ஒபாமாவும் ட்ரம்ப்பும் பின்னே இந்தியாவும்!

By பி.ஏ.கிருஷ்ணன்

அமெரிக்க இளைஞர்கள் அமெரிக்க ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்வார்கள்

ஒபாமா எட்டு வருடங்களுக்கு முன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அமெரிக்கா இனவெறியிலிருந்து முழுவதும் விடுதலை அடையும் நாட்கள் நெருங்கிவிட்டன என்று பலரும் நம்பினார்கள். ஆனால், “கறுப்பினத்தவர் ஒருவர் அதிபராகப் பதவியேற்பதாலேயே இனவெறி மாயமாக மறைந்துவிடும் என்று நினைக்கக் கூடாது” என்று ஒபாமா சொன்னார். அவர் சொன்னது எவ்வளவு உண்மை என்பது ட்ரம்பை வெள்ளைப் பெரும்பான்மையினர் தேர்ந்தெடுத்ததில் தெளிவாகத் தெரியவந்தது.

அமெரிக்காவின் வெள்ளைத் தன்மையை வெளியிலிருந்து கூட்டம் கூட்டமாக நுழைந்து கொண்டிருக்கும் இந்தியர்களும் சீனர்களும் மெக்சிகர்களும் மாற்றிவிடுவார்கள் என்ற அச்சமும் ஹிலாரி தோற்றதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று.

விட்டுச் சென்றது

ஒபாமா சிகாகோ நகரத்தில் நிகழ்த்திய தனது கடைசி உரையை மிகுந்த நம்பிக்கையோடு முடித்தார். அமெரிக்க இளைஞர்கள் அமெரிக்க ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறார். அமெரிக்கா எல்லோரையும் அணைத்துக்கொண்டு வித்தியாசமே இல்லாமல் நடத்தும் என்பதிலும் அவர் ஐயம் இல்லாமல் இருக்கிறார். ஆனால், அமெரிக்காவின் உள்நாட்டு விவகாரத்தைவிட, நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது மற்றைய நாடுகளுடன் அமெரிக்காவின் உறவு எப்படி இருக்கப்போகிறது என்பதைத்தான்.

ஒபாமாவின் ஆட்சி, அமெரிக்காவின் அசாதாரணமான வலிமை இறங்குமுகத்தில் இருக்கும் வரலாற்றுத் தருணத்தில் நடைபெற்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ரஷ்யாவும் சீனாவும் பிடிக்குள் வராமல் திமிறிக்கொண்டிருந்தன. ஐரோப்பிய நாடுகள் திரும்பவும் தேசியப் பாதையில் செல்லலாமா என்று யோசிப்பில் இருந்தன. மத்தியக் கிழக்கு நாடுகளில் உள்நாட்டுப் போர். ஈரான் அது நினைத்ததை நிறைவேற்றிக்கொண்டிருந்தது. இந்த நிலையில், அமெரிக்காவின் பிடி நழுவாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்ய ஒபாமா முயன்றார். சில இடங்களில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை வெற்றி கண்டது. க்யூபா, ஈரான் போன்ற நாடுகளோடு அமெரிக்காவின் உறவு வலுவடைந்தது.

அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை

ஆனால், தனது வெளிநாட்டுக் கொள்கையைக் குண்டுகளின் மூலமும் கைமுறுக்கல்கள் மூலமும் பரப்ப அமெரிக்கா ஒபாமா காலத்தில் தொடர்ந்து முயன்றிருக்கிறது. 2016-ல் 25,000-க்கும் மேற்பட்ட குண்டுகளை மற்றைய நாடுகள் மீது (குறிப்பாக இராக், சிரியா) பொழிந்திருக்கிறது. ஒபாமா ஆட்சியில்தான் ரஷ்யாவுடன் அமெரிக்காவின் உறவு ஆட்டம் கண்டது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒபாமா விடமிருந்து பெற்றது அதிகம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

சீனாவுக்கு இணையான சக்தியாக இந்தியாவை அமெரிக்கா உண்மை யாகக் கருதியிருந்தால், இந்தியாவுடனான உறவு வேறு மாதிரி இருந்திருக்கும். சீனா இன்றுவரை உலகின் உற்பத்தி மையம் என்ற மறைக்க முடியாத உண்மையின் அடிப்படையில்தான், அமெரிக்கா தனது வெளியுறவுக் கொள்கையைக் கட்டமைக்க முடியும் என்பது இந்திய வெளியுறவுக் கொள்கை வல்லுநர்களுக்கும் புரியும்.

இளைஞர்கள் என்ன நினைக்கிறார்கள்?

ட்ரம்ப் பதவி ஏற்ற பின் கறுப்பினத்தவர் மட்டும் அன்று, ஹிஸ்பானிக் என்று அழைக்கப் படும் மெக்சிகோ மற்றும் மத்திய, தென் அமெரிக்காவிலிருந்து இங்கு குடியேறியவர் களுக்கும் உலகமே முடிவடையப்போகிறதோ என்ற அச்சம் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால், இங்கிருக்கும் இந்தியர்கள் அவ்வளவு பயப்படவில்லை. நேற்று எனது வீட்டுக்கு வந்திருந்த புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய வம்சாவளி மாணவர் சொன்னது: “ட்ரம்ப் பணக்காரர்கள் மீது கை வைக்க மாட்டார். இங்குள்ள இந்தியர்கள் ஏழைகள் அல்ல. ஆனாலும், இங்கு வாழும் இந்தியர்களும் சீனர்களும் மெத்தனமாக இருக்க முடியாது.”

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணினிப் பொறியியல் வகுப்பில் 50% வெள்ளை யர்கள். 35% சீனர், கொரியர், இந்தியர்கள். இந்த விகிதாச்சாரம் தொடர்ந்து நீடிக்க வேண்டுமானால், இந்தியர்களும் சீனர்களும் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்றார் அந்த இளைஞர். “எனக்கு இங்கு குடிபெயர்ந்த இந்தியர்களைப் பற்றி அதிக கவலையில்லை. இந்திய வேலைகள் என்ன ஆகும்?” என்று கேட்டேன். “அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. யோசிக்க வேண்டியது இந்திய அரசும் இந்திய இளைஞர்களும்” என்றார் அவர்.

கொண்டுவருவது

தனது முதல் சந்திப்பிலேயே பத்திரிகை யாளர்களை, குறிப்பாக சிஎன்என் தொலைக்காட்சி யினரை ஒரு பிடி பிடித்தார் ட்ரம்ப். அடுத்த நான்கு வருடங்களில் பல வாண வேடிக்கை களை எதிர்பார்க்கலாம். அவர் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருப்பனவற்றில் நம்மைப் பொறுத்தவரையில் முக்கியமானவை இவை -

முதலாவதாக, மெக்சிகோவிலிருந்து சட்ட விரோதமாக எல்லை கடப்பதைத் தடுக்கத் தடுப்புச் சுவர் எழுப்ப வேண்டும். சுவர் எழுப்பு வதற்குத் தேவையான பணம் மெக்சிகோவிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று ட்ரம்ப் சொல்கிறார். எப்படி வசூலிக்கப்படும் என்பதைப் பற்றிச் சொல்ல வில்லை. ஏழை நாடு என்பதால், என்ன வேண்டு மானாலும் செய்யலாம் என்ற மெத்தனமாக இருக்கலாம். மற்றைய வலுவில்லாத நாடுகளை அவர் எப்படி நடத்துவார் என்பதற்கு இது ஒரு முன்னு தாரணமாக இருக்கலாம். இந்தியா கூர்ந்து கவனிக்க வேண்டியது மெக்சிகோ - அமெரிக்க உறவு.

இரண்டாவதாக, ரஷ்யா ஹேக்கிங் தாக்குதல் நடத்தியது என்று உளவுத் துறை கூறுவதை ட்ரம்ப் ஒப்புக்கொள்ளத் தயாராக இல்லை. இதே உளவுத் துறைதான் சதாம் உசேன் பேரழிவு விளைவிக்கும் ஆயுதங்களை வைத்திருந்தார் என்று சொல்லிக் கொண்டிருந்தனர் என்று அவர் சுட்டிக் காட்டினார். எனவே, ரஷ்யாவுடன் நிலைமையைச் சீர்ப்படுத்த அவர் முயல்வார் என்பதில் ஐயம் இல்லை. ஐரோப்பிய நாடுகள் இந்த முயற்சியை எப்படி எடுத்துக்கொள்ளும் என்பது இன்னும் தெளிவாக வில்லை. ஆனால், உலகின் இரு வலுவான நாடு களுக்கு இடையே போர் மூளும் அபாயம் தற்காலிக மாகக் குறைந்துவிட்டது என்று சொல்லலாம். பெட்ரோலியப் பொருட்களின் விலை ஆகாயத்தைத் தொடும் வாய்ப்பும் குறைந்துவிட்டது.

மூன்றாவதாக, சீனாவுடன் அமெரிக்காவின் உறவு சீராகும் என்று சொல்ல முடியாது. அமெரிக்க வேலைகள் சீனாவுக்குச் சென்றுகொண்டிருப்ப தாக அவர் குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறார். அமெரிக்க முதலாளிகளுக்கும் அவருக்கும் இடையே இது குறித்து உரசல்களை எதிர் பார்க்கலாம். இந்தியாவுக்கு இது மறைமுகமாகச் சாதகமாக அமையலாம்.

நான்காவதாக, அவர் தேர்ந்தெடுத்திருக்கும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மைக் ஃப்ளின். இவரும் ரஷ்யாவுடன் நல்லுறவை விரும்புபவர். தீவிரமான இஸ்லாமிய எதிர்ப்பாளர். இவரும் ட்ரம்பும் ஒன்றுசேர்வது இஸ்லாமிய நாடுகளுக்கு நல்லது என்று சொல்ல முடியாது. ஆப்கன், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கும் தீவிரவாதிகளை நசுக்கும் நடவடிக்கைகள் முடுக்கப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. இது ஒருவிதத்தில் இந்தியாவுக்குச் சாதகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

கடைசியாக, அவர் இந்தியாவைப் பற்றிப் பொருட்படுத்தக் கூடிய அளவில் இதுவரையில் ஏதும் சொல்லவில்லை என்பதுதான் உண்மை. எதிர்காலத்தில் இந்தியாவை எவ்வாறு எதிர் கொள்வார் என்பது பற்றி சரியான புரிதல் இன்னும் யாருக்கும் இல்லை.

- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர்.
தொடர்புக்கு: tigerclaw@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்