இந்த ஆண்டு டிசம்பர் மாதக் கடைசி நாள் 31-ம் தேதி ஒரு விநாடி அதிகமானதாக இருக்கப்போகிறது. அதாவது 2017-ம் ஆண்டு பிறப்பது ஒரு விநாடி தள்ளிப் போகிறது. ‘பூமி சுழற்சி மற்றும் மேற்கோள் நேர அமைப்பு சேவை’ என்ற சர்வதேச வல்லுநர் குழு இதை அறிவித்திருக்கிறது. அன்றிரவு உலகிலுள்ள எல்லாக் கடிகாரங்களும் 11:59:58 என்ற நேரத்தை அடுத்து 11:59:60 அல்லது 12:00:00 என்று காட்டும்படி திருப்பி வைக்கப்படும். 2016-ம் ஆண்டு ஒரு ‘லீப்’ ஆண்டு. இந்த ஆண்டில் பிப்ரவரி மாதத்துக்கு வழக்கத்தைவிட ஒரு நாள் அதிகமாக 29 நாள்கள் என்பது வாசகர்களுக்கு நினைவிலிருக்கும். ஆகவே 2017-ம் ஆண்டு ஒரு நாள் தாமதமாகப் பிறக்கிறது. இது என்ன பெரிய விஷயம் என்று நம்மைப் போன்ற சாமானியர்கள் நினைக்கலாம். ஆனால் உலகெங்கிலுமுள்ள கணினிகளும் கணினிப் பொறியாளர்களும் அது ஒரு பெரிய பிரச்சினை என்பதை உணர்ந்து அதை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறார்கள்.
குறையும் ஒரு நாள்
பூமியின் சுழற்சி வேகம் ஒரே சீராக இருப்பதில்லை. நிலாவின் நிறையீர்ப்பு விசை பூமியின் சுழற்சி வேகத்தை இம்மி இம்மியாகக் குறைத்து வருகிறது. அதனால் ஒரு நாள் என்பது 24 மணி நேரம் என்பதிலிருந்து இம்மி இம்மியாக அதிகமாகிக் கொண்டே போகிறது. ஆண்டு என்பது 365 நாள்களை விட ஒரு கால் நாள் அதிகமாகிறது. இதன் காரணமாகவே நான்காண்டுகளுக்கு ஒரு முறை 366 நாட்களைக் கொண்ட ‘லீப்’ ஆண்டை வரையறுத்திருக்கிறார்கள். அதைப் பயன்படுத்திச் சர்வதேச வல்லுநர் குழு ‘ஒருங்கிணைக்கப்பட்ட அனைத்துலக நேரம்’ என்கிற அளவீட்டு முறையை ஒழுங்குபடுத்துகிறது. அதன் அடிப்படையில் அனைத்து நாடுகளும் தத்தம் நேர அளவீட்டுக் கருவிகளை அதாவது கடிகாரங்களை ஒழுங்கு செய்துகொள்கின்றன.
பூமியும் சந்திரனும் பரஸ்பரம் ஈர்ப்பு விசைகளைச் செலுத்துகின்றன. சந்திரனை விடப் பூமி பன் மடங்கு பெரியது. எனவே அதன் நிறையீர்ப்பு விசையும் அதிகம். சந்திரன் பூமியை வலம்வரும்படி ஆகிறது. அப்போதெல்லாம் சந்திரனுக்கு நேராக வரும் பூமியின் தரைப்பரப்பு அந்த ஈர்ப்பு காரணமாக லேசாக விம்மும். ஆனால் கடல் பரப்பு அதிக அளவு எழும்பி ஆர்ப்பரிக்கும். அதன் விளைவாகக் கடலில் ஓதங்கள் (பேரலைகள்) ஏற்படுகின்றன. அந்த ஓதங்கள் பூமியின் சுழல் வேகத்தைக் குறைப்பதோடு, சந்திரன் பூமியைச் சுற்றும் வேகத்தையும் அதிகரிக்கின்றன. இவ்வாறு பூமியின் ‘ஒரு நாள் பொழுது’ என்னும் நேரம், ஒவ்வொரு நாளும் ஒரு விநாடியில் இரண்டாயிரத்தில் ஒரு பங்கு குறைந்துகொண்டே போகிறது. அது மட்டுமின்றிப் பூமியில் ஏற்படும் வலுமிக்க நில நடுக்கங்களும் பூமியின் சுழல் வேகத்தைக் கூட்டும் அல்லது குறைக்கும்.
வேண்டாம் லீப் விநாடி
அணுக்கடிகைகள் (கடிகாரங்கள்) உலகின் மிகத் துல்லியமான நேர அளவீட்டுக் கருவிகள். பல நூறு கோடி ஆண்டுகள் ஓடினாலும் ஒரு விநாடியின் பல கோடியில் ஒரு பங்குகூடக் கூடுதலாகவோ, குறைவாகவோ காட்டாது. அவற்றில் ‘மைக்ரோ-வேவ்’ அலைகளின் அதிர்வெண்ணுக்குச் சமமாகச் சீசியம் அணுக்கள் ஊசலாட வைக்கப்படுகின்றன. இந்தக் கடிகாரங்களின் அடிப்படையில்தான் படித்தரமான சர்வதேச விநாடி வரையறுக்கப்படுகிறது. எனினும் யிட்ரியம் அணுக் கடிகை என்ற ஒளியியல் கருவி கூடிய விரைவில் விநாடி பற்றிய வரையறையை மேலும் துல்லியமானதாக்கக்கூடும்.
யிட்ரியம் அணுக்கள் உயர் அதிர்வெண்ணுள்ள அலைவுகளைக் கொண்டவை. எனவே, அவை உறுதியான மாறாத் தன்மை மிக்கவை. அணுக் கருக்களைச் சுற்றி ஓடும் எலக்ட்ரான்கள், கடிகையின் ஊசலைப் போலச் செயல்படுகின்றன. சாதாரணக் கடிகாரங்களின் பெண்டுலங்களைப் போலவோ, தனிச் சுழலிகளைப் போலவோ அவை பூமியின் ஈர்ப்பு விசையால் பாதிக்கப்படுவதில்லை. ஊசல் கடிகாரங்கள் துருவப் பிரதேசங்களில் வேகமாகவும், நில நடுக்கோட்டுப் பகுதிகளில் மெதுவாகவும் ஓடும். அது போன்ற தாக்கம் அணுக் கடிகைகளுக்குக் கிடையாது.
கணினியின் செயல்பாடுகளில் ‘லீப்’ விநாடிகள் பெரும் குளறுபடிகளை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் அஞ்சுகிறார்கள். ஒவ்வோராண்டும் ஜூன் அல்லது டிசம்பர் மாதக் கடைசித் தேதியில்தான் ஒரு விநாடியைக் கூட்டவோ, கழிக்கவோ முடியும். அதையும்கூட ஆறு மாதங்களுக்கு முன்பே முன்னறிவிப்பு செய்துவிட்டுத்தான் செய்ய முடியும். பல விஞ்ஞானிகள் ‘லீப் விநாடி’ என்ற விஷயத்தையே நிராகரிக்க வேண்டுமென்கிறார்கள். அப்படிச் செய்தால் 2,100 ஆண்டுக்குள் சூரியனின் நிலை சார்ந்த நேரக் கணிப்பில் 2-3 நிமிடங்கள் துண்டு விழும். அதை எப்படித் தவிர்ப்பது என்பதைப் பற்றி இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு முடிவு எட்டப்பட வேண்டும்.
-கே.என். ராமசந்திரன், அறிவியல் கட்டுரையாளர்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago