குஜராத்: கலையும் கனவுகள்

By மருதன்

உனா, தனியொரு சம்பவம் அல்ல. தலித்துகளுக்கு எதிரான ஒடுக்குமுறைப் போர்



மிகவும் கொந்தளிப்பான ஒரு சூழலில் குஜராத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. பாஜக தலைவர் அமித் ஷாவின் ஆசியுடன் விஜய் ருபானி புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடியின் பிரத்தியேகத் தேர்வான ஆனந்திபென் படேலின் ‘திடீர்’ ராஜினாமாவைத் தொடர்ந்து, இந்த ஆட்சி மாற்றம் நடைபெற்றுள்ளது. 75 வயதுக்கு மேல் முக்கியப் பதவியில் நீடிக்கக் கூடாது என்னும் பாஜகவின் எழுதப்படாத விதியைச் சுட்டிக்காட்டியே ஆனந்திபென் ராஜினாமா செய்திருக்கிறார் என்றாலும், விலகலுக்கான நிஜ காரணங்கள் அவருக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே தெரிந்தவைதாம்.

அவற்றில் மூன்று முக்கியமானவை. முதலாவது, உனா சம்பவமும் அதன் எதிரொலியாகத் திரண்டெழுந்த தலித் மக்களின் எழுச்சியும். இரண்டாவது, இடஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் மேற்கொண்டுவரும் தொடர் ஆர்ப்பாட்டங்கள். மூன்றாவது, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல். முதலிரண்டு நிகழ்வுகளைச் சரியாகக் கையாளாமல் தோல்வியடைந்துவிட்டதாலேயே ஆனந்திபென் தேர்தலுக்கு முன்பாகப் பதவியிலிருந்து கீழிறக்கப்பட்டுள்ளார் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஆனால், பாஜக விரும்புவதைப் போல் இதை ஆனந்திபென்னின் தோல்வியாக மட்டுமே பார்க்க இயலாது. 12 ஆண்டுகாலம் குஜராத்தை ஆட்சிசெய்த நரேந்திர மோடியின் தோல்வியும்தான் இது. ஏன் என்பதைப் பார்ப்பதற்கு முன்னால் சில அடிப்படைகள்.

உனா சம்பவமும் தலித் எழுச்சியும்

குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டத்தைச் சேர்ந்த மோடா சமத்தியாலா என்னும் கிராமத்தைச் சேர்ந்த நான்கு தலித்துகள்மீது ஜூலை 11-ம் தேதி கொலைவெறித் தாக்குதல் மெற்கொண்டது ஒரு கும்பல். ‘இறந்த மாடுகளின் தோலையே அப்புறப்படுத்துகிறோம்; காலம் காலமாக எங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தொழிலே இதுதான்’ என்று தலித்துகள் விளக்கமளித்த பிறகும், ‘பசு மாட்டுப் படையினர்’ கொலைவெறியுடன் அவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். இதனால் மனமுடைந்த பல தலித்துகள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்கள். 23 வயது தலித் இளைஞர் ஒருவர் நஞ்சு உண்டு இறந்துபோனார்.

ஆறு பேரின் அடையாளக் கைதோடு, உனா சம்பவத்தை முடித்துக்கொள்ள விரும்பிய ஆனந்திபென் படேலின் நோக்கம் நிறைவேறவில்லை. வெறுப்பும் கோபமும் பொங்க தலித்துகள் கிளர்ந்தெழுந்தார்கள். ‘பசு உன் அம்மா என்றால் அவரை நீயே பார்த்துக்கொள்’என்று மாடுகளின் சடலங்களை அள்ளிக்கொண்டு வந்து வீதிகளில் கொட்டினார்கள். இத்துடன் கடந்துவிடாமல், அணிதிரண்டு ‘தலித் அஸ்மிதா யாத்ரா’எனும் பெயரில் ஒரு நீண்ட பயணத்தையும் தொடங்கினார்கள். ஆனந்திபென் மட்டுமல்ல, ஒருவருமே எதிர்பாராத பெரும் திருப்பத்தை இது ஏற்படுத்தியது.

நீதி வேண்டும் என்னும் கோரிக்கையுடன், கடந்த 5-ம் தேதி அகமதாபாதில் தொடங்கிய இந்த நடைப்பயணத்தில், ஆயிரக்கணக்கான தலித் மக்கள், சிவில் உரிமைப் போராளிகள், பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்க ளுடைய இலக்கு, பிரச்சினைக்குரிய உனாவைச் சென்ற டைவது. வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அங்கே சென்றடை யுமாறு அவர்கள் தங்கள் நடைப்பயணத்தை வடிவமைத் திருக்கிறார்கள். தனது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடும் தருணத்தில், தங்களுடைய சுதந்திரம் தடுக்கப் படுவதை நினைவூட்டுவதே அவர்களுடைய நோக்கம்.

இந்த நடைப்பயணத்தை ‘ஆசாதி கூன்’ (சுதந்திரத் துக்கான நடைப்பயணம்) என்றும் அவர்கள் அழைக்கிறார்கள். ஒடுக்குமுறையிலிருந்து, சாதியப் பாகுபாட்டில் இருந்து, மேல்சாதி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, மெய்யான சுதந்திரத்தை அடைய வேண்டும் என்னும் எளிமையான கனவு இதில் புதைந்திருக்கிறது. இந்தியா எங்களை ஒதுக்கினாலும் நாங்கள் இந்தியாவை ஒதுக்கவில்லை என்பதை உணர்த்தும் வகையில் ஆகஸ்ட் 15-ம் தேதி உனாவில் மூவண்ணக் கொடியை ஏற்றவும் இந்தக் கூட்டத்தினர் திட்டமிட்டிருக்கிறார்கள்.

தவிரவும், வழியெங்கும் மக்களுடன் மனம் திறந்த ஓர் உரையாடலைத் தொடங்கிவைத்து, உரிமை மீட்புப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டுவருகிறார்கள். இந்த நடைப்பயணத்தை நிர்வகிப்பவர்களில் ஒருவரான ஜிக்னேஷ் மெவானி ஒரு பேட்டியில் இப்படிக் குறிப்பிடுகிறார். ‘பழைமையான நடைமுறைகளைவிட்டு வெளியேறிவரும்படி இந்தியா முழுவதிலும் உள்ள தலித் மக்களை நாங்கள் கேட்கப்போகிறோம். குறிப்பாக, இறந்த விலங்குகளை அப்புறப்படுத்தும் பணியில் இருந்து தலித்துகள் தங்களை விடுவித்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம்’.

முப்பெரும் உத்திகள்

அம்பேத்கர் சொன்னதும் இதையேதான். தலித்துகள் முதலில் போராடி வென்றெடுக்க வேண்டியது தங்களுடைய சுயமரியாதையை என்றார் அவர். கற்பி, கலகம் செய், ஒன்றுசேர் என்னும் முப்பெரும் முழக்கங்களையும் அதற்காக அவர் முன்வைத்தார். அந்த வகையில், உனா நடைப்பயணம் உள்ளடக்கத்தில் அம்பேத்கரின் நோக்கத்தையும் நடைமுறையையும் பின்பற்றுவதைக் காண முடிகிறது. உனா சம்பவத்தை முன்வைத்து, தலித்துகளை ஒன்றுதிரட்டுவது; பிற்போக்குத்தனத்திலிருந்து விடுபட வேண்டியதன் அவசியத்தைக் கற்பிப்பது; மேல்சாதியினருக்கும் அவர்களுக்குச் சாதகமான அரசையும் எதிர்த்துக் கலகம் செய்வது ஆகியவையே இந்தப் பேரணியின் முப்பெரும் உத்திகளாக இருப்பதைக் காணலாம். அதனாலேயே உனா நடைப்பயணத்தை ஒரு கலாசார மறுமலர்ச்சி இயக்கமாகவும் பார்க்க முடியும் என்றே தோன்றுகிறது.

நடைப்பயணத்தின் நோக்கம், பசு மாட்டைப் பாதுகாக்கிறோம் என்னும் பெயரில், சாதிய வன்முறையில் ஈடுபடும் மேல்சாதி வன்முறையாளர்களை எதிர்ப்பது மட்டுமல்ல; இந்த லும்பன் கூட்டத்தைக் கட்டுப்படுத்தத் தவறும் அரசாங்கத்தை சேர்த்தே எதிர்ப்பதும்தான்.

உனா, தனியொரு சம்பவம் அல்ல. தலித்துகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறை யிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நீண்டதொரு ஒடுக்கு முறைப் போரின் ஓர் அத்தியாயமே அது. ஆனால், தலித்துகள் வழக்கம்போல் இதனை அமை தியாகக் கடந்துசென்றுவிடாமல் தீர்க்கமாக எதிர்வினை யாற்றியபோது, இந்தியாவின் கவனம் மட்டுமல்ல, உலகின் கவனமும் அவர்கள்மீது படர்ந்தது. நியூயார்க் டைம்ஸ் வெளியட்ட தலையங்கம் அதற்கொரு சாட்சி. சமீப காலமாக அதிகரித்துவரும் தலித் விரோதப் போக்கைச் சுட்டிக்காட்டி கவனப்படுத்தியுள்ளதோடு, இது குறித்து வாயே திறக்காத பிரதமர் நரேந்திர மோடியின் ‘அவமானகரமான அமைதியையும்’விமர்சித்திருக்கிறது மேற்படி தலையங்கம்.

குஜராத்தின் மொத்த மக்கள்தொகையில் படேல்களின் எண்ணிக்கை 12 முதல் 15% மட்டுமே என்றபோதும், சமூகத் தில் செல்வாக்குமிக்க பிரிவினராக அவர்கள் திகழ்கி றார்கள். கல்வி, தொழில், அரசியல் உள்ளிட்ட துறைக ளிலும் படேல்களின் செல்வாக்கு குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஹர்திக் படேல் என்னும் 22 வயது இளைஞர், படேல்களையும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பில் (ஓபிசி) சேர்க்க வேண்டும் என்னும் கோரிக்கையுடன் போராடத் தொடங்கினார்.

இந்தக் கோரிக்கைக்கு மற்ற பட்டிதார் மக்களிடமிருந்து ஆதரவு பெருகியதைக் கண்ட ஆனந்திபென் படேல், பிரிவினைக் குற்றச்சாட்டு சுமத்தி ஹர்திக் படேலைச் சிறையில் தள்ளினார்.சிறையில் இருந்து வெளிவந்த பிறகும் கோரிக்கையும் போராட்டமும் தொடர்ந்ததுடன் ராணுவத்தை வரவழைத்து கட்டுப்படுத்த வேண்டிய அளவுக்குக் கலகமும் வன்முறையும் பெருகியது. இறுதியில் ஆனந்திபென் அரசு இறங்கிவந்தது. பொருளாதாரரீதியில் பின்தங்கிய மேல் சாதியினருக்கும் 10% இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று குஜராத் அரசு அறிவித்தது. இதுவும் பிரச்சினையைத் தீர்க்கவில்லை. அரசாங்கத்தின் அறிவிப்பு போதாது, அரசியலமைப்புச் சட்டத்திலேயே திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று பட்டிதார் மக்கள் கோரிக்கை எழுப்பியிருக்கிறார்கள். அவர்கள் அஞ்சியதைப் போலவே, குஜராத் உயர் நீதிமன்றம் இந்த 10% அறிவிப்பை ரத்து செய்திருக்கிறது.

கனவுகள் கலையும் தருணம்

தலித்துகளின் எழுச்சியும் படேல்களின் எழுச்சியும் அடிப்படையில் வெவ்வேறானவை. இருவேறு முரண்பட்ட தர்க்கங்களில் இருந்து எழுந்தவை என்றாலும் சில உண்மைகளை இவை வெளிப்படுத்துகின்றன. ஒடுக்கப்பட்ட, நலிந்த தலித் மக்கள் மட்டுமல்ல, ஒப்பீட்டளவில் வசதியான, மேல் சாதி படேல்களும் குஜராத் அரசுமீது சமஅளவு வெறுப்பும் கோபமும் கொண்டுள்ளனர். இந்த வெறுப்புக்கும் கோபத்துக்குமான காரணங்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதவியில் அமர்ந்த ஆனந்திபென் படேலிடம் தேடுவது பிழையானது. 12 ஆண்டுகாலம் குஜராத்தை ஆண்ட நரேந்திர மோடியிடமிருந்து நம் ஆய்வைத் தொடங்குவதே சரியானதாக இருக்கும்.

காரணம், குஜராத் மாதிரியை மிகுந்த ஆரவாரத்துடன் சந்தைப்படுத்தியவர் அவர்தான். குஜராத் ஒரு வெற்றி கரமான பரிசோதனைச் சாலை என்று படாடோபமாகப் பிரச்சாரம் மேற்கொண்டுதான் மோடி 2014-ல் ஆட்சியைக் கைப்பற்றினார். குஜராத்தை ஒரு கனவுப் பிரதேசமாக, இந்தியா முழுமைக்குமான ஒரு வலுவான உதாரணமாக முன்னிறுத்தியவர் அவர்தான். இப்போது நம் கண்முன்னால் அந்தப் பெருங்கனவு சரிந்துகொண்டிருக்கிறது.

-கட்டுரையாசிரியர், எழுத்தாளர்,

மருதனின் சமீபத்திய நூல்களில் ஒன்று, ‘குஜராத் இந்துத்துவம் மோடி’.

தொடர்புக்கு : marudhan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்