சென்னை சிந்தாதிரிப்பேட்டை கூவம் கரை குடிசைவாசிகள் யாரைக் கேட்டாலும் தாஸின் வீட்டைக் கைகாட்டுவார்கள்.
“யாரு? குடிச்சிக் குடிச்சே செத்துப்போச்சே அது வீடா?”
வாசலில் மண்ணெண்ணெய் பம்ப் ஸ்டவ்வில் சமைத்துக் கொண்டிருந்தார் புஷ்பா, தாஸின் மனைவி.
“வாங்க சார்! உட்காருங்க” என்று காலி குண்டான் ஒன்றைக் கவிழ்த்து இருக்கையாக வைத்தார். வீட்டுக்குள் எட்டிப் பார்த்தேன். அதை வீடு என்று சொல்ல முடியாது. நான்கு புறமும் கையை நீட்டினால் சுவர் இடிக்கும். மேலே லேசாகத் தலையும் தட்டக்கூடும்.
என் பார்வையைப் புரிந்துகொண்டவர், “என்ன சார் பண்றது? வாசல்ல படுக்கலாம்னா காவா தண்ணி நிக்குது. சின்னவளை என் மார்ல போட்டுக்கிட்டு நாலு பேரும் நெருக்கியடிச்சுப் படுத்துக்குறோம்” என்றவர், கண் கலங்கியவராய், “அது மட்டும் ஒழுங்கா இருந்திருந்துச்சுன்னா, இப்பிடி நாதியில்லாம நிப்போமா? குடிச்சுக் குடிச்சுப் பைத்தியம் முத்தியில்ல செத்துச்சு. அது பூடுச்சு. நாங்கதான் நெதம் சாவறோம்…” தாங்க மாட்டாமல் அழுகிறார். பெரிய பொண்ணும் சேர்ந்து அழுகிறது.
நான்கு ஆண்டுக்கு முன்பு பார்த்தது. குழந்தைகள் வளர்ந்திருந்தார்கள். பெரியவள் கமலி, ஒன்பதாவது படிக்கிறாள். அடுத்தவள் தமிழ் அழகி, ஆறாவது படிக்கிறாள். மூன்றாமவள் கனிமொழி, இரண்டாம் வகுப்பு. கடைக்குட்டி விசாலாட்சி பால்வாடிக்குச் செல்கிறாள். குழந்தைகளுக்கு அழகான பெயர் களை வைத்திருக்கிறார் தாஸ்.
தாஸுக்குச் சுமார் ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்த குடிப் பழக்கம் இருந்தது. கடைசி இரு ஆண்டுகள் அவர் மிகவும் முற்றிய குடிநோயாளியாகவும் மனநோயாளியாகவும் ஆகிவிட்டார். அவருக்கு ‘ஆடிட்டரி ஹாலுசினேஷன்’முற்றிய நிலையில் இருந்தது. இல்லாத ஒன்றை இருப்பதுபோல உணர்ந்தால், அது ஹாலுசினேஷன். சுருக்கமாக மனப்பிராந்தி!
குடிநோய் மூலம் ஏற்படும் மனநோய்களில் ஒன்று. கேட்காத ஒன்றைக் கேட்பதுபோல உணர்ந்தால், அது ஆடிட்டரி ஹாலுசினேஷன். இல்லாத காட்சிகள் கண் முன் விரிந்தால், அது விஷுவல் ஹாலுசினேஷன். சம்பந்தமே இல்லாமல் வாசனையோ துர்நாற்றமோ அடிப்பதாக உணர்ந்தால், அது ‘ஆல்ஃபேக்டரி ஹாலுசினேஷன்’. இல்லாத ஒருவர் தன்னைத் தொடுவதுபோல உணர்ந்தால், அது ‘டேக்டைல் ஹாலுசினேஷன்’. சுவைக்காத ஒன்றை சுவைப்பதுபோல் உணர்ந்தால், அது ‘கஸ்டேட்டரி ஹாலுசினேஷன்’.
கமாண்டிங் ஹாலுசினேஷன்
இவற்றில் உட்பிரிவுகளும் உண்டு. தாஸுக்கு இருந்தது கமாண்டிங் ஆடிட்டரி ஹாலுசினேஷன். சரியான சர்வாதிகாரி அது. காதுக்குள் கடுமையாகக் கட்டளையிடும். அவை பெரும்பாலும் எதிர்மறையானவையாக இருக்கும். “சனியனே, நீ எல்லாம் எதுக்கு உயிரோட இருக்க? போய்ச் சாவு. தண்டவாளத்துல தலையைக் கொடு. தலை நசுங்கி மூளை சிதறணும்...” என்று கத்தும். மிகைப்படுத்தவில்லை; பயமுறுத்தவில்லை; மருத்துவம் சொல்லும் உண்மை இது.
“பொதுவாகவே தைமன் எனப்படும் வைட்டமின் பி-1 குறைவதால் ஏற்படும் அடிப்படைப் பிரச்சினைகளே மேற்கண்ட நோய்கள். மூளை நரம்புகள் செயல்பட அடிப்படைத் தேவை இந்த வைட்டமின்களே. மது அந்த வைட்டமின்களை வெகுவாகக் குறைத்துவிடுகிறது. மூளை சிந்திக்கும் திறன் இழக்கிறது. அப்போது நடப்பவற்றை உணர இயலாமல், இல்லாத ஒன்றை இருப்பதாகத் தானாகப் பதிவுசெய்கிறது மூளை. ஒருவரின் வாழ்க்கைச் சூழலைப் பொறுத்து ஹாலுசினேஷனின் வகை மாறுபடலாம். ஆனால், அவை பெரும்பாலும் எதிர்மறை எண்ணங்கள் கொண்டதாகவே அமையும். இதில் நரம்பியல் சங்கதிகள் நிறைய இருக்கின்றன” என்கிறார் மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி.
நாசமாப்போன டாஸ்மாக்
தாஸுக்குக் குடிநோயும் மனநோயும் முற்றிய நிலையில், சில நாட்களாக வீட்டிலேயே வைத்திருந்தார்கள். காலையில் கண் விழித்ததும் அவருக்கு ஆஃப் பாட்டில் மது முழுதாக வேண்டும். காலையில் குடிக்கவில்லை என்றால், கமாண்டிங் ஆடிட்டரி ஹாலுசினேஷன் கட்டளையிட ஆரம்பித்துவிடும். தினமும் 200 ரூபாய் கொடுத்து மது வாங்க என்ன செய்வார் புஷ்பா? வேறு வழியில்லாமல் வீட்டில் பூட்டிவைத்திருந்தார். இரண்டு நாட்களாக “கதவைத் தொறடி. நான் சாகணும். அவன் திட்டறான். கதவைத் தொறடி...” என்று கத்திக்கொண்டிருந்தவர், மூன்றாம் நாள் அதிகாலையில் கதவை உடைத்துக்கொண்டு ஓடிப்போய் கூவத்தில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். 14 வயதில் தொடங்கிய புஷ்பாவின் திருமண வாழ்க்கை, அவரது 27 வயதிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. ‘விதி’ என்கிறார் புஷ்பா.
இப்போது பிழைப்புக்கு என்ன செய்கிறார் புஷ்பா?
“மூணு வீடுகளுக்கு வேலைக்குப் போறன் சார். மூவாயிரம் ரூவா வருது. புள்ளைங்களைப் படிக்க வெச்சிரணும்னு வைராக்கியமா இருக்கேன். சார், ஒரு வீட்டுக்கு மட்டும் எதானா உதவி செய்யுங்க. மூத்தவ வயசுக்கு வந்துட்டா. புள்ளையால, வாசல்ல வெச்சுக் குளிக்க முடியலை” - அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. வாயைப் பொத்திக்கொள்கிறார்.
இப்படி ஒரு தாஸ் மட்டும் அல்ல, ஆயிரக் கணக்கில் செத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் சொல்வதில் சந்தேகம் இருந்தால், ஒரு எட்டு நாலைந்து டாஸ்மாக் கடைகளுக்குச் சென்று பாருங்கள். தனியாக யாரையோ திட்டிக்கொண்டும் பேசிக்கொண்டும் நின்றிருப்பார்கள் அநேக தாஸ்கள், நாளைய அனாதைப் பிணங்கள்!
(தெளிவோம்)
- டி.எல். சஞ்சீவிகுமார், தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago