்ந்துகொண்டால், அதன்பின் கை கிரிக்கெட்டை விளையாடும் ஈடுபாடு வந்துவிடும். விளையாட முடியவில்லை என்றாலும், பார்வையாளராக நிச்சயம் மாறிவிடுவோம்.
இந்த விளையாட்டுக்குள் பல நுட்பங்கள் உண்டு. எதிராளியின் பலம், பலவீனத்தை அறிந்து வைத்துக் கொள்வது அதில் ஒன்று. சிலர் அனிச்சையாகத் தொடர்ந்து ஒரே எண் வரும்படி விரலை நீட்டுவார்கள். அது அவர்கள் பலவீனம். அதை உணர்ந்துகொண்டால், எதிரில் இருப்பவர் அந்த எண் வராதவாறு விரல் நீட்டித் தன் ரன் எண்ணிக்கையைக் கூட்டிக்கொள்ளலாம். சிக்ஸராகிய ஆறுக்குரிய கட்டை விரலைக் காட்டும் சந்தர்ப்பங்களைக் கணித்துக்கொள்வதும் ஒரு நுட்பம். இருவராகவும் குழுவாகவும் மணிக்கணக்கில் சோர்வில்லாமல் இதை விளையாடலாம். அவ்வளவு நுட்பங்கள் இதற்குள் உண்டு.
எங்கெல்லாம் விளையாடுகிறார்கள்?
நாமக்கல் மாவட்டத் தனியார் பள்ளி மாணவர் களிடையேதான் இந்த விளையாட்டு அவ்வளவு பிரபலம். விடுதி அறைகளுக்குள் சத்தத்தோடும் படிப்பு நேரத்தில் சத்தமின்றியும் விளையாடப்படுகிறது. வகுப்பறையில் ஆசிரியர் மாறும் இடைவெளியில் விளையாடப்படுகிறது. ஆசிரியர் இருக்கும்போதே பெஞ்சுக்கு அடியே விரல் நீட்டி விளையாடும் தைரியசாலிகளும் உண்டு. பள்ளிப் பேருந்தும் முக்கியமான களம். வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லவும் பள்ளியிலிருந்து வீடு திரும்பவும் ஆகும் நேரத்தில் இது விளையாடப்படுகிறது. பள்ளி வராண்டாக்களும் பாதை ஓரங்களும் இன்னொரு களம். படிப்பதற்காக மாணவர்களை நீண்ட வராண்டாக்களிலும் பாதை ஓரங்களிலும் இடைவெளி விட்டு உட்கார வைத்திருப்பார்கள். கண்காணிப்பு ஆசிரியர் நடந்துகொண்டேயிருப்பார். ஐந்தடித் தொலைவுக்கு ஒருவராக உட்காரவைக்கப்பட்டிருக்கும் மாணவர்கள், உட்கார்ந்த இடத்திலிருந்தே இந்த விளையாட்டை விளையாடுகின்றனர். ஆசிரியர் வரும்போது கையை மடக்கிக்கொண்டு படிப்பதாகப் பாவனை செய்வார்கள். கை கிரிக்கெட்டில் பெருமளவு ரன் எடுத்துச் சாதனை செய்யும் மாணவர்களுக்குப் பட்டங்களும் பாராட்டுகளும் குவியும். கை கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர்களும் டோனிகளும் கோஹ்லிகளும் பலர் இருக்கின்றனர்.
கை விளையாட்டுகள்
கைவிரல்களையே கருவியாக்கிய விளையாட்டுகள் இன்னும் பல உள்ளன. குவிந்த கைக்குள் விரல் குவித்து மூக்குப்பொடி எடுக்கும் மூக்குப்பொடி விளையாட்டு, பெருவிரலை அழுத்தி ஒன்… டூ… த்ரீ… சொல்லி விளையாடும் ‘ரெஸ்ட்லிங்’, ஒருவர் விரலால் மற்றொருவர் விரலை அடித்து விளையாடும் ‘விரல் விளையாட்டு’, கையை மடித்தும் (ஸ்டோன் - கல்) விரித்தும் (பேப்பர் - தாள்) இருவிரல் காட்டியும் (சிசர் - கத்தரிக்கோல்) விளையாடும் ‘ஸ்டோன் பேப்பர் சிசர்’ முதலியவை மாணவர்களிடையே பிரபலம். குறிப்பேடுகளையும் பேனாக்களையும் கருவிகளாகக் கொண்ட பல விளையாட்டுகளும் உள்ளன. கட்டம் போட்டு எண்களை எழுதும் ‘பிங்கோ’, தாளில் சிங்கம், புலி, முயல், மான் என்று எழுதிவைத்துக்கொண்டு, பேனாவால் அடித்து விளையாடும் ‘சிங்கம் புலி’ இவையெல்லாம் உட்கார்ந்த இடத்திலிருந்தே விளையாடப்படுபவை.
ஆசிரியரின் முதல் வேலை
காலையில் முதல் பிரிவு பாடவேளைக்கு வகுப்பறைக்குள் நுழையும் ஆசிரியரின் முதல் வேலை, மாணவர்களிடம் இருக்கும் ஸ்டிக் பேனாக்களைக் கைப்பற்றுவதுதான். என்ன காரணம்? ‘ஸ்டிக்’ என்றொரு விளையாட்டு மாணவர்களிடையே வெகுபிரபலம். நான்கு பேர் விளையாடலாம். சதுரக் கட்டம். அதன் நான்கு புறமிருந்தும் ஸ்டிக் பேனாவை ஒவ்வொருவர் வைத்து ஆடலாம். ஒருவர் தம் பேனாவைச் சுண்டி எதிர் ஆளின் பேனாவை அடித்துக் கட்டத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். இதற்கு மூடியில் கொக்கி உள்ள ஸ்டிக் பேனா மிகவும் உதவும். ஆகவே, இந்த பேனாவுக்குக் கடைகளில் கிராக்கி.
இவ்விதம் இன்னும் பல விளையாட்டுகள் மாணவர்களிடையே புழங்குகின்றன. ஒன்பதாம் வகுப்பு தொடங்கி பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் வரைக்குமான நான்காண்டுகள் பாடப் புத்தகமும் வகுப்பறையுமாகவே சிறைத் தண்டனை பெற்றவர்களைப் போலக் காலம் கழிக்க நேரும் பதின்வயது மாணவர்களின் கண்டுபிடிப்புகள்தான் இந்த விளையாட்டுகள். உடலும் மனமும் செழுமைபெற்று வளரும் பருவத்தில், அவர்கள் முதியோரைப் போல ஒரே இடத்தில் இரவும் பகலும் உட்கார்ந்திருக்கிறார்கள். உணவு உண்ணப் போகும்போதும் வகுப்பறைக்குச் செல்லும்போதுமான நடைதான். விளையாட்டுத் திடல்களை அவர்கள் காண்பதே இல்லை. பல பள்ளிகளில் விளையாட்டுத் திடல்களே இல்லை. கட்டிடங்களே நிர்வாகத்தினருக்கு வருமானம் தருபவை. விளையாட்டுத் திடல்களுக்கு ஒதுக்கும் இடம் வீண் என்பது பள்ளியினரின் புரிதல்.
படிப்பு ஒன்றைத் தவிர, வேறு எதையும் சிந்திக்கக் கூடாது என்னும் கட்டுப்பாடுகளை மீறும் இளம் மனங்கள், தங்களுக்கான விளையாட்டுகளை அனுமதிக்கப்பட்ட இடத்துக்குள் உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. இந்த விளையாட்டுகளுக்கும் அனுமதி கிடையாது. கண்காணிப்புகளை மீறி எளிதாக விளையாடும் வகையிலே படைத்துக்கொண்டவை இவை. ஆம், இந்தக் குருத்துகளின் படைப்பாற்றல் வெளிப் பாடுகள்தான் இவ்வகை விளையாட்டுகள். இந்த ஆற்றல்களைக் கை விரல்களுக்கு உள்ளேயே முடக்கி வைத்திருக்கப்போகிறோமா? சுதந்திர வெளி யில் அபரிமிதமாகப் பெருகி வளர அனுமதிக்கப் போகிறோமா?
- பெருமாள் முருகன், எழுத்தாளர், தொடர்புக்கு: murugutcd@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago