எதிர்பார்க்க வைத்து, ஏமாற்றிய பட்ஜெட்!

By வ.ரங்காசாரி

நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், பல்வேறு தரப்பினரையும் பல்வேறு விதங்களில் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிவிட்டது. ‘பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட சிரமங்களைப் பல்லைக்கடித்து தேசபக்தியுடன் சகித்துக்கொண்ட ஏழைகளுக்கும் கிராமப்புற மக்களுக்கும் உரிய வகையில் நன்றிக்கடன் தீர்ப்போம்’ என்று பிரதமர் மோடி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருந்தார். அதையொட்டி ஏதாவது அறிவிப்புகள் இடம் பெறக்கூடும் என்று அஞ்சி, பட்ஜெட் தாக்கல் செய்வதைத் தள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றிடம் அனைத்து எதிர்க்கட்சிகளும் முறையிட்டன.

பட்ஜெட் வெளியான பிறகு, “சரவெடியாக வெடிக்கும் என்று எதிர்பார்த்தோம், உப்புச் சப்பில்லாமல் இருக்கிறது” என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். “வெறும் வார்த்தை ஜாலம், எண்களை இடம் மாற்றியிருக்கிறார் யாருக்கும் பயன்படாத பட்ஜெட்” என்று வர்ணித்திருக்கிறார் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி.

எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்

வருமான வரி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று நடுத்தர வர்க்கத்தினர் எதிர்பார்த்தார்கள். ரூ.2.5 லட்சம் வரையில் வருமானம் இருந்தால் வரியில்லை. ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் உள்ளவர்களுக்கு இனி 5% தான் வருமான வரி என்று அறிவித்துவிட்டார் ஜேட்லி.

தொழில் நிறுவனங்கள் மீதான கார்ப்பரேட் வரியை 30%-லிருந்து 25% ஆகக் குறைப்பார், சர் சார்ஜ், செஸ் ஆகியவற்றை அடியோடு நீக்கிவிடுவார் என்று தொழில்துறையினர் எதிர்பார்த்தார்கள். ரூ.50 கோடி விற்றுமுதல் உள்ள தொழில்நிறுவனங்களுக்கு மட்டும் வரியை 30%-லிருந்து 25% ஆகக் குறைத்திருக்கிறார்.

அடித்தளக் கட்டமைப்புத் துறையினர், மனை வணிகர்கள், ஏற்றுமதியாளர்கள், தங்க நகை வியாபாரிகள், ஜவுளித் துறையினர், தோல்பொருட்கள் தயாரிப்போர், சிறு வணிகர்கள், மோட்டார் வாகனத் தயாரிப்பாளர்கள் என்று பலதரப்பட்டவர்கள் வரிச் சலுகை எதிர்பார்த்தனர். இவர்களைத் தவிர மகளிர், மாற்றுத்திறனாளிகள், முதியோர், பழங்குடிகள், வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழும் ஏழைகள், மாணவர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், சேவைத் தொழில் செய்வோர், வங்கி ஊழியர்கள் என்று பலதரப்பட்டோரும் தமக்குரிய எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்தனர்.

ஏற்றுமதி வருமானம் பெரும் சவால்

அவர்கள் எதிர்பார்த்ததில் தவறு கிடையாதே தவிர, நியாயம் இருந்தது என்று கூறிவிட முடியாது. காரணம், உலக அளவில் பொருளாதாரத் தேக்க நிலை இன்னமும் மாறவில்லை. சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விலையை அதன் உற்பத்தி நாடுகள் உயர்த்தத் தொடங்கி விட்டன. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உலகமயமாதலையும் உலக வாணிப நியதிகளையும் கட்டோடு வெறுக்கிறார். அமெரிக்காவில் உற்பத்தி, வேலைவாய்ப்பை அதிகரிக்க அதிரடி நடவடிக்கைகளில் இறங்கத் துடிக்கிறார். பிரிட்டனும் கிட்டத்தட்ட இதே மனோபாவத்தில்தான் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியிருக்கிறது. இதனால் இந்தியா போன்ற நாடுகள் ஏற்றுமதி மூலம் வருமானம் ஈட்டுவது பெரிய சவாலாக இருக்கப்போகிறது.

ஜேட்லியை முதலில் சிலவற்றுக்காகப் பாராட்ட வேண்டும். இலவச அறிவிப்புகளை வெளியிட்டு தவறான முன்னுதாரணத்தை தேசிய அளவில் ஏற்படுத்தவில்லை. அதே சமயம், அரிசி - கோதுமை, உரம் உள்ளிட்டவற்றுக்கான ரூ.2.7 லட்சம் கோடி மானியத்தைக் குறைக்கவோ ரத்து செய்யவோ இல்லை. விவசாயக் கடன் ரத்து என்று அறிவித்து, வங்கிகளின் முதுகெலும்பை மேலும் ஒடிக்கவில்லை. ஏழைகளுக்கு மாதந்தோறும் நிரந்தர உதவித்தொகை (வருமானம் போல) அளிக்கப்படும் என்று அறிவிக்கவில்லை. (இப்படியொரு பரிந்துரை, பட்ஜெட்டுக்கு முதல் நாள் அளிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் கோடி காட்டப்பட்டிருந்தது.)

கார்ப்பரேட் வரியை 30%-லிருந்து 25% ஆக எல்லா நிறுவனங்களுக்கும் குறைக்கவில்லை. குறைந்தபட்ச மாற்று வரியையும் ரத்து செய்யவில்லை. பங்குச் சந்தையில் லாபம் ஈட்டுவோர் அதில் ஒரு பகுதியை தேசத்துக்குக் கொடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி சில நாட்களுக்கு முன்னால் பேசினார். அப்படியும் மூலதன ஆதாய லாபத்தின் மீது வரி எதையும் ஜேட்லி விதிக்கவில்லை.

வேலைவாய்ப்பும் வருமானமும் பெருகும்

வங்கிகளின் நிதி நிலைமை மோசமாக இருக்கிறது. கடன் கொடுக்க நிதியில்லாமல் அரசிடம் மறு முதலீட்டை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. பெரிய தொழில் நிறுவனங்களும் கூடுதல் முதலீட்டுக்குப் பண மில்லாமல் தவிக்கின்றன. இந்நிலையில் பொதுச் சந்தையிலிருந்து கடன் பத்திரங்கள் மூலம் திரட்டும் நிதியைக் குறைத்துக் கொண்டிருக்கிறார் ஜேட்லி. இதனால், தொழில் நிறுவனங்கள் தங்களுடைய பங்கு வெளியீடுகளுக்குக் குறைந்த வட்டியில் நிதி திரட்ட முடியும். வேலைவாய்ப்பை அதிகப் படுத்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்துக்கு ரூ.48,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அடித்தளக் கட்டமைப்புத் துறையாக ‘வீடமைப்புத் தொழில்’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இத்துறையில் ஈடுபடும் தனியாருக்கு அரசின் சலுகைக் கடன், மானிய உதவி கிடைக்கும். இது வேலைவாய்ப்பை அதிகரிக்கும். போக்குவரத்து, நெடுஞ்சாலை, ரயில்வே ஆகியவற்றின் மூலம் ரூ.3.9 லட்சம் கோடி செலவிட உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. ரயில்வே துறையில் இந்த ஆண்டு 3,500 கி.மீ. புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளன. வேளாண்மை, கிராமப்புற வளர்ச்சிக்கு ரூ.1,87,223 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது கிராமங்களில் வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் நிரந்தர சொத்துக்களையும் பெருக்கும்.

மாற்றங்களுக்கு வித்திடும் பட்ஜெட்

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு 96% உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்குத் திரும்பியிருந்தாலும் அவற்றில் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் கறுப்புப் பணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தப் பணத்துக்கு உரிய வகையில் கணக்கு காட்டவும் வரி செலுத்தவும் நேரிடும். இதனால் வரி வருவாய் பெருகும். அத்துடன் எதிர்காலத்திலும் இவர்கள் வரி செலுத்துவதைத் தொடர நேரும். ரூ.3 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக எதற்கும் பணம் செலுத்தக் கூடாது என்ற கட்டுப்பாட்டால், பெரும்பாலான பரிமாற்றங்கள் அரசின் கண்காணிப்புக்கு உள்ளாகும். பான் எண் பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. ஊழல் குறையவும் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகவும் இது உதவும்.

பொதுச் சரக்கு சேவை வரி இந்த ஆண்டு ஜூலை முதல் அமலுக்கு வரும்போது, வரி நிர்வாகத்தில் சீர்மை ஏற்படும். திட்டச் செலவு, திட்டமல்லாச் செலவு என்ற வேறுபாடு மறைந்த முதல் பட்ஜெட் இது. பிப்ரவரி முதல் நாள் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டும் இதுவே. ரயில்வே துறைக்கு தனியாக பட்ஜெட் போடப்பட்டது முடிவுக்கு வந்ததும் இந்த ஆண்டுதான். எனவே, இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளித்திருந்தாலும், நல்ல மாற்றங்களுக்கு வித்திட்ட பட்ஜெட்டாக எதிர்காலத்தில் நினைவுகூரப்படும்.

- தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்