யூதர்களின் 3,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு இடம்பெயர்தல்களால் நிறைந்தது. ஆனால், அவர்கள் எங்கிருந்தாலும் இஸ்ரேலைப் பற்றியே கனவு கண்டுகொண்டிருந்தார்கள். தங்களுக்காகக் கடவுளால் அளிக்கப்பட்ட பூமி என்று அவர்கள் இஸ்ரேலைக் கருதினார்கள். இன்றும் கருதுகிறார்கள். ஆனால், இஸ்ரேல் 1948-க்கு முன்னால் யூதர்கள் கையில் அநேகமாக இருந்ததே இல்லை என்று சொல்லலாம். அசீரியர்களிலிருந்து தொடங்கி, பிரித்தானியர்கள் வரை இஸ்ரேல் மற்றவர்கள் கையிலேயே இருந்தது.
இஸ்ரேல் பிறந்த கதை
யூதர்களுக்குத் தனிநாடு ஒன்று வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணம் வந்தது 19-ம் நூற்றாண்டின் இறுதியில். உகாண்டாவைப் பிரித்து அந்த நாட்டை உருவாக்கலாம் என்று முதலில் நினைத்துக் கடைசியில் பால்ஃபோர் என்ற பிரித்தானியப் பிரதமர் 1917-ம் ஆண்டு பலஸ்தீனத்தில் அந்த நாட்டை உருவாக்கலாம் என்ற வாக்குறுதியை அளித்தார். ‘இது ஊரான் வீட்டு நெய்யே…’ என்ற கதையாக இருந்தாலும், இந்த வாக்குறுதியைத்தான் யூதர்கள் விடாமல் பிடித்துக்கொண்டார்கள். அங்கு ஏற்கெனவே இருக்கும் மக்களின் உரிமைக்கு ஊறு ஏதும் விளையாது என்றும் வாக்குறுதி கூறியதை அவர்கள் வசதியாக மறந்துவிட்டனர்.
இன்று இஸ்ரேலில் இருக்கும் யூதர்களில் யாரைக் கேட்டாலும் நாங்கள் அரபு நிலங்களை ஆக்கிரமிக்கவில்லை, விலைகொடுத்து வாங்கினோம் என்று சொல்வார்கள். அவர்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. ஆனால், நிலம் வாங்கியதாலேயே நாட்டையும் வாங்கிவிட்டோம் என்ற நினைப்பு வந்ததால்தான் சிக்கல் வந்தது. ஆனால், ஏதும் விளையாமல் பாலைவனமாக இருந்த நிலங்களைப் பசுமை நிலங்களாக மாற்றியது யூதர்களின் உழைப்புதான் என்பதையும் சொல்ல வேண்டும்.
இரண்டாவது உலகப் போர் முடிந்து மூன்று ஆண்டு களில் 1948-ம் ஆண்டு ஐ.நா-வின் ஒப்புதலோடு இஸ்ரேல் தனிநாடாக அறிவிக்கப்பட்டதுமே அதன்மீது அரபு நாடுகள் தாக்குதல் நடத்தின. 1949-ம் ஆண்டு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதும், ஜோர்டான் நாடு மேற்குக்கரை என அழைக்கப்படும் ஜோர்டான் நதியின் மேற்குப் பகுதியில் இருக்கும் பரவலான பகுதியை எடுத்துக்கொண்டது, கிழக்கில் மத்தியதரைக்கடலை ஒட்டியிருக்கும் காசாத்துண்டு என்ற பகுதியை எகிப்து எடுத்துக்கொண்டது. ஆனால், 1967-ம் ஆண்டு நடந்த போரில் அரபு நாடுகள் படுதோல்வி அடைந்தன. மேற்குக் கரையும் காசாத்துண்டும் இஸ்ரேல் கைக்கு வந்தன. இவற்றில் சில பகுதிகள்தான் இன்று பலஸ்தீனம் என்று அழைக்கப்படுகின்றன. 1948-ல் இஸ்ரேலில் 10 லட்சம் யூதர்கள் இருந்தார்கள். இன்று 60 லட்சத்துக்கும் மேல். உலகெங்கிலும் இருந்து யூதர்கள் அங்கு வந்து சேர்ந்துவிட்டனர்.
அமெரிக்க உதவி
அமெரிக்காவின் உதவி இல்லாமல் இஸ்ரேல் இத்தனை ஆண்டுகள் தாக்குப்பிடித்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால், இன்று இந்த உதவி இல்லாமலும் இஸ்ரேலால் திறமையாக இயங்க முடியும். 2013-ம் ஆண்டு அமெரிக்கா இஸ்ரேலுக்கு 3 பில்லியன் டாலர்கள் தந்தது. இதே ஆண்டில் இஸ்ரேலின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 250 பில்லியன் டாலர்களுக்கும் மேல். எனவே, அமெரிக்க உதவி இதில் 1.2% மட்டுமே.
“இஸ்ரேலியருக்கு அமெரிக்காவைப் பிடிக்குமா?” என்று ஒரு இஸ்ரேலியரிடம் கேட்டேன். அவர் சொன்ன பதில்: “வெறுப்பு கிடையாது… ஓர் உண்மையைச் சொல்லலாமா? இஸ்ரேலியருக்கு இஸ்ரேலியரை மட்டும்தான் பிடிக்கும்.” கூடவே சொன்னார், “இந்தியா மீதும் வெறுப்பு கிடையாது. எங்கள் இளைஞர்கள் முதலில் செல்ல விரும்பும் வெளிநாடு இந்தியா.”
அமெரிக்கா பாலஸ்தீனத்துக்கு ஆண்டுக்கு 400 மில்லியன் டாலர்கள் உதவியளிக்கிறது. ஆனால், அமெரிக்காவைப் பிடிக்கும் என்று சொல்லக்கூடிய பலஸ்தீனரைப் பார்ப்பது அரிது. அமெரிக்கா கொடுக்கும் பணம், இஸ்ரேலால் இடிக்கப்பட்ட கட்டிடங்களைத் திரும்பக் கட்டுவதற்கே செலவாகிவிடுகிறது என்கிறார்கள்.
ஓரான் பாமுக் ‘இஸ்தான்புல்’ புத்தகத்தில் எழுதியது பலஸ்தீனர்களுக்குப் பொருந்தும் என்றே தோன்றியது: அவர்களது சோகம், எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்ற வலியால் எழுந்தது. ஆனால், அதுதான் அவர்களைப் புதிய தோல்விகளைக் கண்டுபிடிக்கவும் தங்களது போதாமையை விளக்கப் புதிய வழிகளை உண்டாக்கவும் வைக்கிறது.
யூத-அரபுத் தோழமை
இஸ்ரேல் பள்ளிகளில் யூத-அரபுக் குழந்தைகளைச் சேர்ந்து பார்ப்பது அரிது. முதல் காரணம் மொழி. அரபுக் குழந்தைகள் ஹீப்ரூ படிக்க விருப்பப்பட மாட்டார்கள். யூதக் குழந்தைகள் அரேபிய மொழி பக்கமே போக மாட்டார்கள். இரண்டாம் காரணம் வரலாறு. யூதப் பள்ளியில் சொல்லிக்கொடுக்கப்படும் வரலாறு யூதர்களைப் பற்றி அதிகம் பேசுகிறது. அரேபியப் பள்ளியில் இதற்கு நேர் எதிர். மூன்றாவது காரணம், இரு பிரிவினரும் தனித்தனியாக வாழ்வது.
இந்த நிலைமை மாற வேண்டும் என்று இருபிரிவினரும் விரும்புகிறார்கள் என்று கருத்துக் கணிப்புகள் சொல் கின்றன. ஆனால், அரசு விரும்புவதாகத் தெரியவில்லை. ஆனால், வடக்கே செல்லச் செல்ல இந்த இறுக்கம் குறைந்துவிடுகிறது. ஹைஃபா போன்ற வடக்கத்திய நகரங்களில் யூதர்களும் அரேபியரும் சேர்ந்து வசிக்கி றார்கள். ஒரே அடுக்குமாடிக் கட்டிடங்களில் வசிக்கிறார்கள்.
இறந்த கடல்
இஸ்ரேலில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றான இறந்த கடல் (டெட் ஸீ) கடலல்ல; ஏரி. கடலைவிட 10 மடங்கு அதிகம் உப்புத்தன்மை கொண்டது. கடல் மட்டத்துக்கு 1,400 அடி கீழே இருக்கிறது. மூழ்க நினைத்தாலும் முடியாது. மிதக்கத்தான் முடியும். நான் சென்ற அன்று கடற்கரை முழுவதும் மனிதர்கள். தண்ணீர் நமது கூவம் தரம். “தண்ணீரைக் குடிக்காதீர்கள். குடித்தால் வயிற்றை அழுத்திதான் தண்ணீரை வெளியே எடுக்க வேண்டும்” என்று எங்கள் வழிகாட்டி எச்சரித்தார்.
இந்தக் கடலின் மண்ணைப் பூசிக்கொண்டால், 60 வயது முகம் 20 வயது முகமாக மாறிவிடும் என்ற கதை இங்கு உலவுகிறது. இளமையை விரும்பும் மூதாட்டிகள், முகங்களில் சேறு பூசிக்கொண்டு மிதந்துகொண்டிருந்தார்கள். நானும் சிறிது நேரம் மிதந்தேன். குளிக்கும் இடத்தில் இடுப்பளவுதான் தண்ணீர். ஆனால், தரையில் கால் ஊன்றுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. தண்ணீர் மேலே தள்ளுவதால் கால் கீழே போவது கடினமாக இருந்தது. அக்கரையில் ஜோர்டான். அங்கு தண்ணீர் இவ்வளவு அழுக்காக இருக்காது என்று சொன்னார்கள். மூதாட்டிகளும் அதிகம் இல்லையாம்.
வழிகாட்டி
எங்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் திறமையாக ஆங்கிலம் பேசக்கூடிய இஸ்ரேலியக் கிறிஸ்தவர். தொல்பொருள் ஆராய்ச்சியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தினமும் இறந்த கடலில் குளிப்பார் போலிருக்கிறது. 45 வயதாகியும் 25-க்கு மேல் மதிப்பிட முடியாது. மூன்று குழந்தைகள். அயராத உழைப்பு. ஆனாலும் புன்னகை மாறாத முகம். கணவர் என்ன செய்கிறார் என்று கேட்டேன். காரோட்டி என்று சொன்னார். மூன்று குழந்தைகளும் கல்லூரிகளில் படிக்கிறார்கள்.
“நாங்கள் இங்கு வேறு வழியில்லாமல்தான் இருக்கி றோம். இருவர் சம்பாதித்தாலும் சேமிக்க முடியாது. விலைவாசி மிகவும் அதிகம். உண்மையிலேயே அதிகம். கழிசடை காப்பிக்கு ஐந்து அமெரிக்க டாலர்கள்.”
“இந்தியாவில் எப்படி?”
“அங்கும் அதிகம்தான்.”
“நான் இந்தியா வர விரும்புகிறேன். ஆனால், தெருவில் பெண்கள் நடமாட முடியாதாமே?”
டெல்லி சம்பவத்தின் புகழ் உலகெங்கிலும் பரவியிருக்கிறது.
பி. ஏ. கிருஷ்ணன், ஆங்கிலம்-தமிழ் நாவலாசிரியர், பொதுத்துறை நிறுவனமொன்றின் ஓய்வுபெற்ற அதிகாரி, தொடர்புக்கு: tigerclaw@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago