கான்: இறைத்தூதர் கொடுத்த இன்னொரு ஆயுதம்!

By சமஸ்

கான் அப்துல் கஃபார் கானின் 125-வது ஆண்டு இது. தன்னுடைய வாழ்நாளில் 27 ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர். அதில் 14 ஆண்டுகள், இந்திய சுதந்திரப் போராட்டப் பின்னணியில் அவர் அனுபவித்தவை. ஒரு லட்சம் பஷ்தூனியர்கள் அணிவகுத்த அஹிம்சைப் படையை உருவாக்கியவர். இந்தியப் பிரிவினையின்போது, “எங்களை ஓநாய்களிடம் வீசியெறிந்துவிட்டீர்கள்” என்று காந்தியிடம் கூறிவிட்டு, கலங்கிய கண்களுடன் விடைபெற்றவர். இந்தியாவில் ஒரு இடத்திலேனும் இந்த ஆண்டு கான் நினைவுகூரப்பட்டதாகத் தெரியவில்லை. அரசியல் அடையாள நிமித்தமாகவேனும் நேருவின் 125-வது ஆண்டைக் கொண்டாடிய காங்கிரஸ் கட்சி, கானை முற்றிலுமாகவே கைகழுவிவிட்டது. சரி, இந்திய முஸ்லிம்களே மறந்துவிட்ட ஒரு மாமனிதரை காங்கிரஸ் மறந்ததில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? ஆனால், இன்றைக்கு இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளுக்குத் தீர்வளிப்பவராக கான் இருக்க முடியும்.

பஷ்தூன் கல் ஏன் துருப்பிடிக்காது?

பனிமலைகள், பள்ளத்தாக்குகள், பாயும் ஆறுகள், தூய பசுமை - இப்படியான பின்னணியில் வாழ்பவர்கள் பஷ்தூனியர்கள்.

மலாலா தன்னுடைய சுயசரிதை நூலான ‘நான் மலாலா’ புத்தகத்தில் குறிப்பிடும் விஷயம் இது:

“பஷ்தூனியர்களான எங்களிடம் ஒரு சொல்வழக்கு உண்டு. ‘பஷ்தூன் கல் துருப்பிடிக்காது’. இதன் பொருள் என்னவென்றால், நாங்கள் எதையும் அவ்வளவு சீக்கிரம் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டோம் என்பதே.”

பஷ்தூனியர்களின் இந்த முரட்டு இயல்புக்குப் பின் நீண்ட வரலாறு உண்டு. காலங்காலமாகப் படையெடுப்புகள், போர்கள், ஆக்கிரமிப்புகள், அடக்குமுறைகளை எதிர்கொண்ட பழங்குடிகள் அவர்கள். ஆங்கிலேய ஆட்சியிலும் அந்த அடக்குமுறை தொடர்ந்தது. இந்தியாவின் ஏனைய பகுதி மக்களுக்கு இருந்த உரிமைகள்கூட பஷ்தூனியர்களுக்கு இல்லை. ஆயுதம் இல்லாவிட்டால் பிழைத்திருக்க முடியாது என்பதையே வரலாற்று அனுபவமாகக் கொண்டிருந்த பஷ்தூனியர்கள் மத்தியில்தான் அஹிம்சையை ஆயுதமாகக் கொடுத்தார் கான்.

இன்றைய பாகிஸ்தானின் பெஷாவர் பள்ளத்தாக்கில் உள்ள உட்மான்ஸாயில் 1890 பிப்ரவரி 6 அன்று ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் கான். நல்ல வசதியான குடும்பம். கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்திய எட்வர்ட் மிஷன் பள்ளியில் அவரைச் சேர்த்திருந்தனர். அங்கிருந்த பாதிரியாரின் நல்லியல்புகள் கானிடம் பெரும் தாக்கத்தை உருவாக்கின.

முக்கியமாக, ஏழைக் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்பது எவ்வளவு மகத்தான சேவை என்பது. கான் நன்றாகப் படித்தார். ஆங்கிலேய ராணுவத்தில் சீக்கியர்கள், பஷ்தூனியர்களுக்கான படைப் பிரிவில் சேரும் வாய்ப்பு அவரைத் தேடி வந்தது. எத்தகைய உயர் பதவியில் இருந்தாலும், ஆங்கிலேயரிடம் நம் மக்கள் இரண்டாம்தரக் குடிமக்களாகவே இருக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்த கான், அந்த மாயையிலிருந்து மீண்டார். மேற்படிப்புக்குத் தன்னுடைய அண்ணன் ஜஃபார் கான் மாதிரி லண்டன் செல்ல வேண்டும் என்று நினைத்தார். தாய்க்கு அதில் உடன்பாடு இல்லாத சூழலில், பின்னாளில் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகமான ஆங்கிலோ ஒரியன்டல் கல்லூரிக்குச் சென்றார். விவசாயத்தை நோக்கித் திரும்பினார்.

கல்வி மந்திரக்கோல்

அரசின் அடக்குமுறை, மத அடிப்படைவாதிகளின் கட்டுப்பாடு ஆகிய இருமுனைத் தாக்குதலில் சிக்கியிருந்த பஷ்தூனியர்களைக் கல்வியால் மட்டுமே விடுவிக்க முடியும் என்று நம்பினார் கான்.

1910-ல் தன்னுடைய 20-வது வயதில் உட்மான்ஸாயில் ஒரு மசூதிப் பள்ளியைத் தொடங்கினார். பள்ளிக்கூடம் என்பதைத் தாண்டி சுதந்திரச் சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் சீர்திருத்தக்கூடமானது அது. அப்போது தொடங்கி, தன் வாழ்நாள் முழுவதும் பள்ளிக்கூடங்களை விதைக்கும் பணியைத் தொடர்ந்தார் கான். சமூகச் சீர்திருத்தங்களோடு புரட்சிகர இயக்க முனைப்புகளையும் கான் கொண்டிருந்ததால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அந்தப் பள்ளிக்கூடத்தை மூடியது ஆங்கிலேய அரசு.

தொடர்ந்து, மக்களிடம் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார் கான். 1915-1918-க்குள் தன் இனத்தவர் வசிக்கும் கைபர் பக்தூன்க்வா பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்றார். கரடுமுரடான மலைப் பகுதியில், எந்தப் போக்குவரத்து வசதியும் இல்லாத அன்றைய நாட்களில் ஒரு சில கிராமங்களைச் சென்றடையப் பத்துப் பதினைந்து மணி நேரங்கள்கூட ஆகும். பொருட்படுத்தாமல் நடந்தார். கிட்டத்தட்ட அங்கு வசிக்கும் ஒவ்வொருவரையும் சந்தித்துப் பேசினார். இதே காலகட்டத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான, வழக்கமான முயற்சிகளின் தொடர் தோல்வி கானை யோசிக்க வைத்தது.

காந்தியீர்ப்பு விசை

இந்தியாவில் காந்தி சுடர்விட ஆரம்பித்திருந்த நாட்கள் அவை. காந்திய வழி அறப் போராட்டங்கள் கானை ஈர்த்தன. 1919-ல் அமைதி வழியில் அவர் ஒரு பொதுக்கூட்டத்தைக் கூட்டியபோது ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். கானை ஆங்கிலேய அரசு சிறையில் அடைத்தது. அவருடைய சொத்துகளைப் பறித்தது. எனினும், அவருடைய போராட்ட உத்வேகத்தைத் துளியும் குறைக்க முடியவில்லை. தொடர்ந்து ‘கிலாபத்’ இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். சமூகச் சீர்திருத்தமே சுயராஜ்ஜியத்துக்கான ஒரே பாதை என்று கூறியவர் 1921-ல் ‘அன்ஜுமன் இ இஷ்லாஹ் இ ஆபகினா’ இயக்கத்தையும் 1927-ல் ‘பஷ்தூன் ஜிர்கா’ இயக்கத்தையும் தொடங்கினார். 1928-ல் ‘பஷ்தோ’ பத்திரிகையையும் தொடங்கினார்.

இவை அனைத்துமே சீர்திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், வெளியே மட்டும் அல்லாமல் சமூகத்துக்குள்ளும் கடுமையான எதிரிகளை கான் எதிர்கொண்டார். பெண் கல்விக்கும் பெண் சமத்துவத்துக்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்தார். “ஆங்கிலேயரிடமிருந்து நமக்கு விடுதலை வேண்டும் என்று கேட்பவர்கள் தம் வீடுகளில் பெண்களை எப்படி அடிமைகளாக நடத்துகிறோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்” என்றார். “குர்ஆனில் ஆண்களுக்கு நிகரான பங்கு பெண்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அல்லாவின் கட்டளையை ஆண்கள் புறக்கணித்ததன் விளைவாகவே பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள்” என்றார். ஆடம்பரத் திருமணங்களையும் சடங்குகளையும் விமர்சித்தார். கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் எந்த வடிவத்தில் அடிப்படைவாதம் நுழைந்திருந்தாலும் அவற்றைச் சாடினார்.

இறைத்தூதர் தந்த ஆயுதம்

ஒரே கடவுள்தான் இந்த உலகைப் படைத்தார் என்றால், எல்லா மக்களையும் அதே கடவுள்தான் படைத்தார் என்று ஆழமாக நம்பியவர் கான். சிறைக் காலத்தில் குர்ஆனோடு அவர் படித்த பைபிளும் கீதையும் கிரந்த சாகிப்பும் அவரை ஈர்த்தன. முஸ்லிம் மதத்துக்குள்ளும் சரி, வெளியிலும் சரி; இன/மத அடிப்படையிலான பேதங்களை முற்றிலுமாக அவர் நிராகரித்தார். தன்னுடைய அண்ணன் மகள் ஒரு சீக்கியரை மணம் முடிக்க ஆதரவு தந்தார். 1929-ல் லக்னோவில் காந்தியைச் சந்தித்தார் கான். இதைத் தொடர்ந்து சுதந்திரமான, ஒருங்கிணைந்த, மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்கும் கனவுக்குப் பஷ்தூனியர்களின் பங்களிப்பாக அவர் உருவாக்கிய இயக்கம்தான் ‘குதாயி கித்மத்கார்’. பஷ்தூனில் ‘கடவுளின் சேவகர்கள்’ என்று பொருள்.

அஹிம்சையை அல்லா தந்த ஆயுதமாகவே பார்த்தார் கான். “நான் உங்களுக்கு வழங்கப்போகும் ஆயுதம் எப்படிப்பட்டது என்றால், அதன் முன் காவல் துறையோ, ராணுவமோ எதுவும் நிற்க முடியாது. இது இறைத்தூதரின் ஆயுதம். ஆனால், நீங்கள் அறியாத ஒன்று. பொறுமையும், நேர்வழியும்தான் இந்த ஆயுதம். உலகின் எந்த சக்தியாலும் இதற்கு எதிராக நிற்க முடியாது” என்றுதான் அஹிம்சையை அவர் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய இயக்கத்தில் சேர வந்தவர்களிடம் அவர் கேட்ட உறுதிமொழி: “நான் எந்தச் சூழலிலும் வன்முறையில் ஈடுபடவோ, பழிக்குப் பழி தீர்க்கவோ முனைய மாட்டேன். என் செல்வம், வாழ்க்கை, சந்தோஷம் எல்லாவற்றையும் இந்தத் தேசத்துக்காகவும் மக்களுக்காகவும் தியாகம் செய்வேன்.”

ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை உறுப்பினர்களாகக் கொண்ட வலுவான அறவழி இயக்கமாக உருவெடுத்தது ‘குதாயி கித்மத்கார்’. உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடந்துகொண்டிருந்த சமயத்தில், 1930 ஏப்ரல் 23 அன்று கான் கைதுசெய்யப்பட்டார். இதையடுத்து, பெஷாவரில் அறவழியில் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடினர் ‘குதாயி கித்மத்கார்’ இயக்கத்தினர். அமைதியையே ஆயுதமாகக் கொண்டிருந்தவர்கள் மீது இயந்திரத் துப்பாக்கித் தாக்குதல் நடத்தியது ஆங்கிலேயப் படை. தங்கள் தலைவர் கானுக்குக் கொடுத்த வாக்குறுதிப்படி சீறிவந்த தோட்டாக்களை எதிர்கொண்டு மரணத்தைத் தழுவினர் அவருடைய தொண்டர்கள். ரத்தக்களரியான இடத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுக் கிடந்தார்கள். கடைசி வரை எதிர்வினையாக வன்முறை பக்கம் செல்லவில்லை. அப்போது மட்டும் இல்லை; எப்போதுமே தம் மீது திணிக்கப்பட்ட எல்லா வன்முறைகளிலும் தங்கள் உயிரைக் கொடுத்தும் அமைதியாகவே இருந்தார்கள் பஷ்தூனியர்கள். குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம், அதுவரை வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்களை அரசியல்மயப்படுத்தி களத்தில் முன்வரிசையில் நிறுத்தியது ‘குதாயி கித்மத்கார்’.

சிப்பாயின் செல்வாக்கு

காந்தியுடன் ஆத்மார்த்தமான, நெருக்கமான நட்பு கொண்டிருந்தார் கான். காங்கிரஸுடன் அவரது ‘குதாயி கித்மத்கார்’ இயக்கம் இணைந்து செயலாற்றியதுடன், காங்கிரஸிலும் உறுப்பினராக இருந்தார் கான். 1931-ல் காங்கிரஸ் தலைவர் பதவி தன்னைத் தேடிவந்தபோது, அதை நிராகரித்தார் கான். “நான் ‘குதாயி கித்மத்கா’ரின் ஒரு சாதாரண சிப்பாய். நான் எப்போதும் ஊழியம் செய்யவே விரும்புகிறேன்” என்றார். 1939-ல் உலகப் போர் தொடர்பான காங்கிரஸின் நிலைப்பாட்டை எதிர்த்தவர், இயக்கத்திலிருந்தும் விலகினார். பின்னர், போர்க் கொள்கையில் காங்கிரஸ் மாற்றம் மேற்கொண்ட பின்னரே, மீண்டும் அதில் இணைந்தார்.

1946 தேர்தலை பாகிஸ்தான் முழக்கத்தோடு எதிர் கொண்ட ஜின்னா முஸ்லிம்கள் பெரும்பான்மை வகித்த பெரும்பாலான இடங்களில் வென்றார். விதிவிலக்கு, கானின் செல்வாக்கு கொடிகட்டிப் பறந்த வடமேற்கு எல்லைப் பிராந்தியம்.

ஜின்னாவின் இந்தியப் பிரிவினைக் கோரிக்கையை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்தவர் கான். ஆனால், பிரிவினை தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போது, ‘குதாயி கித்மத்கார்’ விருப்பத்தை மீறி, அவர்களைக் கலந்தாலோசிக்காமலேயே பாகிஸ்தான் பிரிவினையை ஏற்றுக்கொண்டது காங்கிரஸ். தாள முடியாத வேதனையோடு, “எங்களை ஓநாய்களிடம் எறிந்துவிட்டீர்கள்” என்று கூறி வெளியேறினார் கான். காந்தியுடனான அவருடைய கடைசிச் சந்திப்பும் அதுதான்.

பாகிஸ்தான் உதயமான பின் ஜின்னாவுடன் இணைந்து பணியாற்ற அவர் தயாராகவே இருந்தார். தம் பகுதியை ‘பஷ்தூனிஸ்தான்’ என சுயாட்சிப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று கோரினார். ஜின்னா அவரது கோரிக்கையை நிராகரித்தார். மேலும், பஷ்தூனியர்கள் மாதிரியான தேசிய இனங்களை ஒடுக்கிப் பெரும்பான்மைவாதத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகளிலும் பாகிஸ்தான் இறங்கியது. அந்நாட்டு அரசு கடைசி வரை கானை ஒரு சதிகாரராகவே பார்த்தது. பாகிஸ்தானுக்குள் சிறுபான்மையினர் உரிமைகளையும் மதச்சார்பின்மையையும் பேசிய அவரை, முஸ்லிம்களின் எதிரியாகக் கட்டமைத்தது. அவருடைய பிற்கால வாழ்வின் பெரும் பகுதி வீட்டுச் சிறையிலோ நாட்டுக்கு வெளியிலோ கழிந்தது. 1988 ஜனவரி 20-ல் தன்னுடைய 97-வது வயதில் கான் காலமானார்.

பாகிஸ்தானின் பெரும் பிழைகள்

பாகிஸ்தானியர்கள் நினைத்திருந்தால், கானைத் தம் முடைய தேசத் தலைவராக வரித்துக்கொண்டிருக்க முடியும். பாகிஸ்தானின் மதச்சார்பற்ற முதல் தேசிய எதிர்க் கட்சியான ‘பாகிஸ்தான் ஆஸாத் கட்சி’யை அவரே உருவாக் கினார். கான் போன்றவர்களை ஒரு சமூகம் தோற்கடிக்கும் போது, அதற்கான விலை எவ்வளவு பெரியதாக அமையும் என்பதற்கு பாகிஸ்தான் எழுத்தாளர் ஃபரானாஸ் இஸ்பஹானியின் சமீபத்திய பேட்டியில் பதில் இருக்கிறது. அந்தப் பேட்டியில் கான் தொடர்பாக ஒரு வார்த்தைகூட இஸ்பஹானி குறிப்பிடவில்லை. ஆனால், வெயிலின் வெம்மை இயல்பாக மரங்களை ஞாபகப்படுத்திவிடுகிறது.

“1947-ல் பாகிஸ்தான் உருவானபோது முஸ்லிம்கள் அல்லாதோர் 23% பேர் இருந்தார்கள். இப்போது வெறும் 4%. முஸ்லிம்மயமாக்கலைத் திட்டமிட்டுச் செய்தது அரசு. பாடப் புத்தகங்களில்கூடப் பன்மைத்துவத்தை நிராகரித்தது. பாகிஸ்தான் என்றாலே முஸ்லிம்தான் என்ற அடையாளமே புகுத்தப்பட்டது. மொகஞ்சதாரோ, தட்சசீலம், சூபியிஸம் எல்லாம் புறக்கணிக்கப்பட்டன.

எங்கள் நாட்டின் முதல் ஜனநாயகத் தேர்தலே 1970-ல் தான் நடந்தது. முதல் பிரதமர் பூட்டோ தூக்கிலிடப் பட்டார். பேநசீர் தன் பதவிக் காலத்தை முடிக்க அனுமதிக்கப் படவில்லை. நவாஸும் தன் பதவிக் காலத்தை முடிக்க அனுமதிக்கப்படவில்லை. 2008-12 காலகட்டத்தில் தான் ஜனநாயகரீதியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் முதல் முறையாகத் தங்கள் பதவிக் காலத்தை நிறைவுசெய்தார்கள்.

பாகிஸ்தானிய மக்கள்தொகையில் 1% பேர்தான் இப்போது வரி செலுத்துகின்றனர். நடுத்தர வர்க்கம் என்ற ஒன்றே இல்லை. பணக்காரர்கள் - பரம ஏழைகள் அவ்வளவுதான். சிறுபான்மைச் சமூகத்தவர் மோசமான நிலையில் இருக்கின் றனர். ஷியாக்கள் படுகொலை தொடர்கிறது. இந்துக்கள், கிறிஸ்தவர்களில் யாரெல்லாம் இங்கிருந்து வெளியேற முடிந்ததோ அவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள். எங்கும் போக முடியாதவர்கள் மட்டுமே மிஞ்சியிருக்கிறார்கள். அவர்களுக்காகப் பரிந்து பேச ஆள் இல்லை. அரிதாகப் பரிந்து பேசும் எங்களைப் போன்றவர்கள் அச்சுறுத்தலினூடேதான் வாழ வேண்டியிருக்கிறது” என்கிறார் இஸ்பஹானி.

பிரிவினையால் இந்தியா, பாகிஸ்தான் இரு பகுதிகளுமே பாதிக்கப்பட்டாலும் இந்தியா இன்றைக்கு மீண்டெழக் காரணம் என்ன? இஸ்பஹானி சுட்டிக்காட்டும் காரணங்கள் இவை. “இந்தியா தேர்ந்தெடுத்த மதச்சார்பின்மை வழி! இந்தியா தேர்ந்தெடுத்த தாராளவாதம். இந்தியா தேர்ந்தெடுத்த நல்ல தலைமை!”

இந்தியாவுக்கு ஒரு பாடம்

இந்திய முஸ்லிம்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது. முஸ்லிம்களுடன் நெருக்கமாக உறவாடுபவனாக ஒரு விஷயத்தைத் தொடர்ந்து கவனிக்கிறேன். இன்றைய முஸ்லிம் சமூகத்திடம் வெளிப்படும் மன அழுத்தம். நிச்சயமாக இன்றைய இந்தியர்கள் ஒவ்வொருவரின் தூக்கத்தைக் கெடுக்கவும் ஆயிரமாயிரம் சமூகப் பிரச்சினைகள் இங்கே இருக்கின்றன. அதிலும், சமூகரீதியான பாகுபாடும் புறக்கணிப்பும் திணிக்கப்படும் முஸ்லிம்களிடம் அந்த நெருக்கடி கூடுதல் வலியை உருவாக்குவது இயல்பானது. ஆனால், இந்தத் துயரங்களிலிருந்து எந்த அரசியல் மீட்டெடுக்கும்?

சுதந்திரத்துக்குக் கால் நூற்றாண்டுக்குப் பின், குறிப்பாக பாபர் மசூதி இடிப்புக்குப் பின் இந்திய முஸ்லிம் களின் அரசியலைத் தனதாக்கி உருவாகியிருக்கும் இயக்கங்கள் பலவும் இந்திய முஸ்லிம்களின் இயல்பான பாரம்பரிய அடையாளங்களைப் புறக்கணிப்பவையாகவே உருவெடுத்திருக்கின்றன. இந்திய முஸ்லிம்களின் தாராளவாதம், மதச்சார்பின்மை, பன்மைக் கலாச்சாரம், சீர்திருத்த மரபை உள்வாங்கிப் பிரதிபலிக்கும் அமைப்புகளாக அவை வளரவில்லை. மாறாக, மதத்தையும் ஒருமைக் கலாச்சாரத்தையும் நோக்கி மக்களைத் தீவிரமாக நகர்த்துபவையாக, பொதுச் சமூகத்திலிருந்தும் பொதுக் கலாச்சாரத்திலிருந்தும் மக்களை விலக்கி வெறும் முஸ்லிம் அடையாளத்தோடு அழைத்துச் செல்பவையாகவே அவை உருமாறியிருக்கின்றன. கிட்டத்தட்ட நேற்றைய பாகிஸ்தான் இயக்கங்களின் நீர்த்த வடிவத்தையே இன்றைய பாதையாக அவை காட்டுகின்றன. இத்தகைய மத அடிப்படையிலான அரசியல் தீர்வைத் தர முடியாது என்பதையே இன்றைய பாகிஸ்தான் சொல்கிறது.

வேறு யார் வழிகாட்ட முடியும்? யார் அந்த வழிகாட்டி? துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கு இந்திய முஸ்லிம்களின் முன் வெற்றிடம்தான் இருக்கிறது. அபாயகரமான அரசியல் வெற்றிடம். வஹாபியிஸத்தையும் ஐஎஸ்ஸையும் போட்டு குழப்பிக்கொள்ள வைக்கும் வெற்றிடம். இந்த நாட்டுக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு தொடர்பும் இல்லை என்பதைப் போலக் காட்டும் வெற்றிடம். இந்நாட்டின் வரலாற் றுக்கும் அவர்களுடைய முன்னோருக்கும் ஒரு தொடர்புமே இல்லை என்பதைப் போலக் காட்டும் வெற்றிடம். இந்திய முஸ்லிம்களின் வரலாறு, இந்நாட்டுக்கு அவர்கள் அளித் திருக்கும் பங்களிப்பு, இந்நாட்டின் சுதந்திரத்துக்கு அவர்கள் செய்திருக்கும் தியாகங்கள், இந்நாடு கொண்டாட வேண்டிய அவர்கள் இனத் தலைவர்கள், நம்பிக்கை தரும் அவர்களுடைய வாழ்க்கை எல்லாவற்றையும் இருட்டடித்துக் காட்டும் வெற்றிடம். எந்த ஒரு அழுத்தப்பட்ட சமூகத்துக்கும் தங்களுக்கான ஆக்கபூர்வமான, தாராளவாத அரசியலை உருவாக்கிக்கொள்ள வரலாற்றிலிருந்து ஒரு வழிகாட்டி தேவை. இன்றைக்கு இந்திய முஸ்லிம்களுக்கு பன்மைத்துவக் கலாச்சாரம், பாலினச் சமத்துவம், மதச்சார்பின்மை, தாராள வாதம், சுயசீர்திருத்தத்தை முன்னெடுத்த ஒரு வழிகாட்டி தேவை. கான் அந்த வெற்றிடத்தில் உட்கார எல்லா வகையிலும் தகுந்தவர். கான் இந்தியா கொண்டாட வேண்டியவர்!

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

ஜனவரி 20: கான் நினைவு தினம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்