இந்திய மண்ணிலிருந்து க்ரையோஜெனிக்

By என்.ராமதுரை

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களில் அதிக எடை கொண்டது இன்சாட் 3 டி.ஆர்.

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளிக் கேந்திரத்திலிருந்து ராக்கெட்டுகள் செலுத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது. பொதுவில் பி.எஸ்.எல்.வி. வகை ராக்கெட்டுகள் செலுத்தப்படுவது வழக்கம். ஆனால், செப்டம்பர் 8-ம் தேதி வித்தியாசமான வகையில் ஜி.எஸ்.எல்.வி. எனப்படும் சற்றே அதிகத் திறன் கொண்ட ராக்கெட் வெற்றிகரமாக உயரே செலுத்தப்பட்டது. அந்த ராக்கெட் இன்சாட் 3 டி.ஆர். என்னும் செயற்கைக்கோளை 36 ஆயிரம் கி.மீ. உயரத்துக்குச் செல்லும் வகையில் செலுத்தியது. அதன் எடை 2,211 கிலோ (2.2 டன்).

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த சுமார் 37 ஆண்டுகளில் செலுத்தப்பட்ட எண்ணற்ற செயற்கைக்கோள்களில் இதுவே மிக அதிக எடை கொண்டது. அந்த வகையில் அது புதிய வரலாறு. இந்தியா தயாரிக்கும் எடை மிக்க செயற்கைக்கோள்களை உயரே அனுப்ப நாம் வெளிநாட்டு ராக்கெட்டை நம்பி நிற்கிறோம். இந்தியா தயாரித்துள்ள மூன்றரை டன் எடை கொண்ட ஜிசாட் 18 செயற்கைக்கோள், அக்டோபரில் தென் அமெரிக்காவில் பிரெஞ்சு கயானாவில் உள்ள ராக்கெட் தளத்திலிருந்து, ஏரியான் ராக்கெட் மூலம் செலுத்தப்பட இருக்கிறது. ஏரியான் ராக்கெட் ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ராக்கெட் ஆகும். இந்தியாவின் எடை மிக்க செயற்கைக்கோள்கள் கடந்த 34 ஆண்டுகளாக ஏரியான் மூலமே செலுத்தப்பட்டுவருகின்றன. ஒரு செயற்கைக்கோளை உயரே செலுத்தித் தர நாம் பல நூறு கோடி ரூபாயைக் கட்டணமாக அளித்துவருகிறோம். எடைமிக்க செயற்கைக்கோள்களை உயரே அனுப்பும் திறன் கொண்ட ராக்கெட் நம்மிடம் இல்லை என்பதே இதற்குக் காரணம். அப்படியான ராக்கெட்டை உருவாக்குவதில் நாம் முனைந்து ஈடுபட்டுள்ளோம்.

இஸ்ரோ சாதனை

இந்தியாவின் பிரபல பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்ன ஆயிற்று என்று கேட்கலாம். 1980-களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்ட இந்த ராக்கெட், பல சாதனைகளைப் புரிந்துள்ளது உண்மையே. 1993-ம் ஆண்டில் முதன்முதலாகச் செலுத்தப்பட்டபோது தோல்வி கண்டது. ஆனால், மறு ஆண்டிலிருந்து அது வெற்றி மேல் வெற்றி குவித்தது. அந்த ராக்கெட் இதுவரை தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட வெற்றிகளைக் கண்டுள்ளது. இந்த ராக்கெட் மூலம்தான் நாம் சந்திரனுக்கு சந்திரயான் விண்கலத்தைச் செலுத்தினோம். இதே ராக்கெட் மூலம்தான் நாம் செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யான் விண்கலத்தைச் செலுத்தினோம்.

அதிக எடை, அதிக உயரம், அதிக பலன்!

பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் வெற்றிகள் குறித்து நாம் அதிகமாகவே நமது முதுகைத் தட்டிக் கொண்டுள்ளோம். உண்மையில், அதன் திறன் குறைவானதே. எந்த ஒரு ராக்கெட்டாக இருந்தாலும் அது செல்ல வேண்டிய உயரத்தைப் பொருத்து அதன் திறன் மாறுபடும். சுமார் 600 கி.மீ. உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றுவதாக இருந்தால் பி.எஸ்.எல்.வி. சுமார் 1.7 டன் எடை கொண்ட செயற்கைக்கோளைச் சுமந்து செல்ல இயலும். ஆனால், சுமார் 36 ஆயிரம் கி.மீ. உயரத்தில் இருந்தபடி பூமியைச் சுற்றுவதாக இருந்தால், அந்த ராக்கெட்டால் 1.4 டன் எடையைத்தான் சுமந்து செல்ல முடியும்.

டி.வி. ஒளிபரப்பு, தகவல் தொடர்பு, வானிலைத் தகவல் எனப் பல்வேறான பணிகளுக்கான செயற்கைக்கோள்கள் 36 கி.மீ. உயரத்துக்குச் செலுத்தப்பட வேண்டியவை. இயல்பாக இவை அதிக எடை கொண்டவை. இவ்வித செயற்கைக்கோள்களை இஸ்ரோ 1990-களிலேயே தயாரிக்க ஆரம்பித்துவிட்டது. ஆனால், இவற்றை உயரே செலுத்த சக்தி மிக்க ராக்கெட் நம்மிடம் இல்லாத காரணத்தால், வேறு வழியின்றி ஏரியான் ராக்கெட்டைப் பயன்படுத்த வேண்டி வந்தது. அதே நேரத்தில், இவற்றையும் இந்திய மண்ணிலிருந்தே செலுத்துவதற்கான சக்தி மிக்க ராக்கெட்டைத் தயாரிக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டது.

தடை செய்த அமெரிக்கா

எடை மிக்க செயற்கைக்கோளைச் செலுத்த வேண்டும் எனில், க்ரையோஜெனிக் வகை இன்ஜின் பொருத்தப்பட்ட ராக்கெட்டைத்தான் பயன்படுத்த முடியும். கடும் குளிர்விப்பு நிலையிலான எரிபொருட்களைப் பயன்படுத்தும் ராக்கெட் இன்ஜினே க்ரையோஜெனிக் இன்ஜின் என்று அழைக்கப்படுகிறது. ஆக்சிஜன் வாயுவை மைனஸ் 183 டிகிரி சென்டிகிரேட் அளவுக்குக் குளிர்வித்தால், அந்த வாயு திரவமாகிவிடும். அதேபோல ஹைட்ரஜன் வாயுவை மைனஸ் 253 டிகிரி சென்டிகிரேட் அளவுக்குக் குளிர்வித்தால் அதுவும் திரவமாகிவிடும். ராக்கெட் இன்ஜினில் இந்த இரண்டையும் சேர்த்து எரித்தால் மிகுந்த உந்து திறன் கிடைக்கும்.

க்ரையோஜெனிக் இன்ஜினை உருவாக்குவது எளிதல்ல, சிக்கல் நிறைந்தது. எனவே, இந்தியா 1980-களின் பிற்பகுதியில் இத்தொழில்நுட்பத்தை மேற்கத்திய நாடுகளிலிருந்து விலை கொடுத்து வாங்கத் திட்டமிட்டது. கட்டுப்படியாகாத விலை கோரப்பட்டதால், இந்தியா 1991-ல் இத்தொழில்நுட்பத்தை ரஷ்யாவிடமிருந்து பெற ஒப்பந்தம் செய்துகொண்டது. ஆனால், இந்தியாவுக்கு இத்தொழில்நுட்பம் கிடைக்காதபடி அமெரிக்கா தடுத்தது. அமெரிக்க நிர்ப்பந்தத்துக்கு ரஷ்யா பணிந்தது. அப்போது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நல்ல உறவுநிலை இல்லை. கடைசியில், ரஷ்யா வெறும் 7 க்ரையோஜெனிக் இன்ஜின்களை மட்டும் இந்தியாவுக்கு அளித்தது. தொழில்நுட்பத்தை அளிக்கவில்லை.

இந்திய சாதனை

இஸ்ரோ 2001-ம் ஆண்டில் தொடங்கி, இவற்றில் 6 இன்ஜின்களைப் புதிதாக உருவாக்கப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-1 ராக்கெட்டுகளில் பயன்படுத்தியது. அதில் பெரிதாகப் பலன் இல்லை.

அதனால், இந்தியா சொந்தமாக க்ரையோஜெனிக் இன்ஜின்களை உருவாக்க ஆரம்பித்தது. அந்த இன்ஜினை 2010-ல் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-2 ராக்கெட்டில் பயன்படுத்திய முதல் முயற்சியில் தோல்வி. அதன் பிறகு, இரண்டு தடவைகளில் அந்த இன்ஜின் நன்கு செயல்பட்டு வெற்றி கண்டோம். செப்டம்பர் 8-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி மார்க்-2 ராக்கெட்டில், அந்த இன்ஜின் நன்கு செயல்பட்டதன் பலனாக இன்சாட் 3 டி.ஆர். செயற்கைக்கோள் வெற்றிகரமாக உரிய பாதையில் செலுத்தப்பட்டு, 36 ஆயிரம் கி.மீ. உயரத்தை எட்டியது.

அடுத்து, இந்தியா இதைவிட இரண்டு மடங்கு திறன் கொண்ட க்ரையோஜெனிக் இன்ஜினை உருவாகியுள்ளது. இது ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படும். இந்த ராக்கெட் வருகிற டிசம்பரில் முதல் தடவையாக உயரே செலுத்தப்படும். சுமார் 4 டன் எடை கொண்ட செயற்கைக்கோளைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ராக்கெட், உண்மையில் ராட்சத ராக்கெட் ஆகும். இந்த ராக்கெட் வெற்றிபெற்றுவிட்டால், எதிர்காலத்தில் நாம் எடைமிக்க செயற்கைக்கோள் களை இந்திய மண்ணிலிருந்தே செலுத் தலாம். அது மட்டுமல்ல, இந்திய விண்வெளி வீரர் அடங்கிய விண்கலத்தையும் இந்த ராட்சத ராக்கெட் மூலம் அனுப்ப இயலும்.

- என்.ராமதுரை, மூத்த எழுத்தாளர், | தொடர்புக்கு: nramadurai@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்