யார் அறிவுஜீவி?

By ஜெயமோகன்

ஓர் இளம் நண்பர் ஒரு வினாவைக் கடிதத்தில் எழுப்பியிருந்தார். “அறிவுஜீவி என்ற சொல்லை அடிக்கடி விவாதங்களில் பார்க்கிறேன். சென்ற பல வருடங்களாக நானும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். சமகாலச் செய்திகளை வாசிக்கிறேன். அரசியலைக் கவனிக்கிறேன். இலக்கிய நூல்களை வாசிக்கிறேன்… நான் என்னை ஓர் அறிவுஜீவியாகக் கொள்ள முடியுமா?”

அதற்குப் பதில் சொன்னேன்: “ஒருவர் தன்னை அறிவுஜீவி என்று நினைத்துக்கொள்வது அவரது விருப்பம். அந்த விருப்பம்தான் மெல்லமெல்ல அவரை அறிவுஜீவி ஆக்குகிறது.”

“சரி, கேள்வியை மாற்றிக்கொள்கிறேன். தமிழ்ச் சூழலில் ஒருவர் அறிவுஜீவி என்று கருதப்பட வேண்டும் என்றால், அவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்கள்?”

‘‘உலகமெங்கும் செல்லுபடியாகக் கூடிய வற்றையே என் நோக்கில் ஒரு குறைந்த பட்ச அளவுகோலாகக் கொண்டிருக்கிறேன்’’ என்று அந்த நண்பருக்கு எழுதினேன்.

அறிவுஜீவியின் அடிப்படை

ஓர் அறிவுஜீவி வாழ்நாளெல்லாம் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால், அவன் பேச ஆரம்பிக்கும்போது அறிந்திருக்க வேண்டிய சில உண்டு. உலக வரலாற்றின் ஒரு சுருக்கமான வரைபடம் அவன் மனதில் இருக்க வேண்டும். ஐரோப்பாவின் வரலாற்றுக் காலகட்டங்களைப் பற்றியோ சீனாவின் மீதான மங்கோலியர்களின் ஆதிக்கக் காலகட்டம் பற்றியோ அவன் ஒன்றும் அறியாதவன் என்றால், அவன் இன்னும் ஆரம்பிக்கவேயில்லை.

அந்த வரைபடத்தில் பொருத்திப் பார்க்கும் அளவுக்கு அவனுக்கு இந்திய வரலாறு தெரிந்திருக்க வேண்டும். ராஜராஜ சோழன் 18-ம் நூற்றாண்டில் முற்றிலும் மறக்கப்பட்ட மன்னராக இருந்தார் என்பதையோ, தக்காண சுல்தான்கள் ஷியாக்கள் என்பதையோ அவர்களுக்கும் முகலாயர்களுக்குமான பூசலுக்கான முதற்காரணம் என்பதையோ ஆச்சரியத்துடன் கேட்குமிடத்தில் ஒருவன் இருப்பானென்றல், அவன் அறிவுஜீவியாகவில்லை.

அந்த வரைபடத்தின் ஒரு பகுதியாகத் தமிழக வரலாற்றைத் துல்லியமாகவே அவன் அறிந்திருக்க வேண்டும். தமிழக வரலற்றின் பாதிப் பங்கு இன்னமும் எழுதப்படாமலேயே உள்ளது என்றும், சேரர்களைப் பற்றிச் சில பெயர்களுக்கு அப்பால் ஏதும் தெரியாது என்றும், களப்பிரர்களைப் பற்றிய சைவர்களின் ஊகங்களே இன்னும் வரலாறாக எழுதப்பட்டுள்ளன என்றும் அவன் அறிந்திராவிட்டால், அவனால் தமிழகம்பற்றி எதையும் சொல்ல முடியாது.

ஆனால், வரலாற்றை அவன் வெறும் தகவல்களின் வரிசையாக அறிந்திருப்பான் என்றால், அதனால் எந்தப் பயனும் இல்லை. வரலாற்றில் இருந்து பண்பாடு கிளைத்து வளரும் விதத்தைப் புரிந்துகொள்வதற்கான தத்துவ முறைகளில் அவனுக்குப் பரிச்சயம் இருக்க வேண்டும். இன்றைய சூழலில் வரலாற்றை மதிப்பிடுவதற்கான மிகச் சிறந்த ஆய்வுமுறை என்பது மார்க்ஸிய நோக்குதான். அதாவது முரணியக்கப் பொருள் முதல்வாத அணுகுமுறை.

நர்மதையும் கோதாவரியும் உருவாக்கிய வண்டல் படுகைகளின் விளைச்சலின் உபரி காரணமாகத்தான் அந்தப் பகுதியில் மக்கள்தொகை செழித்தது என்றும், அந்த மக்கள்தொகையே சாதவாகனரில் தொடங்கும் மாபெரும் தென்னகப் பேரரசுகளாகின என்றும், அவர்களே தென்னிந்தியா முழுக்கப் பரவி அரசுகளையும் பெரும் குடியேற்றங்களையும் உருவாக்கினர் என்றும் விளங்கிக்கொள்ள முடியாதென்றால், ஒருவனால் வரலாற்றின் எந்தப் பகுதியையும் விளக்க முடியாது.

அப்படிப் பண்பாட்டையும் வரலாற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் புரிந்துகொள்ளும் ஒருவனால்தான், சமகால சமூகச் சூழலை விளங்கிக்கொள்ள முடியும். ராயல சீமாவிலிருந்து குடியேறிய தெலுங்கு மக்கள், தமிழகத்தின் வறண்ட நிலங்களை நிரப்பியதனால் 15-ம் நூற்றாண்டுக்குப் பின் தமிழக மக்கள்தொகை பல மடங்கு அதிகரித்ததை, அதன் விளைவாக இங்குள்ள ஒட்டுமொத்த சாதிச் சமூக அமைப்பே மாறியதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தால், தமிழகத்தின் சமூகச் சூழலை எல்லாத் தளங்களிலும் விளக்க முடியும்.

அந்தச் சமூகச் சூழலின் ஒரு பகுதியாக இங்கே உருவான பண்பாட்டு மாற்றங்களை அவன் புரிந்துகொண்டால் மட்டுமே அவன் அறிவுஜீவி. 1930-களில் பெருந்திரளான மக்கள் மூடுண்ட சாதி அமைப்பில் இருந்து வெளியேறி, நகரங்களுக்கு வந்து சிறு குடும்பங்களாக ஆனதற்கும் ‘சமைத்துப் பார்’என்ற நூல் வரிசையை எழுதிய எஸ்.மீனாட்சி அம்மாள் லட்சாதிபதியானதற்குமான தொடர்பை அதைக் கொண்டுதான் அவன் புரிந்துகொள்ள முடியும்.

தர்க்கம் நுட்பம் காட்டும்

இவ்வாறு வரலாற்றிலிருந்து அரசியல் வரை அனைத்தையும் இணைக்கும் ஒரு காரணகாரியத் தர்க்கம் ஒருவனிடம் இருக்கும் என்றால், அவன் இலக்கியத்தில் அதன் மிக நுட்பமான வடிவத்தைக் கண்டுகொள்ள முடியும். க.நா.சு., தி.ஜானகிராமன் நாவல்களில் மளிகை வியாபாரிகள் சட்டென்று கோடீஸ்வரர்களாக ஆகும் சித்திரம் ஏன் வருகிறது என்று அவன் கவனிப்பான்.

சிலந்தி தன் உடலில் இருந்து நூலை எடுத்து வெவ்வேறு முனைகளை இணைத்து இணைத்து வலை பின்னுவதுபோல வரலாறு, பண்பாடு, அரசியல், சமூகவியல், இலக்கியம் என அனைத்துத் தளங்களில் இருந்தும் தன் அடிப்படைச் சிந்தனைகளைத் தொட்டெடுத்து இணைத்துப் பின்னிக்கொண்டே செல்லும் ஒரு செயல்பாடு ஒருவனுக்குள் இருக்கும் என்றால் மட்டுமே அவனை அறிவுஜீவி என்று சொல்ல முடியும்.

அதற்கு மேல் அரசியலிலோ இலக்கியத்திலோ அறிவியலிலோ அவனுக்கு எனத் தனிப்பட்ட மேலதிகத் திறமைகள் இருக்கலாம். அந்தத் துறைகளில் அவன் சாதனைகள் செய்திருக்கலாம். ஆனால் ஒன்றுண்டு... ஒருவனின் தேர்ச்சி தன் துறைக்குள் மட்டுமே என்றால், அவன் ஒருபோதும் அறிவுஜீவி அல்ல.

அந்தச் சிந்தனை வலையைத் தன்னுள் கொண்ட ஒருவனின் எல்லாப் பேச்சுகளிலும் அது வெளிப்படும். எந்தக் கருத்தை முன்வைக்கும்போதும் சரி; எதிர்கொள்ளும்போதும் சரி; ஒரு வரலாற்றுத் தர்க்கத்தை, பண்பாட்டு விளக்கத்தை அவன் முன்வைப்பான். எந்த ஒரு வினாவும் அவனுடைய சிந்தனைகளை விரித்துக்கொள்ளவே அவனுக்கு உதவும்.

ஆகவே, ஓர் அறிவுஜீவி எந்த நிலையிலும் புதிய சிந்தனைகளை வரவேற்பவனாகவே இருப்பான். எந்தப் புதிய கருத்தும் ஏதோ ஒரு வாசலைத் திறக்கக் கூடியது என அவன் அறிந்திருப்பான்.

குவிப்பதல்ல; விரிப்பது

அனைத்துக்கும் மேலாக, அறிவு ஜீவியைப் பன்மையாக்கக் கூடியவன், கலைத்துக்கொண்டே இருக்கக் கூடியவன் என்று சொல்லலாம். எந்தக் கேள்விக்கும் ஒற்றைப் படையான எளிய பதிலைச் சொல்ல அவனால் முடியாது. வரலாற்றையும் பண்பாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அவன் பதில் சொல்வான் என்றால், அந்தப் பதில் ஒன்றிலிருந்து ஒன்றாக முளைத்துப் பலவற்றைத் தொட்டு விரிவதாகவே இருக்கும். ஆகவே, குவிப்பதல்ல; விரிப்பதே அறிவுஜீவியின் வேலை.கோஷங்களை உருவாக்குவதல்ல… கோட்பாடுகளை நோக்கிக் கொண்டுசெல்வதே அவனுடைய சவால்.

அந்தப் பணியை ஏற்றுக்கொண்ட அறிவு ஜீவி ஒருபோதும் மக்களுக்குப் பிரியமான வற்றைச் சொல்லக்கூடியவனாக இருக்க மாட்டான். ஏனென்றால், மக்கள் ஏற்கெனவே அவர்களுக்குத் தெரிந்தவற்றையும் அவர்கள் நம்புவனவற்றையும் கேட்கவே பிரியப்படுகிறார்கள். புதியவற்றைச் சொல்வதனால் அறிவுஜீவிகள் என்றும் மக்களின் நிம்மதியைக் குலைப்பவர்களாக, அவர்களைக் கொந்தளிப்படையச் செய்பவர்களாகவே இருக்கிறார்கள்.

இந்தியாவின் சென்ற நூற்றாண்டின் மிகப் பெரும் அறிவுஜீவிகள் 10 பேரை எடுத்துக்கொண்டால், என்னளவில் இப்படிப் பட்டியலிடுவேன். விவேகானந்தர், ரவீந்திரநாத் தாகூர், அவனீந்திரநாத் தாகூர், காந்தி, அம்பேத்கர், எம்.என்.ராய், டி.டி.கோசாம்பி,ஜே.சி.குமரப்பா, தாராசங்கர் பானர்ஜி, சிவராம காரந்த். இவர்களைக் கற்றிராத ஒருவர், அறிவுஜீவி என்று இன்று சொல்லிக்கொள்ள முடியாது!

ஜெயமோகன், எழுத்தாளர் - தொடர்புக்கு: jeyamohan.novelist@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்