எதற்காகத் தமிழைக் கட்டிக் கொண்டு அழணும்?

By ஆழி செந்தில்நாதன்

ரமேஷ், சென்னை உயர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞன். நல்ல படிப்பாளி, நிறையப் படிப்பான், பேசுவான். எம்.பி.ஏ., முடித்திருக்கும் அவன் அடிக்கடி என்னோடு மல்லுக்கு நிற்பான். அவன் திடீரென்று ஒரு கேள்வியைக் கேட்டான்.

“அங்கிள், நீங்க மொழி பத்தி நிறையப் பேசறீங்க. என் மனசுல ஒரு கேள்வி இருக்கு. என்ன எழவுக்கு நான் தமிழ் படிக்கணும் அங்கிள்? நான் இங்கிலீஷ் மீடியத்துல படிச்சேன். பிரெஞ்ச் செகண்ட் லேங்க்வேஜ். தமிழ் பேச, படம் பார்க்கத் தெரியும். அசிங்கமா திட்டத் தெரியும். அவ்வளவா படிக்கத் தெரியாது. என்னோட வாழ்க்கையில எந்த இடத்துலயும் அதனால எந்தக் குறையும் இல்ல. என் லைஃப்ல தமிழுக்கு இடமே இல்லாமதான் வாழ்றேன். நாளைக்கு நல்ல கம்பெனியில நான் வேலை செய்யத்தான் போறேன். சினிமா பாட்டும் வடிவேலு ஜோக்ஸும் இல்லேன்னா மட்டும் கொஞ்சம் வருத்தப்பட்டிருப்பேன்.”

“முக்கியம்தான். ஆனா, நேரடியா என்னுடைய
வாழ்க்கையில, தமிழ் இருந்தாகணும்னு
ஏதாவது கட்டாயம் இருக்கா?”

“ரமேஷ், நாம் அறிவு யுகத்தில் இருக்கிறோம்னு தம்பட்டம் அடிச்சிக்கறோம். அறிவுச் சமூகம், அறிவு யுகம், அறிவு சகாப்தம் அப்படியெல்லாம் சொல்றோம். அறிவு யுகத்தோட முக்கியமான இரண்டு செயல்பாடுகள் அறிவைப் பெறுவது, அந்த அறிவைப் பரப்புவது. அறிவு மூலதனம்னு சொல்றோம். அறிவு யுகத்துல மூலதனத்தோட பல வடிவங்களில் அறிவும் ஒண்ணு. அறிவை ஏதோ ஒரு மொழி மூலமாத்தான் நாம ஸ்டோர் பண்றோம், டிஸ்டிரிபியூட் பண்றோம். கல்வி, அறிவு, தகவல்னு நாம என்ன சொன்னாலும் அது மொழியில இருக்கு. ஒரு நாட்டின் அரசியல், அதிகாரம், கலாச்சாரம் இதெல்லாமும் மொழியோடு சம்பந்தப்பட்டிருக்கு. அரசியல், நிர்வாகம், பொதுத் தொடர்பு போன்ற களங்களிலும் மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. பொருளாதார நிபுணர்கள் மொழிக்கும் பொருளாதாரத்துக்கும் இடையில என்ன உறவு இருக்குன்னு ஆராய்ச்சி பண்றாங்க. இது முப்பது நாப்பது வருஷமாவே வெஸ்ட்ல நடக்குது. லேங்க்வேஜ் எகானமி, லேங்க்வேஜ் கேபிடல்னு எல்லாம் பேசறாங்க. எல்லா நாடுகளிலும் மொழிக் கொள்கையை வகுக்கும்போது, பொருளாதார சமாச்சாரங்களையும் கணக்குல எடுத்துக்குறாங்க. நம்மூர்ல எப்பவும் மொழியைக் கலாச்சார விஷயமா மட்டும் பாக்குறோம்.

“ஒரு மனுஷன் கல்வி மூலமாகவோ வேறு எதன் மூலமாகவோ புதிய அறிவைப் பெறணும்னா, அதற்கு அவன் தன்னோட கற்றறிதல் திறனை ‘காக்னிடிட்வ் ஸ்கில்’ஸை நல்லா வளத்துக்கணும். அறிவையும் அந்த அறிவை அறியக்கூடிய அறிதல் திறமையையும் சேர்த்தே உங்களுக்குத் தருவதுதான் சரியான கல்வி. தனிப்பட்ட மனிதனுக்கு அல்லது சிட்டியில இருக்கிற கொஞ்சம் பேருக்கு அல்லது ஏற்கெனவே நல்லா வளர்ந்திருக்கிற நாலஞ்சு பேருக்குன்னா இந்த அறிதல் திறனைப் பெறுதவற்கான முயற்சியைத் தனித்தனியா எடுக்கலாம். ஆனா, ஒரு சமூகத்துக்கே, ஒரு நாட்டுக்கே, இந்தத் திறமையைத் தரணும், அதன் மூலமாகக் கல்வியை, அறிவுச் செல்வத்தைப் பெருக் கணும்னா என்ன செய்யறது?

“இது முறையாக தொடக்கக் கல்வியிலேர்ந்து தொடங்குது அப்படீங்கிறாங்க கல்வி ஆராய்ச்சியாளர்கள். அந்தத் தொடக்க நிலையில குழந்தைகளுக்கு அவங்களோட தாய் மொழியில அல்லது அவங்க வசிக்கிற இடத்தோட முதல்மொழியில அறிவுத் திறன்களை வளர்க்கணும். குழந்தைகளோட அறிவை மட்டும் வளர்ப்பது போதாது, கற்றுக்கொள்ளும் திறனை, படைப்பாற்றல் திறன்களை, பகுப்பாய்வுத் திறன்களை மேம்படுத்தணும்னு சொல்றாங்க. குழந்தைங்க இந்தத் திறமைகளோடு வளரும்போது, புதிய அறிவைச் சுலபமாகக் கிரகித்துக்கொள்ளும். தெரிஞ்ச விஷயத் திலிருந்து தெரியாத விஷயங்களைக் தெரிஞ்சுக்கும்போது, தனது மொழி அறிவைக் குழந்தை நீட்டித்துக்கொள்கிறது. அல்லது தனது மொழி அறிவை நீட்டுவதன் மூலமாகப் புதிய அறிவை அது அறிகிறது. இந்த இயல்பான வளர்ச்சி குழந்தையின் வீட்டுலயோ வீதியிலயோ ஊருலயோ எது மக்கள் புழங்கும் மொழியோ அதில்தான் நடக்குது.

“குழந்தை, ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்குதுன்னா அதனுடைய மொழித் திறன்தான் அதுக்கு உதவுது. மொழித் திறன் மூலமாதான் எதையும் வெளிப்படுத்துது. மொழிதான் கற்றுக்கொள்ளும் திறனுக்கு அடிப்படை. கற்றுக்கொள்ளும் திறன்தான் கல்விக்கு அடிப்படை. கல்விதான் மேம்பட்ட அறிவுக்கு அடிப்படை. அதனால மேம்பட்ட மொழித் திறன்தான் மேம்பட்ட அறிவை அடைவதற்கும் அளிப்பதற்கும் அடிப்படை. இந்த மேம்பட்ட அறிவுதான் மனித மூலதனத்தை உருவாக்குவதற்கும் வளர்ப்பதற்கும் அடிப்படை. இந்த மனித மூலதனம்தான் நவீன பொருளாதாரத்தின் முக்கிய அடிப்படைகளில் ஒன்று. எனவே, மொழியும் ஒரு கேபிடல். நிதி மூலதனம், இயற்கை மூலதனம் மாதிரிதான் மனித மூலதனம். பற்றிப் பேசினாங்க. இப்போ மனித மூலதனத்துக்கு அறிவு மூலதனமும் மொழி மூலதனமும் முக்கியம்னு பேசறாங்க.

“பொருளாதாரத்துக்கும் மொழிகளுக்கும் இடையிலான தொடர்பைப் பத்தி 1960-களிலேயே ஆராய்ச்சி பண்ணத் தொடங்கிட்டாங்க. அப்போ ஜேகப் மார்ஷ்சக் என்ற ஒரு முக்கியமான பொருளாதாரவாதி, Economics of Languages என்ற தலைப்பில் 1965-ல் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டார். அவருக்குப் பத்து மொழிக்கு மேல தெரியும். ஒரு பொருளாதார நடவடிக்கைக்குத் தேவையான செலவு, ஆதாயம் (costs and benefits) இது இரண்டின் மீதும் அது எப்படித் தாக்கம் செலுத்துதுன்னு அவர் பார்த்தார். அதனால் மதிப்பு, பயன்பாடு (value and utility) இரண்டும் எப்படி மாற்றமடையதுங்கிறதையும் பார்த்தார்.

“குறைவான முயற்சியில் அதிகமான தகவலை அல்லது அறிவை மனிதர்களிடம் கொண்டுசெல்ல முடியும்னா, அதுதான் அதிகமான மனித ஆற்றலை அல்லது மனித மூலதனத்தை உருவாக்குகிறது என்பதும் அப்படித் தகவலை அல்லது அறிவைக் குறைவான செலவில் முயற்சியில் அளிப்பதில் மொழி பெரிய பங்காற்றுகிறது என்பதும்தான் அவரோட தியரி. அந்தக் குறைவான முயற்சிங்கிறதுல எளிதில் கற்றுக்கொள்வதற்கான நிலைமை, குறைவான செலவு எல்லாம் அடங்கும்.”

“Path of least resistanceனு சொல்வாங்க, பிசிக்ஸ்ல.”

“அப்படியும் பார்க்கலாம். குறைந்த தடைகள் உள்ள பாதையில் எளிதில் பயணம் செய்யலாம். மார்ஷ்சக்குப் பிறகு மொழிக்கும் பொருளாதாரத்துக்கும் இடையிலான உறவு எகானமிக்ஸ் ஆஃப் லேங்க்வேஜ்னு ஒரு தனித் துறையாகவே வளர்ந்தது. 2014-ல் அமெரிக்காவின் ஸ்டேன்ஃபோர்டு பல்கலைக்கழத்தின் அரசியல் அறிவியல் துறையிலிருக்கும் டேவிட் லைட்டினும் ஜெர்மனியில் ஃப்ராங்க்ஃபர்டில் இருக்கிற கதே பல்கலைக்கழகத்தின் மாக்ரோ எகானமிக்ஸ் அண்டு மேனேஜ்மென்ட் டிபார்ட்மென்ட்டில் இருக்கிற ராஜேஷ் ராமச்சந்திரனும் சேர்ந்து லேங்க்வேஜ் பாலிசி அண்டு எகானமிக் டெவலப்மென்ட் என்ற தலைப்புல ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டிருந்தாங்க ‘உள்ளூர் மக்கள் பேசும் மொழியிலிருந்து விலகியுள்ள உள்ள ஒரு மொழியை ஆட்சிமொழியாகத் தேர்ந்தெடுத்தலும் அது தனிநபர் வருமான அளவுக்கு எதிர்மறையான தொடர்புறவைக் கொண்டிருத்தலும்’என்பது அவர்களுடைய ஆய்வின் கருப்பொருள். காலனிய ஆட்சிக் காலத்தில் ஆங்கிலம், பிரெஞ்சு. போர்த்துக்கீஸ், ஸ்பானிஷ் போன்ற மொழிகள் ஆட்சி மொழிகளாக இருந்த பல நாடுகளில் விடுதலைக்குப் பிறகும் அதே மொழிகள் ஆட்சி மொழிகளாக நீடித்தன. இந்தியாவில் ஆங்கிலம்போல.

“இந்த நாடுகளில் இந்த காலனிய எஜமான மொழிகள் என்ன விதமான விளைவுகளை உருவாக்கின என்பதை இவர்கள் ஆராய்ச்சி செய்தார்கள். ‘ஆட்சி மொழி என்பது, கல்வியைப் பெறுவதற்கும் வேலைக்கும் மேல்மட்ட அரசியல் உறவுகளை உருவாக்கிக்கொள்வதற்குமான வாயிற்காப் பாளனைப் போல் செயல்படுகிறது. மக்கள் மொழியிலிருந்து இந்த ஆட்சிமொழிகள் விலகி இருப்பதால் (மேற்கண்ட துறைகளில்) மக்களின் பங்கேற்புக்கு ஒரு பெரிய விலையை இது கோருகிறது’ என்ற முடிவுக்கு வந்தார்கள். அதாவது வேலை, கல்வி, அதிகார உறவுகளைப் பெற இந்த மக்கள் கூடுதலாக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. விலை என்றால் வெறும் பணம் மட்டுமல்ல.

“அவர்களது ஆராய்ச்சியில் இந்தியாவும் இருந்தது. ஒரு தனிநபரின் சொந்த மொழிக்கும் அவர் வசிக்கும் இடத்தின் அலுவல் மொழிக்கும் இடையில் எந்த அளவுக்கு இடைவெளி இருக்கிறதோ, அந்த அளவுக்கு அந்த மாநிலத்தின் மனித மூலதன வளர்ச்சியிலும் வேலைவாய்ப்பிலும் வீழ்ச்சி இருக்கும்னு அவங்க சொல்றாங்க. ஒரு நாட்டின் மேட்டுக்குடி மக்களின் மொழிக்கொள்கை என்பது உள்ளூர் மக்களில் பெரும்பான்மையோரின் நலன்களுக்கும் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் எதிராக இருக்க வாய்ப்புள்ளது என்பதையும் அந்த மொழிக்கொள்கை மேட்டுக்குடியினரின் நலன்களை மட்டுமே மேம்படுத்துவதாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்பதையும் நிரூபிக்கும் வரலாற்றுச் சான்றுகளைத் தாங்கள் தந்திருப்பதாக டேவிட் லைட்டினும் ராஜேஷ் ராமச்சந்திரனும் கூறுகிறார்கள்.

“ஐடி பூம் வந்தபோது, இந்தியா அதுல ரொம்ப மேல
போச்சு. அதுக்கு நம்ம ஆங்கில அறிவுதானே காரணம்?”

“ஆங்கிலம் மிக முக்கியமான காரணம். அதற்கு மூலகாரணமே 1965-ல் ‘இந்தி மட்டுமே இந்தியாவின் ஒரு மொழி’என்கிற சட்டத்துக்கு எதிரா தமிழ்நாடு போராடி, இங்கிலீஷ நாம் தக்கவெச்சுக்கிட்டதுதான். ஐடி இங்க வந்தபோது, ஆங்கிலம் ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. ஆனால், குறைந்த செலவில் பெரிய எண்ணிக்கையில் இன்ஜினீயர்கள் கிடைப்பது, புதிய பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்ட மாற்றங்கள் எல்லாம் சேர்ந்துதான் இந்தியாவுக்கு அந்த அதிர்ஷ்டம் வந்தது. இந்தியாவுக்கு ஐடி வந்தபோது, ஸ்கூல்ல இங்கிலீஷ் மீடியத்துல படிச்சவனதான் வேலைக்கு எடுத்துக்குவேன்னு சொல்லியிருந்தீங்கன்னா, இங்கே ஒரு டெக்னாலஜி புரட்சியும் ஏற்பட்டிருக்காது. ஐஐடியில படிச்சவங்க அஸ்திவாரமா இருந்தாங்கன்னா, லோக்கல் காலேஜ்ல படிச்சவங்கதான் கட்டிடமா விஸ்வரூபம் எடுத்தாங்க. அவங்கதான் குறைஞ்ச கூலிக்கு மாரடிக்க வந்தாங்க. அதில 90 % பேர் ஸ்கூல்ல தமிழ் மீடியமோ தெலுங்கு மீடியமோதான்.”

“சரி, இன்னி தேதிக்குத் தமிழ்ல படிச்சுதான் ஆகணும்னு என்ன அவசியம்?”

“இப்ப கவர்மென்ட் செலவுல நீங்க ஐஐடில படிச்சிட்டு அமெரிக்கா போய்டுவீங்க. கேட்டா, இது என் செளகரியம், சுதந்திரம்னு சொல்லுவீங்க.. இங்கே ஆப்பர்சுனிட்டீஸ் இல்லீம்பீங்க. ஆனா, இந்த நாட்டு அரசாங்கம் தன்னுடைய பொருளாதாரக் கொள்கை, கல்விக் கொள்கை, மொழிக் கொள்கையை யாரை மையப்படுத்தி உருவாக்கணும்? உங்கள மாதிரி இருக்கிறவங்களை மையப்படுத்தியா?.”

“இத மத்த நாடுகள்ல எப்படி டீல் பண்ணாங்க?”

“சீனா போன்ற நாடுகளில் எல்லாத் தொழில்நுட்பமும் மக்களுக்கு அவர்கள் தாய்மொழியிலேயே கிடைக்குது. இந்தியாவில் அப்படிக் கிடைக்குதா? எல்லா ஐரோப்பிய நாடு களிலும் தென் கிழக்காசிய நாடுகளிலும் இந்த இலைதான். அதுதான் அவர்களுடைய மொழிக் கொள்கை.

“வாழ்க்கைல செட்டிலாவதற்குத் தமிழ் தேவையில்லைன்னு நீங்க நினைக்கலாம். உங்களைத் தவிர்த்து இங்கே கோடிக் கோடிப் பேர் இருக்காங்க. அவங்க நிலைமை என்ன? அதிகமான மக்கள் சுலமான முறையில் அறிவைப் பெற்றால், இந்த நாடு எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணுங்க. பொருளாதாரத்துக்கு வளர்ச்சி தேவை. வளர்ச்சிக்கு மனித மூலதனம் தேவை, மனித மூலதனத்துக்கு அறிவும் திறன்களும் தேவை. அறிவும் திறனும் பெற உயர்ந்த தரத்திலான கல்வி தேவை, உயர்ந்த தரத்திலான கல்விக்கு வலுவான அடிப்படை கொண்ட தொடக்கக் கல்வி தேவை, வலுவான அடிப்படை கொண்ட தொடக்கக் கல்விக்கு, கற்றறியும் திறன் தேவை. கற்ற்றியும் திறனைப் பெறுவதற்கு உங்களுக்கு இயல்பாக வரக்கூடிய மொழியில் அதை அடைவது தேவை. இந்த நாட்டில் 95%-க்கும் அதிகமானவர்களுக்கு இயல்பாக வரக்கூடிய மொழி அவர்களது தாய்மொழிதான்... அதனால..

“அதனால..?”

“பொருளாதாரத்துக்குத் தாய்மொழி தேவை. அதாவது, மொழி இல்லையேல், வளர்ச்சி இல்லை. No Language, No Development. இப்படி இங்கிலீஷ்ல சொன்னா பஞ்ச் டயலாக் மாதிரி மனசுல பதியுமில்ல, ரமேஷ்?”

- ஆழி செந்தில்நாதன், தொடர்புக்கு: zsenthil@gmail.com

‘தி இந்து’ சித்திரை மலரில் வெளிவந்துள்ள கட்டுரையின் சுருக்கம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்