இந்திய மருந்துத் துறையின் வர்த்தகம் 2015-16ல் சுமார் 36.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. வருடத்துக்குச் சுமார் 17 % மேலாக இது வளர்ந்துகொண்டிருக்கிறது. எல்லாத் துறைகளையும்விட மருந்துகளில் லாப விகிதம் அதிகம் என்பதால், இதனை விட்டுக்கொடுக்க எவரும் தயாராக இல்லை. இதில் பாதிக்கப்படுவது யார்?
அரசு ஊழியர்கள் எல்லாரும் ஒரு விதத்தில் அரசு மருத்துவ வசதிகளைப் பெறுகின்றனர். தனியார் துறை ஊழியர்களில் குறைந்த சதவீதத்தினர் மட்டுமே மருத்துவக் காப்பீடு வசதி பெறுகின்றனர். இவர்கள் தவிர்த்த அனைவரும் மருந்துகளுக்குத் தங்களது வருமானத்தை மட்டுமே செலவிடுகின்றனர். ஆதலால் பாதிக்கப்படுவது ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள்தான்.
வியாபாரத் தந்திரம்
ஒரு நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பது சுலபமான காரியம் இல்லை. ஆராய்ச்சிக்கு மட்டுமே பல கோடி ரூபாய் செலவிட வேண்டும். பிறகு, பரிசோதனைகளுக்கு உள்ளாக்க வேண்டும். இதெல்லாம் முடிந்து அரசின் அனுமதி பெற்று விற்பனைக்கு வருவதற்குள் சில வருடங்கள்கூட ஆகலாம். இவ்வளவு செலவுசெய்து மருந்து கண்டுபிடிப்பவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகக் கொண்டுவரப்பட்டதுதான் காப்புரிமை. இந்தியாவில் புதிய மருந்து ஒன்றுக்குக் காப்புரிமை வழங்கப்பட்டால், அது 20 வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். காப்புரிமை முடிந்த பிறகு, அவற்றைப் பிற நிறுவனங்கள் தயாரித்து விற்பதையே ஜெனரிக் மருந்துகள் என்பார்கள்.
இந்தியாவின் மொத்த மருந்து வர்த்தகத்தில் சுமார் 70% ஜெனரிக் மருந்துகள்தான். அப்படியென்றால், ஏன் ஜெனரிக் மருந்துகளுக்கு மறைமுக எதிர்ப்பு எழ வேண்டும் என்ற கேள்வி எழலாம். அங்கேதான் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் வியாபார சாமர்த்தியம் தலையெடுக்கிறது. இதில் வெளிநாட்டு நிறுவனம் உள்நாட்டு நிறுவனம் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது.
ஒவ்வொரு நிறுவனமும் தனது தயாரிப்பை மக்களிடையே கொண்டுசெல்வதற்கு நம்பிக் கொண்டிருப்பது மருத்துவர்களைத்தான். மருந்து கம்பெனியின் விற்பனைப் பிரதிநிதிகள் மருத்துவர்களைப் பார்த்துத் தங்களது தயாரிப்புகளே சிறந்தவை என்றும் அதனையே பரிந்துரைக்குமாறும் கேட்டுக்கொள்கிறார்கள். அதிக விலையுள்ள மருந்துகள் விற்பனையானால் மட்டுமே அதிக லாபம் கிடைக்கும் என்பதால், அவற்றை மட்டுமே முன்னிலைப்படுத்த ஒரு பன்முக யுத்தம் இங்கே நடந்துகொண்டிருக்கிறது.
ரோச் என்ற சுவிட்சர்லாந்து நிறுவனம் ட்ராட்ஸுமாப் என்ற மருந்தினைக் கண்டுபிடித்துக் காப்புரிமை பெற்றது. இது பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோயிலிருந்து காப்பாற்றக்கூடிய மருந்து. உலக அளவில் இந்த மருந்தின் வர்த்தகம் மட்டுமே சுமார் $ 6.7 பில்லியன். இந்தியாவில் தற்போது பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் என்பது அதிக அளவில் ஏற்படக்கூடிய ஒன்றாக இருக்கும் வேளையில், இதன் ஜெனரிக் மருந்துகளை அவ்வளவு சீக்கிரம் அனுமதித்து விடுமா? இதே மருந்தினை 25% குறைந்த விலையில் தயாரித்து விற்கும் பயோகான் நிறுவனமும் அதன் கூட்டு நிறுவனமான மைலான் என்ற அமெரிக்க நிறுவனமும் காம்பெடிஷன் கமிஷன் ஆஃப் இந்தியாவில் ஒரு புகாரை அளித்துள்ளன. அதன்படி, ரோச் நிறுவனம், மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு பயோகான் நிறுவனத்தின் மருந்தின் தரம் மற்றும் உபயோகம் பற்றி சந்தேகம் எழுப்பிக் கடிதம் அனுப்பியிருப்பதாகக் கூறியிருக்கின்றன.
குறைந்த விலையால் தரம் குறையாது
மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கென்று சில தரக் கட்டுப்பாடுகள் உள்ளன. பல கட்டப் பரிசோதனைகள் உள்ளன. அரசு நிறுவனங்களின் திடீர் சோதனைகள் உள்ளன. இவை எதுவுமே இல்லாமல் ஒரு நிறுவனத்தின் மருந்து, அது விலை குறைவாக உள்ளது என்பதாலேயே அதனைத் தரமற்றது அல்லது தரம் குறைந்தது என்று கூற முடியுமா? விலை அதிகமாக இருப்பதாலேயே ஒரு மருந்தைத் தரம் அதிகமானது என்று கூற முடியுமா? ஆனால் துரதிர்ஷ்டவசமாக, விலை அதிகமான மருந்து மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் விலை குறைந்த மருந்து சக்தி குறைந்தது என்று நம்பும் மனநிலையில்தான் நமது மக்கள் இருக்கின்றனர்.
சென்ற வருடம் பூனாவில் ஒரு அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் ஜெனரிக் பெயர்களையே எழுதிக்கொடுக்கிறார்கள் என்பதால் ஆத்திரம் அடைந்த மருந்துக் கடைக்காரர்கள், கூட்டமாகத் திரண்டு அரசு மருத்துவமனை மருத்துவர்களை மிரட்டியதாகவும், அதிலே ஒரு கடைக்காரர் துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தியதாகவும் அரசு மருத்துவர்கள் புகார் கொடுத்து திடீர் வேலை நிறுத்தம் செய்தனர்.
2013-ம் வருடத்தில் மருத்துவர்களது நெறிமுறைகள் குறித்து இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்ட திருத்தத்தில் ‘முடிந்தவரையில்’ ஜெனரிக் பெயர்களையே எழுதிக் கொடுக்க வேண்டும் என்று இருந்தது. ஆனால், இது நடைமுறையில் வரவே இல்லை. முடியவில்லை என்பதே மருத்துவ உலகத்தின் பதிலாக இருந்தது. ஆனால் 21.09.2016-ல் இந்திய மருத்துவக் கழகம் இது குறித்த பத்தி 1.5 திருத்தி வெளியிட்டது. இதன் மூலம் ஜெனரிக் பெயர்களைக் கட்டாயமாக எழுத வேண்டும் என்று மாற்றப்பட்டது. இது இந்திய அரசின் அரசிதழில் 08.10.2016 வெளியிடப்பட்டது. சமீபத்தில் 21.04.2017 அன்று இந்திய மருத்துவக் கழகம் இது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், ஜெனரிக் பெயர்களை எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் இதனை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சாமானியனின் உரிமைக்குக் கிடைத்த வெற்றி என்பதே பொருத்தமாகும்.
இப்போது நாம் செய்ய வேண்டியது என்ன? மருத்துவர்களிடம் செல்லும்போது பிராண்ட் பெயர்களில் மருந்து எழுதிக்கொடுத்தால், உடனே அவரிடம் ஜெனரிக் பெயரில் எழுதிக் கொடுக்குமாறு கூறுங்கள். மத்திய அரசாங்கமும் ஜன் ஔஷதி என்ற பெயரில் ஜெனரிக் மருந்து விற்பனைக் கடைகளைத் திறந்துகொண்டிருக்கிறது. இணையதளத்திலேயே ஜெனரிக் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தைப் பற்றியும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். அதிக விலைக்கு விற்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் நன்கு அறியப்பட்ட பெரிய நிறுவனங்களாகவே இருக்கும். அதுபோலவே நன்கு அறியப்பட்ட ஆனால், அவ்வளவு பெரியதாக இல்லாத இந்திய நிறுவனங்களும் குறைந்த விலையில் இதனைத் தயாரிக்கின்றன. இதனைக் கொண்டு நீங்கள் தரம் என்ற அம்சத்திலும் பயமின்றி மருந்துகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
இது ஏதோ பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கையோ அல்லது இந்திய முதலாளிகளுக்கு எதிரான நடவடிக்கையோ கிடையாது. மருத்துவ வசதிகள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும், மருந்துகளின் அதிக விலையால் குடும்பப் பொருளாதாரம் பாதிக்கப் படுவது நிறுத்தப்பட வேண்டும் என்பதற்கான ஒரு மக்கள் இயக்கம். விழிப்புணர்வு பெற்ற மக்களால் மட்டுமே மாற்றம் சாத்தியம்.
-ஸ்ரீ அருண்குமார்,
தொடர்புக்கு: arunkumarvs@outlook.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago