இது அரை இறுதி அல்ல...

By என்.ராம்

பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்பதற்கான அறிகுறிகள் வலுவாக உள்ளன. ஆனால், 2014-ல் நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில், மோடி தலைமையிலான கூட்டணி நிச்சயமாக வெற்றிபெறக்கூடிய சக்தியாகக் களம் இறங்காது என்பது உறுதி.

வட இந்தியாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்துகின்றன. அரசியல் என்னும் சந்தையில் காங்கிரஸின் இடம் ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதே அது. எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதற்கு உங்களைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள் என்னும் செய்தியைக் கோடிக்கணக்கான வாக்காளர்கள் மத்திய ஆளும் கட்சிக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இரு பெரிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி பெற்றிருக்கும் அபாரமான வெற்றி குறிப்பிடத்தகுந்ததுதான். ஆனால். அதன் மகிழ்ச்சி முழுமையானதல்ல. புதிய கட்சியான ஆம் ஆத்மி, டெல்லியில் பா.ஜ.க-வுக்கு முழுமையான வெற்றியை மறுத்திருக்கிறது. சத்தீஸ்கரில் நிலவிய கடும் போட்டி சங்கடமூட்டக்கூடிய சில கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கடந்த மே மாதம் காங்கிரஸ் தலைவர்கள் மீது தீவிரவாதிகள் தொடுத்த அதிர்ச்சிகரமான தாக்குதலைக் கண்ட சத்தீஸ்கர் மாநில மக்கள், மாநிலத்தின் நிர்வாகம், பாதுகாப்பு, பாதுகாப்பில் ஏற்பட்ட மாபெரும் தோல்வியில் ரமண் சிங் அரசின் பொறுப்பு ஆகியவை குறித்து என்ன நினைக்கிறார்கள் என்பதுகுறித்த கேள்விகள் அவை.

ஆம் ஆத்மியின் வெற்றி

இந்தச் சுற்றில் காங்கிரஸின் பின்னடைவும் பா.ஜ.க-வின் எழுச்சியும் ஓரளவு எதிர்பார்க்கப்பட்டவைதாம். ஆனால், ஆம் ஆத்மி பெற்றுள்ள வெற்றி பொதுவான எதிர்பார்ப்புகளை விஞ்சியது. அரசியல் கண்ணோட்டங்களையும் அறிகுறிகளையும் வைத்துப் பார்க்கும்போது, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலும் அர்ப்பண உணர்வுகொண்ட அவரது கட்சியினரும் ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் பா.ஜ.க. பெற்ற மாபெரும் வெற்றிக்குக் காரணமானவர்களின் முக்கியத்துவத்தை மங்கச்செய்துவிட்டார்கள் என்று சொன்னால் அது மிகையான கூற்றாக இருக்காது. இந்த முறை கருத்துக் கணிப்புகளும் வாக்குக் கணிப்புகளும் வாக்காளர்களின் மனநிலையையும் தேர்தல் போக்குகளையும் சரியாகவே பிரதிபலித்ததாகச் சொல்லலாம். எனினும் வாக்கு விகிதங்களின் மதிப்பீடுகளும் தொகுதிகளின் எண்ணிக்கைகுறித்த கணிப்புகளும் முடிவுகளிலிருந்து மாறுபட்டு உள்ளன. டெல்லியில் இந்த வித்தியாசங்கள் அதிகமாக உள்ளன. கணிப்புகள் ஆம் ஆத்மி கட்சியைக் குறைவாக மதிப்பிட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

இது அரை இறுதி என்றும் இதில் வெல்பவரின் திறன் அடுத்த ஆண்டின் இறுதிப் போட்டியில் வெல்வதற்கான அறிகுறி என்றும் இந்துத்துவச் செய்தித் தொடர்பாளர்கள் இந்தத் தேர்தலை வர்ணிக்கிறார்கள். இந்த உதாரணத்தில் சிக்கல் என்னவென்றால், இன்னொரு ‘அரை இறுதி’ நடக்கவிருக்கிறது. அது நடக்கும் களம் வேறு. மாநிலக் கட்சிகளும் பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத இதர கட்சிகளும் இணைந்த கலவையே அதில் வெற்றிபெறவிருக்கிறது. எனவே, இறுதிப் போட்டியில் மூன்று சக்திகள் களத்தில் நிற்கும். அந்தப் போருக்கான விதிகள் மாறுபட்டவை. வெல்லக்கூடியவர்கள் என்று கருதப்படும் இரண்டு சக்திகளும் இந்தக் களத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே போராட முடியும். தோற்பது நிச்சயம் என்று கருதப்படும் மூன்றாவது சக்தியோ களத்தின் எல்லா இடங்களிலும் சரளமாக ஆட முடியும்.

களத்தின் நிலவரம்

இந்தப் போட்டி எப்படி இருக்கும்? கடினமான இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கு முன் 2013-ல் நடைபெற்ற ஒன்பது மாநிலத் தேர்தல்களில் என்ன நடந்தது என்பதைப் பார்க்க வேண்டும். கருத்துக் கணிப்புகள், வாக்குக் கணிப்புகள், ஊடகச் செய்திகள் ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, விலைவாசி உயர்வு, வாழ்வாதாரங்களுக்கும் வாழ்க்கைத் தரத்துக்கும் ஏற்பட்ட நெருக்கடிகள், ஊழல் ஆகியவை வாக்காளர்களின் பிரதானமான கவலைகள் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. இந்த அம்சங்களில் காங்கிரஸும் ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியும் மிக மோசமாகத் தோல்வியடைந்துள்ளன.

2013-ல் சட்டமன்றத் தேர்தல் நடந்த ஐந்து மாநிலங்களில் (இதில் நான்கு வட இந்தியா; ஒன்று தெற்கில் கர்நாடகம்) சுமார் 100 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதர நான்கு மாநிலங்கள் வடகிழக்கில் உள்ளவை. இவற்றில் மொத்தமே 6 மக்களவைத் தொகுதிகள்தான் உள்ளன. இந்த 9 மாநிலங்கள் மட்டுமே இந்திய அரசியல் களம் அல்ல. இந்த மாநிலங்களில் உள்ள மக்களவைத் தொகுதிகள் மொத்தமுள்ள இடங்களில் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவு.

வட மாநிலங்களில் நடந்த தேர்தல்களின் முடிவுகள் பா.ஜ.க-வுக்குச் சாதகமான போக்கை உணர்த்துகின்றன என்றால், தென்னகத்தில் அதற்கு நேர்மாறான போக்கு நிலவுகிறது. ‘இந்து தேசியம்’, அல்லது பெரும்பான்மைவாதம் பேசும் ஒரு கட்சிக்கு இந்தியாவின் பெரும் பகுதியில் சொல்லிக்கொள்ளும்படி வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை. இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அதை முழுமையான தேசியக் கட்சி என்று சொல்ல முடியாது.

பா.ஜ.க-வுக்குச் செல்வாக்கு இல்லாத மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை சுமார் 250. எனவே, ‘அரை இறுதி’யில் வென்ற அந்தக் கட்சி, ‘இறுதி’ போட்டியில் பாதிக் களத்தில் தன்னால் ஆட முடியாது என்பதைத் தெரிந்துகொண்டுதான் களத்தில் இறங்கும்.

உள்ளூரிலும் பிராந்திய அளவிலும் தேசிய மட்டத்திலும் நிலவும் பல்வேறு காரணிகள்தான் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. பன்முகப்பட்டதும் சிக்கலானதுமான இந்தியாவின் தேர்தல் ஆட்டத்தை ஓரிரு காரணிகளுக்குள் சுருக்கிப் பார்ப்பது முற்றிலும் தவறானதாகவே அமையும்.

ஒரு கட்சி அல்லது தலைவருக்குச் சாதகமான வலுவான அலை இந்தியாவில் நிலவுகிறதா என்னும் கேள்வி இங்கே எழுகிறது. 1971, 1977, 1984 ஆகிய ஆண்டுகளில் அத்தகைய ஒரு அலை வீசியது என்பதால், இந்தக் கேள்வி முக்கியமானது தான். அலை வீசுகிறது என்றுதான் மோடி ஆதரவாளர்கள் சொல்வார்கள். மோடியைப் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தியமைக்கு ஆதரவு கூடிவருகிறது என்பதும் கட்சியின் வெற்றி வாய்ப்பை அது கணிசமாகக் கூட்டியிருக்கிறது என்பதும் உண்மைதான். ஆனால், பா.ஜ.க-வையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் (தே.ஜ.கூ.)நேரடியாகப் பதவியில் அமர்த்தும் அளவுக்கு மோடி அலை வீசவில்லை எனபதே ஆதாரங்களின் அடிப்படையிலான பதிலாக இருக்க முடியும்.

கூட்டாளிகள் தேவை

பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. காங்கிரஸின் நிலை தற்போதிருப்பதில் (206) பாதியாகக் குறைந்துவிடும் என்று தேர்தல் ஆய்வா ளர்கள் கணிக்கிறார்கள். மாநிலக் கட்சிகள், இடதுசாரிகள், காங்கிரஸ் - பா.ஜ.க. அல்லாத இதர கட்சிகள், சுயேச்சைகள் ஆகியோரின் எண்ணிக்கை கணிசமாக இருக்கக்கூடும். இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் (ஐ.மு.கூ.) ஒட்டுமொத்த வலுவைவிடவும் அதிகமாக இருக்கும். இந்தச் சூழலில் மோடி தலைமையிலான ஆட்சி அமைவதற்கான வழி எது? தே.ஜ.கூ.

200-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றால் மட்டுமே அது சாத்தியமாகும். மோடியைக் காட்டிலும் பரவலாகப் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அடல் பிஹாரி வாஜ்பாயியின் காலத்தில் இந்தக் கூட்டணி 1998, 1999-ம் ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்தது. இன்றைய தே.ஜ.கூ-வை வாஜ்பாயி காலத்து தே.ஜ.கூ-வின் நிழல் என்றுதான் சொல்ல வேண்டும்.

‘வளர்ச்சி நாயகன்’ என்ற மகுடம் சூட்டப்பட்டுத் தேர்தல் களத்தில் நிற்கும் மோடியால் கூட்டாளிகளை ஈர்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை. கடுமையாகப் பிளவுபடுத்தும் சக்தியாகவே அவர் இருக்கிறார். இவ்விஷயத்தில் அவரது ‘புகழ்’ 2002-ல் குஜராத்தில் நடை பெற்ற ‘செயல்திட்ட’த்தில் அவருக்கும் அவரது அரசுக்கும் இருந்த பங்கில் வேர்கொண்டுள்ளது. இந்தியாவின் செய்தித்தாள்களும் செய்தித் தொலைக்காட்சிகளும் மோடியின் பிரச்சாரம் குறித்த செய்திகளைத் தொழில்சார்ந்த விலகலுடனேயே கையாண்டுவருகின்றன. ஆழமான கவலையை ஏற்படுத்தும் வழிமுறையின் மூலமாகவே அவர் தேசிய அரங்குக்குள் வந்தார் என்பதையும் மதச்சார்பற்ற ஜனநாயக ஆளுகைக்கு அது எந்த அளவுக்கு அபாயகரமானது என்பதையும் அவை கவனப்படுத்துகின்றன.

பிளவுபடுத்தும் ஆளுமை

மோடியின் பிளவுபடுத்தும் தன்மையின் தாக்கம் பா.ஜ.க-வின் உயர் மட்டங்களிலும் தெரிகிறது. மோடியைத் தேர்தல் களத்தில் முன்னிறுத்துவதற்கு எதிராக

எல்.கே. அத்வானி எழுப்பிய குரலில் இது வெளிப்பட்டது. பிரதமர் பதவிக்குத் தன்னை கட்சி முன்னிறுத்தவில்லை என்னும் ஆற்றாமையின் வெளிப்பாடாக ஊடகங்கள் இதை முதலில் பார்த்தன. ஆனால், இந்தப் பார்வை உள்ளீடற்றது, மிகவும் எளிமைப்படுத்தப்பட்டது. மோடியின் ‘புகழ்’ பா.ஜ.க-வின் கூட்டாளிகளை விலக்கும் தன்மை படைத்தது என்பதை வைத்துப் பார்க்கும்போது, மோடி முன்னிலைப் படுத்தப்படுவதால் கட்சிக்கும் நாட்டுக்கும் ஏற்படக்கூடிய விளைவுகளை எண்ணியே அத்வானி கவலைப்படுகிறார் என்பதே அவரது எதிர்ப்புக்குப் பொருத்தமான விளக்கமாக இருக்க முடியும்.

இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக வருவது உறுதி என்றாலும், 2014ல் நடக்கவிருக்கும் ‘இறுதி’ப் போட்டியில் வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ள கட்சியாகக் களம் இறங்கப்போவதில்லை என்பது தெளிவாகிறது.

மேலும், பல சுவாரஸ்யமான முயற்சிகளும் நடந்துவருகின்றன. பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி சேர காங்கிரஸ் முயன்று வருவதாகச் சொல்லப்படுகிறது. பிஹாரிலும் புதிய கூட்டணிக்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. மறுபுறம் தெலங்கானா நாடகமும் நடந்துகொண்டி ருக்கிறது. இவை களத்தின் நிலவரத்தில் வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடியவை. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்க, மாநிலக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் சூழலும் உருவாகலாம்.

- என்.ராம், மூத்த பத்திரிகையாளர், தொடர்புக்கு: nram@thehindu.co.in

தமிழில்: அரவிந்தன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்