அந்தக் காலத்தில் தீபாவளி...

By தங்க.ஜெயராமன்

இல்லாமையைத் தீபாவளிபோல் வெளிச்சம்போட்டுக் காட்டும் பண்டிகை வேறெதுவும் இல்லை.

1977-ம் ஆண்டு தீபாவளி முடிந்து மறுநாள் விடியவில்லை. பின்னிரவில் ஆரம்பித்து, வெள்ளி முளைக்கும்போது பெரும் புயல் அடித்துக் காலை ஏழு மணிக்கு ஓய்ந்தது. கிராமங்களுக்கு வந்திருந்தவர்கள் திரும்ப முடியவில்லை. வெளி மாநிலங்களிலிருந்து தஞ்சாவூர்க்காரர்கள் தீபாவளிக்கு ஊருக்கு வருவது அப்போது முதல் வெகுவாகக் குறைய ஆரம்பித்தது. இயற்கையின் சில மணி நேரச் சீற்றமே வரலாற்றின் இழைகளை அறுத்துவிடுகிறதே!

அப்போது தஞ்சைப் பகுதி கிராமங்களும் நகரங்களும் தீபாவளியில் புதுச் சோபை பெற்றுவிடும். வெளி மாநிலங் களில் வேலையில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு வரு வார்கள். புதுப்புது முகங்களாக இருக்கும். தங்கள் ஊரை அவர்களும் புதிதாய்ப் பார்ப்பதுபோல் பார்ப்பார்கள். எல்லாம் விழிவிரித்து பார்க்கும் வியப்பு மயம்.

கலாச்சார செருகளம்

காவிரியில் குளித்தாலும் கங்கா ஸ்நானம்தான். அங்கேயே முரண்பாடு. தமிழ்நாட்டுக் கலாச்சாரத் தளத்தில் தீபாவளி சர்ச்சையாகிப்போனதில் வியப்பில்லை. புராணங்களுக்கு மக்களின் மீதிருந்த பிடியை உடைப்பதற்குத் தமிழ் அடையாள ஆர்வலர்கள் தேர்ந்துகொண்ட செருகளம் தீபாவளி. பொருளாதார, சாதியக் கட்டமைப்பின் கீழ்த் தட்டுகள் பொங்கல் என்ற பொதுவெளியில் பங்கேற்கும் அளவுக்குத் தீபாவளி தளர்ந்து இடம்தராது.

தீபாவளி மறுப்பு, பிரச்சாரத்தோடு நின்றுவிடாது. ஒரு கிராமத்தில் இந்த மறுப்பு ஊர்க் கட்டுமானமாகவே இருந்தது. ஆனாலும், புத்தாடை, வெடியெல்லாம் இல்லாமல் குழந்தைகளைச் சாக்காக வைத்துப் பலகாரம் மட்டும் செய்துவிடுவார்கள். தீபாவளி என்பது தீபங் களின் வரிசை. ஆனால், பண்டிகையில் இதற்கான அடையாளத்தை நான் பார்த்ததில்லை. இப்போதுதான் விளம்பரங்களில் இந்தச் சொல்லை அர்த்தப்படுத்தும் விதமாகப் பட்டில் ஜொலிக்கும் பெண்கள் வரிசையாகத் தீபம் ஏற்றுவதைப் பார்க்கிறோம்.

விவசாயிகளுக்குத் தலைவலி

ஐப்பசி அடைமழைக் காலத்தில் வரும் தீபாவளி, காவிரிப் படுகை விவசாயிகளுக்குப் பெரும் தலைவலிதான். வரவே இல்லாத காலத்தில் ஒரு பெருஞ்செலவு. அப்போதுதான் சம்பா நடவுக்குச் செலவுசெய்து கை ஓய்ந்திருப்பார்கள். பிறந்த வீட்டுப் பெண்களுக்கு வரிசை, துணிமணி என்று தவிர்க்க முடியாத செலவினமாக தீபாவளி வந்து நிற்கும். இப்போதுபோல் நான்கு லட்சம் ஏக்கர் அளவுக்குக் குறுவை பயிரிடுவது இல்லை.

ஒரு ஏக்கர், அரை ஏக்கரில் தீபாவளிச் செலவுக்கு ஆகும் என்று நட்டுவைப்பார்கள். சரியான மழையில் அறுவடைக்கு வரும். அதை நெல் மண்டிக்குக் கொண்டுசென்றால், தீபாவளி நெருக்கடியை ஆதாயமாக்க விலை குறைத்துக் கேட்பார்கள். ஒரு தீபாவளியின்போது மூட்டை நெல் பதினெட்டு, பதினாறு ரூபாய்க்கு விற்க வேண்டியிருந்தது.

கடைத்தெருவில் விவசாயிகளின் குமுறல். “துணிமணி, பலகாரம் இல்லையென்றால் தீபாவளி போக மாட்டேன்னு சொல்லுமா?” இப்படிக் கேட்டுக் கொண்டே ஒரே ஒரு மூட்டை நெல்லை விற்று, தலைக்கு எண்ணெயும், சாமி கும்பிட பழம், பாக்கு வெற்றிலை மட்டும் வாங்கிக்கொண்டு மற்ற மூட்டைகளைத் திருப்பி எடுத்துச் சென்றார்கள்.

பாலும் பழமும்

பெரும்பாலான மிராசுதாரர்களுக்கு மளிகை, ஜவுளிக் கடைகளில் பற்றுவரவு இருக்கும். அங்கே தங்கள் பற்றாக மளிகைச் சாமான்களையும் துணிமணிகளையும் பெற்றுக்கொள்வார்கள். தை பிறந்து அறுவடை முடிந்துதான் இந்தக் கணக்கு நேராகும்.

துணிகளை வகை வகையாகப் பார்க்க முடியாது. இப்போது உலகமாக விரிந்திருக்கும் ஆயத்த ஆடைகளும் அப்போது அதிகம் இல்லை. பிள்ளைகளுக்குச் சீட்டித் துணியில் பாவாடை சட்டை தைத்து வாங்குவதே பெரும் பாடு. சம்பா நடவு மும்முரத்தில் கடைத்தெருவுக்குப் போக நேரமிருக்காது. பெரிய குடும்பங்களில்கூட முதல் நாள் மாலையில்தான் அவசர அவசரமாக வண்டி கட்டிக்கொண்டு கடைத்தெருவுக்குச் செல்வார்கள்.

குடும்பத்தோடு சென்று துணி வாங்குவதெல்லாம் அப்போது இயலாது. பெரியவர்கள் வாங்கிவந்து கொடுப் பதை உடுத்திக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் “இது என்ன கிழிவுபோல் இருக்கிறது” என்று துணியைக் குறை சொல்வார்கள். “எனக்கு ஒரு கிழிவு போதும்; பணம்பெற்ற துணியெல்லாம் வேண்டம்” என்று வயதானவர்கள் சொல்வார்கள்.

கிழிவு என்றால், நீளமாக நெய்த துணியில் தேவையான அளவு வெட்டிக்கொள்ளும் கரைக்கட்டு இல்லாத துண்டு. கோடம்பாக்கம் நூல்புடவை, சின்னாளப்பட்டி சுங்கடி, அதற்கு முன்பு கண்டாங்கிச் சேலை எல்லாம் பிரபலம். வெங்காயச் சருகு என்று செல்லமாக அழைக்கப்பட்ட நைலான், நைலக்ஸ் எல்லாம் பிற்பாடுதான். திரைப்படப் பெயரின் மகிமையால் பிரபலமான சேலை ‘பாலும் பழமும்’. உடல் முழுதும் வண்ண வண்ணக் கட்டங்களாகக் கண்ணைப் பறிக்கும்.

உயிர்பிடிக்கும் கைத்தறி

பின்லே எட்டுமுழ மல் வேட்டியை வெறும் ஆறு ரூபாய்க்கு வாங்கியிருக்கிறேன். ஒரு முறை கும்பகோணம் ஜவுளிக்கடை ஒன்றில், தீபாவளி துணி எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். சாலையின் நடையோரத்தில் இரண்டு அடுக்குக் கைத்தறி காரிக்கன் வேட்டிகளை வைத்துக்கொண்டு நின்ற நெசவாளி ஒருவர், “இதிலும் இரண்டு வாங்கக் கூடாதா?” என்றார்.

என்னைக் கப்பிக் கொண்ட குற்ற உணர்விலிருந்து நான் இன்றும் மீளவில்லை. காரிக்கன் என்பது நனைத்து பிளீச் பண்ணாதது. நல்ல நாளில் உடுத்துவது வழக்கம். பல ஆண்டுகள் கழித்து திருவாரூர் கடைத்தெருவில் காரிக்கன் வேட்டிக்காக அலைந்து இரண்டே இரண்டு இருந்த இடத்தில் ஒன்று மட்டும் வாங்கிவந்தேன். அப்போது அநேகமாகப் பட்டுப் போயிருந்த கைத்தறி இப்போது புடவைகள் வழியாகக் கொஞ்சம் உயிர்பிடிக்கிறது.

மாப்பிளை வெடி

வெடிகளுக்கு அதிகம் செலவுசெய்வதில்லை. ஓலை வெடி, ஒத்தை வெடி, மத்தாப்பு, கம்பி மத்தாப்பு, தரைச் சக்கரம் என்று சில வகை. மின்னல் வெடி என்று காகிதத்தில் முக்கோண வடிவில் இருக்கும். அதற்கு முன்பு மாப்பிள்ளை வெடி அல்லது வெங்காய வெடி என்று இருந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். மாப்பிள்ளையின் முதுகில் எறிந்தால் அந்த அழுத்தத்திலேயே வெடிக்குமாம்.

கம்பியாக நீளக் கைப்பிடிவைத்து ஒரு சுத்தியல் உண்டு. அடிக்கும் வாயில் ஒரு குழி இருக்கும். அதில் மருந்தைக் கிடித்து சுவரில் அடித்தால் வெடிச் சத்தம் வரும். இப்படி ஒரு சாதனம் வீட்டில் இருந்தது. அப்போதே அது காலாவதி ஆகியிருந்தது. அப்போது இருந்தவற்றை நாட்டுவெடி என்று அடையாளப்படுத்தி, சிவகாசித் தயாரிப்புகள் தங்களை உயர்த்திக் கட்டமைத்துக்கொண்டன.

தீபாவளி மருந்து

சடங்கு, சம்பிரதாயம் என்று தீபாவளியில் அப்போதும் ஒன்றும் பெரிதாக இருக்காது. எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, பெரியவர்கள் கையால் கொடுக்கும் புதுத் துணியை மஞ்சள் வைத்து உடுத்துவார்கள். மருதாணி இட்டுக்கொள்வது உண்டு. தவறாமல் இடம்பெறும் பலகாரம் கடலைப் பருப்பும் வெல்லமும் சேர்த்து எண்ணெயில் சுட்டு எடுக்கும் சுழியன். அதிரசம், முறுக்கு, பயத்த உருண்டை, கெட்டி உருண்டை இவற்றை விருப்பம், வசதியை ஒட்டிச் செய்துகொள்வார்கள்.

செரிமானத்துக்குத் தீபாவளி மருந்து என்று ஒரு லேகியம். சில சமயம் அது பலகாரத்தைவிட ருசியாக இருக்கும்! இருமுறை சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைப் புழங்கும் மக்களுக்கு நம் முன்னோர்கள் இலுப்பை எண்ணெயில் பலகாரம் செய்தார்கள் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

முகம் தெரியாத இருட்டில் குழந்தைகளை இழுத்துக் குளிப்பாட்டிவிடுவதும், கொஞ்சம் சூட்டிகையான வீடுகளில் குளியல் முடித்து, புத்தாடை உடுத்தி வெடிவெடிப்பதும் அமர்க்களப்படும். வீட்டுக்கு வீடு பலகாரப் பரிமாற்றம் நடக்கும். சிறுவர்களும் சிறுமிகளும் பலகாரத் தட்டோடு பக்கத்து வீடு, அடுத்த வீடு, எதிர்த்த வீடு என்று புத்தாடை தரும் கூச்சத்தில் பட்டாம்பூச்சிகளாய்ப் பறப்பார்கள்.

‘தேவையும் திங்களும் இருப்பவர்களுக்குத்தான்’ என்று சொல்வதுண்டு. இல்லாமையை தீபாவளியைப் போல் இரக்கமில்லாமல் பறைசாற்ற வல்லது வேறெதுவுமில்லை. அடையாள அரசியலின் தாக்குதல், நெல்லை மலிவாக்கும் நெருக்கடி, மில் துணி ஆக்கிரமித்துக்கொண்ட கைத்தறியின் இடம் - இப்படியாக தீபாவளி ஒரு இழுபறி களமாகவே அப்போது இருந்தது. எனினும், பெரியவர்களின் தீபாவளியைப் போலல்ல குழந்தைகளின் தீபாவளி. குழந்தைகளுக்கு தீபாவளி என்பது எப்போதும் கனவுகளின் பண்டிகைதான்!

- தங்க. ஜெயராமன்,
ஆங்கிலப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர்,
தொடர்புக்கு: profjayaraman@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்