இந்தியாவின் தேசத் தந்தையாகப் போற்றப்படும் அண்ணல் காந்தி சொன்னார்: “என்னை இந்த நாட்டின் சர்வாதி காரியாக்கினால், உடனே தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்குவேன்” என்று. ஜெயமோகனை அப்படியாக்கி னால், தாய்மொழிக் கல்வியைத் தடை செய்து, எல்லா வகையிலும் ஆங்கிலக் கல்வியைக் கட்டாயமாக்கிவிடுவார் போலும். அவருடைய வாதுரைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளுமுன் அவரது சொல்லாட்சியிலும் முற்கோள்களிலும் காணப்படும் அடிப்படைப் பிழைகளைத் திருத்திச் சரி செய்துகொள்ள வேண்டிய தேவை உள்ளது.
எழுத்துருவா? வரிவடிவமா?
தலைப்பிலிருந்தே தொடங்குவோம். எழுத்துரு என்று அவர் சொல்வது வரி வடிவத்தைத்தான் என்பது புரிகிறது. ஆனால், இரண்டும் ஒன்றில்லை. எழுத்துரு (ஃபான்ட்) வேறு. வரிவடிவம் (ஸ்க்ரிப்ட்) வேறு. தமிழ் வரிவடிவத்தை ஒரேயடியாக உதறிவிட்டு, ஆங்கில வரிவடிவத்துக்குள் தமிழைக் கூடுபாயச் செய்வதுதான் அவரது பேரவா என்றால், அதிலும் ஒரு சிக்கல் உள்ளது. தமிழுக்கென்று தனி வரிவடிவம் இருப்பது போல் ஆங்கிலத்துக்கென்று தனி வரிவடிவம் ஏதுமில்லை. ரோமானிய வரிவடிவத்தில்தான் ஆங்கிலம் எழுதப்படுகிறது.
ஒரு பிரெஞ்சுக்காரரிடம் போய் “உங்கள் பிரெஞ்சு மொழியை ஆங்கில எழுத்துருவில் எழுதுகிறீர்களே, ஏன்?” என்று இவர் கேட்டுப் பார்க்கட்டும். எதிர்வினை என்னவாக இருக்கும் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. ஏனென்றால், பிரெஞ்சு மொழியும் ரோமானிய வரிவடிவில்தான் எழுதப்படுகிறது. அதே நெடுங்கணக்குதான், ஆனால் எழுத்துக்கு எழுத்து உச்சரிப்பு மாறுபடும். ‘A, B, C’ என்பதை ஆங்கிலத்தில் ‘ஏ, பி, சி’என்பர். பிரெஞ்சிலோ, ‘ஆ, பெ, செ’என்பர். ரோமானிய வரிவடிவில் எழுதப்படும் ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் இந்த வேறுபாடுகள் உண்டு. தனித்தனி எழுத்துக்களின் உச்சரிப்பில் மட்டுமன்று, எழுத்துக் கூட்டலிலும் வேறுபாடுகள் உண்டு.
நாளை ஒரு மேதை ‘ரோமானிய வடிவம் வேண்டாம், டூட்டானிய வடிவம் வேண்டும்’ எனலாம், இன்னொரு மாமேதை ‘தேவநாகரிதான் தெய்வாம்சம் பொருந்தியது, தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஏற்றது’ எனலாம்; இதற்கெல்லாம் எங்கள் தமிழ்தான் கிடைத்ததா? தமிழர்கள் தூங்கிவிடவில்லை, ஐயா!
பெரும்பான்மைப் பயிற்றுமொழி எது?
தமிழ்நாட்டில் இன்றளவும் பெரும்பாலான குழந்தைகள் தமிழ்வழிக் கல்வியில்தான் பயில்கின்றனர். அவர்களும் ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்றாலும், சரளமாக வாசிப்பது தமிழில்தான். ஏன், இவருடைய தமிழ் நூல்களை வாசிக்கிறவர்களில் ‘நம் இளைய தலைமுறை’இடம்பெறவில்லையோ? அதனால், இனி வரும் பதிப்புகளை ‘ஆங்கில எழுத்துருவில்’அச்சிடப்போகிறாரா?
இந்தச் சமூகத்தில் படிப்பாளியாக அறியப்பட்டுள்ள ஒருவர், நம் குழந்தைகளில் பலர் தாய்மொழி கற்கத் தடுமாறுகின்றனர் என்றால், இந்த அவலத்துக்குத் தீர்வு தேட வேண்டாமா? மொழியை - அதன் வரிவடிவமாகிய மெய் அல்லது உடலை - தீர்த்துக்கட்டுவதுதான் தீர்வா? உடம்பார் அழியின் உயிரார் அழிவர் என்பது தெரிந்துதான் புதுமைத் திட்டம் தீட்டுகிறாரா?
உலகமயம், இந்தியமயம் என்று எந்தப் பெயரில் எத்தனை பேர், தமிழின் மீது எப்படி எல்லாம் தாக்குதல் தொடுத்தாலும் எதிர்த்து நின்று முறியடிக்கும் திறன் தமிழுக்கும் தமிழர்க்கும் உண்டு. எப்படி என்றால், “நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்/ நீங்கின் அதனைப் பிற.” – திருக்குறள் (495).
- தியாகு, மூத்த எழுத்தாளர் - தொடர்புக்கு: thozharthiagu@gmail.com
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago