பள்ளிகளிடமிருந்து பிள்ளைகளைக் காப்பாற்றுவோம்

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் எல்லா மாணவர்களின் வீட்டிலும் சில ஒற்றுமைகளைக் காணலாம். தொலைக்காட்சி இணைப்பைத் துண்டித்துவிடுகிறார்கள். தினசரி, வார மற்றும் மாத இதழ்களை நிறுத்தி விடுகிறார்கள். கேளிக்கைகள் சுத்தமாக இல்லை. சிரிப்பை மறந்த வீடுகளாகிவிடுகின்றன அவை.

பேராசை ஆண்டுகள்

+2 ஆண்டுகள் ஒவ்வொரு குடும்பத்திலும் கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்துகின்றன. சுயநலம், பேராசை, அதிகாரம் அனைத்தும் கலந்த நம் குடும்ப அமைப்பு சிறிய அளவிலான தன் சுதந்திரத்தையும், ஜனநாயகப் பண்புகளையும் இந்தக் காலத்தில் முற்றும் இழந்துவிடுகிறது. தாங்கள் அடைய முடியாத லெளகீகக் கனவுகளைத் தங்கள் பிள்ளைகள் எட்டிப்பிடிக்க வேண்டும் எனும் பெற்றோர்களின் ஆசை படிப்படியாக வன்முறையாக மாறிவிடுகிறது. தன் பிள்ளை மருத்துவராகவோ பொறியாளராகவோ ஆக வேண்டும் என்கிற மதிப்பெண் வேட்கை பெற்றோர்களைப் பேயாய்ப் பிடித்து ஆட்டத் தொடங்குகிறது. தாய்மார்கள் எப்போதும் விரதத்திலும் பிரார்த்தனையிலும் ஈடுபடத் தொடங்கிவிடுகின்றனர்.

கம்பர், வள்ளுவரெல்லாம் தேவையில்லையா?

முதற்படியாக நம்பகமான, நிரூபண மான கல்வி நிறுவனங்களை இவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்தக் கல்வி நிறுவனங்களில் பிள்ளைகளைச் சேர்த்து விட்டு, “அங்கு 20-க்கும் மேற்பட்ட பணம் எண்ணும் இயந்திரங்கள் இருக்கின்றன” என அவர்கள் பெருமைபடப் பேசும்போது, கல்வியின் விழுமியங்களை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது. பிள்ளையைப் பொறியாளர் ஆக்குவதென்றால். இவர்கள் தெரிவு ஐ.ஐ.டி, என்.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம், மருத்துவர் என்றால் அரசு மருத்துவக் கல்லூரி. இதற்குக் கணிதம், உயிரியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களின் தகுதி மதிப்பெண்களே (கட் ஆஃப்) முக்கியமென்பதால், நீதி, அறம், கலை, ரசனை போன்றவற்றை போதிக்கும் மொழிப் பாடங்கள் அலட்சியப்படுத்தப்படுகின்றன. தேர்ச்சி பெறத் தேவையான அளவு வள்ளுவரையும் கம்பரையும் படித்தால் போதுமானது.

கேள்விக்குறியாகும் படைப்பூக்கம்

மேல்நிலையில் இரண்டாமாண்டு மதிப்பெண்கள் மட்டுமே உயர் கல்விக்கான தகுதியாகக் கருதப்படுகின்றன. இதனால், ஒரு கல்வியாண்டு முழுவதற்கும் தயாரிக்கப்பட்ட முதலாண்டு பாடத்திட்டம், அவசர அவசரமாக முதல் காலாண்டுக்குள் முடிக்கப்பட்டு, இரண்டாம் ஆண்டு பாடத்திட்டமும் முதலாண்டிலேயே மாணவர்களின் மூளையில் திணிக்கப்படுகின்றன. இரண்டாமாண்டு முழுவதும் தொடர்ச்சியான தேர்வுகள்தாம். இவ்வாறு நிகழ்வதால், கற்றலில் தொடர்ச்சி அறுபடுகிறது, மாணவர்களிடம் கற்றல் மீதான புதுமை உணர்வு குறைகிறது. படைப்பூக்கத்துக்கும் இடமின்றிப் போகிறது.

வன்முறைக் களம்

முற்றிலும் வணிகமயமான நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு இடையே போட்டி, அடுத்த ஆண்டு கட்டணத்தை இன்னும் உயர்த்த வேண்டும் என்ற பேராசை, இவற்றின் விளைவாக நிறுவனங்கள் ஆசிரியர்களைக் கசக்கிப் பிழிகின்றன. வேலையைத் தக்கவைத்துக்கொள்ள ஆசிரியர்களும் மாணவர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். பெற்றோர்களின் எதிர்பார்ப்பு, படிப்புக்காகச் செலவிடப்படும் பெருந்தொகை, விடாமல் துரத்தும் தேர்வுகள், ஆசிரியர்களின் கருணையற்ற அணுகுமுறை, அதிகக் கண்டிப்பு, உடல்ரீதியான, மனரீதியான தண்டனைகள் எல்லாம் சேர்ந்து, கடுமையான சோர்வையும் மன அழுத்தத்தையும் மாணவர்களுக்கு ஏற்படுத்திவிடுகின்றன. பள்ளி ஒரு வன்முறைக் களமாகிவிடுகிறது. இதனால், விடுதிகளில் நிகழும் தற்கொலைகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன. இவற்றில் ஒன்றிரண்டைத் தவிர, பெருமளவில் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.

சோப்பு, சீப்பு வியாபாரம்

பட்டறையில் தீட்டும் ஆயுதங்களாக மாணவர்களை வாட்டியெடுத்தும் நிர்வாகத்துக்கு அவர்களின் திறன்மீது நம்பிக்கை ஏற்படுவதில்லை. இதனால், தேர்வுக் காலங்களில் மதிப்பெண்களைக் குறுக்குவழியில் பெற்றுத்தர முறைகேடான வழிகளிலும் ஈடுபடுகின்றனர். அதற்காகப் பெரும் பொருள் செலவு செய்யப்படுகின்றது. இப்படியெல்லாம் செய்தும் தம் ஆயிரக்கணக்கான மாணவர்களில் சாதனை மாணவர்களாக இவர்களால் தம்பட்டமடித்துக்கொள்ள முடிவது நூற்றுக்கும் குறைவான மாணவர்களைத்தான். இந்த நூறு மாணவர்களின் மதிப்பெண்களை விளம்பரத்தில் பார்த்துதான், ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் பணக்கட்டுகளுடன் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியாவதற்கு முந்தைய இரவே, இத்தகைய நிறுவனங்களின் வாசலில் துண்டை விரித்துப் படுத்துக்கொள்கின்றனர். சேர்க்கை சமயத்தில் இத்தகைய பள்ளிகளின் முன்பு திடீர்க் கடைகள் முளைத்திருக்கும். இங்கு பெட்டி, படுக்கை விரிப்பு, துண்டு, வாளி, சோப்பு, சீப்பு போன்ற வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும்.

இது விழிப்புணர்வு அல்ல

இப்படியாக, நடுத்தர வர்க்கத்தினரிடம் வளர்ந்துகொண்டிருக்கிற இந்த மனநிலையை எவ்வகையிலும் கல்விகுறித்த விழிப்புணர்வு என எடுத்துக்கொள்ள முடியாது. குடும்பம், சமூகம், அரசு, கல்வித் துறை எனும் நிறுவனங்களோடு பின்னிப் பிணைந்திருக்கிற நம் சமகாலக் கல்விபற்றிய சிக்கல குறித்த உரத்த விவாதம் நம் காலத்தின் அவசியத் தேவை. கல்வியில் தனியார்மயம், வணிகமயக் கல்வி, மதிப்பெண்களை மையமாகக் கொண்ட கல்வி, இன்னும் மாறாத ஆங்கிலேயக் கல்வி முறை, படைப்பூக்க உணர்வற்ற பாடத்திட்டங்கள், கல்வியின் நோக்கம் பணம் சம்பாதிப்பது ஒன்றே எனக் கருதும் பெற்றோரின் பேராசை போன்ற விவாத மையங்கள் இந்தப் பிரச்சினையில் நிறைந்திருக்கின்றன. மிகவும் சிக்கலான, பன்முகத்தன்மை வாய்ந்த, சமூக, பொருளாதாரரீதியில் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த மக்களை உள்ளடக்கியது நம் நாடு. இங்கு ஒரே கல்விமுறை, ஒரே பாடத்திட்டம் என்பதெல்லாம் எந்த அளவுக்கு உகந்தவை என்பதுபற்றி சிந்தித்துப்பார்க்க வேண்டும். காசு உள்ளோர்க்குத் தரமான கல்வி எனும் நிலை மாற அண்மைப் பள்ளிகள் (நெய்பரிங் ஸ்கூல் சிஸ்டம்) போன்றவைகுறித்து அரசு அக்கறை கொள்ள வேண்டும்.

நிலவைப் பார்க்காத தலைமுறை

கல்விபற்றிய மனத்தெளிவைப் பெற்றோர்கள் அளவில் கொண்டு செல்லப் பண்பாட்டு நிறுவனங்களும் ஊடகங்களும் முயற்சி எடுக்க வேண்டும். இன்றைய இளம் தலைமுறை ஆகாயத்தில் நிலவைப் பார்க்காமல், குளங்களில் மலரும் தாமரைப் பூக்களைப் பார்க்காமல், வயல்களில் நெற்பயிர்களைப் பார்க்காமல் வளர்ந்துகொண்டிருக்கின்றனர். பிராய்லர் கோழிப் பண்ணைக்கும், குழந்தை வளர்ப்பு முறைக்கும் இடையில் பெரிய அளவில் வேறுபாடு இல்லை. பயனே பிரதானம்.

இப்போது நாம் பெற்றோர்களிடம் சொல்ல வேண்டியது இதுதான். பெற்றோர்களே, குழந்தைகளை அவர்களது வயதுக்கே உரித்தான குணங்களோடு வளர விடுங்கள். அவர்களை அண்டை வீட்டுக்காரர்களிடம் அன்பு செலுத்தப் பழக்குங்கள். இயற்கையை நேசிக்கவும் காப்பாற்றவும் கற்றுக்கொடுங்கள். சுதந்திரத்தைப் பேணவும், பொதுச் சொத்துக்களைப் பாதுகாக்கவும், சூழலை மாசுபடுத்தாமல் இருக்கவும் சொல்லிக்கொடுங்கள். அநீதிக்கு எதிராகப் போராடும் மதிப்பீட்டை உருவாக்குங்கள். உங்கள் குழந்தை உங்களின் நிழலோ அல்லது உங்களின் பிரதியோ இல்லை. குழந்தை ஒரு தனி உயிரி. அந்த உயிரிக்குள் அளவற்ற ஆற்றல் பொதிந்திருக்கிறது. அதைச் செயல்பட அனுமதியுங்கள்.

தேர்வுக் காலங்களில் பிள்ளைகளிடம் மதிப்பெண்களை நிபந்தனையாக்காதீர்கள். யாருடனும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். கற்றல் எனும் செயல்பாடு ஒரு பூ மலர்வதைப் போல நிகழ வேண்டும். நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டியது அன்பு, பாதுகாப்புணர்வு, நட்புணர்வு போன்றவைதான். உங்கள் குழந்தை இவ்வுலகில் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ அவர்களுக்குக் கல்வி அவசியம் தேவைதான். அந்தக் கல்வியின் நோக்கம் வேலையும், சம்பாத்தியமும் மட்டுமன்று, சிக்கலான தருணங்களை எதிர்கொள்வதும், பிரச்சினைகளுக்கு அஞ்சாமல் அவற்றை அலசி ஆராய்ந்து தீர்வு காண்பதுமாகத்தான் இருக்க முடியும். இது +2 காலம்தான். அதைவிட முக்கியமானது பிள்ளைகளிடம் தோழமை கொள்ளும் காலமும் இதுதான்.

- கரிகாலன், கவிஞர், ஆசிரியர், தொடர்புக்கு:kalamputhithu@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

11 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்